Saturday, June 20, 2020 - 6:00am
"கொரோனா வைரஸ் நாட்டில் பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள இன்றைய சூழலில் 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய வேலைத் திட்டத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்று பலமான பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனங்களில் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றது. தற்போது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்து வரும் நாட்டைக் கட்டியெழுப்பும் பல்வேறு திட்டங்கள் இதற்கான சிறந்த சாட்சியங்களாக அமைந்திருக்கின்றன.
காலத்திற்குக் காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தாலும் அவற்றில் பெரும்பாலானவை நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய முழுமையாக நிறைவேற்றப்படுவதில்லை. அத்தோடு காலத்துக்குக் காலம் முன்வைக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலானவையும் அவ்வாறு முழுமை பெறாமல் அல்லது ஏதோ காரணத்திற்காக தடைப்பட்டு அல்லது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கு நிலையற்ற அரசியல், ஸ்திரமற்ற அரசாங்கம், வகுக்கப்படும் திட்டங்களை முறையாக முன்னெடுக்கப்படாமை, பொருத்தமில்லாத துறை சார்ந்த தலைமைகள் எனப் பல காரணங்களைக் கூறலாம்.
இவ்வாறான சூழலில் கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் முழுமையான நம்பிக்கையுடன் தமது பூரண ஆதரவை வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாட்டின் தலைவராகத் தெரிவு செய்திருக்கின்றனர். அவர் தலைமையில் அமைந்துள்ள பொது ஜன பெரமுன கட்சி அரசாங்கம் நாட்டையும் மக்களையும் முன்னிலைப்படுத்தி சமூக, பொருளாதார, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்கள் முன்வைத்த 'சுபிட்சத்தின் நோக்கு' தேசிய வேலைத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டைக் கட்டியெழுப்பும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டை சகல துறைகளிலும் முன்னேற்றி கட்டியெழுப்புவதை அடிப்படை நோக்கமாக இந்த 'சுபிட்சத்தின் நோக்கு' தேசியத் திட்டம் கொண்டுள்ளது. இந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் கடந்த ஐ.தே.க ஆட்சியாளர்களால் மக்கள் மீது சுமத்தப்பட்டிருந்த 15 வரிகளில் 10 வரிகள் முற்றாக இரத்து செய்யப்பட்டதோடு ஏனைய ஐந்து வரிகளும் மறுசீரமைக்கப்பட்டன. அவற்றில் 15 வீதமாகக் காணப்பட்ட வற் வரி 8 வீதமாகக் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேநேரம், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தகைமை பெறாத ஒரு இலட்சம் பேருக்கு அரசாங்க தொழில்வாய்ப்பு வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் நிமித்தம் விஷேட செயலணியையும் ஜனாதிபதி அமைத்துள்ளார். அத்தோடு வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறு புரட்சிகரமான பல அபிவிருத்தித் திட்டங்கள் ஜனாதிபதி தலைமையில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு ஒரு படி முன்னேறும் போது துரதிர்ஷ்டவசமாக முழு உலகையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொடிய கொரோனா வைரஸ் தொற்று இந்நாட்டிலிலும் பதிவாகத் தொடங்கியது.
நுளம்புகளின் ஊடாகவோ அல்லது வேறு நோய் காவிகளூடாகவோ அன்றி மனிதரில் இருந்து மனிதருக்கு தொற்றிப் பரவும் இவ்வைரஸ் முழு உலகிற்குமே பெரும் அச்சுறுத்தலாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்நாட்டில் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்படும் துறைகளே மிக அதிகமாக உள்ளன. அந்த வகையில் அனைத்துத் துறைகளும் பின்னடைவு காணும் வகையில் கடந்த மூன்று மாதங்களாக எதுவும் செய்ய முடியாத நிலைமையை இக்கொடிய வைரஸ் தொற்று நாட்டில் ஏற்படுத்தி விட்டது.அந்தப் பின்னடைவை சரி செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
முதலில் நாடு முடக்கப்பட்டு சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக அனைத்து தொழில் துறைகளிலும் முடக்கப்பட்ட நிலையில் அன்றாட தொழில்களில் ஈடுபடுவோர் உட்பட அனைவருமே பாதிக்கப்பட்டனர்.
அத்தகைய சூழ்நிலையில் மக்கள் நலன் தொடர்பில் அக்கறை கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான தற்போதைய அரசாங்கம் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை கருத்திற் கொண்டு அரச சம்பளம் அல்லது ஓய்வூதியம் பெறுவோர் தவிர்ந்த அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்தது.
மக்கள் செய்வதறியாது தவித்து நின்ற போது அந்த 5000 ரூபா கொடுப்பனவு அச்சந்தர்ப்பத்தில் மிக பெறுமதியான ஒன்றாக அமைந்ததைக் குறிப்பிட முடியும். அதன் ஊடாக நாட்டில் உள்ள பல்வேறு தரப்பட்ட சுமார் 70 இலட்சம் மக்கள் பயனடைந்தனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில் துறைகள் மற்றும் நிறுவனங்களை மீளக் கட்டியெழுப்பும் வகையில் குறைந்த வட்டி வீதத்தில் வங்கிகள் ஊடாக கடன்களை பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது கைத்தொழில் துறை, சுயதொழில் துறை மற்றும் ஏனைய துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் உறுதுணையாக அமைந்துள்ளது.வீழ்ச்சியடைந்துள்ள தமது வர்த்தக மற்றும் கைத்தொழில் துறைகளை மீளக் கட்டியெழுப்புவதற்கு அதன் மூலம் வழி வகுக்கப்பட்டுள்ளது.
சில நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. அத்தகைய நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும் வங்கிகள் மூலம் கடன் வழங்க அரசாங்கம் முன்வந்தது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் மற்றும் ஒழிப்புக்காக அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு பாரிய நிதியை அதற்காக செலவிட்டு வரும் நிலையிலும் அன்றாடம் தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வழி செய்தது.
கொரோனா வைரஸ் நாட்டிலிருந்து பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சூழல் நிலவுகின்ற இந்த வேளையில்,'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் ஜனாதிபதி தலைமையில் அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதிலும் குறிப்பாக வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்தத் திட்டத்தின் கீழ் உயர் கல்வி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளாதவர்களை தொழில்நுட்பவியலாளர்களாக உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் வறுமை நிலையிலுள்ள தொழிலில் முன் அனுபவம் அற்ற இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் அதனை கண்காணிப்பதற்காக செயலணி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதற் கட்டமாக ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் செயற் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கையைப் பொறுத்தவரை சுற்றுலாத்துறை மூலம் நாடு பாரிய வருமானத்தை ஈட்டி வந்துள்ளது. கொரோனா வைரஸ் சூழ்நிலையோடு விமான நிலையங்கள் மூடப்பட்டு உல்லாசப் பயணிகள் வருகை தடைப்பட்டது. அதனால் நாட்டுக்குக் கிடைக்கும் பெருமளவு வருமானம் இழக்கப்பட்டுள்ளது. நாடு இயல்பு நிலையை அடைந்து வரும் நிலையில் மீண்டும் மிக விரைவாக விமான நிலையங்களை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை வேலையற்ற பட்டதாரிகளை தொழிலுக்கு அமர்த்தும் வயதெல்லையை 45 ஆக அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பெருமளவிலான வேலையற்ற பட்டதாரிகள் பயன் பெறுவது உறுதி.
பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் இலங்கையில் உற்பத்தி செய்யக் கூடிய எந்தப் பொருளையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதில்லை என்ற தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
அது உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதுகாத்து ஊக்குவிக்கும் நடவடிக்கையாக அமைவதுடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அரசாங்கம் செலவிட நேரும் பாரிய நிதி மீதம் ஆகின்றது என்பதையும் குறிப்பிட முடியும்.
அத்தோடு மட்டுமன்றி அமைச்சுக்கள், திணைக்களங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செலவுகளை மட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிர்வாக முறைகளில் உள்ள சீர்கேடுகளை களைந்து சிறந்த அரசு நிர்வாகத்தை கட்டியெழுப்புவதற்கான பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைகளை காலம் தாழ்த்தாது பெற்றுக் கொடுக்கின்ற அரச நிர்வாகக் கட்டமைப்பை முன்னெடுப்பதற்காக அரசு நிர்வாகத் துறையில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
உள்ளூர் விவசாய உற்பத்திகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கம் வீட்டுத் தோட்டங்களை ஊக்குவிப்பதற்கு பல செயற் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. விவசாய அமைச்சின் ஊடாக உரமானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகைய திட்டங்கள் முன்னொரு போதும் இல்லாதவாறு நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்புவது உறுதி. அரசாங்கம் மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான காத்திரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் காலகட்டத்தில் நாடு தேர்தல் ஒன்றை எதிர்நோக்கி உள்ளது.
ஆகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை பெற்று அமோக வெற்றியடைந்து பலமான அரசாங்கத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனங்களில் பதிந்துள்ளது.
நாட்டு மக்களின் நலன்கள் தொடர்பில் அக்கறையுடன் செயற்படும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்து நாட்டின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதே நாட்டு மக்கள் முன்பாக தற்போதுள்ள பொறுப்பாகும். நன்றி தினகரன்
No comments:
Post a Comment