'வடக்கின் கல்வி வளர்ச்சி?' -பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன்-




















'2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேற்று அடிப்படையிலான மாகாணத் தர வரிசையில் வடமாகாணம் கடைசி நிலை.' என்று எல்லா சமூக வலைத்தளங்களும் கண்ணீர் வடிக்கின்றன.

இதற்கான காரணங்கள், காரணங்களை வேரோடு களைவதற்கான வழிமுறைகளைக் காண்பதை விடுத்து, பெரும்பாலும் புள்ளிவிவரங்களை மட்டும் அடுக்குவதையே அவ்வலைத்தள செய்திகளில் காண, சலிப்பேற்படுகிறது. புள்ளிவிவரங்கள் போதாது என்று, கணினி மென்பொருளின் உசாத்துணையில் தயாரான சலாகை வரைபு, வட்ட வரைபு என, ஒரே அமர்க்களம். அந்தப் புள்ளி விவரங்களில் பலவற்றை உபயம் செய்தது பரீட்சைத் திணைக்களம். ஏனைய சிலவோ வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் அறுவடை.
 
பாவம், பரீட்சைத் திணைக்களம். பலரைப் பிழிந்து, பெறுபேற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு, புள்ளி விவரங்களை, வரைபுகளை வெளியிட்டால், எல்லா எழுத்தர்களும் அவ்வரைபுகளால், இணைய வெளிகளை நிரப்பி, இனி பரீட்சை எடுக்கவுள்ள மாணவர்களை வெருட்டித் தள்ளுகின்றனர்.
 
என்றுமில்லாதவாறு இம்முறை வடமாகாணக் கல்விநிலை குறித்து ஒரு திடீர் அக்கறை நம் கல்வியாளர்களிடம் பெருக்கெடுத்திருக்கிறது. அவர்களைப் பார்த்து ஒரேயொரு கேள்வி.
'க.பொ.த. சா.த. பெறுபேற்று அடிப்படையிலான மாகாணத் தரவரிசையில், இந்த முறை மட்டும்தானா வடமாகாணம் கடைசிக்கு வந்துள்ளது?' இல்லையே, 
இது பல்லாண்டுகளாக உள்ள தொடர் நிலைமைதானே.
 
நீங்கள் அனைவரும் தரவுகளை இறக்கும் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத் தளத்தையே பாருங்கள். கடந்த 2014 இலிருந்து வடமாகாணம் கடைசியாகத்தான் உள்ளது. 
சென்ற ஆண்டு (2018 பரீட்சை) மட்டும்தான், ஒரு சின்ன முன்னேற்றம். ஆம், வட மாகாணம் கடைசிப் பிள்ளையிலிருந்து கடைசிக்கு முதல் பிள்ளையாக முன்னேறியுள்ளது. ஆனால், அதற்காக மகிழ்ச்சியடைய முடியாது. காரணம் அந்த ஆண்டு கடைசிப்பிள்ளையாக வந்தது நமது சகோதர மாகாணமான கிழக்கு. அதுவும் பெரிய வித்தியாசத்தில் இல்லை. 
இவ்வாறு கடந்த ஆறேழு ஆண்டுகளாக இம்மாகாணங்கள், தரவரிசையில் கடைசியாகவேதான் நின்றுகொண்டிருக்கின்றன.
 
இந்நிலையில், இந்த ஆண்டு மட்டும் ஏன் இந்ததத் திடீர்க் கரிசனை? இதுவரை இல்லாத அக்கறை? பிறரில் குற்றச்சாட்டு? இதிலே, இனி அடுத்த ஆண்டு இன்னும் கீழிறங்க முடியாத இறுதி நிலை வடக்கு மாகாணத்துக்கு என்ற குத்தல் வேறு.
2014, 15களில் இருந்து கடந்த ஆண்டுவரை வடக்கு கடைசியாக இருந்தபொழுதெல்லாம் வராத கரிசனை எல்லாருக்கும் இவ்வாண்டு பெருகி எழுந்ததற்கு, உண்மையில் ஒரு நியாயம் உண்டு. அதை, கொரோனாவின் கொடுப்பினை என்றே சொல்ல வேண்டும்.
 
இவ்வளவு காலமும் வடமாகாணம் கடைசியாக வந்தபொழுதெல்லாம் அதைப் பார்க்கவே நேரம் இல்லாமல் - அதற்காக ஒரு துளி நிமிடத்தைக் கூட ஒதுக்கிச் சிந்திக்கத் தயாராக இல்லாமல் - ஓடியோடி உழைத்த நமக்கு, இவ்வாண்டு 'லொக் டவுண்' தாராளமான நேரத்தைத்தந்து விட்டது. வேறு சோலி இல்லை. வேறு பிராக்கு இல்லை.
எனவே, மெல்லுவதற்கு வேறொன்றும் கிடையாமல் 'சப்புக்கொட்டிய' எங்கள் வாய்க்கு, இது நல்ல அவல்தான். மென்று தள்ளுகிறோம். அவ்வளவே!
 
இவன் என்ன பொறுப்பே இல்லாமல் பேசுகிறானென நீங்கள் நினைத்தல் கூடும். நெஞ்சறியச் சொல்லுங்கள், உண்மையில் வடமாகாணம் கல்வியில் வளரவே இல்லையா? வளர்கிறதா இல்லையா என்பதை, எதை வைத்துத் தீர்மானிப்பது? 
ஏனைய மாகாணங்களோடு வடக்கை ஒப்பிடுவதன் மூலம் வளர்ச்சியை அறியலாமா? இல்லையே. 2015 இலும் அனைத்து மாகாணங்களை விடவும் கடைசியாக வடக்கு வந்தது. 2016 இலும் அவ்வாறே. 2019 இலும் அப்படியே. இந்நிலையில் எப்படி அறிவது வளர்ச்சியை?
 
வடக்கின் முன்னைய ஆண்டுப் பெறுபேற்றுக்களோடு இவ்வாண்டுப் பெறுபேற்றைப் ஒப்பிட்டுப் பார்த்து, அறிவதுதானே வளர்ச்சி.
2015 இல் வடமாகாண மாணவரில் (ஐந்துக்கும் அதிக பாடங்கள் செய்த பாடசாலைப் பரீட்சார்த்திகளில்) உயர்தரத்துக்குத் தகுதி பெற்றவர்கள் 60.38 வீதத்தினர். ஆனால், 2019இல் உயர்தரத்துக்குத் தகுதி பெற்றவர்களோ 67.74 வீதத்தினர். 
இது வளர்ச்சி இல்லையா?
 
வடமாகாணத்தின் முன்னைய நிலையிலிருந்து அது மெல்ல மெல்ல மேலெழுகிறதா எனப் பாருங்கள். அதுதானே வளர்ச்சி பற்றிய கணிப்பாக இருக்க முடியும்.
வளர்ச்சியை ஏன் மற்ற மாகாணங்களோடு ஒப்பிட்டே பேசுகிறீர்கள்? மேல் மாகாணம் வளர்கிறது, தென் மாகாணம் வளர்கிறது, வடக்கு வளரவில்லை, என்பது சரிதானா? 
மற்ற மாகாணங்களுக்கும், வட மாகாணத்துக்கும் வழங்கப்பெற்ற வாய்ப்புகள் சரிசமமாக இருந்திருக்கின்றனவா?  இல்லையே.

போரால் எவ்வித பாதிப்பும் பெறாத தென் மாகாணக் கிராமப் பாடசாலைக்கான அரசின் அக்கறையான கவனிப்பு, சின்னாபின்னமான வடக்கின் தீவகப் பாடசாலைகளுக்கு உள்ளதா?  இல்லையே.
வடக்கில் நடந்ததைப் போன்ற கொடிய போரை, பிற மாகாணங்கள் சந்தித்தனவா? அதனால், புலமை இழப்பை அடைந்தனவா? இல்லையே.
கடந்த 2019 இல் பரீட்சை எடுத்த பிள்ளைகளைப் பற்றி யோசித்தீர்களா? யார் அவர்கள்? எப்போது பிறந்தவர்கள்?
இப்போது பெறுபேற்றைப் பெற்ற மாணவர்கள், 2003 அல்லது 2004 இல் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். அப்போது வடமாகாணப் பெற்றோர் அனைவரையும் தங்கள் சொந்த வாழிடத்திலேயே இருக்க யுத்தம் விட்டதா? இல்லையே.
இடம்பெயர்ந்து தென் மாகாணம், மேல் மாகாணம், மத்திய மாகாணம் என்று தப்பியோடியவர்கள்தாமே நாங்கள் எல்லாம்? அவ்வாறுதானே ஆளுமை மிக்க ஆசிரியர்கள் பலரும் ஓட நேர்ந்தது.

தென் மாகாணம் வளர்கிறது, மேல் மாகாணம் வளர்கிறது, வடக்கு வளரவில்லை, என்பவர்களிடம் ஒரு கேள்வி.
தென் மாகாண, மேல் மாகாணங்களின் பெறுபேற்று வளர்ச்சிக்கு வடமாகாண மாணவர்களின் பங்களிப்பு இல்லையா? 
அவ்வாறே, தென் மாகாண, மேல்மாகாண பெறுபேற்று வளர்ச்சியில், வடமாகாண ஆசிரியர்களின் ஆளுமை மிக்க பங்களிப்பு இல்லையா?
இருக்கிறது என்பதுதான் இக்கேள்விகளுக்கான உறுதியான பதில்.

ஒருபுறத்தில் இப்புலமை இடப்பெயர்வானது, வடக்கு மாகாணத்தை வறியதாக்கியதோடு, பிற மாகாணங்களைச் செழிக்கவும் செய்தது என்பதே உண்மை. அதனால்தான் வடமாகாணத்தின் பாதிப்பு இரட்டிப்பாக,  பாரதூரமாகத் தெரிகிறது.
வேண்டுமானால், பரீட்சை எடுத்த மாணவர் தொகையைப் பாருங்கள் இது புரியும். அந்தப் பட்டியலிலும் வடக்கு மாகாணம் மிகமெலிந்து கடைசியாகத்தானே நின்று கொண்டிருக்கிறது. 
கடந்தமுறை இருபதாயிரத்துக்குக் குறைவாகத் தோற்றிய மாணவர் தொகையைக் கொண்ட ஒரே மாகாணம் வடக்கு மட்டுமே. இம் மாகாணத்திலிருந்து ஐந்து பாடங்களுக்கு மேலே தோற்றிய முதலமர்வுப் பரீட்சார்த்திகள் வெறும் 16622 மட்டுமே.
சற்றே மேல் மாகாணப் பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையைப் பாருங்கள். அது 79835. எவ்வளவு வேறுபாடு. இப்பெருத்த தொகையில் இடம்பெயர்ந்த வடமாகாண மாணவர் இல்லையா? அவர்களால் மேல் மாகாணச் சித்திகள் அதிகரிக்கவே இல்லையா? 
இதை - இந்த அடிப்படை மூலத்தை – அறிந்து கொள்ளாமலேதான் பலரும் அறிக்கை விடுகின்றார்கள். 

'வருடமொன்றில் ஆசிரியர்கள் 153 நாட்கள் மட்டுமே பணிபுரிகிறார்கள். அவ்வாறிருக்கையில் அவர்களால் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்க முடியாதா?' எனக் கூறி, பின்னடைவுக்கான காரணமாக, ஆசிரியர்களின் தவற்றையே வடமாகாண ஆளுநரும் ஒரு கூட்டத்தில் சுட்டுகிறார். ஆமாம், போரை அவரும் வசதியாக மறந்து விட்டார். 

வடக்கின் இன்றைய கடைசி நிலைக்குக் காரணம் தேடும் கல்வித்துறை சார்ந்த பலருங்கூட, ஆளுக்காள் பந்தை மாற்றிப்போட்டு, வீழ்ச்சிக்குக் காரணம் நானில்லை என்பதாக நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள். 
கல்வி நிர்வாகச் சேவையினர், ஆசிரியர்களைக் குற்றஞ் சாட்டுகிறார்கள். ஆசிரியர்கள் மாணவர்களைச் சாட்டுகிறார்கள். மாணவர்கள் பாடசாலையை, பாடசாலை பெற்றோரை. 
அனைவரும் சேர்ந்து குற்றஞ் சாட்டவென, பாவம் இம்முறை ஒரு பகுதியார் மாட்டிக்கொண்டார்கள். அவர்கள் தொண்டர் ஆசிரியர்கள்.
வடக்கில்தான் அவர்கள் அதிகம். தெற்கில் இல்லை. மேற்கில் இல்லை, ஆகவேதான் வடக்கில் பெறுபேற்று வீழ்ச்சியென ஆளுக்காள் இன்று போட்டுத் தாக்குகிறார்கள். 
கடும் பிரச்சினையான காலகட்டத்தில், வேலைகுறித்த உத்தரவாதம் இல்லாத நிலையிலும் மனஉளைச்சலோடு - அவ்வாசிரியர்கள் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது அல்லவா?
அவர்களுள் சிலர் பாடத்துக்குப் பொருத்தமற்றவர்களாக இருக்கலாம். அது விதிவிலக்கே. 
அப்படியானால் கல்வி நிர்வாகச் சேவையில் இருக்கும் அத்துணைப்பேரும் குறித்த பாடத்துக்குப் பொருத்தமானவர்களா? இல்லையே.
 
குறித்தவொரு பாடத்தைப் பாடசாலையில் கற்பிக்காமலேயே, நேரஅட்டவணையை அதிபரிடமிருந்து பொய்யாகப் பெற்று, இன்று அப்பாடத்துக்கான அதிகாரியென, பொருத்தமற்றமுறையில் கல்வி நிர்வாகச் சேவையிலும் சிலர் உள்ளனர் அல்லவா? 
பட்டம் பெற்ற பாடத்தைக் கற்பிக்காமல், அருகேயுள்ள பாடசாலையில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக வேறுபாடம் கற்பிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் உள்ளனர் அல்லவா?
இவர்கள் விதிவிலக்குகள்.
 
எனவே இப்பின்னடைவுக்கான காரணத்தை, இத்தகைய விதிவிலக்குகளிடம் தேடாமல், யுத்தத்தின் நீண்டகாலக் கோர விளைவாகக் காண்பதே நேர்மையானது. 
ஆனால், கல்வியாளர் யாருமே யுத்தத்தின் பின்விளைவாக இன்றைய இக்கல்வி நிலையைக் காணத் தயாரில்லை. அவர்களும் யுத்தத்தின் நீண்ட கொடிய விளைவை மறந்துவிட்டனர்.
உண்மையில் வட மாகாணத்தின் இந்தப்பின்னடைவை, போரின் விளைவாகப் பார்க்க வேண்டுமே தவிர, ஆசிரியரைச் சமமாகப் பங்கிடவில்லை, தொண்டர் ஆசிரியர்கள் கற்பிக்கவில்லை, பாடசாலைகள் சரியில்லை, பெற்றோர் அக்கறைப்படவில்லை முதலியவற்றால் நேர்ந்தது எனக் கொள்ள முடியாது.
 
கல்வி வளர்ச்சி என்பது இன்று 'ஏ' சித்திகளை அதிகமாகப் பெறுவது என்ற கணிப்பில் வடமாகாணம் கல்வியில் வீழ்ச்சி அடைகிறது என்று சொல்லும் அனைவர்க்கும் நிறைவாக ஒன்றை உரைக்க விரும்புகிறேன்.
உண்மையில் கணிப்பீடுகள் காட்டும் சித்தி வீதத்துக்கும், தரமான கல்வி வளர்ச்சிக்கும் சம்பந்தமுண்டா? என்று சற்றே நிதானிப்பது நலம். 
'ஏ''பி' சித்திகள் பெறுவது கல்வி வளர்ச்சியாகுமா? இன்றைய உயர்சித்திக்கும் திறன் ஆற்றலுக்கும் சம்பந்தமிருக்கின்றதா? 
என் தந்தையாரின் தலைமுறையில் 'எஸ்' சித்தி பெற்றவரின் கல்வி மட்டம் இன்றைய தலைமுறையில் 'ஏ' சித்தி பெறும் மாணவரிடம் இல்லை என்பதே யதார்த்தமாகும். 
எனவே, 'ஏ' சித்திகள் பெருகுவதைக் கொண்டு, கல்வி வளர்ச்சி அடைகிறது என, பொய் மகிழ்ச்சி கொள்வதில் அர்த்தமேயில்லை. அதன் மறுதலையாக, 'ஏ' சித்திகள் குறைவு, அதனால் வடக்கில் கல்வி வீழ்கிறது என்று ஒப்பாரியிடுவதும் தவறு.

வடக்கில் மட்டுமல்ல, இலங்கை முழுவதும் இதுதான் நிலைமை. சற்றே பொய் ஒப்பனைகள் களைந்து நிதர்சனத்தைப் பாருங்கள். சித்திகள் பல்கிப் பெருகுகின்றன. அதுவும் 9 'ஏ'கள் சகட்டு மேனிக்கு முளைக்கின்றன. 
ஆனால், இதை வைத்துக் கல்வி வளர்கின்றது என்று மட்டும் தயவுசெய்து சொல்லாதீர்கள். தன்னைத் தானே நிதானிக்க முடியாத, ஒரு சின்னப் பிரச்சினையைச் சமாளிக்கத் தெரியாத, 9 'ஏ'க்கள் பெருகுவது எப்படி வளர்ச்சியாகும்? 
 
தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் பாடமாக்கச் சொல்லி, தான் பாடமாக்கிய பகுதியை வினாத்தாளில் கண்டவன் - வென்றவன். அவ்வாசிரியர் பாடமாக்கச் சொல்லித் தான் தயார்ப்படுத்தியதை அன்றிப் பிற பகுதியைப் பரீட்சையில் கண்டவன் - தோற்றவன். இதுதானே இன்றைய சமன்பாடு. 
இதில் வெல்லுவது என்பதும், ஒருவகையில் தோற்பதுதானே!


நன்றி - உகரம் |இந்தவாரச் சிந்தனை (17.06.20) | பேராசிரியர் ஸ்ரீ. பிரசாந்தன் | www.uharam.com



No comments: