சிட்னியின் புற நகர்ப் பகுதி, கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் கார்ப் பயணத்தில் இருப்பது மல்கோவா மாதா ஆலயம். வார இறுதி நாட்களில் அந்தப் புனித மிகு தேவாலயம் நோக்கி மத வேறுபாடின்றி தமிழர் படையெடுப்பர். அந்தப் பயணத்தில் வழி ஆங்காங்கே பருவகாலப் பழ விற்பனையையும், மார்கழி தொட்டும் காலத்தில் தறித்து வைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரங்களின் விற்பனையையும் கண்டிருப்பர். இந்த முறை வெறுமையான அந்தப் பயணத்தில் “வரட்சி காரணமாக இம்முறை மரங்கள் இல்லை” என்ற வாசகங்களைக் கடந்து போய்க் கொண்டிருப்பர் ஒரு பெருமூச்சோடு.
சிட்னியைத் தலைப் பட்டினமாகக் கொண்ட நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கடும் கோடை அனர்த்தமும், மழை பொய்த்துப் போன வானமும் மெல்ல மெல்லத் தன் வேலையைக் காட்டுகின்றன. குடியிருப்பாளர்களுக்கு நீர் விநியோகம் செய்யும் முக்கிய நீர்த்தேக்கம் வற்றிக் கொண்டே போகிறது.
வீட்டுத் தோட்டத்துக்கான நீர்ப் பாய்ச்சலை காலை ஒன்பது மணிக்கு முன்னதாகவும், மாலை நான்கு மணிக்குப் பின்னதாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு
கடந்த நான்கு மாதங்களாக நிலவிய சூழலில் தொடர் மழையின்மை, நீர் இருப்புக் குறைந்து வருவதால் இப்போது இன்னும் அதிக கட்டுப்பாடு வந்து விட்டது. இனிமேல் பூ வாளி கொண்டே நீர் பாய்ச்ச வேண்டும், பூந்தோட்டம் தவிர வேறெதற்கும் நீர் விரயோகம் கூடாது, வெளியே சுவரோ, நிலம் கழுவவோ கூடாது, காருக்குக் கூட வாளி கொண்டே கழுவ வேண்டும் போன்ற வெளிப்படையான கட்டுப்பாடுகள் பணத் தண்டத்துக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டு விட்டன.
தவிர 4 நிமிடத்துக்கு மேல் குளிக்கக் கூடாது,
உடுப்பு துவைக்கும் இயந்திரத்தின் கொள்ளளவை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும், மலசல கூடத்தின் கழுவு நீர் வருகையைப் பாதியளவுக்கு மட்டுப்படுத்த வேண்டும் என்ற சுய கட்டுப்பாட்டையும் வலியுறுத்துகிறது Sydney Water எனும் நீர் வள விநியோக அமைப்பு. புற்கள் கருகிக் கொண்டே போகின்றன, ஏற்கனவே எரிந்த சாம்பல் புகையின் தூசுப் படிமங்கள் வீட்டு விறாந்தைகள் ஒட்டிக் கொண்டிருக்கின்றன.
விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருப்போர் நிலையை எழுத்தில் வடிக்க முடியாது.
இந்த ஆண்டு காட்டுத் தீ அனர்த்தத்தால் இதுவரை 800 வீடுகள் சாம்பலாக, ஆறு உயிர்ப்பலிகள், தவிர நூற்றுக் கணக்கான உயிரினங்கள் எரிந்து போய் விட்டன.
இந்த நிலையில் அடுத்த ஏழு நாட்களுக்கு அமலாகும் வகையில் Section 33 of the State of Emergency and Rescue Management சட்டப் பிரகாரம் மாநில அளவில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார் நியூ சவுத் வேல்ஸ் மாநிலப் பிரதமர் திருவாட்டி
Gladys Berejiklian
இந்த அவசர நிலை வழியாக RFS (Rural Fire Service) ஆணையாளருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்படி இந்த ஆணையாளர்
தீயினால் அச்சம் விளைவிக்கக் கூடிய செயற்பாடுகளைத் தடுக்கவும்,
பொதுச் சொத்துகளைகளைப் பயன்படுத்தி நிலைமையைக் கட்டுக்குள் அடக்கவும்,
ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும்,
தீ அபாயம் என்று கருதப்படக் கூடிய சூழலில் மின்சாரம், நீர் விநியோகம், எரிபொருள் தடைகளை மேற்கொள்ளவும்
அச்சம் சூழும் பகுதிகளில் வீதித்தடை, பாதுகாப்பு ஏற்பாடுகளை எடுக்கவும் என்று
தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று சிட்னியிலும், சூழவுள்ள பகுதிகளிலும் 43 பாகை வெப்ப நிலையோடு காட்டுத் தீ பரவல் தொடங்கியிருக்கிறது. எங்கும் புகை மண்டலம். இன்று மட்டும் இதுவரை 40 வீடுகளை முற்றாகத் தீ நாக்குக்குள் தீண்டி விட்டன.
தீயணைப்பு வீரர்கள் இருவர் மோசமான தீக்காயங்களுக்கு உட்பட்டிருக்கிறார்கள். இதோ இன்னொன்று என்று வரும் சனிக்கிழமையும் 43 பாகை வெப்ப நிலை எதிர்வு கூறலோடு இன்னொரு நாள் எதிர்கொள்ளப் போகும் அபாயத்தைக் காட்டி நிற்கின்றது பருவ நிலை காட்டி.
கானா பிரபா
19.12.2019
No comments:
Post a Comment