இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் -----------பாகம் 4 - பரமபுத்திரன்


உண்மையைக்  கொரொனா உரைத்திடல் வேண்டும்  
உருவாக்கம்  சீனா  உருப்படாது என்பர்  
அவனி முழுவதும் சரியாய் அடைந்தாய்
ஊருக்குள் திரிய தடையிலை எனினும்
பாருக்குள் சுற்ற  சீட்டுகள் கேட்பர்
கடவு  அனுமதி விமானம் என்றவர்  
துளைத்துத்  துளைத்துக்  கேள்விகள் தொடுப்பர்
பயணப் பெட்டிகள் பார்வைகள் செய்வர்  
விமானத்தில் பயணிக்க தடைகள் போடுவர்  
கப்பலில் போனால் கலைச்சுப் பிடிப்பர்
அகதியாய் உயிருடன் புறப்பட்டும்  கூட  
கடலில் பலபேர் இறந்தே போனார்
அதையும் தாண்டி வந்தவர் பலரோ
அகதி முகாம்களுள் அடைபடல்  ஆனார்
எப்படி இவற்றை கடந்துநீ  வந்தாய்
உள்ளுக்குள் ஆரும் உதவி செய்தவையோ
காசு கொடுத்துநீ  களவாய்  வந்தாயோ
கள்ளமாய் முகவர் கடத்தி வந்தனரோ
என்னமோ நீபெரும் கெட்டிக் காரன்
எல்லோர் கண்ணையும் ஏய்த்துக்  கடந்தாய்

உலகை உலுக்கிடும்  உபத்திரவம் ஆனாய்  
பிறப்பின்  உயர்வால்  பெருமைகள் காட்ட  
புவியில் சிலபேர்  முனைவது இயல்பே  
செயலால் நிமிர்ந்து விரிந்து  நிற்றல்
பிறப்பின்  மகிமை  என்பது  அறியார்  
பிறரின்  பெயரால் புகழைத்  தேடுதல்
நன்றென பெரியோர் கொண்டிட மாட்டார்
நட்பும் தயையும்  கொடையும் சந்ததி
தந்திடும் தகவென மொழிந்தார் ஒளவை
கூர்ப்பின் வழியது  குவலயம் தன்னில்
தக்கன பிழைக்க அல்லவை மடியும்   
தரணியின் விதியென டாவின் சொன்னார்
இயல்பில் குணத்தில் அறிவில் தேறி
உலகில் நிலைக்கும் உவகை தேடல்
உயிரியின் கூர்ப்பு உரைக்கிறார்  அவரும்
மனிதர்க்கு மட்டும் இது மொழியல்ல
எல்லா உயிர்க்கும் பொதுவெனக்  கண்டார் 
உழவுத் தொழிலை ஏற்றவன்  உயர
உணர்வுடன் உதவிட எவருமே இல்லை
நொந்து வாழ்ந்து இழிந்து சாகும்
வறுமை நிலைக்கு வந்தே சேர்ந்தான்
நோயினில் விழுத்தி சாவினுள் அழுத்தும்
இழிகுல இயல்பால் வருத்திறாய் எனினும்
சொல்கிறாய் செய்தி மனிதருக்கு உறைக்க   
உண்ண  உணவு  கிடைக்கா தொழியின்
உயிர்கள் புவியில் உறையா தொழியும்
விருந்து பெற்று வாழ்ந்திடத் தானே
வாழிடம் மனிதனாய் நுண்ணுயிர் பற்றுது
நோய்தரல் அவற்றின் நோக்கமே  அல்ல
தம்மைப் பெருக்கி விடுக்கும் கழிப்பின்   
பரம்பல் எமக்கு  நோய் உருவாக்கும்
நுண்ணுயிர் ஈந்திடும்  விளைவுகள் எடுத்து
ஆக்கிறார் உணவும் அன்றாடம் உண்ண  
அலெக்சாந்தர் பிளைமிங் ஆய்விலே  கண்ட
அன்ரி  வயோட்டிக்கும் அவைதான் ஆகும்     
பொதுவாய் இயல்பாய் மாந்தரின் நினைப்பில்
தன்னிலை தவிர்த்து பிறர்நிலை நோக்கி
பிறப்பில் உருவில்  உறவில் பொருளில்
மனையில் வினையில்  துணையில் வளத்தில்
அடுத்தோர் சிறந்தோர் என்பதே அடிப்படை
கொரொனா பெயரைக்  கேட்டால் மட்டும்
வெறுக்கிறார் பிறரை  வேண்டாம் நமக்கது
இதிலென்  றாலும்  பிறன்  விரும்பாமை
மகிழும் செய்தி மறக்க வேண்டாம்
மற்றோனை நினைந்து  மருவும் நேரம்
எம்மையே எண்ணின் ஏற்றமே பெருகும்
அமெரிக்கப்  படங்களை திரையில் பார்த்தால்
உலகினைக் காப்பது அவர்களாய்க்   காட்டுவர்  
உதவிகள் செய்வதாய் உலகம் முழுவதும்
படைகளும் அனுப்புவர் நாட்டையும்  சிதைப்பர்
இன்றோ அங்கே  நாளுக்கு ஆயிரம்
அப்பாவி மக்கள் நோயால் மடிகிறார்   
ஊருக்கு உபதேசம் செய்திட்ட நல்லோர்  
தமக்கிட்ட கடமையை செய்யவே மறந்தனர் 
ஒருபாவம் அறியாத மக்களின் உயிர்கள்
பலியாகிப் போகுது அசமந்தப் போக்கால்
யாரிடம் போய்ச் சொல்லி ஆறுதல்தேடிட
பாரே பதறுது பயத்தின் விளிம்பில்
என்றிந்த  நிலைமாறும் என்றேக்கம் கொண்டெம்மை
எப்போதும் ஏங்கி வாட  விடாமல்
இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம் -------------
  
No comments: