அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 19 – பூரிகை மற்றும் வாங்கா- சரவண பிரபு ராமமூர்த்தி


பூரிகை மற்றும் வாங்கா - ஊதுகருவிகள்
உய் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் (ஊய்தல் வினைச் சொல் வழியே) உயிர் என்னும் சொல் பிறந்தது போல், புர் என்னும் மொழியற்ற வாயொலியின் பயனாய் பூருதல் என்ற வினைச்சொல் ஊதுதல் என்ற பொருளை உள்நிறுத்தும். இது கொஞ்சம் திரிந்து, பூரித்தல் என்ற வினைச்சொல் தொனித்தல் என்ற பொருளிலும், மூச்சை உள்ளிழுத்தல் என்ற பொருளிலும் எழும். பூரி என்ற பெயர்ச்சொல் தான் இந்த கருவியின் பெயராகி போனது. பூரிகை என்பதும் இதுவே.

பூரிகை  திருசின்னத்தை ஒத்த அமைப்பையுடையது. எக்காளத்தைப் போல புனல் வடிவிலான அனசும் நீண்ட நேரான உலவு பகுதியும் உடையது. கிளாரினெட்டை போன்று வளைந்த வடிவம் கொண்டது வளவுபூரி. வளைந்து இருப்பதால் இது வளவுபூரி. முற்றிலும் இயற்கையாக இயங்கவல்லது. எக்காளத்தைப் போல, தட்டையான அமைப்பையுடைய அனசு, நீண்ட உலவு, நடுவில் வளைவெடுத்து, பின்னர் மீண்டும் நீண்டு நிற்கிறது.

வாங்காவும் கிளாரினெட்டை ஒத்த வடிவம் கொண்டது. ஆனால், முற்றிலும் இயற்கையாக இயங்கவல்லது. எக்காளத்தைப் போல, பெரிய புனல் வடிவிலான அனசு, நீண்ட உலவு, நடுவில் வளைவெடுத்து, பின்னர் மீண்டும் நீண்டு நிற்கிறது. வாங்கா என்ற பறவையின் ஒலிக்கு இணையான இசையை வெளிப்படுத்துவதால் இப்பெயர். வாங்கா என்கிற பறவையின் ஓசை போலவே ஒரு குழலின் ஓசை இருந்ததாக சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. இந்தப் பறவையின் பெயரிலேயே தான் தற்காலத்தில் வாங்கா கருவி அழைக்கப்படுகிறது.
வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல வகவும்”                       (குறுந்)

வாங்காவும் பூரிகையும் அனசு பகுதியின் அமைப்பில் வேறுபடுகிறது. பூரிகையின் அனசு சற்று சிறியதாகவும் தட்டையாகவும் வாங்காவின் அனசு மிகவும் பெரிதாகவும்(பெரிய புனல் வடிவில்) இருக்கின்றது.


சங்க இலக்கியங்களில் வங்கியம் என்ற இசைக்கருவி பற்றிய குறிப்புகள் நிறைய காணப்படுகிறது. தற்காலத்தில் வாங்கியா என்று அழைக்கப்படும் இசைக்கருவி ராஜஸ்தானில் புழக்கத்தில் உள்ளது. இது நமது தமிழ்நாட்டின் வாங்கா/வங்கியம் என்ற இசைக்கருவியின் மருவிய வடிவமே ஆகும். இந்திய தேசம் முழுவதற்குமான பல இசைக்கருவிகள் நமது தாய்த் தமிழ்நாட்டில்தான் தோன்றின என்பதற்கு இவையெல்லாம் சாட்சிகள். தமிழகத்தின் பூரிகையை ராஜஸ்தானில்  பூரக்(बुरग) என்று அழைக்கிறார்கள். பூரியை நபிரி என்று அழைக்கிறார்கள்.

நபூரி, பூரிகை(பூரி) இவை எல்லாம் சிறு வேறுபாடுகள் உள்ள ஒரே வகை இசைக்கருவிகளாகும். சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் வளவுபூரி தான் அதிகம் புழக்கத்தில் உள்ளது. இதை இப்பகுதி மக்கள் வீரப்பூரி என்கிறார்கள். இலக்கியங்களில் பூரிகை என்று குறிப்பிடப்படும் இசைக்கருவி தற்காலத்தில் மருவி பூரி, வீரப்பூரி, வளவுப்பூரி என்று மாறிவிட்டது என்கிறார் கோசைநகரான் அமைப்பின் நிறுவனர் சிவத்திரு சிவகுமார் அவர்கள்.
 
அண்மை காலங்களில் பல நவீன போக்குவரத்து வசதிகளின் காரணமாக சாமானிய மக்கள் பல பல கோயில்களுக்குச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். ஆனால் ஒரு காலத்தில் குடியானவர்கள் அந்தந்த பகுதிகளில் இருந்த தெய்வங்களையே சென்று வழிபட்டு வந்தார்கள். அவ்வகையில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களை சுற்றி உள்ள பூர்வகுடி மக்கள் அதிகம் சென்று வழிபடும் தொன்மையான முருகன் ஆலயம் திருப்போரூர் கந்தசாமி கோயில் ஆகும். குலதெய்வத்திற்கு முதல் முடி காணிக்கை செலுத்தும் பெரும்பாலான சென்னை வாழ் பூர்வகுடி மக்கள் தங்களது இரண்டாவது முடி காணிக்கையை திருப்போரூர் முருகனுக்கே செலுத்துகிறார்கள். இன்று ஆகம மயமாகிவிட்ட திருப்போரூர் முருகன் கோயிலில் மாசி கிருத்திகை ஆடி கிருத்திகை போன்ற நாட்களில் கட்டற்ற தமிழ் வழிபாட்டு முறைகளை நாம் இன்றும் காணலாம்.

பழம்பெருமை வாய்ந்த இத்திருக்கோயிலில் நடைபெறும் மாசி கிருத்திகை பெருவிழாவில் வளவுப்பூரி எனப்படும் இசைக்கருவி காவடியாட்டத்தின் போது இசைக்கப்படுகிறது. அன்றைய தினம் திருப்போரூர் நகரெங்கும் காவடி மயமாக இருக்கும். அப்போது காவடி ஆட்டத்தில் காவடி ஆடுபவருக்குத் துணையாக உரத்த குரலில் திருப்போருர் கந்தனின் பெருமைகளை காவடி ஊர்வலத்தில் பாடி தவண்டை, உடுக்கை, பம்பை, சங்கு, சேமக்கலம் ஆகியவை இசைக்கப்படுகிறது. உடன் இந்த வளவுப்பூரி இசைக்கருவியும் இசைக்கப்படுகிறது. அன்றைய தினம் நீங்கள் திருப்போரூர் சென்றால் சுமார் 200 முதல் 300 வரையிலான பல வளவுப்பூரி இசைக்கருவிகளை ஒரே இடத்தில் காணலாம். ஊர்வலத்தில் இந்த இசைக்கருவியின் ஓசையானது உற்சாகமூட்டுவதாக உள்ளது.

திருப்போரூர் முருகனின் காவடி மற்ற பகுதிகளிலிருந்து மிகவும் வேறுபட்டிருக்கிறது. அலங்காரமான முறையில் மிகுந்த பொருட்செலவில் காவடிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த காவடிக்கான பூசை தமிழில் நடைபெறுகிறது. அப்பொழுது தமிழர் இசைக் கருவிகளான தவண்டை, பம்பை, சங்கு, சேமக்கலம், உடுக்கை மற்றும் வளவுபூரி ஆகியவை இசைத்து முருகன் பாடல்கள் பாடப்படுகின்றன.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் திரு வினோத் குமார் தம்பிரான் அவர்கள். இவரும் இவர் பரம்பரையினரும் பல வருடங்களாக திருப்போரூர், திருத்தணி போன்ற முருகன் தங்களில் காவடி பூசைகள் நடத்தி வருகிறார்கள். இவர்கள் தம்பிரான்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பல வருடங்களாக தமிழர் பாரம்பரிய இசைக்கருவிகளைப் போற்றி பாதுகாத்து வருகிறார்கள். திரு வினோத் குமார் தம்பிரான் அவர்கள் சிறுவயதில் தமது மாமா தன்னிடம் 2 வளவுபூரிகளை செய்து கொடுத்ததாகக் கூறுகிறார். தற்காலத்தில் இந்த இசைக்கருவிகளை செய்வதற்கு தமிழ் நாட்டில் எவரும் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விடயம். தம்பிரான்கள் வசம் தற்பொழுது இருக்கும் வளவுபூரிகள் தான் இனி வருங்காலத்தில் இருக்கப் போகும் கருவிகள். இச்சமூகத்தினர் இந்த கருவிகளை பொக்கிசமாக பாதுகாத்து வருவதாக கூறுகிறார் திரு வினோத்குமார். இக்கருவிகளுக்கு ஏதாவது பழுது ஏற்பட்டால் கூட அதை சரி செய்வதற்கு சரியான ஆட்கள் இல்லை என்று கூறுகிறார் இவர். சாதாரணமாக வெல்டிங் டிங்கரிங் செய்யும் நபர்களிடமே கொடுத்து மிகக்கவனமாக இக்கருவிகளின் பழுதை சரி செய்துகொள்வதாக கூறுகிறார். சற்று பிசகினாலும் பிறகு இக்கருவிகள் பயன்படுத்த முடியாத நிலை எற்படும் என்கிறார் இவர். ஆகவே அரிதிலும் அரிதான இந்த இசைக்கருவிகளையும் அதை வைத்திருக்கும் தம்பிரான்களையும் போற்ற வேண்டும். இவர்கள் வைத்திருக்கும் கருவிகளை மாதிரியாகக் கொண்டு புதிய கருவிகளை உருவாக்குவதற்கு ஆர்வமுள்ளவர்கள் முன்வரவேண்டும். எஞ்சியிருக்கும் இசைக் கருவிகளை பாதுகாப்பாக வைப்பது நம்முடைய கடமையாகும். நமது பிள்ளைகளுக்கும் நமது பாரம்பரியமான இசைக்கருவிகளை அறிமுகப்படுத்துவோம்.

சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மாவட்டங்களில் தாய் தெய்வ வழிபாட்டில் குறிப்பாக மாரியம்மன், பெரியபாளையத்தம்மன் போன்ற அம்மன் கோயில்களில் பம்பை உடுக்கையுடன் வளவுபூரி கண்டிப்பாக இசைக்கப்படுகிறது தமிழகத்தில் மிகுதியான வளவுபூரி இசைக்கருவிகளை சென்னை மாவட்டத்தில் நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நான்கு கால் மண்டபத்தில் மங்கள ஆரத்தி நடைபெறும் நேரத்திலும், மதிய, நள்ளிரவு பூஜையின்போது, அக்னி பகவானுக்கு ஹோமம் செய்யும்போதும் வாங்கா இசைக்கும் மரபு இருந்தது. பிறகு இக்கருவி பாழைடைந்து உடைந்து விட, மீண்டும் ஆந்திரத்தில் இருந்து புதிய கருவி வாங்கி வந்து தற்பொழுது உபயோகத்தில் உள்ளது.

திருவள்ளுர் மாவட்டம் மணவாள நகர் பகுதியில் திரு சுந்தரம் என்பவர் வாங்காவை இசைக்கிறார். மணவாள நகர் கோவில் திருவிழாவில் கேரள செண்டை மேளக்குழுவினரை நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறார்கள். ஏன் திரு சுந்தரம் அவர்களை அழைத்து ஆதரவளிக்கூடாது என்று விசாரித்ததில் அவர் மேற்கு மணவாள நகர் பகுதியை சார்ந்தவர் அவரை நாங்கள் கிழக்கு மணவாள நகர் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை என்றார்கள்.ஒரே ஊரில் கிழக்கு மேற்கு என்று பிரிந்து சாதியின் பெயராலும் வேறு பல பிரிவுகளின் பெயராலும் நாம் நமது பாரம்பரிய இசைக்கருவிகளை நிராகரித்து அவைகளை அழித்து வருகின்றோம். இனியும் சுதாரிக்கவில்லையென்றால் சுந்தரத்தின் வாங்கா தமிழகத்தில் ஒலிக்கும் கடைசி வாங்காக்களில் ஒன்றாக இருக்கும்.

குறும்பர் பழங்குடியின மக்களும் தங்கள் தெய்வ வழிபாட்டில் வாங்கா இசைத்து வழிபடுகிறார்கள். இவர்கள் இக்கருவியை வாங்குரோல் அல்லது  வாங்காரோல் என்று அழைக்கிறார்கள், சின்னசேலம், அம்மையகரம் போன்ற பகுதிகளில் புழக்கத்தில் இருப்பதை நாம் காணலாம்.

சிவாஜி நடித்த தெனாலிராமன் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் பூரி, வளவுபூரி உள்ளிட்ட பழமையான இசைக்கருவிகள் இசைக்கப்படுவதை நாம் காணலாம். மேலும் சிவாஜி நடித்த மற்றொரு படமான தங்க சுரங்கம் படத்தில் வரும் ஒரு மாரியம்மன் விழா பாடலிலும் பல்வேறு தமிழர் இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதில்  நகரா, கோனத்தாரை, பூரிகை, வளவுப்பூரி , நெடுந்தாரை ஆகிய கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதை நாம் காணலாம். சில ஆண்டுகள் முன்பு வரை பரவலாக மாரியம்மன் கோவில்களில் புழக்கத்திலிருந்த இக்கருவிகள் மிகவும் அருகி இன்று மறைந்துவிட்டன. புழக்கத்தில் இருந்த கருவிகள் இன்று எங்கே போனது என்று தெரியவில்லை. நமது அலட்சியத்தால் நமது இசைக்கருவிகளை நாம் இழந்துவிட்டோம். பூரிகை இசைக்கருவி மீண்டும் தமிழகமெங்கும் கோவில்களிலும் தமிழர்தம் விழாக்களிலும் ஓங்கி ஒலிக்க தமிழ் அன்னையை வேண்டுவோம்.

புழக்கத்தில் உள்ள இடங்கள்
பூரிகை:
திருப்போரூர் முருகன் கோவில்
திருத்தணி முருகன் கோவில்
கைலாய வாத்திய குழுவினர்
சென்னை மாவட்டத்தில் உள்ள நாட்டார் தெய்வ கோவில்களின் விழாக்கள் (மாரியம்மன், பெரியபாளையத்தம்மன், முனீஸ்வரன், பழண்டிஅம்மன், காத்தவராயன், அங்காளம்மன், பெரியாண்டவர்)
காஞ்சி சங்கர மடம்

வாங்கா:
திருவரங்கம் அரங்கநாதர் கோயில்
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர்
கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில்
குறும்பர் பழங்குடி மக்களின் தெய்வ வழிபாட்டு நிகழ்வுகளில்

பாடல்:
தீந்த தோதக தந்தன திந்திமி
ஆண்ட பேரிகை துந்துமி சங்கொடு
சேர்ந்த பூரிகை பம்பை தவண்டைகள் ...... பொங்குசூரை - திருப்புகழ் 475

தவில்முர சத்தந் தாரை பூரிகை
வளைதுடி பொற்கொம் பார சூரரை
சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா - திருப்புகழ் 966

தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்
கரடி தமருகம் வீணைகள் பொங்கத்
தடிய ழனவுக மாருத சண்டச் ...... சமரேறிக் - திருப்புகழ் 452

பேரிகையே அன்றிப் பூரிகை ஏன் பிள்ளாய் மன்மதா – சிறு
பெண்பிள்ளை மேற்பொரு தாண்பிள்ளை யாவையோ – மன்மதா
-       திருக்குற்றாலக் குறவஞ்சி, திரிகூடராசப்பக் கவிராயர் 

காணொளி
https://youtu.be/-NSsENLm-CI

https://youtu.be/W7_RB-A7KEM
https://youtu.be/Ck6iyQ472Ig
https://youtu.be/eBnutHCXByg
https://youtu.be/H-2E9-ysgzI
https://youtu.be/dnYQuupD7Sk
https://www.youtube.com/watch?v=OMK5kgMzcPg
https://www.youtube.com/watch?v=PWThGTaafpM
https://www.youtube.com/watch?v=Tnc2CyKfV_M
https://www.youtube.com/watch?v=X3NHZJtFssM
https://www.youtube.com/watch?v=q3SE-rDqb4g


திருப்போரூர் காவடி:

-சரவண பிரபு ராமமூர்த்தி
நன்றி:-
1.     திரு வினோத்குமார் தம்பிரான் அவர்கள் ,பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை, பாரம்பரிய தமிழ் இசைக்கருவிகள் கலைஞர் மற்றும் தமிழ்வழி காவடி பூசகர், +919094147848
2.     வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்


No comments: