உலகச் செய்திகள்


கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஸ்பெயின்

இந்தியாவில் மே 03 வரை ஊரடங்கு நீடிப்பு

"நிதி வழங்கப்படாது" : "இது தருணம் அல்ல"

ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை இரத்துச் செய்யுங்கள்

கொரோனாவுக்கு மத்தியில் தென் கொரிய தேர்தல்; ஆளும் கட்சி வெற்றி

கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஸ்பெயின்
கொரோனா வைரஸினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயின், அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை சற்று தளர்த்த முடிவு செய்துள்ளது.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கையை மேற்கொள்வதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட சில சேவைகளில் உள்ள பணியாளர்களை பணிக்குத் திரும்ப அந்நாட்டு அரசு அனுமதித்துள்ளதுடன், ஏனைய பொதுமக்கள் வீடுகளில் இருப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 17,500 பேர் பலியாகியுள்ளனர். ஆயினும் தற்போது புதிதாக நோய்த் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அந்நாட்டில் குறைந்து வருகின்றது.
ஐரோப்பாவில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடான ஸ்பெயினில் 19,900 மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்நிலையிலேயே நாளை முதல் குறிப்பிட்ட ஒரு சில துறைகளுக்கு தனது பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் நாளாந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 517  இறப்புகள் பதிவாகியுள்ளன. நேற்றையதினம் (12) 619 பேர் உயிரிழந்திருந்தனர். கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை சற்றுக் குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, அந்நாட்டில் புதிய தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகின்றது.
அந்நாட்டில் தற்போது 17,489 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.    நன்றி தினகரன் 

இந்தியாவில் மே 03 வரை ஊரடங்கு நீடிப்பு

21 நாள் ஊரடங்கு இன்று நிறைவடைவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக எதிர்வரும் மே மாதம் 03ஆம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படும்  என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியினால் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு, இன்றுடன் நிறைவுக்கு வரும் நிலையில் மேலும் அது நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவினால் 339 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு, அங்கு இது வரை 10,453 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் "நிதி வழங்கப்படாது" : "இது தருணம் அல்ல"
"நிதி வழங்கப்படாது" : "இது தருணம் அல்ல"-Trump Holds WHO Funding-UN Secretary General Antonio Guterres Defends
இடது: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் | வலது: ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனி
அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,228 பேர் மரணம்
உலக சுகாதார அமைப்புக்கு நிதியளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் உலக சுகாதார ஸ்தாபனம் முறையான முகாமைத்துவம் செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் மிக மோசமாக பரவி இருக்கும் இக்கால கட்டத்தில் ட்ரம்ப் இவ்வாறான தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,228 பேர் மரணமடைந்துள்ளனர்.
அங்கு இது வரை 609,240 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதோடு, 26,033 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இதில் நியூயோர்க்கில் மாத்திரம் 7,905 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொடர்பில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக மாறிவிட்டதாகவும் அவ்வமைப்பு  அமெரிக்காவை குறை கூறுவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன் கொரோனா வைரஸின் தீவிரத்தை அறிந்திருந்தும் அதனை மறைத்திருந்ததாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
அதற்கமைய, இவ்வருடத்தில் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கத் தீர்மானித்த நிதியுதவியை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் கண்டனம்
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

உலகத்தை பாதிப்புக்குள்ளாக்கியிருக்கும் கொரோனா வைரஸ் தாடர்பில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும், உலக சுகாதார அமைப்புக்கான உதவியை நிறுத்துவதற்கான தருணம் இதுவல்ல என்றும் அவர் அதில் சுட்டிக் காட்டியுள்ளார்.உலக சுகாதார நிறுவனம் தனது அடிப்படை பொறுப்புகளை புறக்கணித்து, சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஆண்டு உதவியை நிறுத்த முடிவு செய்துள்ளார்.   நன்றி தினகரன் 


ஏழை நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களை இரத்துச் செய்யுங்கள்

பரிசுத்த பாப்பரசர் வேண்டுகோள்
கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகளில் தற்போது நிலவும் நிலையில்  செல்வந்த நாடுகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஏழை நாடுகளுக்கு வழங்கியுள்ள கடன்களை இரத்துச் செய்ய வேண்டும் என பரிசுத்த பாப்பரசர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அல்லது குறைந்த அளவிலான கடன் தவணையை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேவேளை கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்திற்கு அடிபணிய வேண்டாம் என்றும் பரிசுத்த பாப்பரசர் உலக மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு வத்திக்கான் புனித பீற்றர்ஸ் தேவாலயத்தில் ஈஸ்டர் மறை உரையாற்றியபோதே பரிசுத்த பாப்பரசர் இவ்வாறு தெரிவித்தார்.
மில்லியன் கணக்கான கிறிஸ்தவ மக்கள் தமது வீடுகளில் முடக்கப்பட்டுள்ள நிலையில், பரிசுத்த பாப்பரசர் தனித்து நின்று ஈஸ்டர் வழிபாட்டினை நிறைவேற்றினார்.
உலகெங்கிலுமுள்ள 1.3 பில்லியன் கத்தோலிக்க மக்கள் இந்த வழிபாட்டினை தொலைக்காட்சிகள் ஊடாக பார்வையிட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான பண்டிகையாக ஈஸ்டர் பண்டிகை அமைவதுடன் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தின் 40 நாட்கள் நோன்பு ஜெப, தபங்களில் ஈடுபட்டு அதன் இறுதியில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிணங்க இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்கள் கடந்த வருடம் நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு காரணமாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட முடியாது போனமை குறிப்பிடத்தக்கது. (ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம் - நன்றி தினகரன் கொரோனாவுக்கு மத்தியில் தென் கொரிய தேர்தல்; ஆளும் கட்சி வெற்றிதென்கொரியாவில் நடத்தப்பட்ட பாராளுமன்றத் தேர்தலில், ஆளும் கட்சி  பாரிய வெற்றி பெற்றுள்ளது.
ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான ஜனநாயகக் கட்சியே இவ்வாறு வெற்றி பெற்றுள்ளது.
தென்கொரியாவில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பாராளுமன்றத் தேர்தல் நேற்று (15) அமைதியான முறையில் நடத்தப்பட்டது.
அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், 300  ஆசனங்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தில் ஜனாதிபதி மூனின் ஜனநாயகக் கட்சி 163 ஆசனங்களை பெற்றுள்ளது. 
இதன் சகோதர கட்சியான பிளாட்போம் ( Platform) கட்சி 17 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு மொத்தம் 180  ஆசனங்கள் கிடைத்துள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஆரம்பித்ததை அடுத்து, வாக்களிப்பு இடம்பெற்ற முதல் நாடாக தென்கொரியா அமைகின்றது.
வாக்களிப்பின்போது, கட்டுப்பாடான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அந்நாட்டில் வாக்களிப்புகள் இடம்பெற்றன.
வாக்காளர்கள் கைகளை  சுத்தம் செய்வதற்கான கிருமிநாசினியைக் (sanitiser) கொண்டு  சுத்தம் செய்ய வேண்டும் என்பதோடு, முகக் கவசங்கள் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.  குறைந்தது ஒரு மீற்றர் இடைவெளியில் வாக்காளர்கள் நிற்க வேண்டும் என்பதோடு,  வெப்பமானி சோதனைக்கு பின்னர் வாக்குச்சாவடிகளுக்குள் உள்நுழைய வாக்காளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது சுமார் 60,000 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் கொரோனா தடுப்பு ஊசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் உலக சுகாதார ஸ்தாபனம்
வேகமாக பரவி வரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிப்பதற்கு குறைந்தது ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகலாம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் மார்க்ரெட் ஆரிப் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் சோதனை பல நாடுகளில் ஆய்வு கட்டத்திலேயே உள்ளது. இதனால் தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகலாம். உலக அளவில் கொரோனா வைரஸ் 90 சதவீதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது.
இத்தாலி, ஸ்பெயினில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இங்கிலாந்து, துருக்கியில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது.   நன்றி தினகரன் 


No comments: