கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -18 வள்ளுவன் வகுத்த அரசியல் பற்றிய எனது கவியரங்கு கவிதை ! சமகாலமும் வேலணை திருக்குறள் மாநாடும் !!


இலங்கையில் சப்ததீவுகள் பற்றி அறிந்திருப்பீர்கள்.
நயினா தீவு, புங்குடுதீவு, அனலை தீவு, எழுவை தீவு, நெடுந்தீவு. இவை தவிர பாலைதீவு, கச்சதீவு முதலான தீவுகளும் இலங்கையைச் சூழ்ந்துள்ள இந்துமகா சமுத்திரத்தாயின் குழந்தைகளாக பூகோளப்பரப்பில் காணப்படுகின்றன.
குறிப்பிட்ட தீவுகளுக்குச்செல்லும் மார்க்கத்தில் வருகிறது வேலணை. அதனை வேலணை  என அழைப்பதற்கு காரணம் என்ன..? தமிழ் கலைக்களஞ்சியம் இவ்வாறு சொல்கிறது:  
வேலணை என அழைக்கப்பட என்ன காரணம் என்று தெளிவான பதிவுகள் இல்லாவிடினும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றன.    வேல் + அணை = வேலணை "வேல் அணைந்த இடம்" என்றும்,  முருக வழிபாடு இந்தத் கிராம மக்களிடம் முதன்மை பெற்றிருந்ததனால் “வேலன் இணைந்த இடம்” என்றும் பின்னாட்களில் மருவி,  வேலணை எனவும், பண்டை நாளில் வேலன் என்ற தலைவனின் பொறுப்பில் நிர்வகிக்கப்பட்டு வந்தமையினால் வேலணை எனப் பெயர் பெற்றது என்றும் சில பொதுவான கருத்துக்கள் நிலவுகின்றன.  மேலும்  கடம்பன் என்ற கடற்கொள்ளையனை அடக்குவதற்காக வேலன் என்ற சங்ககால தென்னாட்டு இளவரசன் வந்து தரையிறங்கிய இடம் வேலணை என்றும் வெண்ணிலவுப் பெண்ணரசி  என்ற நாவலில் எழுத்தாளர்    மீ. பா. சோமு குறிப்பிட்டுள்ளார்.

யாழ். குடாநாட்டிற்குத் தென்மேற்காக உள்ள   வேலணைத்தீவில்  வடக்கில் சரவணைக்கும் கிழக்கில் மண்கும்பானுக்கும் இடைப்பட்ட ஏறத்தாழ 15 சதுர கிலோ மீற்றர்  பரப்பளவு கொண்ட ஒரு பகுதியே வேலணைக் கிராமம் ஆகும்.
இலங்கையில் பல தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி தமிழ் மறைக்கழகம் என்ற அமைப்பினை நிறுவி,  வருடந்தோறும் திருக்குறள் மாநாட்டினை நடத்திவந்தார்கள்.  இந்த மாநாடு வேலணையிலும் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
இதே மாநாடு,  இலங்கை வரலாற்றில் தமிழ் – சிங்கள மன்னர்கள் ஆட்சிபுரிந்ததாக சொல்லப்படும் அநுராதபுரத்திலும் 1955 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது என்று நான் சொன்னால்  நம்புவீர்களா…? ஆம் நடந்திருக்கிறது.
இம்மாநாட்டின் தொடர் பயணத்தில் பத்தாவது மாநாடு வேலணையில் நடந்தபோது, பண்டிதர் க.பொ. இரத்தினம் அவர்கள் அதனை முன்னின்று ஒழுங்குசெய்திருந்தாரர்.
1914 ஆம் ஆண்டு வேலணையில்  பிறந்திருக்கும் இவர்,  கோப்பாய்  ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை,  தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகம்  என்பவற்றில் பயின்றவர்    பண்டிதர் பட்டமும்,  வித்துவான் பட்டமும் பெற்றார்.  தான் ஆசிரியப்பயிற்சி பெற்ற  கோப்பாய்   ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். 
பின்னர்   பாடசாலைகளுக்கான ஆய்வு அலுவலராகப் பணியாற்றினார்.  மகரகமை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகச் சேர்ந்தார். அதன் பின்னர் கொழும்பில் அரச கரும மொழிகள் திணைக்களத்தில் எட்டாண்டுகள் பணியாற்றி, தமிழ் வெளியீடுகளில் தமிழ் மொழி அமுலாக்கல் சீராக நடைபெற உதவினார்.
பின்னர்  மலேயாப்  பல்கலைக்கழகத்தில்  அருட் தந்தை  தனிநாயகம் அடிகளாரோடு  இணைந்து பணியாற்றினார். 1952 ஆம் ஆண்டில்  கொழும்பில் ' ஆரம்பித்த  தமிழ்மறைக் கழகம்  மூலம் தமிழ்ப் பணிகளை ஆற்றி வந்தார்.
சிறந்த பேச்சாளர்.  நான் சார்ந்து நின்ற இலங்கைத் தமிழரசுக்கட்சியிலேயே இவரும் 1960 ஆம் ஆண்டு முதல் இணைந்து அரசியல்வாதியாக மாறினார்.
முதலில் கிளிநொச்சித் தொகுதியிலும் பின்னர் ஊர்காவற்றுரைத் தொகுதியிலும் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.
இவ்வாறு 1977 வரையில் அவர்  நாடாளுமன்ற உறுப்பினராக பணி தொடர்ந்தவர்.   
கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் துணைத் தலைவராகவும் தலைவராகவும் துணைக் காப்பாளராகவும் இருந்து பணியாற்றியவர். தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட முருகு என்ற இலக்கிய வெளியீட்டின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
எனது சொல்லாத கதைகள் தொடரில் இவ்வாறு நான் முன்னர் சந்தித்த பலரை அறிமுகப்படுத்துதலும் பொருத்தமானதே.
வேலணை திருக்குறள் மாநாட்டிற்கு எனது இலக்கிய நண்பர்கள் பலர் வருகை தந்திருந்தனர்.
எனது பூர்வீக ஊரைச்சேர்ந்த நாவற்குழியூர் நடராசன், ( இவர் பின்னாளில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ்ச்சேவை பணிப்பாளராகவும் கடமையாற்றியவர். )   மஹாகவி உருத்திரமூர்த்தி மற்றும் தமிழ்நாட்டிலிருந்து அறிவியக்கப்பேரவையைச் சேர்ந்த முனைவர் சாலை இளந்திரையன், அவரது மனைவி சாலினி இளந்திரையன்  ஆகியோரும் வருகை தந்தனர்.
அம்மாநாட்டில் ஒரு கவியரங்கு கிட்டத்தட்ட பட்டிமன்றம்போல் நடத்தப்பட்டது. அதற்குத்  தலைமை: நாவற்குழியூர் நடராசன்.
சாலை இளந்திரையன் திருக்குறளை ஓர் இன்பநூல் என்ற தலைப்பில் கவிபாடினார்.
நான், திருக்குறள் ஓர் அரசியல் நூல் என்று வாதிட்டு கவிபாடினேன்.
அக்காலப்பகுதியில் நான் தமிழர் அரசியலில் பிரவேசம் செய்திருந்த காலம்.  அதற்காகவே சிறுகதை எழுத்தாளனான நான், கவிஞனாகவும் உருமாறியிருந்த காலம்.
கவிதையில் தமிழ் உணர்ச்சியை எளிதாக பரப்பமுடியும். ஆனால், சிறுகதை இலக்கியத்தில் அதற்கான சாத்தியங்கள் குறைவு. கவிதையில் தமிழ் உணர்வை ஊட்டுவதற்கு எமக்கு வழிகாட்டிகளாக மகா கவி பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனும் திகழ்ந்தவர்கள்.
அவர்களின் வழியில் வந்த கவிஞர்களுக்கு கவிதைதான் உணர்ச்சியைக்கொட்டுவதற்கு சிறந்த ஊடகம்.
திருவள்ளுவர் இப்படி எழுதியிருந்தது எனக்கு நினைவில் தங்கியிருந்தது:
“ இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின், பரந்து

கெடுக உலகு இயற்றியான்  “

திருவள்ளுவர் என்ன சொல்லவருகிறார்..?
இந்த உலகத்தைப் படைத்தவன், இந்த உலகில் வாழுபவர் முயன்று முன்னேறாமல்,  மற்றவர்களிடம் இரந்துதான் உயிர்வாழவேண்டுமென்று விதித்திருந்தால், அந்தக்கொடியவனும் இரப்பதைப்போன்று எங்கும் அலைந்துகெட வேண்டும்.
எப்படி இருக்கிறது பாருங்கள். அந்த படைத்தல் தொழிலை செய்தவனுக்கே அவர் சவால் விடுகிறார்.
இப்படித்தானே மகாகவி பாரதியும்,                                                                               “ தனிமனிதனொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்  “  என்று பாடினார்.
நான் தமிழர் அரசியலில் காலூன்றியிருந்தமையால், அன்றைய  கவியரங்கிற்கு தலைமை ஏற்ற நாவற்குழியூர் நடராசன்,  எனது அரசியல் பாதையையும்  சுட்டிக்காண்பித்து,   “ ஓர் கால் அரசியலில் ஊன்றி நின்ற அம்பி, ஈர்காலும் ஊன்றி இவ்வரங்கில் திருக்குறள் அரசியல் நூல்தான் என்று பகர வருகிறார்  “  எனச்சொல்லி என்னை அறிமுகப்படுத்தி,  மேடைக்கு அழைத்தார்.
வள்ளுவர் வகுத்த அரசியல்
பொங்கு தமிழின் பொலிவிற் பொலிவாகி
எங்குங் கவியின்எழிலமுதஞ் சொட்டுகிற
பாவலரே ! நாவலரே !
பண்டைத் தமிழ்நிதியின் காவலரே !
வாழ்த்திக் கரங்குவித்தேன் !
பேரவையீர் !
முப்பாநூல் சொல்லும் முறையை
அரசியலை
இப்பா வரங்கில் இனியதமிழ் செய்ய
பேனா நிரம்பப் பெருகுதமிழ்த் தேன் எடுத்தேன்
ஆனாச் சுழித்தேன். அற்புதந்தான் !
அன்றோர்
அசரீரி வாழ்த்தியிறை ஆசியுரை கூற
பசிதீரப் பாவாணர் பாமாலை சூடி
பரிமே லழகருடன் பத்தாமோ… அப்பப்பா !
உரைசொல்லிப் பூத்துத் தமிழ்சொன்னோர்
எத்தனைபேர்..?
அத்தனையும் எண்ணி அகவான் ஔிர்வுபெற
சித்தத் தினிகுறளின் சீர்மை… மிகு அற்புதந்தான் !
அற்புதத்தை விட்டிடுமொய் !
ஆய்ந்த அரசியலைப் பற்றியெதுஞ் சொல்லும்
சொல்லுமெனப் பேரவையீர்
நெஞ்சந் துடிக்கும் நிலையறிவேன்
ஆகையினால், கொஞ்சந் திரும்பி
குறித்த அலுவலுக்கு வந்திடுவோம் வாரீரோ !
என்று தொடங்கி,  வள்ளுவர் வகுத்த அரசியல் நெடுங்கவிதையை அன்றைய அரங்கில் சமர்ப்பித்தேன்.
இக்கவியரங்கில் நான் சமர்ப்பித்த நெடுங்கவிதையின் இறுதிப்பகுதியை இங்கே பாருங்கள்.
சமகாலத்தில் எமது தாயகமாம் இலங்கையில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது.  ஐம்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ( 1962 இல் ) வேலணையில் நான் சமர்ப்பித்த கவிதையின் இந்த இறுதிப்பகுதியை நடக்கவிருக்கும் தேர்தலுடன் ஒப்பீடு செய்து பாருங்கள்.
வாழ்வின் தருணங்களை இவ்வாறுதான் நாம் கடந்து வந்திருக்கின்றோம்.  நான், என்னை தீர்க்கதரிசி என்று சொல்ல வரவில்லை.
இனி அக்கவிதையின் இறுதிப்பகுதியை பாருங்கள்.
தேர்தல் பிரசாரம்
தெருவெல்லாம் ஊர்வலங்கள்
ஊரில் பிளவும் உரிமைக்குரல் ஒலியும்
புரட்சி சதித்திட்டம் பூவுலகில் பூகம்பம்
பேரரசர் மோதல் பெருவலிமை உள்ளவர்கள்
யாரென்று காட்ட இதயத் துடிப்பு !
உச்சியிலே கூட்டம் யூ. என். பரபரப்பு
அச்சம் கவிந்த அகிலந் துடிதுடிப்பு
அணுவின் துணையும் ஆயுதமும் உண்டென்று
பணியமறுக்கும் பண்பால் பிணிவிரிவு
அப்பப்பா !
இந்தநிலையில் இதயந் தெளிந்தெமது
சொந்த மறையை திருக்குறளைக் கேட்கின்றேன் !
கடல்கள் கடந்து கண்டங்கள் மேல் தாவிப்
படலை திறந்தெம் பொதுமறையின் பாதைசொல்லி
காலத்தை வெல்லும் கருத்து நிறைவாலே
ஞாலத்தின் ஆளும் ஞானத்தை காணுகிறேன் !
காணுகிற அந்தக் கலகலப்பில்
ஞானமதைப் பேணுகிற நீர் என்று
பிரியாவிடை கோருகிறேன்…!

சமகாலத்தில் இலங்கையில்,  தேர்தல் திருவிழாவுக்கு கொடியேறிவிட்டது!?
உலக அரங்கில் சீனாவும் இந்தியாவும் எல்லையில்  மோதுகின்றன !? .
வடகொரியாவும் தென் கொரியாவும் மோதலுக்கு தயாராகின்றன.!?
கொரோனா வைரஸின் தாக்கத்தினால், அமெரிக்காவும் சீனாவும் நிழல் யுத்தம் புரிகின்றன.!?
ஐம்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வள்ளுவரின் அரசியல் பற்றி கவிபாடிய யான், அதில் இன்றும் கைபிசைந்து கொண்டிருக்கும் யூ. என். ( ஐக்கியநாடுகள் சபை ) பற்றியும் ஒரு வரி சொல்லியிருக்கின்றேன்.
நான் தீர்க்கதரிசி இல்லை….!  ஒரு சாதாரண கவிஞன் மாத்திரமே…!
( தொடரும் )















No comments: