இலங்கைச் செய்திகள்


கதிர்காம யாத்திரைக்கு இந்து பக்தர்களை அனுமதிக்குமாறு மட்டு. தேரர் கோரிக்கை

பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம்; ஜனாதிபதி காட்டம்

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பலம் மிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

தனியாருக்கு மணல் அகழ அனுமதி வழங்கியதற்கு எதிராக போராட்டம்

கருணா யார் என்பது கிழக்குக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரியும்

காணி எல்லைப்படுத்தலுக்கு புதுக்குடியிருப்பில் எதிர்ப்பு

ரணில், மைத்திரி உள்ளிட்ட நால்வரிடம் வாக்குமூலம் பெற உத்தரவு

தமிழர்கள் ஒன்றுபடாவிட்டால் இருப்பை இழந்து கையேந்தும் நிலைமை ஏற்படும்

திரையரங்குகள் ஜூலை 27 இல் திறப்பு

வடக்கு, கிழக்கில் த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும்!

5 மணிநேரத்தின் பின் CIDயிலிருந்து ரிஷாட் வெளியேறினார்

புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு

பொத்துவிலில் சலசலப்பு; கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்




கதிர்காம யாத்திரைக்கு இந்து பக்தர்களை அனுமதிக்குமாறு மட்டு. தேரர் கோரிக்கை



ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினருக்கு அவசர கடிதம்
கதிர்காம பாதயாத்திரைக்கு எமது இந்து மக்கள் சென்று  நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு துறையினரை மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ன தேரர் கேட்டுக் கொண்டுள்ளார்.   
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கதிர்காம உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்து பௌத்த மக்கள் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வதற்கான இடமாக கதிர்காமம் அமைந்துள்ளது. எனவே யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் கிழக்கு மாகாணத்தில்  சகல பிரதேசங்களிலிருந்து இந்து மக்கள் கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்வது நடைமுறையாகும்.
அவர்கள் நேத்திக்கடன்களை வைத்து அவற்றை நிறைவேற்றுதற்காக செல்கின்றார்கள். ஆனால் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தால் இப்புனித பாதயாத்திரையை நிறைவேற்ற முடியாத நிலை தோன்றியுள்ளது.எனவே  இவர்களுக்காக ஜனாதிபதி, அரசும் பாதுகாப்பு துறையினரும் இது தொடர்பாக மேலான கவனத்தைச் செலுத்தி நேர்த்திக் கடன்களை நிறைவேற்றிவிட்டு உடனே மீண்டும் திரும்புவதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தால்  இறைவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் பாக்கியம் கிட்டும்.   நன்றி தினகரன் 











பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம்; ஜனாதிபதி காட்டம்





பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம்; ஜனாதிபதி காட்டம்-President-Meeting-with-Senior-Officials-of-Central Bank-16-06-2020
“நாடு முகங்கொடுத்துள்ள சுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. நாம் ஒரு பூகோள பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளோம். வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உதவும் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடமும் திறைசேரியிடமுமே உள்ளது. உலகின் பெரிய, சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள் இப்பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு பல்வேறு வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. எமது மத்திய வங்கியிடமிருந்து அதற்கான எந்தவொரு நல்ல பதிற்குறியும் கிடைக்கப்பெறவில்லை. பிரச்சினையை வெற்றிகொள்வதற்கு செய்ய வேண்டியதை எவ்வித தாமதமுமின்றி எனக்கு அறியத் தாருங்கள்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மத்திய வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பொறுப்பை தட்டிக் கழிக்க வேண்டாம்; ஜனாதிபதி காட்டம்-President-Meeting-with-Senior-Officials-of-Central Bank-16-06-2020
பொருளாதார புத்தெழுச்சிக்காக அரசாங்கம் அதன் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. அதற்கு மத்திய வங்கியின் உதவி இதுவரை கிடைக்கவில்லை. அதற்கான காரணத்தை விளக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளினதும் சிறிய நாடுகளினதும் மத்திய வங்கிகள் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தேவையான பொறிமுறைகளை முன்வைத்துள்ளன. எனினும் எமது நாட்டின் மத்திய வங்கி பொருளாதார புத்தெழுச்சிக்காக எவ்வித முன்மொழிவையும் முன்வைக்கவில்லை. கடந்த சில வருடங்களாக பல நிறுவனங்களுக்கு அவர்கள் வழங்கிய சேவைகள் மற்றும் உற்பத்திகளுக்காக அரசாங்கம் பெருமளவு நிதியை செலுத்த வேண்டியுள்ளது. அவற்றை பிணையாக வைத்துக்கொண்டு 150 பில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகளை வங்கிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி முன்வைத்த முன்மொழிவை மத்திய வங்கி நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக ஏற்படும் பொருளாதார பின்னடைவு குற்றச்சாட்டு அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுவதாக ஜனாதிபதி கூறினார்.
மத்திய வங்கியில் நிதி மோசடிகள் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்த அதிகாரிகள் இன்னும் தமது பதவிகளில் உள்ளனர். அந்த பாரிய மோசடிக்கு உதவிய இவர்கள் நாட்டை கட்டியெழுப்புவதற்கு உதவாது இருப்பது குறித்து ஜனாதிபதி அவர்கள் அதிருப்தி தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்புவதற்காக  மக்கள் தனக்கு மிகப்பெரும் மக்கள் ஆணையை வழங்கியிருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அதனை நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டினை கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை இணைந்து கொவிட் நோய் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு பாரிய அர்ப்பணிப்பை செய்துள்ளனர். நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் பொறுப்பு மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு பதிலாக மத்திய வங்கி தனது முன்மொழிவுகளுக்குகூட தடை ஏற்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். இந்த பிரச்சினைகளை விளங்கிக்கொண்டு மிக விரைவாக மத்திய வங்கி அதன் முன்மொழிவுகளை அல்லது தனது முன்மொழிவுக்கான அனுமதியை வழங்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தார். இது இன்றைய தினமே செய்யப்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் ஆகியோரும் மத்திய வங்கியின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
சுகாதார பிரச்சினையை பொருளாதார பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. பெரிய நாடுகள் மட்டுமன்றி சிறிய நாடுகளின் மத்திய வங்கிகள்கூட பாரிய நடவடிக்கைகளை எடுக்கின்றன. அமெரிக்காவின் பெடரல் வங்கி 600 பில்லியன் அமெரிக்க டொலர்களை இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு வழங்குகின்றது. அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் இன்று அறிவிக்க உள்ளன. அதேபோன்று எம்மை சுற்றியுள்ள சிறு நாடுகளின் மத்திய வங்கிகளும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு பங்களிக்கின்றன. இதோ பாருங்கள். சூழல் மற்றும் அபிவிருத்திக்கான அரபு மன்றம் (AFED) முன் எப்போதும் இல்லாத வகையில் பொருளாதாரத்திற்கு உதவுவதற்கு முழு அளவிலான கருவிகளை பயன்படுத்தியுள்ளனர். இப்போது நாம் என்ன கருவியை பயன்படுத்தியுள்ளோம் ஒன்றும் இல்லை. இதற்காக எமது மத்திய வங்கி எதையுமே செய்யவில்லை. மத்திய வங்கியும் திறைசேரியும் தான் நிதி மற்றும் அரசிறை வருமான கொள்கையை தயாரிக்கின்றன. ஆனால் அது நாட்டின் ஜனாதிபதியினது பொருளாதார கொள்கைக்கு ஏற்ற வகையிலேயே அமைக்கப்பட வேண்டும். உங்களிடம் இதற்கென பல்வேறு கருவிகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த வேண்டும். எனினும் எமது மத்திய வங்கி எந்தவொரு கருவியையும் பயன்படுத்துவது இல்லை.
அவர்கள் நித்திரையில் இருக்கிறார்கள். 150 பில்லியன் ரூபாவை வங்கிகளுக்கு வழங்குமாறு நாம் கூறினோம். இது வர்த்தகத்துறையின் பிழை அல்ல. முன்னர் இடம்பெற்ற தவறுகளின் காரணமாக அனைத்து கம்பனிகளுக்கும் அரசாங்கம் பெருந்தொகையை வழங்க வேண்டியுள்ளது. இப்போது இந்த நிதியை பிணையாக வைத்துக்கொண்டு வங்கிகளிலிருந்து இவர்களுக்கு கடன் பெறுவதற்கு இடமளியுங்கள். அப்போது அவர்களால் பொருளாதாரத்தை கொண்டு நடத்த முடியும். பணசுழற்சி இது தான். இது மிகவும் இலகுவானது. இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. எனினும் நீங்கள் என்ன செய்கிறீர்கள். உங்களது தவறுகள் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்றன. நீங்கள் இவ்வாறான விடயங்களை பார்ப்பதில்லை. பினான்ஸ் கம்பனிகளுக்கு நடந்துள்ள நிலைமையினை பாருங்கள்.
இந்த நிதி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவது முகாமைத்துவம் செய்வது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் அதனை செய்வதும் இல்லை. லீசிங் நிறுவனங்களைப் பற்றி பார்ப்பதும் இல்லை. ஈ.ரி.ஐக்கு என்ன நடந்தது. இவற்றை நீங்கள் பிழையாக செய்து இறுதியில் அவர்களால் பணத்தை செலுத்த முடியாதுள்ளது. த பினான்ஸ் நிறுவனம் மூடப்பட்டுள்ளது. அது எமக்கு தெரியாது. இப்போது அதற்கு எப்படி பணம் செலுத்துவது. அவற்றை முகாமைத்துவம் செய்வதும் இல்லை. இங்கு இருப்பவர்கள் அனைவரும் பொருளாதார நிபுணர்கள். இலட்சக் கணக்கில் சம்பளம் பெறுகின்றார்கள். என்ன செய்கின்றீர்கள். உங்களுக்கென்று ஒரு பொறுப்புள்ளது. உங்களுக்கு நான் ஒரு பொறிமுறையை வழங்கியிருக்கின்றேன். அதனை உங்களால் செய்ய முடியாதென்றால் நாளை காலை ஆகும்போது எனக்கு ஒரு பொறிமுறையை சமர்ப்பிக்க உங்களுக்கு முடியும்.
ஏனைய நாடுகள் சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளை பாதுகாப்பதற்கு என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். இங்கு என்ன செய்யப்படுகின்றது. ஒன்றில் நீங்கள் என்னை கஷ்டத்திற்கு உள்ளாக்கப் பார்க்கிறீர்கள். அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க பார்க்கின்றனர். நீங்கள் உங்களது கடமைகளை செய்தால் நான் இவ்வாறு பேச வேண்டிய தேவையில்லை. என்றாலும் நான் தெரிவு செய்யப்பட்டு எட்டு மாதங்கள் ஆகின்றன. வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என அன்றிலிருந்தே கூறி வருகின்றேன்.
கடந்த அரசாங்கத்தின் தவறுகளைப்பற்றி எனக்கு பேசத்தேவையில்லை. ஆனால் நீங்கள் அறிவீர்கள், அந்த வங்கிக் கொள்ளையின்போதும் நீங்கள் இருந்தீர்கள். அவற்றுக்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் ஏன் நான் எதிர்பார்க்கும் நியாயமான விடயத்துக்காக செயற்பட முடியாது. இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக எனக்கு மக்கள் மிகப்பெரும் அதிகாரத்தை தந்துள்ளார்கள். நான் கேட்பது இதனை செயற்படுத்த இடமளிக்குமாறு மாத்திரமே ஆகும். கொரோனா வந்தது. அது இன்று முழு உலகிலும் இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார திணைக்களம், இராணுவம், உளவுப்பிரிவு, பொலிஸ் போன்ற நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனால்தான் எமக்கு இயலுமாக இருந்தது. உலகின் ஏனைய நாடுகளை விட முதலாவதாக இந்நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு எமக்குள்ள இந்த பொருளாதார நெருக்கடி இன்னும் இன்னும் கீழ் நோக்கி செல்வதற்கு முன்னர் இதனை மீளக்கட்டியெழுப்புவது உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. தற்போது அதனை நடைமுறைப்படுத்த எனக்கு உதவி செய்யுங்கள். நான் கூறும் முறைமைகள் இல்லையென்றால், என்ன முறைமைகளை நீங்கள் முன்வைக்கிறீர்கள்? இவ்வாறான சந்தர்ப்பத்தில் இந்நாட்டில் உள்ள மிகப்பெரிய பொருளாதார நிபுணர்கள் இருக்கும் இடத்தில் இது உங்களது கடமையில்லையா? இந்த நிலைமையில் இருந்து முன்னேறுவதற்கு அவசியமான முறைமையொன்றை முன்வைப்பது? நீங்கள் எதனை முன்வைத்திருக்கிறீர்கள்? எதனைச் செய்ய சொல்கிறீர்கள்? என்ன ஆலோசனைகளை நீங்கள் எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்? எதுவும் இல்லை. இவற்றை பார்த்து நான் சிந்தித்தேன். நான் கூறுபவைகளை செய்ய எவரும் முன்வருவதில்லை. அதனையும் தடுப்பீர்களாயின் ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்கிறேன். தயவுசெய்து நான் கூறுபவைகளை நடைமுறைப்படுத்தவில்லையென்றால் உங்கள் திட்டங்களை நாளை காலையாகும்போது எனக்கு தாருங்கள். இந்த பொருளாதார நிலையில் இருந்து எவ்வாறு நாம் முன்னேறுவது என்பது பற்றிய உங்கள் கருத்துக்கள் என்ன என்பதை, எவ்வாறு பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, எவ்வாறு இந்த பொருளாதார நிலையில் வங்கிகளுக்கு உதவுவது, எவ்வாறு சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு கைகொடுப்பது, எவ்வாறு என்று நீங்கள் கூறுங்கள். நான் கூறுவது தவறு என்றால் தவறு என்று எனக்குக் கூறுங்கள்.   நன்றி தினகரன்  









மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பலம் மிக்க ஜனாதிபதி ஆணைக்குழு





யாழ். மாவட்ட சு.க வேட்பாளர் பவதாரணி தேர்தல் வாக்குறுதி
மக்களின் அன்றாடத் தேவைகள் மற்றும் மக்களின் அடிப்படை அபிலாஷைகள் குறித்த தகவல்களை அறிந்து அவற்றை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்து எடுத்துக் கூறக்கூடிய பலம் மிக்கதொரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பாக எனது அழுத்தத்தை மக்கள் சார்பாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் முன் வைப்பேன். இதுவே எனது தேர்தல்  உறுதிமொழி என யாழ். மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் பவதாரணி இராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பகுதியில் மட்டுமல்லாது இலங்கையில் எந்தப் பகுதிகளில் வாழ்ந்தாலும் மக்கள் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி உயர்ந்த வாழ்க்கை வாழக்கூடிய சூழல் உருவாக வேண்டும். ஆனால் இன்று நாட்டில் அத்தகையதொரு சூழ்நிலை இல்லை.
ஒரு பிரிவினர் மிகவும் உயர்ந்த நிலையிலும் ஏனையோர் மிகவும் வறுமைப்பட்ட நிலையில் வாழும் தன்மையை பார்க்கின்றோம். இதனை நாங்கள் மாற்றியமைக்க வேண்டும். எனக்கு அரசியலில் நாட்டம் ஏற்பட்டதற்கு இதுவே பிரதான காரணமாக அமைந்துள்ளது.
ஏனெனில் நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சமூக சேவையை நாட்டின் பல பாகங்களிலும் செய்து வருகின்றேன். அப்போது என்னால் உணர கூடிய ஒரு விடயமாக இது இருந்தது. அதாவது வாழ்க்கையில் மிகவும் பின்தங்கிய நிலையில் மக்களில் 50 சதவீத மானவர்களுக்கு மேலாக வாழ்கின்றனர்.இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
அவர்கள் தொடர்ந்தும் இத்தகைய அவல வாழ்க்கையை வாழ முடியாது. அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றால் அரசாங்கம் ஊடாக ஒரு ஆணையைப் பெற்று பலம் இருக்க வேண்டும்.எனவேதான் என்னை தானாகவே தேடி வந்த அரசியலை நான் ஏற்றுக்கொண்டேன்.அரசியலில் வேறு எந்த நோக்கமும் எனக்குக் கிடையாது.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இந்நாட்டில் வாழ்கின்ற சகலருமே ஒரு சமநிலையான வாழ்க்கையை வாழவேண்டும் என்பதற்காக நான் நிச்சயமாக பாடுபடுவேன் என்றார்.
ரி.விரூஷன்   நன்றி தினகரன் 












தனியாருக்கு மணல் அகழ அனுமதி வழங்கியதற்கு எதிராக போராட்டம்





வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் தனியார் ஒருவருக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று காலை 7:30 மணியளவில் ஆரம்பமான மறியல் போராட்டம் நண்பர்கள் வரை இடம்பெற்றது.
மணக்காடு பகுதியைச் சேர்ந்த 17 பாரவூர்திகளுக்கும் மணல் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் ஒருவருக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அங்குள்ள பார ஊர்தி வைத்திருக்கும் 17 பேரும் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நாளைய தினத்துக்குள் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் சனிக்கிழமை முதல் தொடர்மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  நன்றி தினகரன் 









கருணா யார் என்பது கிழக்குக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரியும்

Thursday, June 18, 2020 - 6:00am

அதேபோன்று சுமந்திரன் யாரென்பதுவும் தெரியும் என்கிறார் கருணா
கிழக்கிலுள்ள மக்களுக்கு கருணா அம்மானை தெரியும் என்கிறார் சுமந்திரன். அவர் சொன்னது உண்மையே. கருணா அம்மானை கிழக்குக்கு மட்டுமல்ல இந்த உலகுக்கே யாரென தெரியுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்தார்.
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று கோளாவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தை நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். நிகழ்வில் தொடர்ந்து  உரையாற்றிய அவர், சுமந்திரனை பொறுத்தவரை அரசியலில் முதிர்ச்சியடையாதவர்.
ஐக்கிய தேசிய கட்சியினரால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினுள் அனுப்பிவைக்கப்பட்ட ஒரு புல்லுருவி. அவர் எப்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுள் உள்வாங்கப்பட்டாரோ அன்றிலிருந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சின்னாபின்னமாக்கப்பட்டது.
அவர் கிழக்கு மக்களை மட்டுமல்ல வடகிழக்கு மக்களை பற்றி பேச அருகதையற்றவர். போராட்ட காலத்தில் கொழும்பில் பிறந்து கொழும்பிலே வளர்ந்தவர். வடக்கு கிழக்கில் உள்ள மக்களின் மனநிலையை அறியாதவர். அவ்வாறானவர்களின் கருத்தை நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.
இந்த நிலையிலே அம்பாரை மாவட்டத்தில் புரட்சியோடு எமது செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தமிழர் ஒருவரை முதலமைச்சராக்குவதே இதன் முடிவாகும். அதனை நோக்கியதாகவே எமது நகர்வு முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.
இதேநேரம் கடந்த மாகாண சபையில் 11 ஆசனங்களை வைத்துக்கொண்டு 7 ஆசனங்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை தாரை வார்த்த சம்பந்தன் ஐயா தேசியம் பற்றி எங்களுடன் பேசுகின்றார்
அம்பாரை மாவட்டத்தை பொறுத்தவரையில் மிகவும் சிக்கல் நிறைந்த மாவட்டமாக கருதப்படுகின்றது. அதிலும் தம்ழர்களே பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். 22 தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
அரச உயர் பதவிகளில் தமிழர்கள் இல்லை. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் விதவைகளாக உள்ளனர். இதற்கெல்லாம் தீர்வு காணப்படுமென கூறிய அவர் அம்பாரையில் தமிழ் மக்கள் எழுச்சி பெற்றுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டினார்.
வாச்சிக்குடா விசேட நிருபர் நன்றி தினகரன் 










காணி எல்லைப்படுத்தலுக்கு புதுக்குடியிருப்பில் எதிர்ப்பு

Thursday, June 18, 2020 - 12:22pm

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட தண்டுவான் பகுதியில் நில அளவைத் திணைக்களத்தின் நடவடிக்கை  நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பு ஒன்று திரட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.
முல்லைத்தீவு ஏ-35 மற்றும் ஏ-9 வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகளிலும் மக்களுக்கு சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில்  மாவட்ட நில அளவைத்திணைக்களம் ஈடுபட்டது.
மக்கள் கூட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நில அளவைத்திணைக்கள அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஒட்டுசுட்டான் பொலிஸார் சென்றனர்.
பொலிஸார் மக்களின் பிரச்சினையினை சுமூகமாக்க முயற்சித்த வேளை மக்களின் எதிர்பினை தொடர்ந்து இது குறித்து பிரதேச செயலாளரிடம் இன்று எழுத்துமூலம் முறையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
புதுக்குடியிருப்பு நிருபர் - நன்றி தினகரன் 












ரணில், மைத்திரி உள்ளிட்ட நால்வரிடம் வாக்குமூலம் பெற உத்தரவு





மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் எஸ். பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால், பதில் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு பணிக்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 









தமிழர்கள் ஒன்றுபடாவிட்டால் இருப்பை இழந்து கையேந்தும் நிலைமை ஏற்படும்





தமிழர்கள் ஒருமித்து இம்முறை தேர்தலில் வாக்களிக்காவிட்டால்,இருப்புக்களை இழந்து அயல் சமூகத்தவரிடம் கையேந்தும் அரசியல் அநாதைகளாக்கப்படுவரென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் ஊடகவியலாளருமான டாக்டர் இரா. சயனொளிபவன் கருத்து தெரிவித்தார். 
அம்பாறை மாவட்ட சமகால தேர்தல் களம்  தொடர்பில் கருத்து  வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில், ஏழு பேரைத் தெரிவு செய்ய 510வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் அண்ணளவாக ஜந்து இலட்சத்தி பத்தாயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இதில் 2,40,000முஸ்லிம்களும்1,80,000சிங்களவர்களும் 94,000தமிழர்களும் வாக்களிக்கவுள்ளனர்.கடந்த காலத்தில் சிங்களவர்கள் 85வீதமும் முஸ்லிம்கள் 75வீதமும் தமிழர்கள் 60வீதமும் வாக்களித்தனர்.இந்நிலையில் இம்முறை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி என ஆறு ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால் எஞ்சியுள்ள ஒரு ஆசனம் யாருக்கு என்பதே கேள்வியாகவுள்ளது. இந்த ஆசனத்தைப் பெறுவதற்கே தமிழர்கள் ஐக்கியப்பட வேண்டியுள்ளது. நாம் எமக்குள் வாக்கிற்காகவும் தனிப்பட்ட நன்மைகளுக்காவும் பிரிந்து நிற்பதால் எந்த சாத்தியமான விளைவுகளும் அடையப் போவதில்லை. நிச்சயமாக இது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே உருவாகியுள்ள பிரதிநித்துவப் போட்டியாகவே இதனை நாம்  பார்க்க வேண்டும். 
முஸ்லிம் கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதை  சாதகமான விடயமாகவே நாம் உற்று நோக்க வேண்டும்.இதனை  சாதகமாகப் பயன்படுத்தும் பகுத்தறிவே தற்போதைய சூழ்நிலையில் தமிழர்களுக்கு கால கட்டாயமாகியுள்ளது.
தமிழரின் வாக்குகளைப் பெறுவதற்காக பல்வேறு பட்ட கட்சிகளும் அதனுடைய வேட்பாளர்களும் களமிறங்கப்பட்டுள்ளனர்.  இக்கட்சிகளிடையே தமிழ் தேசிய கூட்டமைப் புத்தான்  பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது. குறிப்பாக இத் தேர்தலில் இளைஞர்கள் பலர் கூட்டமைப்பில் களம் இறங்கி உள்ளமை கட்சியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.   அனைத்திற்கும் அப்பால் இனம் மீதான பற்றில் இருப்புக்களைப் காப்பாற்ற வேண்டிய கடப்பாடுகளுக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதுதான் உள்ள வழியாகும்.இதனூடாகவே தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(காரைதீவு குறூப் நிருபர்)
நன்றி தினகரன் 











திரையரங்குகள் ஜூலை 27 இல் திறப்பு





நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளையும் எதிர்வரும் 27ஆம் திகதி மீளத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருந்த  திரையரங்குகள் சுமார் 105 நாட்களின் பின்னர் திறக்கப்படவுள்ளன.
சுகாதார ஆலோசனைகளின் கீழ், திரையரங்குகளை நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, கலாச்சார அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்தார். 
திரையரங்குகளை மீளத் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க வழங்கியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி முதல், அனைத்து திரையரங்குகளும்  திறக்கப்படவுள்ளன.    நன்றி தினகரன் 











வடக்கு, கிழக்கில் த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும்!

Saturday, June 20, 2020 - 10:30pm

வடக்கு, கிழக்கில் த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும்!-TNA Will Loose In Northern Province-V Muralitharan Alias Karuna
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது நானே
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உருவாக்கியது நானே. யுத்தம் நடைபெறுகையில் பாராளுமன்றில் தமிழர்களின் குரல் ஒலிக்கவேண்டும் என சிவராம் கூறியதற்கிணங்க தலைவரிடம் கூறி நானே த.தே.கூட்டமைப்பை உருவாக்கினேன்.
இவ்வாறு தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சரும் திகாமடுல்லை (அம்பாறை) மாவட்ட வேட்பாளருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பொத்துவில்  ஊறணி எனுமிடத்தில் தேர்தல் பரப்புரையில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:
வடக்கு கிழக்கில் இம்முறை த.தே.கூட்டமைப்பு படுதோல்வியைச் சந்திக்கும். கொழும்பை மையமாக வைத்தியங்கும் சுமந்திரன் ரணிலின் முகவர். தமிழர்களை விற்றவர். வடக்கு கிழக்கை அவருக்கு தெரியாது. இன்று போராளிகளை கொச்சைப்படுத்துகிறார். யாழ். மக்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்.

அன்று அக்கட்சியில் இருந்தவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள். இன்று அத்தனை பேரும் கள்வர்கள். தமிழர்களை விற்று பணம் சம்பாதித்தவர்கள். என்று சுமந்திரன் அதற்குள் புகுந்தாரோ அன்றோடு கூட்டமைப்பு அழிவை எதிர்நோக்கியது.
அம்பாறை மாவட்டத்தில் ஒரு முகவர். அவருக்குள்ள வர்த்தகம் பூராக முஸ்லிம்களுடன். கஞ்சிகுடிச்சாற்றில் வெட்டும் எமது மரங்களை அவர்களுக்கு விற்பது,மலையை உடைத்து அவர்களுக்கு விற்று கமிசன் உழைக்கிறார். ஒப்பந்தமே அவரது வேலை. மக்களுக்கு செய்தது ஒன்றுமில்லை.
முதன் முதலில் கப்பலோட்டியவன் தமிழன். எமது சின்னம் கப்பல். அன்று வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டியவன் தமிழன். நாம் இன்று அம்பாறையில் கப்பலோட்டுவோம். இளைஞர்கள் ஒன்று திரண்டுள்ளனர். மகிழ்ச்சி.
மஹிந்த தேசியப்பட்டியலூடாக எம்.பி. தருவதாகக் கூறினார். நான் மறுத்தேன். தேர்தல் மூலமாக எம்பியாகி எமது அம்பாறை தமிழ்மக்களுக்கு சிறந்த சேவையாற்ற பல திட்டங்களை வகுத்துள்ளேன்.
அன்று என்னை மட்டக்களப்பிற்கும் அம்பாறைக்கு பியசேனவையும் மஹிந்த அவர்கள் நியமித்தார்கள். நான் மட்டக்களப்பில் பல கோடிருபா பெறுமதியான வேலைகளை செய்தேன். பாசிக்குடா அபிவிருத்தி கல்லடிப்பாலம் பிரண்டிக்ஸ் நிறுவனம் இப்படிப் பல .இன்று பிரண்டிக்ஸில்  7,000 தமிழ் யுவதிகள் வேலை செய்கிறார்கள். அதேபோல் இங்கும் செய்வேன். மாற்றத்திற்காக ஒன்று படுங்கள். என்றார்.
(காரைதீவு குறூப் நிருபர் சகா)   நன்றி தினகரன் 












5 மணிநேரத்தின் பின் CIDயிலிருந்து ரிஷாட் வெளியேறினார்





குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், சுமார் 05 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், இன்று (20) பிற்பகல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டில் லங்கா சதொசவுக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு  அழைக்கப்பட்டிருந்தார். 
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இன்று முற்பகல் 11.30 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்ததோடு, அங்கிருந்து 4.30 மணிக்கு அவர் வெளியேறியுள்ளார்.     நன்றி தினகரன் 











புலனாய்வு உத்தியோகத்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு

Saturday, June 20, 2020 - 2:42pm

கடமை அறையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த தேசிய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் 21 வயதுடைய புலனாய்வு உத்தியோகத்தர்  ஒருவர் நேற்று (19) மாலை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு   இரவு 9.00 மணியளவில் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் தாஹா செய்னுதீன் வருகை தந்து விசாரணை மேற்கொண்டதுடன், குறித்த  சடலத்தை  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.
இவ்வாறு  உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வடமராச்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய புலனாய்வு பிரிவு உத்தியோகத்தரான கே.கமலராஜ் என்பவராவார்.
இவ்விடயம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


நன்றி தினகரன் 












பொத்துவிலில் சலசலப்பு; கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்




பொத்துவிலில் சலசலப்பு; கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்-Pottuvil Temple Issue
பொத்துவில் முஹுது மகாவிகாரையை அண்டிய பிரதேசங்களை அரசு கையக்கப்படுத்த போவதாக நேற்று (18) பரவிய செய்தியை அடுத்து குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவியது. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்று பொதுமக்களை சந்தித்த பொத்துவில் பிரதேச செயலாளர் இன்று மக்களின் சார்பில் ஐவரை பிரதேச செயலகத்தில் சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்த போதிலும் இன்று (19) அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
பொத்துவிலில் சலசலப்பு; கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்-Pottuvil Temple Issue
பிரதேச செயலகத்திற்கு சமுகமளித்த மக்களின் சார்பிலான பிரதிநிதிகளை சந்திக்க பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக உயரதிகாரிகள்  அலுவலகத்தில் இல்லாமல் இருந்த நிலையில் முஹுது மகாவிகாரை பிரதேசத்தில் நில அளவை திணைக்கள, தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் அளவிட வருகை தந்திருந்தனர். இந்த செய்தி பரவியதை அடுத்து இன்று காலை மக்கள் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தினர்.
பொத்துவிலில் சலசலப்பு; கட்சிபேதமின்றி களமிறங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகள்-Pottuvil Temple Issue
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கலகம் அடக்கும் பொலிஸார், ராணுவ வீரர்கள் களத்தில் பலத்த பாதுகாப்பு வழங்கினர். இங்கு சமுகமளித்த பொத்துவில் பிரதேச சபை தவிசாளரும் பொதுத்தேர்தல் வேட்பாளருமான கலாநிதி எம்.எஸ். அப்துல் வாசித், பொதுத்தேர்தல் வேட்பாளர் சட்டத்தரணி முஷாரப் முத்துநபின் ஆகியோர் அம்பாறை மாவட்ட அராசங்க அதிபரை தொலைபேசியுடாக அழைத்து பேசினர்.
விடயங்களை கேட்டறிந்த மாவட்ட செயலாளர் நாளை மாலை மாவட்ட செயலகத்தில் இது தொடர்பில் கலந்துரையாடல் நடாத்த நேரம் வழங்கிய செய்தியை மக்களுக்கு வேட்பாளர்கள் அறிவித்ததை ஏற்றுக்கொண்டு மக்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
மேலும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், பொலிஸ் உயரதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அடங்கிய குழுவினர் அண்மையில் பொத்துவில் பிரதேசத்திற்கும் விஜயம் செய்து பொத்துவில் முஹூது மஹாவிகாரையை அண்டியுள்ள காணிகளை தொல்பொருள் திணைக்களத்திற்க்கு சொந்தமாக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்ட விடயம்  மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
நூருள் ஹுதா உமர்  நன்றி தினகரன் 










No comments: