'அமுதம் ஈந்தான்' -கம்பவாரிதி இலங்கை.ஜெயராஜ்-






லகம் உய்யக் காவியம் செய்தவன் நம் கம்பன்.
காலத்தால் முன்னும், பின்னும், நடுவும் நின்ற,
புலவோர்தம் சிந்தனைகள் அனைத்தையும்,
தன் காவியத்துள் அமைத்துக் காட்டி விந்தைசெய்தான் அவன்.
கம்பனுக்குப் பின் வந்த கவிஞர்கள் அனைவரும்,
அவனைப் போற்றிப் புகழ்ந்தமை வெளிப்படை.
'கவிச்சக்கரவர்த்தி' எனும் பட்டத்திற்கேற்ப,
மற்றைக் கவிஞர்கள் பணியும்படியாய் வாழ்ந்த,
கம்பனது புலமை தனித்துவமானது.
🌊🌊🌊🌊
வை.மு.கோபாலக்கிருஷ்ணமாச்சாரியார் போன்ற பேரறிஞர்கள் செய்த,
கம்பகாவிய உரை நூலின் ஆரம்பத்தில்,
'தனியன்கள்' எனும் தலைப்பில்,
மற்றைப்புலவர்கள் கம்பனைப் புகழ்ந்து பாடியதான,
சிலபாடல்கள் பதிவாகியுள்ளன.
அவற்றுள் சில கற்றோர்தம் இதயத்தைப் பெரிதும் களிக்கச் செய்வன.
இக்கட்டுரையில் அக்கவிதைகளுள் ஒன்றை, 
'ஒருசோற்றுப் பதமாய்' விளக்க முற்படுகிறேன்.
🌊🌊🌊🌊
ஒருவருடைய ஆற்றலால் வசீகரிக்கப்பட்டு,
அவரைத் தலைவராய் ஏற்கும் ஒருவன்,
அத் தலைவன் போலவே தானும் செயற்பட விரும்புதல் இயற்கை.
இன்றைய இளைஞர் பலர் நடிகர்கள்பால் ஈடுபட்டு,
அவர்களைப் போலவே செயல்புரிய முனைவது இதற்காம் உதாரணம்.
🌊🌊🌊🌊
கம்பன் திருமாலின் கல்யாண குணங்களில் தன் மனதைப் பறிகொடுக்கிறான்.
அதனால் அத்திருமாலை 'அவர் தலைவர்' என்று உரைத்து,
தன் மனத்துள் அவரைத் தலைவராய் வரிந்து கொள்கிறான்.
அங்ஙனம் வரிந்து கொண்டதால்,
திருமாலின் குறித்தஒரு செயல் போல,
தானும் ஒன்றை இயற்ற விரும்புகிறான்.
🌊🌊🌊🌊
பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்த காதை ஒன்று,
பல புராணங்களிலும் பதிவாகியுள்ளது.
மரணமிலாப் பெருவாழ்வு வேண்டித் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து,
'அமிர்தம்' எனும் சாகாமருந்தை எடுக்க முடிவு செய்கின்றனர்.
அம்முடிவின்படி பாற்கடலைக் கடைவதற்கான மத்தாக 'மந்தார' மலையையும்,
அம் மத்தைச் சுழலச் செய்வதற்கான கயிறாக 'வாசுகி' எனும் பாம்பையும் தேர்ந்து,
அம்மலையில் பாம்பினைக் கயிறாகச் சுற்றி,
 பாற்கடலில் இட்டுக் கடைய முனைகின்றனர்.
🌊🌊🌊🌊
பாம்பைச் சுற்றி மலையைக் கடலிலிட அம் மலை கடலுள் ஆழத்தொடங்குகிறது.
அதுகண்டு அதிர்ந்த தேவர்கள் திருமாலை இறைஞ்ச,
திருமால் ஆமையாய் வடிவெடுத்து அம்மலையைக் கடலுட் தாழாமற் தாங்கியும்,
தேவாசுரர்கள் அம்முயற்சியில் சலித்துப் போக,
தானும் ஒருவராய் தேவாசுரர்களுடன் இணைந்து,
பாற்கடலைக் கடைந்தும் அமிர்தம் பெறத் துணைபுரிகிறார்.
🌊🌊🌊🌊
கடையப்பட்ட பாற்கடலிலிருந்து,
திருமகள், காமதேனு, கற்பகதரு போன்ற,
அரியபொருட்கள் வெளி வருகின்றன.
அப் பொருட்களைத் தேவாசுரர்கள்,
தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர்.
அமிர்தம் வெளிப்பட இருந்த நேரத்தில்,
வாசுகிப்பாம்பு ஆலகால விஷத்தினைக் கக்கிவிட,
தேவாசுரர்பாடு மீண்டும் சங்கடமாகின்றது.
🌊🌊🌊🌊
இவ்விடத்தில் சைவ வைணவ புராணங்கள்,
கதைப் போக்கில் பாரியமாற்றம் ஒன்றைச் செய்கின்றன.
சைவர்கள், தேவர் முதலியோர் சிவபிரானை வேண்ட,
சிவமூர்த்தி அவ் ஆலகாலவிஷத்தை எடுத்து வாயிலிட்டதாகவும்,
அதனால் அவரது கண்டம் கறுத்ததாகவும்,
அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்றபெயர் வந்ததாகவும் உரைப்பர்.
வைணவர்கள் அதற்குமாறாய், வெளிப்பட்ட ஆலகால விஷத்தை,
மகாவிஷ்ணு தான் எடுத்து உண்டு மிகுதியைச் சிவனுக்குக் கொடுத்ததாகவும்,
அவ் விஷத்தை உண்ட காரணத்தாலேயே,
திருமாலினுடைய உடல் கறுத்ததாகவும் உரைப்பர்.
🌊🌊🌊🌊
தோன்றிய அமிர்தத்தின் பொருட்டு தேவாசுரர்கள் மோதிக் கொள்ள,
மோகினி வடிவெடுத்த திருமால்,
அவ் அமிர்தத்தைத் தேவர்களுக்குமட்டும் அளித்தனர்.
புராணங்களில் இக்காதை பயிலப்படுகிறது.
🌊🌊🌊🌊
மொத்தத்தில் பல வழிகளாலும் திருமாலே துணை செய்து,
அமிர்தத்தைத் தேவர்களுக்கு வழங்கினார் என,
புராணங்கள் பேசுகின்றன.
🌊🌊🌊🌊
தான் மனதால் தலைவராய் வரித்துக் கொண்ட திருமால்,
தேவர்களுக்கு அமிர்தமளித்த கதை கம்பனது மனதை ஈர்க்கிறது.
தலைவனது செயலைப் பின்பற்றி அவரைப் போல் இயங்க நினைப்பது,
தொண்டர்தம் இயல்பென முன் கண்டோம்.
திருமாலிடம் மனதைப் பறிகொடுத்த கம்பன்,
தானும் அவரைப் போல் அமிர்தம் எடுத்து,
எவர்க்கேனும் வழங்க வேண்டும் என முடிவு செய்கிறான்.
🌊🌊🌊🌊
கம்பனது அறிவு ஆழ்ந்து சிந்திக்கிறது.
அமிர்தத்தை எங்கே எடுப்பது?
அதை எங்ஙனம் எடுப்பது?
அதை எவர்க்கு வழங்குவது? எனும் கேள்விகள் 
கம்பன் மனத்துள் விஸ்வரூபம் எடுக்கின்றன.
🌊🌊🌊🌊
இருந்ததோ ஒரே பாற்கடல்,
அது ஏலவே கடையப்பட்டு அமிர்தம் பெறப்பட்டுவிட்டது.
எனவே மீண்டும் அமிர்தம் எடுக்கப் புதியதோர் பாற்கடல் வேண்டும்.
அப்பாற்கடலில் வெளிப்படும் அமிர்தம் முன்னைய அமிர்தம் போலவே,
உண்பார்க்குச் சாகாவரம் அளிக்க வேண்டும்.
அதுதவிர வேகமாய்ச் சுழன்று பாற்கடலைக் கடைய
மந்தாரமலை போன்ற ஓர் மத்து வேண்டும்.
முன் பெறப்பட்டஅமிர்தத்தைத் தேவர்கள் பெற்றுவிட்டதால்,
புதிதாய்த் தான் எடுக்கும் அமிர்தத்தை யாருக்கு வழங்குவதென,
முடிவுசெய்தல் வேண்டும.
கேள்விகள் விரிய, கம்பன் சிந்திக்கத் தலைப்படுகிறான்.
🌊🌊🌊🌊
முதற் பிரச்சனை பாற்கடல்.
புதிய பாற்கடலுக்கு எங்கு செல்வது?
வினாப் பிறந்த மறுகணமே கம்பன் மனதில் பதிலும் பிறக்கிறது.
தமிழை விடவா ஒரு பாற்கடல் இருக்கப் போகிறது?
ஏலவே பல புலவர்களால் கடையப்பட்டு,
பல அரிய விடயங்களை வெளித்தள்ளிய பாற்கடல் அல்லவா அது?
எனவே அதனைச் சற்று ஆழக் கடைந்தால்,
அமிர்தம் கிடைத்தல் உறுதியெனக் கம்பன் முடிவு செய்கிறான்.
பாற்கடலை இனம் கண்டு விட்டதில் கம்பனுக்கு மகிழ்ச்சி.
🌊🌊🌊🌊
இனி தமிழாகிய இப்பாற்கடலில்,
 சாகாமருந்தாகும் அமிர்தம் கிடைத்தல் கூடுமா?
மீண்டும் கம்பன் மனதில் வினா.
கற்போர்க்கு மரணமிலாப் பெருவாழ்வாகிய வீடுபேற்றை நல்கி,
பிறவிப்பிணி அறுக்கும் இராமகாதையாகிய அமிர்தத்தை,
தமிழ்ப் பாற்கடலைக் கடைந்து அதனுள் இருந்து பெற்றால்,
அவ்வமிர்தம் உண்டாரைச் சாகாது காக்கும் எனும் உண்மை அறிய,
கம்பன் மனதில் மீண்டும் மகிழ்ச்சி.
🌊🌊🌊🌊
அடுத்து, மத்தாய்ச் சுழன்று,
தமிழ்ப்பாற் கடலைக் கடைந்து, அமிர்தம் எடுக்க ஓர் மலை வேண்டுமே?
அங்ஙனம் ஓர் மலை இருப்பினும் அது வேகமாய்ச் சுழலத்தக்கதாகவும்,
தமிழ்க் கடலைக் கடையத் தக்கதாகவும், தாழாத தன்மை கொண்டதாகவும்,
இடை நின்று இயங்கத் தக்கதாகவும் இருத்தல் அவசியமன்றோ ? 
கேள்வி பிறக்கக் கம்பன் மனதில் விடை வருகிறது.
தமிழ் தந்த தன்னடக்கத்தால் அவ்விடையை வெளிப்படுத்த,
கம்பன் முதலில் தயங்குகிறான்.
தான் சார்ந்த ஒன்றை இந்நற்பணிக்காய்ப் பயன்படுத்துவதில்,
தன்னலம் கலந்துவிடுமோ என அஞ்சுகிறான் அவன்.
🌊🌊🌊🌊
கம்பன் தன்னைச் சார்ந்ததாய்க் கருதிய அந்த மலைதான் எது? 
தனது நாவையே கம்பன் அம்மலையாய்ப் பயன்படுத்த நினைக்கிறான்.
தமிழ்ப் பாற்கடலைக் கடையத் தேர்ந்தெடுக்கப்படும் மலை,
அக்கடலுள் நின்று வேகமாகச் சுழல வேண்டும் என்பது முதல் நிபந்தனை.
தமிழ்க்கடலுள் நின்று வேகமாய்ச் சுழல,
கம்பனது நாவைவிட வேறோர் பொருள் உண்டா? 
தாழாத தன்மை கொண்டதாய் அது இருக்க வேண்டும் என்பது,
இரண்டாவது நிபந்தனை.
உயர் கருத்துக்களை அன்றித் தாழ்ந்த கருத்துக்களை,
வழுக்கியும் வாயாற் சொல்லாத கம்பனது நாத்தாழாத் தன்மை கொண்டதன்றோ?
இடைநின்று இயங்க வேண்டியது மூன்றாவது நிபந்தனை.
இயல்வமைப்பிலேயே நா இடை நின்று இயங்கும் உறுப்பன்றோ?
மேற்தகுதிகளால்,
தமிழ்ப்பாற்கடலைக் கடைந்து சாகாமருந்து தரும் அமிர்தத்தை நல்க,
கம்பன் தன் நாவையே மத்தாகத் தேர்ந்தெடுக்கிறான்.
🌊🌊🌊🌊
பாற்கடல் கிடைத்து விட்டது.
அமிர்தம் இனங்காணப்பட்டுவிட்டது.
மத்து அறியப்பட்டுவிட்டது.
இனிப் பாற்கடலைக் கடைந்து,
அமிர்தம் எடுக்கவேண்டியதுதான் பாக்கி.
எடுக்கப் போகும் அமிர்தத்தை யார்க்கு வழங்குவது?
மீண்டும் கேள்வி எழக் கம்பன் சிந்திக்கிறான்.
🌊🌊🌊🌊
முன்னர் கிடைத்த அமிர்தத்தை சுரர், அசுரர் எனும் இருபாலாரில்,
சுரராகிய தேவரிடமே சேர்ப்பித்து மகிழ்ந்தார் திருமால்.
எனவே, தான் எடுக்கப் போகும் அமிர்தம் தேவர்க்குத் தேவைப்படாது. 
அசுரர்க்கு அமிர்தத்தை வழங்கலாகாது எனத் திருமாலே முடிவு செய்ததால்,
அவர்க்கும் இவ்வமிர்தத்தை வழங்குதல் கூடாது.
பின் யார்க்கு வழங்குவது?
கேள்வி பிறக்கக் கூடவே விடையும் பிறக்கிறது.
சுரர், அசுரர் போக, எஞ்சி நிற்போர் நரர் என உரைக்கப்படும் மானிடரேயாம்.
அவர்க்கே தான் எடுக்கும் அமிர்தம் போய்ச் சேர வேண்டும் என முடிவு செய்கிறான் கம்பன்.
🌊🌊🌊🌊
கம்பன் மனதில் மகிழ்ச்சி!
தமிழ்ப் பாற்கடலை தனது நாவாகிய மத்தால்க் கடைந்து,
இராமகாதை எனும் அமிர்தத்தை எடுத்து மானிடர்க்கு வழங்கினால்,
அதனை மனித இனம் உண்டு அக்காதைக் காட்டும் அறவழியில் இயங்கி,
வீடுபேறாகிய சாகாநிலையை அடைதல் திண்ணம்.
அக்காரியத்தை இயற்றுவதன் மூலம்,
தான் தோன்றிய மானிட இனத்திற்கு,
நன்றிக் கடன் இயற்றலாமென நினைந்து மகிழ்கிறான் கம்பன்.
🌊🌊🌊🌊
தன் நாவால் தமிழாகிய பாற்கடலை,
உடனேயே கடையத் தொடங்குகிறான். 
அக்கடைதலினால் இராமகாதையாகிய அமிர்தம் தமிழில் வெளிவருகிறது.
முன்புபோலவே அவ்வப்போது அமிர்தத்தைக் கெடுக்கும் ஆலகால விஷங்களும்,
இவ்வமிர்த வெளிப்பாட்டிலும் வரவே செய்கின்றன.
தேவர்க்கு, பாற்கடலைக் கடையத் துணைபுரிந்த திருமாலே,
அங்கு எழுந்த ஆலகாலத்தை உண்டாற்போல,
கம்பனும் காவிய எதிர்ப்பாகிய அவ்விஷங்களை உண்டு, வென்று
இராமகாதை எனும் அமிர்தத்தை நரராகிய மானிடருக்கு வழங்கி மகிழ்கின்றான்.
🌊🌊🌊🌊
தனியன்களாய் அமைந்த கவிதைகளில் ஒன்றைப்பாடிய,
கம்பனது பெருமையை உணர்ந்த முகந்தெரியாத ஒருபுலவர்,
கம்பன் கவிதைக் கடலில் மூழ்கி மயங்கி,
இராமகாதை பிறந்;த நயத்தினை,
தனது கற்பனைப்படி மேற்கண்டவாறு நினைந்து, மகிழ்ந்து,
அதனைப் பாடலாய்ச் சமைக்கின்றார்.
இஃதே அப்பாடல்,
அம்பிலே சிலையை நாட்டி அமரர்க்கு அன்(று) அமுதம் ஈந்த
தம்பிரான் என்னத் தானும் தமிழிலே தாலை  நாட்டிக்
கம்பநாடுடைய வள்ளல் கவிச்சக்கரவர்த்தி பார்மேல்
நம்பு பாமாலையாலே நரருக்கின்(று) அமிர்தம் ஈந்தான்.
🌊🌊🌊🌊
அப்பு என்பது நீரைக் குறிக்கும் சொல்.
அச்சொல் இப்பாடலில் அம்பு என மெலித்தல் விகாரமுற்று நிற்கிறது.
தால் எனும் சொல் நாவைக் குறிப்பது.
இவ்விரண்டு சிறு மொழி இடரும் நீங்க,
இப்பாடற் பொருள் எவர்க்கும் தானே விளங்கும்.
🌊🌊🌊🌊
கம்பனின் முழுப் பெருமையையும் உணர்ந்த அப்புலவர்,
பாடலின் ஈற்றடியில் கம்பனின் கவிதைகளை,
நம்புபாமாலை என்று உரைப்பது ஆழ்ந்து ரசிக்கத்தக்கது.
மேற்தொடர் 'வினைத்தொகை' இலக்கணத்தால் அமைக்கப்பட்டது.
மூன்றுகாலத்தையும் உள்ளடக்கிநிற்கும் விடயத்தை வினைத்தொகை என்பர்.
நம்புபாமாலை எனும் வினைத்தொகைத் தொடரால் கம்பனது கவிதைகள்,
அன்றும் நம்பிக்கைக்குரியவை.
இன்றும் நம்பிக்கைக்குரியவை.
என்றும் நம்பிக்கைக்குரியவை என,
மேற்புலவர் உறுதிபட உரைக்கின்றார்.
என்னே! அப்புலவரின் ஆற்றல்!
கம்பனைத் தொட்டார்க்குக் கவிதை வருவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
🌊🌊🌊🌊
நன்றி - உகரம் |இலக்கியப் பூங்கா| கம்பவாரிதி. இலங்கை ஜெயராஜ் | www.uharam.com



No comments: