எல்லோரின் வாழ்வினிலும் இதுதானே நியதி ! கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


             பல்லில்லா வாய் பஞ்சடைந்த கண்கள் 
                 மெல்லவே முடியாமல் உள்வாங்கும் உணர்வு 
            சொல்ல நினைத்தாலும் சொல்வரா வறுமை
                  எல்லோரின் வாழ்வினிலும் இதுதானே நியதி  ! 

            பிறந்த குழந்தையாய் ஆகிவிடும் நிலைமை
                  பேச்சொலியைக் காது கேட்காத கொடுமை 
            காலிருந்தும் நடக்கத் துணைதேடும் நிலைமை
                  யாவருக்கும் வாழ்வில் வருந்தானே ஒருநாள்  ! 

             அழகான முடிகள் உதிர்ந்துகொண்டே போகும் 
                   கருங்கூந்தல் அனைத்தும் வெண்மேகம் ஆகும் 
             முத்தான பற்கள் அத்தனையும் மறையும் 
                     இத்தனையும் எல்லோர் வாழ்வினிலும் நடக்கும்  ! 

              அன்புபாசம் என்றும் அமர்ந்திருக்கும் மனத்தில்
                    அதற்குமட்டும் தளர்வு வருவதில்லை வாழ்வில்
              தளர்வுவர முன்னர் கொடுத்துவிட  நினையார் 
                   தம்வாழ்வின் முடிவில் உணர்ந்திடுவார் உண்மை  ! 

              இளமையெனும் காலம் கிடைக்கின்ற  தருணம் 
                     உளமகிழச் செய்ய உதவிடுதல்  நன்றே 
              பொருளெண்ணி வாழ்வில் பொறுப்பின்றி நடந்தால்
                     சருகான பிறகு சிதறுண்டு போவோம்  ! 


              அரவணைக்கும் வேளை அரவணைக்க வேண்டும்
                   புறந்தள்ளி நின்றால் போனகாலம் வருமா 
              உறங்காமல் உணர்வை வைத்துவிட  நினைத்தால் 
                     உறங்குகின்ற காலம் கலங்காமல் அமையும் ! 

No comments: