படித்தோம் சொல்கின்றோம்: தாமரைச்செல்வியின் உயிர்வாசம் ( நாவல்) அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து படகில் வந்த மக்களின் வாழ்வியல் கோலம் ! - முருகபூபதி


தற்காலத்தில் கொரோனா என்ற நாமத்தை  முழு  உலகமும் சுமந்துகொண்டிருக்கிறது! அதே சமயம்    அகதி என்ற நாமத்தை சுமந்துகொண்டிருப்பவர்கள் உலகெங்கும்   நெடுங்காலமாக வாழ்ந்துவருகின்றனர்.
இரண்டு நாமங்களும் மறையவேண்டும். எனினும், உலக அரங்கில் மறக்கமுடியாத, மறைக்கமுடியாத தடங்களாகவே  அவை இரண்டும் நிலைகொண்டிருக்கும்.
பசுமைநிறைந்த வயல் வெளிகளையும், போர்க்காலத்தில் காடுறைந்த மக்களையும், கொல்லப்பட்ட உறவுகளைப்பார்த்து  அழுவதற்கும் நேரம் இல்லாமல், இடம்பெயர்ந்து ஓடியவர்களையும், வன்னிபெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஆச்சிமாரையும் ,  அவர்களின் வாழ்வுக்கோலங்களையும் பற்றி இதுவரையில் எழுதிவந்திருக்கும் தாமரைச்செல்வி, அவுஸ்திரேலியாவுக்கு கனவுகளை சுமந்துகொண்டு  படகுகளில்  வந்து வலிகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும்  ஈழத்தமிழர்களின் கதையை எழுதியிருக்கிறார்.
அவருடைய  உயிர்வாசம் என்ற புதிய நாவல், ஏறக்குறைய  ஐநூறு பக்கங்களுக்கும் மேல்  விரிகிறது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தவர்களின் ஆசைகள் நிராசையாகிவிடலாகாது என்ற அவதிதான்  இந்நாவலின் பக்கங்களில் இழையோடியிருக்கும்  நாம் நுகரும் வாசம்!
காந்தன், மதி, செந்தில், செழியன், சுதா, இளங்கோ, தேவகி, தவம், உருத்திரன், கார்த்தி, செல்வி, செபமாலை, பார்த்தி, நிரஞ்சன், பரஞ்சோதி, குழந்தைகள் துஷி, சாரா உட்பட பலரதும் அகதிவாழ்வுக்கதைகளின் ஊடே நகர்ந்து விரியும் நாவல். அவர்களின் கதைகள் 500 பக்கங்களில் எழுதித்தீராதவை!

இவர்களில் பரஞ்சோதி என்பவர் நடுக்கடலில் படகில்  இறந்து ஜலசமாதியாகிறார். உறவுகள், நண்பர்கள் இருந்தும், இறுதி நிகழ்வில் எவருமே இல்லாமல் அனாதைகள் போன்று சமகாலத்தில் உலகெங்கும் ஆயிரக்கணக்கில்  எரிக்கப்படுபவர்கள் புதைக்கப்படுபவர்கள்  கதைகளை கேட்டு  பதற்றத்திலிருக்கும் நாம், படகுகளில் வந்து கடலில் மூழ்கி ஜலசமாதியானவர்கள்  பற்றிய செய்திகளையும்  கடந்து வந்திருக்கின்றோம்.
முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், நானும் ஒரு அகதியாக இந்த கடல்சூழ்ந்த தேசத்திற்கு வந்து புகலிடம் பெற்றதனாலும்,   அகதிகளின் நலன்களுக்காக தமிழ் அகதிகள் கழகத்தை உருவாக்குவதில் முன்னின்றமையாலும், சில வருடங்களுக்கு முன்னர் அகதியாக படகில் வந்தவர்களை கிறிஸ்மஸ் தீவிலிருந்து மீட்பதற்காக மெல்பன் குடிவரவுத்திணைக்களத்திற்கு முன்பாக அமைதியான கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியவர்களுடன் இணைந்திருந்தமையினாலும்,  அகதிகளின் வலிகளை உணர்ந்திருக்கின்றேன்.  சுமந்து வந்த கனவுகளை மறக்கவே முடியாது.  
அதனால், தாமரைச்செல்வியின், உயிர்வாசம் நாவலில்   வரும் மாந்தரும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்களே!
போர் நெருக்கடியின் அச்சுறுத்தல், காணாமலாக்கப்படுதல், உடைமைகளை இழந்து இடம்பெயர்ந்து ஓடித்திரிந்த அவலங்கள், பொருளாதார நெருக்கடிகள்,  எதிர்காலம் குறித்து பெருமூச்சுகளுடன் வாழும் உடன் பிறந்த சகோதரிகள்,  அவர்களுக்காக தரப்படவேண்டிய சீதனப்பணத்தை உழைத்து தேடுவதற்காக வந்த இளையோரின் கனவுகள்…..   இவ்வாறு எத்தனையோ காரணங்களினால், இக்கரையிலும் பசுமையிருக்கும் என நம்பி அக்கரையிலிருந்து  உயிரைப்பணயம் வைத்து படகுகளில் ஆழ்கடலை ஊடறுத்து வந்தவர்களதும், இடைவழியில்  சமுத்திரத்தாயுடன் சங்கமித்தவர்களினதும் கதைகளை பேசுகிறது உயிர்வாசம்.
அத்துடன்,  அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நாடுகடத்தப்படுபவர்களின் சோகத்தையும் சித்திரிக்கிறது.
படகுகளில் இலங்கையிலிருந்து மட்டுமல்ல, லெபனான், சிரியா, ஈரான், ஈராக், வியட்நாம், மலேஷியா, இந்தியா, இந்தோனேஷியா முதலான நாடுகளிலிருந்தும் வந்திருப்பவர்களைப்பற்றியும் உயிர்வாசம் பேசுவதனால்,  இந்நாவலுக்கு சர்வதேச பார்வையும் கிட்டுகிறது.
சிரியா அகதிக்குழந்தை கடலில் தவறிவிழுந்து, கரை ஒதுங்கி,  ஊடகங்கள் ஏற்படுத்திய அதிர்வலையினால், அந்த நாட்டிலிருந்து  வந்த மக்களுக்கு வாய்ப்புக்கிடைக்கும்போது,  தங்களோடு  பல நாட்கள் வந்த பரஞ்சோதி அண்ணர், நடுக்கடலில் சுகவீனமுற்று இறந்தபோது, வேறு வழியின்றி தாங்களே, அவரை கடலில் இறக்கிவிட்டது நினைவுக்கு வந்து வருத்துகிறது.  அச்சம்பவத்தை  நினைத்து தினம் தினம் குமுறிக்கொண்டிருப்பவர்களின் பெருமூச்சும் அந்த விரிந்த பெருங்கடலின் காற்றோடு  கரைந்துவிடுகிறது.
படகில் குடிநீருக்குப்பற்றாக்குறை வரும்போது, கடல் நீரையாவது அருந்துவதற்கு எண்ணம் வந்தாலும், கடலில் எங்கோ மீன்களுக்கு இரையாகிக்கொண்டிருக்கும் பரஞ்சோதி அண்ணர்தான்  நினைவுக்கு வருகிறார்.
இவ்வாறு நீண்ட நாட்கள் கடலின் உப்புக்காற்றையே சுவாசித்தவாறு  நகரும் மக்களின் மனங்களில், இப்படி ஒரு ஆபத்தான பாதையை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்ற கேள்வியும் ஏமாற்றமாக  அடிக்கடி ஆழ்மனதில் தோன்றி வதைக்கிறது. கரையை நெருங்கிய பின்னரும்,  அந்த வதையே கிறிஸ்மஸ் தீவு, நவூரு தீவு, மற்றும் அவுஸ்திரேலியா மாநிலங்கள் வரையில் அவர்களைத் தொடருகின்றது.
அகதியாக  வந்திருந்தாலும், இளைஞர்களுக்கு  காதல் வரக்கூடாது என்று ஏதும் விதியிருக்கிறதா..? காதல் எங்கும் எப்படியும் வரலாம்.  அது எல்லாவற்றையும் மறக்கச்செய்துவிடும். வந்து சேர்ந்த பாதையையும் கண்ணிலிருந்து மறைத்துவிடும்.
அகதியாக வரும் காந்தனுக்கும் தரையிறங்கியதும் ஒரு தமிழ் யுவதி ரூபியுடன்  காதல் வருகிறது. அவனுடன்  பால்யகாலம் முதல் கடல் சூழ்கண்டம் வரையில் இணைந்துவரும் மதி எதிர்காலம் குறித்த தீர்க்கதரிசனத்துடன் வாழ்கிறான்.
ரூபியுடனான காதலைத் தொடரவேண்டாம் என்று காந்தனுக்கு பல தடவை வற்புறுத்தியும் மதியின் புத்திமதியை கேளாமல், காதலைத் தொடர்ந்து, ஏமாற்றமடைந்ததும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றான்.
படகில் வந்த பதட்டத்தைவிட, காந்தன் உயிர்பிழைக்கவேண்டும் என்ற பதட்டமே மதியிடத்தில் நாவலின் இறுதிவரையில் தொடருகிறது.
குளிர்கால ஆரம்பநாட்களில் வந்து இறங்கியிருக்கும் இந்த அகதிகளின் வாழ்வில் கிட்டும் அனுபவங்கள், சந்திக்கும் மொழிபெயர்ப்பாளர்கள், அகதிகளின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் சட்டத்தரணிகள், ஆங்கிலம் போதிக்கும் கனிவான பாரதி அக்கா,  அகதியாக வந்து வீட்டில் தங்கியிருக்கும்  மருமகன் நிரஞ்சனின் பார்வை,  தனது மகள் பவியிடத்தில் விழுந்துவிடக்கூடாது என்பதில்  முன்னெச்சரிக்கையாக இருக்கும் மாமி, தனது மகள் வேற்று நாட்டவனுடன் நட்பாக இருப்பதை  தெரிந்துகொள்வதில்  தவறிவிடுகிறாள்.
தெரிந்ததும், முன்னர்  புறம்ஒதுக்கிய மருமகனையே  பண்பாட்டுத் தேவையின் நிமித்தம்  மகள் பவிக்கு மாப்பிள்ளையாக்கப் பார்க்கிறாள். அதற்காக நிரஞ்சனுடன் படகில் வந்த  அகதி நண்பர்களின் ஆதரவையும் நாடுகிறாள்.
 ஏற்கனவே விமானத்தில் வந்திறங்கியவர்கள்  படகில் வந்தவர்களிடம்  காண்பிக்கும் புறக்கணிப்புகளை  பொறுக்கமுடியாமல், ஒரு பாத்திரம் இப்படிப்பேசுகிறது:
“  ஓமண்ணை நாங்கள் அகதியளாய்  படகில  வந்தனாங்கள்தான். ஆனால், அவை மட்டும் என்னவாம். ஊரில சண்டை நடந்தநேரம் அதைச்சாட்டித்தானே வந்தவை. நாங்கள் முழுச்சண்டையளுக்கயும் நிண்டு துன்பப்பட்டு வந்து சேர்ந்தனாங்கள். அவை முந்தி பிளேனில வந்திச்சினம். நாங்கள் இப்ப படகில வந்தம். முன்ன பின்ன வந்ததும் வந்தவிதமும்தான் வித்தியாசமே தவிர போரைச்சாட்டி வந்தவைதான் எல்லோரும்.  “
இந்த வரிகளை படித்தபோது, பல வருடங்களுக்கு முன்னர் இங்கு நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஒரு அரசாங்கப்பரீட்சைக்கு  (Public Service Exam) குடிவரவு அனுமதியுடன் வந்த பெண்ணும், அகதியாக வந்த பெண்ணும் தோற்றினார்கள்.  அதில் அகதிப்பெண் சித்தியடைந்தாள்.  ஆனால், குடிவரவு அனுமதியுடன் வந்த பெண் சித்தியடையவில்லை.
வந்த எதிர்வினை:  “ உந்த வேலையெல்லாம் இங்கே வந்திருக்கும் அகதி நாய்களுக்குத்தான் சரி  “ 
இவ்வாறு வலிசுமந்தமேனியராக நாடெங்கும் அலைந்துழலும் படகு மக்களைப்பற்றிய கதைகள் ஏராளம்.
அவுஸ்திரேலியாவை  கண்டுபிடித்த கப்டன் குக், அமெரிக்காவை கண்டடைந்த  கிறிஸ்தோபர் கொலம்பஸ், அய்ரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கான கடல் மார்க்கத்தை வரைந்த  வாஸ்கொட காமா முதலானோரும் படகுகளில் வந்தவர்களே! இந்தியாவிலிருந்து தந்தையால்  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட இளவரசன் விஜயனும் படகில்தான் வந்தான்.
இவ்வாறு படகு மனிதர்களின் கதை நூற்றாண்டு காலமாக தொடருகின்றது. 
தாமரைச்செல்வி  வன்னி வாழ்மக்களின் ஆத்மாவை பிரதிபலித்து  பல சிறுகதைகளையும் நாவல்களையும் ஏற்கனவே எழுதியிருப்பவர்.
அவரது புதிய வரவான உயிர்வாசம் நாவலின்  தொடக்கத்தில் வரும்  பெரும்பாலான பக்கங்களில்,  படகில் ஏறிவந்தவர்களின் வன்னிபெருநிலப்பரப்பு வாழ்க்கைக்கோலங்களும் பதிவாகியிருப்பதனால், இந்த  படகு அகதி மக்களின் கதை, எண்ணெய்த் தாச்சியிலிருந்து நெருப்பில் வீழ்ந்த  உணவுப்பண்டங்களுக்கு ஒப்பான உவமானத்தையும் தொடுகின்றது.
காதலில்  தோற்று,  தற்கொலை செய்துகொள்பவர்களில் ஆண்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பார்கள். காதலுக்காக நினைவுச்சின்னம் அமைத்த ( தாஜ் மகால் )  ஆண்களின் கதை ஒருபுறமிருக்க, காதலுக்காக பெண்கள், ஆண்களின் நினைவாக  ஒரு செங்கல்லையாவது நட்டிருக்கிறார்களா..? என்று ஒரு தமிழ்த்திரைப்படத்தில் வசனம் வரும்!
நீடித்த போர்க்காலத்தில்  உயிருக்காக போராடி,  பின்னர் உயிரையே பணயம் வைத்து நடுக்கடலை கடந்து வந்து  அகதியாகியாக அலையும் காந்தன், தான் வந்த பாதையை மறந்து, காதலில் வீழ்ந்து, தோல்வியை தாங்கமுடியாமல் தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றான்.
மருத்துவமனையில் மயங்கிய நிலையிலிருக்கும் காந்தனின் உடலுக்கு அருகே,  மனதிலும் புதைத்து வைக்கமுடியாமல், ஊருக்கும் சொல்லமுடியாமல், மனவுளைச்சலுடன் நின்று அவனது கையைப்பற்றிக்கொண்டு, மனதிற்குள் கதறும் மதி,       “ … எல்லாத்தையும் விட்டிடா. எங்களுக்கு இந்தக் காதல் ஒண்டும் தேவையில்லை. இதைத் தாண்டி எங்களுக்கு வேற உலகம் இருக்கு. எங்கட நிலைமையே வேற. இந்த நாடு ஒருபோதும் எங்களுக்கான சொந்த இடமாக இருக்கப்போறதில்லை. போ எண்டு சொன்னால் அப்படியே ஏறிப்போகவேண்டியதுதான். அதுக்குள்ள நாங்கள் செய்யிறதுக்கு எவ்வளவோ இருக்கு. எழும்பி வாடா. ஒருத்தருக்கும் மறுமொழி சொல்ல ஏலாதவனாய் என்னை ஆக்கிப்போடாதயடா… “  என்று  தனது மெளனமொழியை  உதிர்க்கின்றான்.
மதியின் ஆருயிர்த்தோழன் காந்தன் எழுந்துவருவானா..?
உயிர்வாசம், நாவல் இதுபோன்ற பல கேள்விகளுடன் படகு மக்களின் சோகத்தை பதிவுசெய்துள்ளது.
 பசுமை நிறைந்த வயல்வெளிகளின் தென்றல் காற்றை சுவாசித்த மக்களின்   ஆத்மாவை   ஏற்கனவே சித்திரித்திருக்கும் தாமரைச்செல்வி, முதல் தடவையாக  ஆழ்கடலின் உப்புக்காற்றை சுவாசித்து  வந்த  அகதி மக்களின் கதையை உயிர்த்துடிப்போடு வரவாக்கியிருக்கிறார்.
 “ உயிர் காக்க படகேறி கடலோடு கரைந்து போனவர்க்கு  “ இந்த நாவலை சமர்ப்பித்துள்ளார்.
 “ இந்த நாவலை   வாசித்து முடிக்கும்போது, நீங்கள் வேறொரு எண்ணமும் சிந்தனையும் பார்வையும் கொண்ட மனிதராக  வெளியே வருவீர்கள் “   என்று யசோதா  பத்மநாதனும்,  “ இந்த நாவல் தமிழ்ச்சூழலுக்கு இன்னொரு  வாசல். இந்த வாசலில் புதிய அறிதல்களையும் அனுபவத்தையும் தாமரைச்செல்வி உண்டக்குகிறார் “ என்று கருணாகரனும், இந்நாவலில் குறிப்புகள் எழுதியுள்ளனர்.
சுப்ரம் பிரசுராலயத்தின் வெளியீடாக வந்துள் உயிர்வாசம்,  தாமரைச்செல்வியின் நெடிய இலக்கியப்பயணத்தில் மற்றும் ஒரு மைல்கல்!
தாமரைச்செல்விக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.com
---0---










No comments: