
நிலமானிய முறையின் வீழ்ச்சி, கைத்தொழில், பொருளாதாரத்தின் எழுச்சி, விடுதலைப் போராட்டங்கள், சுதந்திர உணர்வு, கல்வி மேம்பாடு காரணமாக புதிய இலக்கிய வடிவமான புனைகதைகள் தோன்றலாயின.

19 ஆம் நூற்றாண்டிலேயே தமிழில் புனைகதை இலக்கியம் தோன்றியது. இதற்கு முன்னர் கதை கூறும் மரபு தமிழில் இருந்துள்ளது. ஐரோப்பியர் தமது சமயத்தைக் கீழைத்தேச நாடுகளில் தமிழர்களிடையே பரப்புவதற்கு தமிழைக் கற்றனர். இங்கிருந்த படித்த மத்தியதர வர்க்கத்தினர் மேல்நாட்டு புதிய இலக்கியங்களைக் கற்றனர். இவர்களால் தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட புதிய இலக்கிய வடிவமாக இப்புனைகதைகள் விளங்குகின்றன. வேறு மொழிகளில் இருந்த புனைகதைகளையும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளனர்.



பெண்கள் மீதான அடக்கு முறை ஆக்ரோசமாக இருந்த சூழலிலும், கிறிஸ்தவ சமய மாற்றங்களுக்கான உந்துதல்கள் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழலிலும், ஈழத்தில் இலங்கை - இந்திய இராணுவ மேலெழுகை போராக மாறிய காலத்திலும், போரின் இறுதி நாட்களிலும், போர் முடிவுக்கு வந்த பின்னரான இன்றைய காலத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் எனப் பல்வேறு காலகட்ட சூழலில் பெண்களின் நாவல்கள் வெளிவந்துள்ளன.

கிறிஸ்தவ மிசனரிமார்கள் பெண்கள் பாடசாலை பலவற்றை நிறுவினர். உடுவில் பெண்கள் பாடசாலை, பருத்தித்துறை மகளிர் கல்லூரி முதலியன அவ்வகையில் குறிப்பிடத்தக்கன. இப்பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியோடு தாய்மொழிக் கல்வியும் கற்பிக்கப்பட்டது. இக்காலத்தில் பெண்களின் கல்வி முன்னேற்றம், வாசகர் கூட்டம் அதிகரிப்புக் காரணமாக ‘ஜகன் மோகினி’ போன்ற பத்திரிகைகள் தோன்றி வளர்ந்தன. இத்தகைய சூழலில் தோன்றிய முதல் ஈழத்துப் பெண் எழுத்தாளராக மங்களநாயகம் தம்பையா விளங்குகிறார். சமகால சமூகத்தைப் பிரதிபலிக்கின்ற முதல் படைப்பாக மங்களநாயகம் தம்பையாவின் ‘நொருங்குண்ட இருதயம்’ என்ற நாவல் காணப்படுகின்றது. இது 1914 இல் வெளிவந்தது.
கண்மணி, பொன்மணி ஆகிய தோழியர்களினது வாழ்க்கைச் சூழலை மையப்படுத்தியதாக இந்நாவல் காணப்படுகிறது. பொருளாசை, அந்தஸ்துணர்வு, ஆணாதிக்க மனப்பாங்கு முதலியன இரு பெண்களையும் பாதிக்கின்றது. கண்மணி இத்தகைய பாதிப்புக்களால் மனமுடைந்து இறுதியில் மரணமடைகிறாள். அத்தகைய பாதிப்புக்களை துணிவுடன் எதிர் கொண்டு பொன்மணி வெற்றி பெறுகிறாள்.


1930 களுக்குப் பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்பு 1950 களில் மீண்டும் பெண்களது இலக்கியப் பிரவேசம் தொடங்கியது.
இக்காலத்தில் சீதனக் கொடுமை, பெண்கள் சமத்துவம், தீண்டாமை, சுய உற்பத்தியில் பெண்கள் ஈடுபடல் முதலான உள்ளடக்கங்களைக் கொண்ட பல கட்டுரைகளைப் பெண்கள் பத்திரிகைகளில் எழுதினர். இவ்வாறு கட்டுரைகளால் கவரப்பட்ட பெண்கள் புனைகதை எழுதும் முயற்சியிலும் ஈடுபடத் தொடங்கினர். சுதந்திரச் சிந்தனை, உலகலாவிய பரந்த நோக்கு நாவலிலக்கியத் துறையில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியது. 1960 களுக்குப் பின்னர் முதலில் சிறுகதைகள் எழுதி பின்னர் நாவல்களை எழுதிய பெண் எழுத்தாளர்கள் தோன்றினர். அந்த வகையில் பூரணி, நயீமாசித்திக், யாழ்நங்கை, தாமரைச்செல்வி, மண்டூர் அசோகா, பாலேஸ்வரி முதலிய எழுத்தாளர்களை குறிப்பிடலாம்.

நயீமா ஏ.சித்தீக்கின் ‘வாழ்க்கைப் பயணம்’(1974), செல்வி சிவம் பொன்னையாவின் ‘நீலமாளிகை’(1974), கவிதாவின் ‘கனவுகள் வாழ்கின்றன’(1976), அன்னலட்சுமி இராஜதுரையின் ‘உள்ளத்தின் கதவுகள்’(1975) போன்ற நாவல்கள் ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கன. இத்தகைய நாவல்கள் வீரகேசரி, ஜனமித்திரன், மாணிக்கம் போன்ற வெளியீடுகளுக்காக எழுதப்பட்டமையால் பலவீனமானதாகவும், பெண்களது தனித்தன்மையை வெளிப்படுத்தாதனவாகவும் காணப்பட்டன. இந்நாவல்கள் பற்றி பேராசிரியர் நா.சுப்பிரமணியன்,
“தனி மனிதனுக்குமிடையிலே தோன்றும் முரண்பாடுகளின் காரணத்தைச் சமூகவியல் நோக்கில் அணுகாமல் தனி மனித உணர்ச்சிக் கண்ணோட்டத்தில் அணுகுவது இவ்வகை நாவல்களின் பொதுப்பண்பாகும்” ( சுப்பிரமணியன், நா., 1978 :) என்று கூறுகிறார்.
மலையக தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பற்றி கோகிலம் சுப்பையா ‘தூரத்துப் பச்சை’ (1964) என்ற நாவலை எழுதினார். இந்நாவலை அவரே Mirage என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் உள்ளார். இந்நாவல் மலையக மக்களின் வாழ்க்கையைத் தத்ரூபமாகக் கூறுகின்றது. இந்தியாவில் இருந்து வந்து ஈழத்தில் குடியேறிய தோட்டத் தொழிலாளர்களது பரம்பரை வரலாற்றை அவலச் சுவையுடன் இந்நாவல் கூறுகின்றது. ஏழைத் தோட்ட தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக அனுபவித்த துன்பங்களை நான்கு தலைமுறைகளின் வரலாற்றின் ஊடாக கூறுவதனூடாக இந்நாவல் வரலாற்றுப் பண்பு கொண்டதாகக் காணப்படுகின்றது. மலையக மக்கள் படும் துன்பங்களை எழுத்தில் கொண்டுவந்த படைப்புக்களில் பெண் எழுத்தாளரான கோகிலம் சுப்பையாவின் இந்நாவல் முக்கியமானது.
வன்னிப் பிரதேசத்தையும் போரினால் உருவான விளைவுகளையும் பதிவு செய்த வகையில் தாமரைச்செல்வியின் படைப்புக்கள் குறிப்பிடத்தக்கன. இவரது நாவல்களாக ‘சுமைகள்’(1977), ‘வீதியெல்லாம் தோரணங்கள்’(1985), ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’(1992), ‘தாகம்’(1993), ‘பச்சை வயல் கனவு’(2004) ஆகியன குறிப்பிடத்தக்கன. ‘சுமைகள்’ நாவல் பரந்தன் பிரதேச குடியேற்றக் கிராமமான குமாரபுரத்தைக் களமாகக் கொண்டு வெளிவந்த முதலாவது நாவலாகும். தாமரைச்செல்வியின் ‘பச்சை வயல் கனவு’ என்ற நாவல், தென்மராட்சியில் இருந்து கிளிநொச்சி பிரதேசத்தில் குடியேறிய விவசாயிகளின் வரலாறாக, அனுபவங்களின் பதிவாக அமைந்துள்ளது. விவசாயிகளின் வாழ்வையும் பண்பாட்டையும் பிரதேச சித்திரிப்பையும் பதிவு செய்ததில் தாமரைச்செல்வியின் நாவல்கள் தனித்துவமானவை. தாமரைச்செல்வி எழுதிய காலத்தில், சாதி, வர்க்க முரண்பாடுகளை பெரும்பாலானோர் மையப்படுத்தி எழுத, தாமரைச்செல்வி பிரதேசப் பண்புடன் விவசாயிகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நாவல் எழுதியமை தனித்தன்மை வாய்ந்ததாகக் காணப்படுகின்றது.
தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்குப்புலம்பெயர்ந்த பின்னர், அங்கு படகுகளில் அகதிகளாக வந்த ஈழத்தவர்களின் வாழ்வுக்கோலங்களை சித்திரித்து எழுதிய புதிய நாவல் உயிர்வாசம் 2019 இல் வெளிவந்துள்ளது.
பிரதேசப் பண்பையும் பிரச்சினைகளையும் நாவலில் வெளிப்படுத்தியதில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியமும் குறிப்பிடத்தக்கவர். இவர் ‘ஒரு கோடை விடுமுறை’, ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’, ‘தில்லையாற்றங்கரை’, ‘பனி பெய்யும் இரவுகள்’, ‘தேம்ஸ் நதிக்கரையில்’, ‘வசந்தம் வந்து போய் விட்டது’, ‘அவனும் சில வருடங்களும்’, ‘நாளைய மனிதர்கள்’ ஆகிய நாவல்களை எழுதியுள்ளார்.
ஈழத்து இனப்பிரச்சினைச் சூழலை வெளிப்படுத்தியதில் தாமரைச்செல்வியின் நாவல்கள், கோகிலா மகேந்திரனின் ‘தூவானம் கவனம்’(1989), இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘ஒருகோடை விடுமுறை’(1981), ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’(1991), தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’(2015) முதலானவை குறிப்பிடத்தக்கன. போர்க்காலச் சூழலில் விவசாயக் குடும்பங்களின் சிக்கல்களை ‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘பச்சை வயல் கனவு’ ஆகிய நாவல்களில் தாமரைச்செல்வி பதிவு செய்துள்ளார். இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘ஒரு கோடை விடுமுறை’, இலண்டனில் வாழ்கின்ற தமிழ் இளைஞர்களின் அரசியல் ஈடுபாட்டைக் கூறுகின்றது. இவரது ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ என்ற நாவல் 1970 – 1980 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்களிடையே உள்ள பிரச்சினைகளை தெளிவாகக் கூறுகின்றது. புகலிடப் பின்னணியில் ஈழத்து அரசியலையும் இனப்பிரச்சினையையும் முதன் முதலாகப் பேசிய பெண் என்ற பெருமை இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தையே சாரும்.
2015இல் வெளிவந்த தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ என்ற நாவல் இலங்கை இனப்பிரச்சினை தொடங்கியதில் இருந்து இந்திய இராணுவத்தின் வருகை, திரும்பல் வரை நடைபெற்ற இனப்பிரச்சினையை பதிவு செய்துள்ளது. இந்திய இராணுவ அராஜகங்களைப் பதிவு செய்வதே இந்நாவலின் பிரதான நோக்கமாகும். விடுதலைப் புலிகளின் வரலாற்றையும், ஈழத்துப் பிரச்சினையையும் பேசுகின்ற வகையில் சாந்தியின் ‘உயிரணை’ என்ற நாவலும் குறிப்பிடத்தக்கது.
போரின் இறுதிநாளைப் பதிவு செய்த நாவல்களில் துயரம், மரணம், யதார்த்தம் ஆகியன வெளிப்படுவதை அவதானிக்கலாம். போரின் முடிவில் புனர்வாழ்வு முகாமில் எழுதப்பட்ட ஒரு பெண்ணின் முதலாவது நாவலாக ‘ஒரு போராளியின் கதை’ என்ற நாவல் குறிப்பிடத்தக்கது (ஜீவநதி, 2017). போரின் இறுதித் தருணத்தின் துயர் ஓரு காதல் கதையூடாகப் பேசப்படுகிறது. இந்நாவலில் கட்டாய ஆட்சேர்ப்பு, போராளிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவினை முதலானவையும் இடம்பெற்றுள்ளன.
புகலிட அனுபவங்கள், பண்பாட்டு முரண்பாடுகள் என்ற வகையில் புதிய களங்கள், புதிய பிரச்சினைகளை பேசுகின்ற புலம்பெயர் நாவல்களில் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் நாவல்கள் குறிப்பிடத்தக்கன. இவரது ‘ஒரு கோடை விடுமுறை’ புகலிடப் பின்னணியில் தோன்றிய முதல் நாவலாகும். ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ இலண்டன் வாழ் தமிழர்களது அரசியல் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றது. புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பண்பாடும் அரசியலும் இந்நாவலில் வெளிப்படுகின்றது. ‘தேம்ஸ்நதிக் கரையில்’ என்ற நாவல் இலண்டன் சென்று வாழும் தமிழ் இளைஞர்களின் மன ஓட்டங்களை, அவர்களது வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்றது. ‘பனி பெய்யும் இரவுகள்’ என்ற நாவல் புலம்பெயர் சூழலில் வித்தியாசமான காதல் கதை பற்றிப் பேசுகின்றது. “ரெஸ்ரியூப் பேபி” போன்ற பாரம்பரியமான பண்பாட்டுக்கு அதிர்ச்சி தரக்கூடிய விடயங்களை விவாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
பெண்ணியச் சிந்தனைகளை காத்திரமாகப் பேசிய நாவல்களாக கோகிலா மகேந்திரனின் துயிலும் ஒரு நாள் காலையும், தூவானம் கவனம் ஆகிய நாவல்களும் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் ‘பனி பெய்யும் இரவுகள்’, ‘உலகமெல்லாம் வியாபாரிகள்’ ஆகியனவும் குறமகளின் ‘நதியின் பிழையன்று’(அகணிதன்) என்ற குறுநாவலும் குறிப்பிடத்தக்கன. ‘தூவானம் கவனம்’(1989) என்ற நாவல் அந்நிய நாடுகளின் தொடர்பால் நமது மண்ணுக்கு இறக்குமதியாகக் கூடிய தொற்று நோய்களில் ஒன்றாகிய ‘எயிட்ஸ்’ பற்றிய எச்சரிக்கையை முன்வைக்கிறது. பாலியல் விடயங்களை பண்பாட்டுத் தடையின்றி பேசுகின்ற வகையில் தமிழ்நதியின் ‘கானல் வரி’ என்ற நாவலும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்துப் பெண்களின் நாவல் இலக்கியப் பணி அதிகளவு எண்ணிக்கையில் இடம்பெறாவிடினும் குறிப்பிட்டு கூறத்தக்களவு பங்களிப்பினை நாவல் இலக்கியத் துறைக்கு பெண்கள் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை வெளிவந்த பெண்களின் நாவல்கள் முன்னோடி முயற்சிகளாகவும், சமுதாயப் பிரச்சினைகளைப் பேசியனவாகவும், ஈழத்து அரசியலையும், இனப்பிரச்சினையையும் பேசியனவாகவும், பெண்ணியச் சிந்தனையை வளர்த்து விவாதிப்பனவாகவும் காணப்படும் இந்நாவல்கள் புலம்பெயர் சூழல் அனுபவங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.
----0----
No comments:
Post a Comment