மஞ்சுளாவும் சுபாஷினியும் வீட்டுக்குள் வரும்போது, சமையலறையிலிருந்து எழுந்த நண்டுக்குழம்பின் வாசனையை நுகர்ந்தவாறு “ பிரமாதம் அபிதா “ என்று ஏககாலத்தில் சொன்னார்கள்.
இரண்டு வேறு வேறு குணாதிசயம் கொண்டிருப்பவர்களிடமிருந்து ஒரே வார்த்தை ஏககாலத்தில் பிறக்கும் அதிசயத்தை அபிதா ரசித்தாள்.
“ இரண்டுபேரும் நண்டுக்குழம்பை ருசிக்க வராமல், நேரேபோய் குளித்துவிட்டு வாங்க… ஏன் இவ்வளவு நேரம். நானும் அய்யாவும் வெளியே போனோம் கெதியா வந்திட்டம். நீங்கள் இரண்டுபேரும் கடைத்தெருவில் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்தீங்களா..? இன்னும் ஐந்து நிமிடத்தில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு வந்துவிடும். தப்பினீர்கள். இல்லையேல் நிகும்பலையூர் பொலிஸ் உங்களையும் கொண்டுபோயிருக்கும். பேப்பர் பார்ப்பதில்லையா, ரெலிவிஷனில் சொல்வதை கேட்பதில்லையா..? ஊரடங்கில் நடமாடி பிடிபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுது தெரியுமா..? அபிதா தொடர்ந்து பேசினாள்.
“ பிடிபட்டாலும் உங்கட பெயரை அந்த இன்ஸ்பெக்டரிடம் சொன்னால் விட்டுவிடுவான் “ என்றாள் மஞ்சுளா.
“ விட்டுவிடுவான் என்று சொல்லாதடீ… விட்டுவிடுவார் என்று மரியாதையகச் சொல்லு மஞ்சு. “ என்று கண்சிமிட்டியவாறு சொன்னாள் சுபாஷினி.
அதனைக்கேட்டுக்கொண்டு முகநூலில் மூழ்கியிருந்த ஜீவிகாவும் உரத்துச்சிரித்தாள். வெளியே விறாந்தாவிலிருந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்த சண்முகநாதனும் அந்த சிரிப்பின் பின்னணியை அறிந்து கொள்வதற்காக எழுந்து வந்தார்.
அவருக்கு அபிதா, அந்த வீட்டுக்கு வந்த முதல்நாளை நினைவுபடுத்திய ஜீவிகா, தொடர்ந்து சிரித்தாள்.
மணவறைக்கு வரும் மணமகள் போல நானிக்கூனி, நடுக்கத்துடன் கண்கலங்கி அன்று அபிதா அந்த இன்ஸ்பெக்டருடன் வந்த காட்சியை மஞ்சுளா அபிநயமாக நடித்துக்காண்பித்தாள்.
“ அய்யா, இதையெல்லாம் நம்பாதீங்க. இவையள் கூட்டிக்குறைத்துச்சொல்கிறார்கள். வாங்க சாப்பிடலாம். சமையல் முடிந்தது, நீங்கள் காலையிலும் சாப்பிடவில்லை. உங்களுக்கு எங்கட ஊர் நேரம் உங்கட லண்டன் நேரத்துடன் சேர்ந்து வராது. வாங்க….. நீங்க இரண்டுபேரும் போய் முதலில் குளிக்கப்பாருங்க…மஞ்சுளாவுக்கு ஒரு செய்தி இருக்கிறது “ என்றாள் அபிதா.
அந்த செய்தியை கேட்கும் ஆவலில், சுபாஷினியை முதலில் குளிப்பதற்கு அனுப்பினாள் மஞ்சுளா.
உடனடியாக வந்த செய்தியை சொல்வதா..? அதனை இந்த வசந்தமாளிகை வாணிஶ்ரீ எப்படி எடுத்துக்கொள்வாள்…? எல்லோருக்கும் முன்பாகவும் சொல்லமுடியாது, வீட்டின் பின்புறத்தின் மரக்கறித் தோட்டத்தின் பக்கம் இவளை அழைத்துச்சென்று சொல்வதுதான் நல்லது. பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும். அபிதா யோசித்தவாறு சாப்பாட்டு மேசைக்கு சமைத்த உணவை எடுத்துவந்து வைத்தாள்.
அபிதாவுக்கு மனம் பேதலித்தது. இன்று காலையில் யார் முகத்தில் விழித்தேன். பொழுது புலர்ந்து சில மணிநேரங்களுக்குள் சஞ்சரித்திருக்கும் காட்சிகள் முதலிலிருந்து மீண்டும் மீண்டும் மனதில் வந்து அலைமோதிக்கொண்டிருக்கின்றன.
கற்பகம் ரீச்சருடன் லண்டன்காரர் பேசுவதற்கு தூது செல்லவேண்டும். நீண்ட இடைவெளிக்குப்பின்னர் மஞ்சுளாவைத்தேடும், யாருடனோ போய்விட்ட தாய் சிவகாமசுந்தரியின் வேண்டுகோளை பக்குவமாக எடுத்துச்சொல்லவேண்டும்.
பாதிப்புகளை சந்தித்த இரண்டு பெண்களினதும் பிரச்சினைகளை அணுகுவதற்கு , பாதிக்கப்பட்ட பக்கமிருந்து கோரிக்கை ஏதும் வராமலேயே அதற்கு காரணமானவர்களிடமிருந்து கோரப்படும் பாவசங்கீர்த்தனம் தன்னூடக முன்வைக்கப்படுகிறதே..!?
எவ்வாறு இந்த முடிச்சுகளை அவிழ்ப்பது..?
லண்டன்காரரின் சமாதானப்பேச்சை கற்பகம் ரீச்சரிடமெடுத்தால், அவ நெருப்பெடுப்பா! மஞ்சுளாவின் அம்மாவின் பேச்சை எடுத்தால், இவள் இங்கே துள்ளிக்குதித்து ஆர்ப்பாட்டம் செய்வாள்.
வெளியே ஊரடங்கு.
இந்த வீட்டுக்கு சமைக்கவந்தேனா..? இவையளின் பூராயங்களை பார்க்க வந்தேனா..? இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது…? எனது இயல்புகளே இந்த ரஸவாத வித்தைக்கு வித்திடுகிறதா..?
எதுவும் நன்மையாக முடிந்தால், “ உன்னால்தான் முடிந்தது “ எனச்சொல்லமாட்டார்கள். விபரீதமாக முடிந்தால், “ உன்னால் வந்த வினை “ என்பார்கள்.
சண்முகநாதனும் ஜீவிகாவும் மதிய உணவருந்த மேசைக்கு வந்தார்கள். ஜீவிகா, தொடர்ந்தும் முகநூலைப்பார்த்துக்கொண்டே சாப்பிடத் தயாரானாள்.
“ அம்மா, நண்டு உடைத்து சாப்பிடுவதற்கு இரண்டு கைகளின் விரல்களும் வேண்டும். போனை வைத்துவிட்டு சாப்பிடுங்க.. “ எனச்சொல்லிய அபிதா, இருவருக்கும் தண்ணீர் வார்த்து வைத்துவிட்டு, மஞ்சுளாவை அழைத்துக்கொண்டு வீட்டின் பின்வளவுக்கு வந்தாள்.
மஞ்சுளா கையோடு தனது கைத்தொலைபேசியையும் எடுத்துவந்தாள்.
இவர்கள் இருவரும் பின்புறம்செல்வதை கடைக்கண்ணால் நோட்டமிட்ட சண்முகநாதன், ‘ அப்படி என்னதான் பேசுவதற்கு போகிறார்கள்…? இங்கிருப்பவர்களை தவிர்த்துப்போவதனால், தன்னைப்பற்றியும் அவள் கற்பகத்தையும் பற்றியும் பேசவிருக்கிறார்களோ…?
ஜீவிகா, நண்டுக்கறியை ருசித்தவாறே, பெரியப்பாவிடம் லண்டன் சாப்பாடுகளைப்பற்றியும், அங்கே யார் நன்றாக சமைப்பார்கள் என்பது பற்றியும் மேலதிக புதினங்களை கேட்கத்தொடங்கியிருந்தாள்.
சுபாஷினி, குளித்து முடித்து, கூந்தலை துவட்டிக்கொண்டு தனது அறைக்குள் சென்றாள்.
“ என்ன செய்தி..? ஏதோ சொல்ல வந்தீங்க…? கெதியா சொல்லுங்க அபிதா. எனக்கும் பசிவந்திட்டுது. உங்கட கைப்பக்குவத்தின் நண்டுக்கறி மணம் வயிற்றைக்கிள்ளுது. சொல்லுங்க…. “ மஞ்சுளா தனது கைத்தொலைபேசியில் வந்திருக்கும் புதிய இலக்கத்தை பார்த்தவாறே கேட்டாள்.
“ ஏதும் புதிய இலக்கமா மஞ்சு…? “
“ ஓமோம்.. யாருடையது என்பது தெரியவில்லை. நான் சுபாவுடன் வெளியே போகும்போது மொபைலை எடுத்துச்செல்ல மறந்திட்டன். சார்ஜில் போட்டுவிட்டுப்போனேன். ஏதும் கோல் வந்த சத்தம் கேட்டதா அபிதா… சொல்லுங்க. “
“ ஓம் மஞ்சு. உங்கட அம்மா எடுத்தாங்க. அவுங்கட பெயர் சிவகாமசுந்தரியா..? “
அதனைக்கேட்ட மஞ்சுளா திடுக்கிட்டு பேயறைந்தவள்போலானாள். அவளது எலுமிச்சம் பல நிறத்துக்கன்னங்கள் திடீரென சிவந்தன. உதடுகள் துடித்தன. பதட்டம் வெளிப்பட்டது.
அபிதா, அவளது கையைப்பற்றி அருகிலிருந்த திண்ணையில் அமரவைத்தாள்.
“ வந்திருக்கும் ஒரு கொரோனா போதாதென்று எங்கோ ஓடி மறைந்திருந்த பொம்பிளைக்கொரோனாவும் தொலைபேசியில் தேடி வந்திட்டுது. “ மஞ்சுளா, அந்த புதிய இலக்கத்தை நீக்கியவாறு நெற்றியில் வலதுகரத்தை ஊன்றித் தேய்த்தாள்.
“ அப்படிச்சொல்லாதீங்க மஞ்சு. என்ன இருந்தாலும் அவ உங்கட அம்மா. பெற்றமனம். உலகத்தின் தற்போதைய நிலைமையினால் நீங்கள் என்னபாடோ என்று தவித்திருக்கும். நீங்கள் வேலைசெய்யும் பேங்கின் மனேஜரிடம்தான் இலக்கம் எடுத்திருப்பா. பேசுங்கள். பிளீஸ்… “ அபிதா அவளது தலையை கோதிவிட்டாள்.
ஆதரவாக நீண்ட அபிதாவின் கரத்தை தள்ளிவிட்டு மஞ்சுளா எழுந்தாள். “ அந்த இலக்கத்தை டிலீட் செய்திட்டன். செத்தாலும் அவட முகத்தில் நான் விழிக்கமாட்டன். அவவும் என் முகத்தை பார்க்க வரக்கூடாது. சிம்கார்டை முதலில் மாற்றவேண்டும் “
“ தாயை மாற்றமுடியாது மஞ்சு “
“ என்ன பேசுறீங்க… இவ்வளவுகாலமும் அந்தத் தாய்ப்பாசம் எங்கே போயிருந்தது. அது என்ன இப்போது திடீரென்று பொத்துக்கொண்டு பீறிட்டு வருது… எல்லாம் வேஷம். நாடகம். நடிகையர் திலகம் தோற்றுப்போவாள். “
“ அந்த நடிகையர் திலகமும் வாழ்க்கையில் தோற்றவள்தான். ஆனால், செத்துப்போனாள். உங்கட அம்மா இன்னமும் உயிரோடுதான் இருக்கிறா.? அவவின் வாழ்க்கையில் ஏதேதோ நடந்திருக்கிறது. அவவின் விசும்பல் இன்னமும் காதில் ஒலிக்கிறது. எதற்கும் ஒரு தடவை பேசிப்பாருங்க. நீங்கள் அந்த இலக்கத்தை நீக்கிவிடுவீங்க என்று எனக்குத் தெரியும். தெரிந்தமையால்தான் என்னுடைய நோட் புக்கில் எழுதி வைத்திருக்கிறன் மஞ்சு. காலம் காயங்களை மாற்றும். மாறுவது குணம். சேருவது இனம். அவதான் ஏதோ அவசரத்தில் முடிவு எடுத்திட்டா. நீங்களும் அவசரப்பட வேண்டாம். அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரிவராது. வாங்க, வந்து குளித்துவிட்டு வந்து சாப்பிடுங்க. எனக்கும் பசிக்கிறது. பிறகு ஆறுதலாக இது பற்றிப் பேசுவோம். வாழ்க்கை விசித்திரமானது. அது நன்றாக விளையாடும். அதற்கு விதி என்று பெயர் வைத்துவிடுவார்கள். “
“ அபிதா, நீங்க நன்றாகப்பேசுவதற்கு பழகிவிட்டீங்க. எழுத்தாளர்கள் கதை எழுதுவது போலப்பேசுறீங்.. இந்த சமையல், வீட்டு வேலைகளை விட்டிட்டு பத்திரிகைகளுக்கு கதை எழுதப்போங்க. புகழாவது கிடைக்கும். இங்கே இருந்தீங்களென்றால், இந்த வீட்டிலிருப்பவர்களின் சோகங்களும் வலிகளும்தான் உங்களுக்கு கிடைக்கும். “
“ நானும் வலி சுமந்த பெண்தான் மஞ்சு. உலகத்தில் பிறந்த எல்லாப்பெண்களுமே வலிசுமப்பவர்கள்தான். அதனை கடந்து செல்லவே முடியாது. சீதை, சாவித்திரி, தமயந்தி, சந்திரமதி, சகுந்தலை, பாஞ்சாலி, குந்தி, மண்டோதரி, காந்தாரி, அம்பை, சூர்ப்பனகை, கண்ணகி, மாதவி, மணிமேகலை இப்படி காவியப்பெண்களிலிருந்து இன்று வரையில் பெண்கள் வலிசுமந்தவர்கள்தான். ஆனால், பாருங்கள் இவர்களைப்படைத்தவர்கள் எல்லோரும் ஆண்கள்தான். “
“ சபாஷ் அபிதா… வீட்டுக்கு முன்னால் கோயில் இருக்கிறது. போங்க. அங்கே போய் கதா பிரசங்கம் செய்யுங்க.. ஊரடங்கு முடியட்டும். அந்தக்கோயில் நிருவாகிகளுடன் பேசி, உங்களுக்கு அந்த வேலையையும் எடுத்துத்தாரன். பொன்னாடைகளும் கிடைக்கும். தந்தால் வாங்கிக்கொள்ளுங்கள். எனக்கும் ஜீவிகாவுக்கும் சுபாவுக்கும் கற்பகம் ரீச்சருக்கும் பிளவுஸ் தைப்பதற்கும் உதவும். இந்த நண்டுக்கறி வைக்கிறது, மிளகு ரசம் செய்யிறது, தோசைக்கும் இட்டலிக்கும் மாவரைக்கிறது… இந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, கதை எழுதப்போங்க…. கோயில்களில் கதாப்பிரசங்கம் செய்யப்போங்க.. நல்ல வருமானம் வரும். “
மஞ்சுளா பொரிந்து தள்ளினாள்.
“ பிளீஸ் மஞ்சு. நான் எனக்குத் தெரிந்ததை சொன்னன். உங்களை நான் எனது தங்கையாகத்தான் பார்க்கிறன். இங்கே வந்த நாள் முதல் நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் காண்பிக்கும் பரிவு, பச்சாதாபம், அக்கறை என்னை மீள முடியாத ஒரு பாசவலையில் சிக்கவைத்துவிட்டது. அதனால் கொஞ்சம்…. இல்லை… இல்லை கூடுதலாகவே உரிமை எடுத்திட்டன். அதனால்தான் இவ்வளவு தூரம் பேசுகிறேன். என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். “
“ சரி, சரி… அவதான் அந்த சிவ…. சிவ…. சிவகாம சுந்தரி… வேறு என்னதான் சொன்னா..? “ என்று நையாண்டித்தனமாக தாயின் பெயரை உச்சரித்து மஞ்சுளா கேட்டதும் வெளியே வரவிருந்த சிரிப்பை அடக்கியவாறு, “ வேறு ஒன்றும் பேசவில்லை. உங்கட சுகத்தைத்தான் கேட்டா. சின்னவயதில் உங்களுக்கு சில சுவாசக்கோளாறுகள் இருந்ததாம். அதனால் பயந்திருக்கிறாவாம். உங்களை கவனமாக பார்த்துக்கொள்ளச்சொன்னா. நிலைமை சீரடைந்ததும் வருவா போலிருக்கிறது. “
“ இந்த அக்கறையெல்லாம் என்னையும் என்ர அப்பாவையும் தவிக்கவிட்டுப்போனபோது எங்கே ஓடி ஒளிந்ததாம். நீங்கள் சூடு பறக்கக் கேட்டிருக்கவேணும் அபிதா. நல்ல வேளை தப்பினா. அப்போது அந்தக் கோல் என்னிடம் சிக்கியிருக்வேணும். வாங்கிக்கட்டியிருப்பா. வாங்க போவோம். நான் குளித்துவிட்டு வாரன் . நீங்கள் சாப்பிடுங்க. செத்தவீட்டுக்குப்போய்வந்து குளிப்பது போன்று, செத்துப்போனவள் பேச்சைப்பேசியபின்பு குளிக்கப்போகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள் “
மஞ்சுளாவின் உள்ளக்குமுறல் அபிதாவை திகைக்கவைத்தது.
இவள் சொல்வது போன்று என்னாலும் கதைகள் எழுதமுடியுமா..? எதனை வைத்து எழுதுவது…? யார் அவற்றில் பாத்திரங்கள்…?
எல்லோரும் கதைகளையும் வலிகளையும் சுமந்துகொண்டு அலைகிறார்கள். அவர்களின் கண்களுக்குத் தெரியாத நுண்ணெதிரியும் அந்தக்கதைகளிலும் வலிகளிலும் இழையோடுவதற்கு எங்கிருந்தோ வந்துள்ளான்.
இவன் செய்வதை கண்டறிய உலகமே போராடுகிறது. ஆயுத தொழிற்சாலைகள் கட்டினவனெல்லாம் மருத்துவமனை கட்டத் தொடங்கிவிட்டான்.
கந்தகப்பொடி தேடினவன் எல்லாம், வெண்டிலேட்டருக்கும் முகக்கவசத்திற்கும் அலைகிறான்.
பாசத்தை தொலைத்தவர்கள், அதனைத் தேடி அலைகிறார்கள். வாழ்க்கையும் இயற்கையும் என்னவெல்லாம் செய்கிறது.
அபிதா, ஆழ்ந்து யோசித்தவாறு வீட்டின் பின்கட்டு படிகளில் ஏறினாள்.
( தொடரும் )
No comments:
Post a Comment