கொரோனா தொற்று எதிரொலி வெளிநாட்டுப் பயணம் சாத்தியமா? சுற்றுலா வணிகம் எப்போது சீரடையும்? - பி.ஆர்.ஜெயராஜன்


 (இக்கட்டுரையை எழுதியுள்ள திரு பி.ஆர்.ஜெயராஜன் ஓர் வழக்குரைஞர் மட்டுமல்ல. ஏராளமான சட்ட நூல்களை தமிழில் எழுதி, தமிழக அரசு விருது பெற்ற சட்டக் கல்வியாளரும் ஆவர்.  மேலும் புதுச்சேரி பல்கலைக்கழக வணிக மேலாண்மை புலத்தில் சுற்றுலாவியல் துறையில் பட்டமும் பெற்றவர்.)

            கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று நாம் வீட்டில் அடங்கி அமர்ந்துள்ளோம். இதனால் அரசு உட்பட அனைவரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றோம்.
கொரோனாவும் உலக போக்குவரத்தும் :
            எளிதில் தொற்றிப் பரவி மரணத்தையும் விளைவிக்கக்கூடிய அபாயத்தைத் தரும் "கோவிட் 19" எனப்படும் இந்த புதிய கொரோனா வைரஸ் கிருமியை முறியடிக்க நம்மிடம் தற்போதிருக்கும் மருந்துகள் யாவும் (1) விலகியிரு (2) விழிப்புடன் இரு (3) வீட்டிலேயே இரு என்பதேயாகும்.
            இவ்வாறு இருந்தாலே இந்த தொற்றிப்பரவலை கண்டிப்பாக தடுத்துவிட முடியும். தொற்றிப்பரவுவதை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டால், கொரோனா வைரஸ் இருப்பவர்களாக அடையாளம் காணப்பட்டவர்களை சிகிச்சையளிப்பதும் எளிமையாகும். 
            தற்போது வீட்டிலேயே அடங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த முடக்க வாழ்வு எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும், சமூகத்துடன் வழக்கமாக பழகி வாழும் வாழ்க்கைக்கு நாம் எப்போது செல்ல முடியும் என்ற இந்த வினாக்களுக்கு எல்லாம் இனி வரும் நமது வாழ்க்கை முறையும், வருங்காலமும்தான் படிப்படியாக பதில் சொல்லக்கூடியதாக அமையும்.
            குறிப்பாக போக்குவரத்து மற்றும் மக்கள் கூட்டமாக கூடுவது என்ற இரண்டையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது அரசின் ஆய்வுக்குரிய மிகப் பெரும் விடயங்களாகும்.
            எந்தத் தொழிலில் இழப்பு ஏற்பட்டுள்ளதோ இல்லையோ, வெளிநாட்டுப் பயணத்தை பெரிதும் நம்பியிருந்த உலகின் மிகப்பெரிய தொழிலான சுற்றுலாத் தொழில் பெரும் இழப்பையும் சரிவையும் சந்தித்துள்ளது என்று சொன்னால் அதில் மிகையில்லை. 
            இந்நிலையில் விமானப் போக்குவரத்தை தொடங்க அரசு அனுமதித்தாலும், சர்வதேச விமானச்சேவையை தொடங்க வேண்டுமென்றால், அது இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாக இருந்தால் தற்போதிருக்கும் உலக மக்கள் சமூகத்திற்கு பெரும் நன்மை தரக்கூடியதாக அமையும். அவை, (1) வெளிநாட்டிலிருந்து வருபவர் அல்லது செல்பவர் கொரோனா தொற்று இல்லாதவர் என்ற மருத்துவ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; (2) தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் நேர்வில், அதை போட்டுகொண்டுள்ளார் என்ற சான்றிதழும் தேவை. 
 மஞ்சட்காய்ச்சல் - கற்பிக்கும் பாடம் :
            இங்கு இது தொடர்பாக இன்றளவும் நிலவும் சர்வதேச சூழல் ஒன்றையும் நாம் ஒரு ஒப்புமை ஆய்வுக்காக கருத்தில் கொள்ளலாம். அதாவது கென்யா, உகாண்டா, ருவாண்டா, நைஜீரியா உள்ளிட்ட 31 ஆப்பிரிக்க நாடுகளும், அர்ஜென்டினா, பொலிவியா, பிரேசில், ஈக்வேடார், பெரு உள்ளிட்ட 13 தென் அமெரிக்க நாடுகளும் மஞ்சட்காய்ச்சல் (Yellow fever)  நோய்த் தொற்றுக்கான அபாயம் கொண்டவையாகும். 
            மஞ்சட்காய்ச்சல் வைரஸ் கிருமி தொற்றிய "ஏடீஸ்  எகிப்தி" (Aedes aegypti) என்ற கணுக்காலி வகை கொசுவின் கடியால் இது மனிதர்களிடையே பரவுகிறது. உயிர்க்கொல்லியான இந்நோய் தொற்றாமல் தடுக்க வீரியம்மிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாகத்தான் இன்று மனித இனம் தொடர்  அழிவை சந்திக்காமல் தப்பித்துக் கொண்டது.
            உலக சுகாதார அமைப்பு இது தொடர்பான பரிந்துரைகளையும், மஞ்சட்காய்ச்சல் நாடுகளின் பட்டியலையும் அவ்வப்போது கிடைத்துவரும் புதிய தகவல்களின் அடிப்படையில் உலக நாடுகளுக்கு அறிக்கை வடிவில் இன்றளவும் வெளியிட்டு வருகின்றது. 
            மேற்சொன்ன மஞ்சட்காய்ச்சல் தொற்றும் அபாயம் உள்ள நாடுகளில் இருந்து யாரேனும் ஒருவர் வான்வழியாக அல்லது கடல் வழியாக இந்தியாவிற்கு வந்தால், அவர் மஞ்சட்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெறாவிட்டால், அவர் இங்கு வந்ததிலிருந்து 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுதல் வேண்டும்.
             மேலும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்தவாறு தொற்று நீக்கப்படாத கப்பலில் அல்லது 1954-ஆம் ஆண்டின் இந்திய வானூர்தி (பொதுச் சுகாதார) விதிகள் [Indian Aircraft (Public Health) Rules, 1954] கூறுகின்றபடி தொற்று நீக்கப்படாத விமானம் ஒன்றில் ஓர் பயணி மேற்சொன்ன நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்தாலும் அப்பயணி 6 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுதல் வேண்டும்.
            அதேபோன்று மேற்சொன்ன நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஒருவர் செல்ல வேண்டும் என்றால் அவர் மஞ்சட்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால்தான் அவருக்கு நுழைவிசைவு (விசா) வழங்கப்படும். இந்நாடுகளுக்குச் செல்வதற்கு பத்து நாடுகளுக்கு முன் இந்த ஊசியை அரசு அங்கீகரித்துள்ள தடுப்பூசி மையத்திற்குச் சென்று போட்டுக் கொண்டு, சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும். பத்து நாட்களுக்குப் பிறகுதான் இந்த தடுப்பூசி தனது வீரியத்தைக் காட்டி மஞ்சட்காய்ச்சல் தொற்றைத் தடுக்கும். எனவே பயணத்திற்குப் பத்து நாட்களுக்கு முன் இந்த ஊசியை போட்டுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
            அதேநேரம் ஒருவர் இந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா, தான்சானியா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு நேரடியாகச் சென்றால் அவருக்கு மஞ்சட்காய்ச்சல் தடுப்பூசி தேவையில்லை. ஆனால் அவர் தன்னுடைய விமானப் பயணக் கடப்பு வழியில் (டிரான்சிட்) உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுக் காட்டியுள்ள கென்யா, உகாண்டா, ருவாண்டா உள்ளிட்ட 31 நாடுகளில் ஏதேனும் ஒன்றில் விமானம் மாறிச் செல்வதற்காக இறங்கியிருந்தால், அவர் மஞ்சட்காய்ச்சல் தடுப்பூசி போட்டிருந்தால்தான் மேற்சொன்ன நாடுகள் அவரை உட்புக அனுமதிக்கும். 
 மேற்சொன்ன நாடுகள் தவிர இந்திய உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மஞ்சட்காய்ச்சல் நோய்த் தொற்று கிடையாது. 
இவ்வாறு உலக நாடுகளில் சிலவற்றில் மட்டுமே மஞ்சட் காய்ச்சல் நோய்த் தொற்றுக்கான அபாயம் இருக்கும் நிலையில், உலக சுகாதார அமைப்பு ஏன் இவ்வளவு விரிவான விதிமுறைகளைப் பரிந்துரைக்கின்றது என்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அவை (1) மஞ்சட்காய்ச்சல் வைரஸ் கிருமி நாட்டிற்குள் வரும் அல்லது பரவும் அபாயத்தில் இருந்து நாடுகளைப் பாதுகாப்பதன் வாயிலாக நோய்த் தொற்றிலிருந்து பயணிகள் ஒவ்வொருவரையும் பாதுகாத்தல். 
மஞ்சட்காய்ச்சல் நோய்த் தொற்றை ஆப்பிரிக்க நாடுகளில் சில முற்றிலும் ஒழித்துவிட்டன. உதாரணமாக கென்யாவில் 1997-ஆம் ஆண்டில் மஞ்சட்காய்ச்சல் நோயாளர் ஒருவரும் இல்லை என்று ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. எனினும் இன்றளவும் மஞ்சட்காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் பெற்றிருந்தால்தான் கென்யாவிற்குச் செல்ல முடியும் என்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது.கொரோனாவில் ஆரம்பித்த இந்தக் கட்டுரை ஏன் மஞ்சட்காய்ச்சலைத் தொற்றி விரிவாகச் செல்கிறது என்ற கேள்வி, இந்த இடத்தில உங்கள் மனதில் எழுந்தால் அதில் எந்த வியப்பும் இல்லை. காரணம், உலகின் சில நாடுகளில் மட்டுமே தொற்றிப் பரவி, பின் தடுப்பூசியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்ட மஞ்சட்காய்ச்சல் வைரஸ் கிருமி, இன்று உலகம் முழுக்க பெரிதும் பரவி, இன்னமும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத, நேரடியான ஆங்கில (அலோபதி) மருந்து இல்லாத கொரோனா வைரஸ் கிருமி முன் ஒரு சிறிய பிள்ளைப்பூச்சியாக மாறியதுதான்.
 வெளிநாட்டுப் பயணம் எப்படி, எப்போது சாத்தியம்?
            உயிர்களைப் பறித்து, உலக மக்கள் சமுதாயத்தை மண்டியிட்டு பணிய வைத்துள்ள இந்தக் கொடூரமான கொரோனவை நடுவில் வைத்துக் கொண்டு வெளிநாட்டுப் பயணத்தை  எப்படி, எப்போது சாத்தியமாக்கிக் கொள்வது என்ற கேள்வி விரைவில் பேருருவம் எடுக்க பெரிதும் வாய்ப்புள்ளது. 
            எவ்வாறு மஞ்சட் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொண்டவர் என்ற சான்றிதழ் பெற்றிருந்தால் மட்டுமே அக்காய்ச்சலுக்கான அபாயம் உள்ள நாடுகளுக்கு ஒருவர் பயணிக்க முடியும் என்ற சர்வதேச நிபந்தனை உள்ளதோ, அவ்வாறே கொரோனா நோய்க் கிருமித் தொற்று இல்லாதவர் என்ற சான்றிதழ் பெற்றவர் மட்டுமே வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்ற ஒரு நிபந்தனையைக் கொண்டுவருவது ஒரு பாதுகாப்பான வெளிநாட்டுப் பயணத்தை உறுதி செய்வதாக அமையலாம். இதற்கு அப்பயணியை எத்தனை நாட்களுக்கு முன்னதாக தனிமைப்படுத்தி வைத்திருந்து, பின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற வினா இங்கு உடனிகழ்வாக எழுகிறது. 
         "நாட்டிடை பயணம் மற்றும் ஆரோக்கியம்" (International Travel and Health) தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கடந்த ஃபிப்ரவரி மாத இறுதியில் வெளியிட்டுள்ள பரிந்துரைகள் யாவும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்த நேரத்தில் நிலவிய சர்வதேச சூழல்களை கருத்தில் கொண்டதாக உள்ளது. தற்போது சுமார் ஒன்றரை மாதம் கடந்து விட்ட இந்நிலையில் கொரோனா வைரஸ் மெல்லமெல்ல உலகம் முழுக்க பரவிவிட்டது. எனவே இன்றிருக்கும் நிலையை ஆராய்ந்து பாதுகாப்பாக வெளிநாட்டு பயணம் செய்வது தொடர்பான விதிமுறைகளை உலக சுகாதார அமைப்பு தனது உறுப்பு நாடுகளுக்கு பரிந்துரைக்க வேண்டும். அப்பரிந்துரைகளை சர்வதேச வான்வழி மற்றும் கடல்வழி பயணங்களுக்கான சட்ட திட்டங்களை வகுப்பதற்கு உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக இருக்கும்.
            இது குறித்து சர்வதேச விமானப் போக்குவரத்துக்குப் பொறுப்பாக இருக்கும் நாட்டிடை விமானப் போக்குவரத்து அமைப்பு (International Civil Aviation Organisation - ICAO), நாட்டிடை வான்வழி போக்குவரத்து சங்கம் (International Air Transport Association - IATA), சர்வதேச விமான நிலைய பெருமன்றம் (Airport Council International - ACI) ஆகியவற்றுடன் உலக சுகாதார அமைப்பு கலந்தாலோசித்தல் அவசியமானதாகும். இங்கு சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைவிதிகளில் (International Health Regulations 2005 - IHR) கூறப்பட்டுள்ள பல்வேறு தரநிலைகள் மற்றும் வழிகாட்டு நெறிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். 
            சர்வதேச விமானப்பயணத்தைத் தொடங்கத் திட்டமிடும் இந்திய உள்ளிட்ட உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய நேரம் இது. அவை, மேற்சொன்ன உலக அமைப்புகளுடன் கலந்தாலோசித்து சரியான கொள்கை முடிவுகளை எடுத்து மக்களுக்கு பாதுகாப்பான வெளிநாட்டு பயணத்தை வழங்க வேண்டும். ஒரு பக்கம் "தனித்திரு, விலகியிரு" என்று கூறிவிட்டு, இன்னொரு பக்கம் இடர்காப்பு ஏதுமின்றி வெளிநாட்டுப் பயணம் என்பதன் அடிப்படையில் மக்களை கூட்டங்கூட்டமாக கூட வைப்பது என்பது மீண்டும் சுகாதார சிக்கல்களை வரவழைத்துக் கொள்வதற்கு வாசல் வைப்பதாகும். 
            இந்தக் காலகட்டத்தில் இப்புதிய கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி ஏதும் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால், அது மக்கள் சமுதாயத்திற்கு ஓர் பெரும் வரப்பிரசாதமாகிவிடும். தடுப்பூசி போட்டுக் கொண்டு வெளிநாட்டுப் பயணங்களை நிம்மதியாகச் சாத்தியமாக்கலாம்.
            இத்தொற்று நோய் உலகளவில் ஒரு கட்டுக்குள் வரும் வரை முக்கியமில்லா வெளிநாட்டுப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வயதானவர்கள், ஏற்கனவே நோய் ஏதும் உள்ளவர்கள் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து விலகி இருக்கலாம். 
 விமான நிறுவனங்கள் வகுக்கும் விதிமுறைகள் :
            இந்தியாவில் தேசிய ஊரடங்கு விலக்கிக் கொல்லப்பட்ட பின்னர் உள்ளூர் மற்றும் சர்வதேச விமானப் பயணத்தை தொடங்கலாம் என்று காத்துக் கொண்டிருக்கும் தனியார் விமான நிறுவனங்கள் பலவும் கொரோனாவை கட்டுப்படுத்த அவரவர்களுக்குத் தோன்றிய நிபந்தனைகளை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் இருக்கின்றதா, அதாவது உடல் சூடு அதிகமா இருக்கின்றதா என்பதை நுழைவு வாயிலிலேயே கருவி மூலம் கண்டறிதல்.            இதில் ஒரு சிக்கல் உள்ளது. அதாவது, ஏற்கனவே பயணச்சீட்டை இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துவிட்டு பயணத்திற்காக விமான நிலையத்திற்கு வரும் பயணிக்கு காய்ச்சல் இருப்பதாக கருவி காண்பித்துவிட்டால், அதற்கு அடுத்து அவரை பயணத்திற்காக விமானத்திற்குள் அனுமதிக்க முடியாத நிலை தோன்றும் அல்லது அவரை கொரோனா சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்துவதா என்ற கேள்வி எழும். இதற்கு அத்தனியார் விமான நிறுவனங்களிடம் பொறுப்பான பதில் இல்லை. 
            அடுத்து சமூக விலகல். இதன்படி ஒரு பயணி விமான நிலையத்திற்குள் நுழைந்த பிறகு, சமூக விலகலை அவர் மிகக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும், என்று விமான நிறுவனங்கள் கூறுகின்றன. இதற்கடுத்து, விமானத்திற்குள் மூன்று இருக்கைகள் சேர்ந்தாற்போன்று இருந்தால், அதில் நாடு இருக்கையை காலியாக வைத்துவிட்டு மற்ற இரு புற இருக்கைகளிலும் பயணிகள் அமர்வதன் மூலம் சமூக இடைவெளி விமானத்திற்குள் கடைப்பிடிக்கப்படும். பக்கத்திற்கு இரண்டிரண்டு இருக்கைகள் மட்டும் இருக்கும் சிறிய வகை விமானத்தைப் பொறுத்தவரை ஒரு பயணி இடது ஓர ஜன்னல் அருகே அமர்ந்தால், மற்றொரு பயணி வலது ஓர ஜன்னல் அருகே அமர்வதும் இங்கு சமூக இடைவெளி ஆகும்.
            இது ஓரளவு உள்ளக விமானப் பயணத்திற்கு போக்குவரத்துக்கு சாத்தியமாக இருந்தாலும், இதன் விளைவாக விமானப் பயணக் கட்டணங்கள் பன்மடங்கு உயரும். அப்போது விமானப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதன் விளைவாக சிறு விமானங்களை இயக்கும் நிறுவனங்கள் தங்கள் விமானப் போக்குவரத்து வணிகத்தையே நிறுத்திக் கொள்ள நேரிடலாம். 
            அதே நேரம் வெளிநாட்டுப் பயணம் என்றால் பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டே விமானத்தை இயக்க அனுமதிக்க வேண்டும். குறிப்பாக ஒரு விமானம் எந்த நாட்டிலிருந்து எந்த நாட்டிற்கு எந்த நாட்டு விமான நிலையத்தின் வழியாகச் செல்கிறது? அல்லது பயணிகள் எந்த நாட்டின் விமான நிலையத்தில் இறங்கி தாங்கள் சேரும் நாட்டிற்கான விமானத்தில் ஏறுகிறார்கள் ? அந்த இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் அபாயம் எந்த அளவிற்கு உள்ளது? உலகம் முழுவதும் தொற்றிவிட்ட நோயாக கொரோனா உள்ளதால்இவ்வாறு பல்வேறு கூறுகளை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
 இனி வெளிநாட்டுப் பயணம் எப்படி இருந்தால் பாதுகாப்பானதாகும் ?
            தற்போதிருக்கும் சூழலில் வெளிநாட்டு விமான பயணத்தை சாத்தியமாக்க வேண்டுமெனில், (1) முன்சொன்னவாறு விமானம் புறப்படும், இறங்கி கடக்கும் மற்றும் சேரும் நாட்டில் கொரோனா தொற்று அபாயத்தின் அளவை பகுப்பாராய்வு செய்து கணித்தல், (2) சம்பந்தப்பட்ட பயணிக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் உரிய மருத்துவ சான்றிதழைக் கோரல், (3) இந்திய வானூர்தி (பொதுச் சுகாதார) விதிகள் அல்லது உலக சுகாதார அமைப்பு கூறும் முறையின்படி விமானத்தில் பயணிகள் ஏறுவதற்கு முன்பாக அதனை தொற்று நீக்கி வைத்தல். 

           
கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழை (COVID 19 Free Medial Certificate) காண்பித்தால் மட்டுமே அவருக்கு நுழைவிசைவு (விசா) வழங்கப்பட வேண்டும். இதற்கு அவர் பயணத் தேதிக்கு குறைந்தபட்சம் 14 நாட்கள் முன்னதாக தனிமைப்படுத்தப்படுதலில் இருத்தல் வேண்டும். அதுவும் உரிய முறைப்படி உறுதிப்படுத்தப்படுத்தல் வேண்டும்.
             இவை மட்டுமல்லாது உள்நாட்டு விமானப் பயணத்திற்குப் பொருந்தக்கூடிய வழக்கமான நிபந்தனைகளான (1) மிகக் கவசம் அணிதல், (2) கைகளை தொற்று நீக்கியால் கழுவிக்கொள்ளல், (3) குறைந்தபட்சம் 4 அடி சமூக இடைவெளியைக் கண்டிப்புடன் பின்பற்றல் ஆகியவற்றையும் கடைப்பிடிக்க வேண்டும். 
             இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போன்று, அதிக முக்கியத்தும் இல்லாத வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்தல் அறிவுபூர்வமானதாகும். 
            இவ்வாறு இருந்தால் மட்டுமே பாதுகாப்பானது மட்டுமல்ல நம்பிக்கையான வெளிநாட்டு விமானப் பயணம் சாத்தியமாகும். இந்நிபந்தனைகள் வெளிநாட்டு கப்பல் பயணத்திற்கும் பொருந்தும். 
            மேலும் இந்நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டால், உலக மக்கள் அனைவருக்கும் இவ்வூசி போடப்படுவது எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும். அதுவரை தொற்றிலிருந்து தங்களை மட்டுமல்ல மற்றவர்களையும் காக்கும் பெரும் சட்டக் கடமையில் மக்கள் உள்ளனர் என்று சொன்னால் அது மிகையன்று. 
உள்நாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாக்களின் மீது மக்களின் கவனம் திரும்பும் :
            உலகின் மிகப் பெரிய வணிகம் சுற்றுலா. இந்த வணிகத்தையும், இதில் உள்ள வழிகாட்டி முதல் படகோட்டி வரை உள்ள பல்வேறு தொழில்களையும் நம்பி உலக மக்கள் பலரும் வாழ்ந்து வருகின்றனர். கொரோனாவின் உலகளாவிய பீதி காரணமாக வெளிநாட்டு சுற்றுலா மோகம் பெரிதும் குறைய வாய்ப்புண்டு. ஆனால் அதே நேரத்தில் ஓரளவு பாதுகாப்பான நிலை உருவான பிறகு, முதலில் உள்நாட்டு மற்றும் உள்ளூர் சுற்றுலாக்களின் மீது மக்களின் கவனம் திரும்பி, அது பெரும் வளர்ச்சியை எட்டும். தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை தோன்றும். படிப்படியாக சுற்றுலா வணிகம், சுற்றுலாசார் தொழில்கள் அனைத்தும் சீரடையும். உலக போக்குவரத்து பாதுகாப்பானதாக அமையும்.

No comments: