இலங்கைச் செய்திகள்


பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; ரஞ்சன் ராமநாயக்க கைது

காரைதீவில் அம்பியூலன்சில் மருந்து விநியோகம்

ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது

யாழ். மாவட்டத்தில் 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

புத்தளத்தில் மினி சூறாவளி; 245 வீடுகள் சேதம்

கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஏப்ரல் 20 வரை ஊரடங்கு

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு; ஏனைய பகுதிகளில் மு.ப. 5 - பி.ப. 8 வரை தினமும் தளர்வு



பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; ரஞ்சன் ராமநாயக்க கைது








பொலிஸாரின் கடமைக்கு இடையூறு; ரஞ்சன் ராமநாயக்க கைது-Ranjan Ramanayake Arrested for Obstucting Duties of Police Officers
ஐ.தே.க. முன்னாள் எம்.பி. ரஞ்சன் ராமநாயக்க, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மாதிவலவிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வீட்டுத் தொகுதியில் வைத்து இன்று (13) மாலை 7.00 மணியளவில் மிரிஹான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் நேரடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில், பொருட்களை ஏற்றி வந்த வாகனம் ஒன்றை தனது வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்காததால், பொலிஸாருடன் வாக்குவாதம் செய்ததாகக் கூறியுள்ளார்.
கடந்த வியாழக்கிழமை (09) இரவு, ரஞ்சன் ராமநாயக்கவும் பொலிஸாரும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவொன்றை நேரடியாக வெளியிட்டிருந்தார். இதன்போது அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட லொறியொன்றை மாதிவலவிலுள்ள அவரது வீட்டு வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
எவ்விதமான செல்லுபடியற்ற ஊரடங்கு அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணம் செய்த விளையாட்டு அமைச்சரின் கீழ் பணி புரிவதாக தெரிவிக்கப்படும் ஒருவரை விசாரித்துக் கொண்டிருந்தபோது, ரஞ்சன் ராமநாயக்க  பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் ஐ.தே.க.வின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேரவப்பெருமவினாலும் நேற்றையதினம் (12) சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அவரது நிவாரணப் பணிகளை நிறுத்த பொலிசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





காரைதீவில் அம்பியூலன்சில் மருந்து விநியோகம்







காரைதீவில் அம்பியூலன்சில் மருந்து விநியோகம்-Issuing Medicine by Ambulance in Karaitivu
கொரோனா பீதி காரணமாக, காரைதீவில் வைத்தியசாலைக்கு வரமுடியாத கிளினிக் நோயாளர்களுக்கு அவரவர் வீட்டு வாசலிற்கு மருந்துப்பொருட்களை கொண்டு சென்று வழங்கப்பட்டுவருகிறது.
காரைதீவில் அம்பியூலன்சில் மருந்து விநியோகம்-Issuing Medicine by Ambulance in Karaitivu
ஒரு மாத காலத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்களை பாதுகாப்பு முறைப்படி அம்பியூலன்சில் இருந்தவாறு உரிய அட்டையைப் பெற்று வைத்தியசாலை ஊழியர்கள் வழங்கி வருகின்றார்கள்.
இது தொடர்பான அறிவித்தல்கள் ஊர் பூராக ஒலிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.
காரைதீவில் அம்பியூலன்சில் மருந்து விநியோகம்-Issuing Medicine by Ambulance in Karaitivu
இந்த நடமாடும் வைத்திய சேவையையிட்டு பொதுமக்கள் வைத்தியசாலை நிருவாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
காரைதீவு குறூப் நிருபர் சகா - நன்றி தினகரன் 












ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் கைது







முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிதாக இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, ரியாஜ் பதியுதீன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
புத்தளம் பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.
இவருடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
அவர், புத்தளம், செட்டில்மன் வீதியைச் சேர்ந்தவர் எனவும், இவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை CID யினர் மேற்கொண்டுள்ளதாகவும் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
ரிஷாட் பதியுதீனுக்கு இரு சகோதரர்கள் உள்ளனர் அதில் ஒருவர் ரிப்கான் பதியுதீன் மற்றையவர் ரியாஜ் பதியுதீன் ஆவார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் புதிய விசாரணைகளுக்கு அமைய, சீயோன் தேவாலய தாக்குதல்தாரிகளுக்கு உதவியதாக கடந்த மார்ச் 29 ஆம் திகதி ஒருவரும், ஏப்ரல் 02ஆம் திகதி மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 












யாழ். மாவட்டத்தில் 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை






யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் இன்று (15) பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளில் அத்தியாவசிய பொருள்கள் உள்ளிட்டவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்த 11 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பதிகாரியுமான ஏ.எல். ஜௌபர் சாதிக் தெரிவித்தார்.
“யாழ்ப்பாணம், மல்லாகம் சுன்னாகம், ஆவரங்கால், பருத்தித்துறை உள்ளிட்ட இடங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு இன்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இரண்டு குழுக்கள் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தன.
இதன்போது நாட்டு அரிசியை கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்கள் 7 பேருக்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 150 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு எதிராகவும் பொருள்களில் பொறிக்கப்பட்ட அதிகூடிய சில்லறை விலையிலும் பார்க்க கூடிய விலைக்கு விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசின் கட்டுப்பாட்டு விலைகளை மீறி பாவனையாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் வடமாகாண பதில் உதவிப் பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட இணைப்பதிகாரியுமான ஏ.எல். ஜௌபர் சாதிக் மேலும் தெரிவித்தார்.
(ஐங்கரன் சிவசாந்தன் - சுண்டுகுளி நிருபர்)  - நன்றி தினகரன் 











புத்தளத்தில் மினி சூறாவளி; 245 வீடுகள் சேதம்





புத்தளத்தில் மினி சூறாவளி; 245 வீடுகள் சேதம்-Mini Cyclone Hits Puttalam Area-245 Houses Damged
புத்தளம் ஊடான மினி சூறாவளி காரணமாக 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில் இவ்வாறு வீடுகள் சேதமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.   நன்றி தினகரன் 











கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஏப்ரல் 20 வரை ஊரடங்கு





கொரோனா இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் ஏப்ரல் 20 வரை ஊரடங்கு-Curfew-High Risk Zone Continues-Other Districts Will Be Lifted Apr-20-6am
- இடர் வலயங்களில் மறு அறிவித்தல் வரை தொடரும்
- அத்தியாவசிய தேவையின்றி மாவட்டங்களிடையே பயணிப்பது தடை
- கஷ்டங்களை பொறுப்புடனும், புரிந்துணர்வுடனும் பொறுத்துக் கொள்ளுங்கள்
- அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் கொள்வனவு செய்யுங்கள்

கொரோனா தொற்று பரவலை கவனத்திற்கொள்ளும் போது இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.
ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை (16), காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு, நாளைய தினம் பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுல் படுத்தப்படும். மீண்டும் இம்மாவட்டங்களில் ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 4.00 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படும்.
ஏப்ரல் 20 ஆம் திகதி காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீள அமுல்படுத்துவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை புரிந்துணர்வுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
பொருட்களை கொள்வனவு செய்வது அத்தியாவசிய பொருட்களுடன் மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் புத்தாணடு காலப்பகுதியில் சம்பிரதாயங்கள் மற்றும் தொடர்புகளை குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சேவைகளை வினைத்திறனாக பேணும் வகையில் நடைமுறையில் உள்ள முறைமைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு மாவட்டத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 












ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்




ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்-Kalinga Indatissa Letter to IGP-Arrest of Hejaaz Hizbullah
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு எனத் தெரிவித்து, CID யினால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸ் மாஅதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.
அச்சங்கத்தின் தலைவர், காலிங்க இந்ததிஸ்ஸவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது தொடர்பில் தெளிவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும், அவர் ஒரு சட்டத்தரணி எனும் வகையில் கலந்து கொண்ட ஒரு சில நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கைது இடம்பெற்றிருப்பதாக நாம் அறிகின்றோம்.
தற்போது சட்ட ரீதியாகவும், இயல்பாகவும் இடம்பெறும் நிலுவையிலுள்ள விசாரணைகள் தொடர்பில் தலையிடும் நோக்கம் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு இல்லை. ஆயினும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் அவரின் தொழில்சார் உரிமை தொடர்பில் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அவரது கைதுக்கான காரணம் மற்றும் அதற்கான அடிப்படை தொடர்பில், சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறியத் தருமாறும் அக்கடிதத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (14) சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுள் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் ஒருவராவார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைது; சட்டத்தரணிகள் சங்கம் IGP இற்கு கடிதம்-Kalinga Indatissa Letter to IGP-Arrest of Hejaaz Hizbullah











தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு; ஏனைய பகுதிகளில் மு.ப. 5 - பி.ப. 8 வரை தினமும் தளர்வு



தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு; ஏனைய பகுதிகளில் மு.ப. 5 - பி.ப. 8 வரை தினமும் தளர்வு-Curfew Lifted Other Than High Risk Zone From Apr 20

கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, அம்பாறை, கேகாலை, கண்டி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்தும் ஊரடங்கு

  • ஏப்ரல் 20 முதல் ஏனைய பகுதிகளில் மு.ப. 5.00 - பி.ப. 8.00 மணி வரை ஊரடங்கு தளர்வு
  • ஏதேனும் பகுதி அடையாளம் காணப்பட்டால் அங்கு ஊரடங்கு
  • அத்தியாவசிய சேவைக்காக பயணிக்கலாம்
  • பாடசாலை, பல்கலை, மேலதிக வகுப்புகள் தடை
  • அரச நிறுவனங்கள் வழமைக்கு
  • கொழும்பு மாவட்டத்தில் 1/3 ஊழியர்கள் கடமைக்கு; ஏனைய பகுதிகளில் 1/2 ஊழியர்கள்
  • சுகாதார நடைமுறையை பேணுவது நிறுவனத் தலைவரின் பொறுப்பு
  • தனியார் நிறுவனங்களை மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பிக்கவும்
  • போக்குவரத்து அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம்
  • பஸ், வேன்களில் அரைவாசிப் பேரே பயணிக்க வேண்டும்
  • விழாக்கள், சுற்றுலாக்கள், கூட்டங்கள் தடை
  • மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதே நோக்கம்
  • அபாயம் இன்னும் நீங்கவில்லை
  • ஒன்றுகூட வேண்டாம்
  • பிரச்சினை முடியும் வரை சகிப்புடன் செயற்படுங்கள்
பொதுமக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் நோக்கத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு  உத்தரவை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை மாவட்டங்களைத் தவிர்ந்த பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் முற்பகல் 5.00 மணி முதல் இரவு 8.00 வரை தினமும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும் என்பதோடு, இரவு 8.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், குறித்த மாவட்டங்களில் பின்வரும் பொலிஸ் பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் தொடரும் என்பதோடு, ஏனைய பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும்
  • கொழும்பு மாவட்டம்: கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், பம்பலபிட்டி, வாழைத்தோட்டம், மருதானை, கொதட்டுவ, முல்லேரியாவ, வெல்லம்பிட்டி, கல்கிஸ்ஸை, தெஹிவளை, கொஹுவல
  • கம்பஹா மாவட்டம்: ஜா-எல, கொச்சிக்கடை, சீதுவ
  • புத்தளம் மாவட்டம்: புத்தளம், மாரவில, வென்னப்புவ
  • களுத்துறை மாவட்டம்: பண்டாரகம, பயாகல, பேருவளை, அளுத்கம
  • அம்பாறை மாவட்டம்: அக்கரைப்பற்று
  • கேகாலை மாவட்டம்: வரகாபொல
  • கண்டி மாவட்டம்: அக்குரணை, அளவத்துகொடை

ஏதேனும் பகுதி அடையாளம் காணப்பட்டால் அங்கு ஊரடங்கு
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது. ஏதேனும் ஓரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும்.


அத்தியாவசிய சேவைக்காக பயணிக்கலாம்
ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பொலிஸ் பிரிவுகளில் அத்தியாவசிய சேவைகளுக்காக பிரதான வீதிகளினூடாக பயணம் செய்யமுடியும். ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலும் பிரதான வீதிகளை தொழிலுக்காக சென்று வருதல் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். மாவட்டங்களுக்கிடையிலான பயணம் தொழில் தேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.பஸ், வேன்களில் அரைவாசிப் பேரே பயணிக்க வேண்டும்


பஸ் வண்டிகள், வேன் அல்லது புகையிரதங்களில் பயணம்செய்யும் பயணிகளின் எண்ணிக்கையில் அரைவாசி அளவு மட்டுமே பயணம்செய்ய வேண்டும். அனைத்து வாகனங்களும் கிருமி தொற்றுநீக்கத்திற்கு உற்படுத்த வேண்டும். இந்த நிபந்தனைகளின் கீழ் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அரசாங்கம் தனியார் துறை போக்குவரத்து நிறுவனங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.


விழாக்கள், சுற்றுலாக்கள், கூட்டங்கள் தடை
அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள் ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய விழாக்களையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதே நோக்கம்
கொரோனா ரைஸ் பரவுவதற்கு மத்தியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மக்களின் இந்த பயங்கரமான நோய்த்தொற்றிலிருந்து விடுவிக்கும் நோக்குடனேயே செயற்படுத்தப்படுகின்றது. பின்பற்றிய கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக கிடைத்த முன்னேற்ற நிலைமைகள் ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு உதவியது. பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் பிரச்சினையால் பெரிதும் பாதிக்கப்பட்ட வறிய  மற்றும் இடர் நிலைக்குள்ளான மக்கள் பிரிவினரின் வாழ்க்கையை பாதுகாப்பது மற்றுமொரு நோக்கமாகும்.


அபாயம் இன்னும் நீங்கவில்லை
எனினும் கொரோனா தொற்று அபாயம் இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. எனவே வைரஸ் பரவுவதற்கு மீண்டும் இடமளிக்காத வகையில் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி பொறுப்புடனும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தொழிலுக்காக சென்றுவருவதை தவிர வேறு சந்தர்ப்பங்களில் வீடுகளில் இருந்துகொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒன்றுகூட வேண்டாம்
ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியவுடன் தேவையற்ற பதற்றத்துடன் பெருமளவில் ஒன்றுகூடும் வகையில் வர்த்தக நிலையங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்றும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


பிரச்சினை முடியும் வரை சகிப்புடன் செயற்படுங்கள்
கொரோனா பிரச்சினையை முழுமையாக ஒழித்து விட்டதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிடும் வரை தம்முடையவும் பிள்ளைகளுடையவும், தேசத்தினதும் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக அனைத்து கஷ்டங்களையும் பொறுப்புடன் சகித்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.   நன்றி தினகரன் 










No comments: