skip to main |
skip to sidebar
நிகும்பலை கடற்கரையில் ஒதுங்கியிருந்த ஒரு படகின் அருகில் அமர்ந்தவாறு, செங்கதிரோன் சமுத்திரத்தாயிடத்தில் மூழ்கிக்கொண்டிருக்கும் ரம்மியமான காட்சியை அபிதாவும் சுபாஷினியும் பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கையோடு எடுத்துவந்த ஒரு பிளாஸ்ரிக் விரிப்பை தரையில் விரித்து, தண்ணீர் போத்தல்களையும் மாலையில் சுட்ட பருப்பு வடை சுற்றப்பட்ட சிறிய பொதியையும் அபிதா வைத்தாள். “ முன்னர் இப்படி பிக்னிக்போன அனுபவம் இருக்கிறதா அபிதா..? “ எனக்கேட்டாள் சுபாஷினி. “ அவரும் நானும் தமிழும் முல்லைத்தீவு கடற்கரைக்குச் சென்றிருக்கிறோம். வற்றாப்பளை அம்மன் கோயிலுக்கு போயிருக்கிறோம். அதெல்லாம் முடிந்த கதை. “ அபிதாவிடமிருந்து பெருமூச்சு உதிர்ந்தது. அவர் என்பது அவள் கணவன் என்பதும் தமிழ் என்றது அவளது ஒரே குழந்தை தமிழ்மலர் என்பதும் சுபாஷினிக்கு ஏற்கனவே தெரியும். அவளிடமிருந்து பெருமூச்சு வந்ததும் சுபாஷினிக்கு சங்கடமாகிப்போனது. அபிதா மீது அனுதாபம் கூடியது. எவ்வளது துயரங்களை, ஈடு செய்யமுடியாத இழப்புகளையெல்லாம் மனதளவில் சுமந்து தாங்கிக்கொண்டு, ஊர் விட்டு ஊர்வந்து எங்களுக்கெல்லாம் சமைச்சுப்போட்டு பணிவிடை செய்துகொண்டிருக்கிறாள். போதாக்குறைக்கு எனது
ஏமாற்றங்களையும் இவளிடம் கொட்டி அழுது, மேலும் மேலும் இவளுக்கு சுமைகளை கூட்டிவிட்டேனோ..? சுபாஷினி குற்ற உணர்வினால் குறுகிப்போயிருக்கிறாள். அபிதா எடுத்து நீட்டிய பருப்புவடையை ருசி பார்த்து, “ சுடச்சுட நன்றாக இருக்கிறது. கற்பகம் ரீச்சர் இருந்தால் இதற்கு நூறு மார்க்ஸ் போட்டிருப்பா. அவவுக்கு பாடசாலையில் மாணவர்களுக்கு புள்ளிகள் போட்டுப்போட்டு பழகிய வழக்கத்தில், வீட்டில் நாம் ஏதும் செய்தால் சட்டென புள்ளிபோட்டு உற்சாகப்படுத்துவா அல்லது சோர்வடையச்செய்வா. ஆனால், கற்பகம் ரீச்சரின் இந்த சான்றிதழ்களை நாம் பொருட்படுத்துவதில்லை. பாவம் இப்போது டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துவரும் ரீச்சர், அங்கே எத்தனைபேருக்கு மார்க்ஸ் போட்டுக்கொண்டிருப்பாங்களோ தெரியவில்லை. “ என்றாள் சுபாஷினி. “ டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துபவர்களுக்குப் புள்ளி போடுவாவா..? அல்லது பப்பாசி இலைகளுக்கு போடுவாவா..? “ என்று அபிதா சொன்னதும், சுபாஷினி முகத்தை வேறு பக்கம் திருப்பி, சற்றுத்தள்ளி பட்டம் விட்டுக்கொண்டிருக்கும் சிறுவர்களை பார்த்தாள். கைத்தொலைபேசியில் மஞ்சுளாவை தொடர்புகொண்டாள். மறுமுனையில், அவள் ஓட்டோவில் வந்துகொண்டிருப்பதை அறிந்து, படகுக்கு அருகில் அமர்ந்திருக்கும் திசையை சொல்லும்போது, முன்னர் அவ்விடத்திலிருந்த ஒரு சினிமா தியேட்டரை அடையாளப்படுத்தினாள். கைத்தொலைபேசியுடன் சுபாஷினி முகம் திருப்பிப் பார்த்த பகுதியை அபிதா நோட்டமிட்டாள். “ அந்த இடத்தில் சினிமா தியேட்டர் இருந்ததா..? “ அபிதா. “ ஓம். அதன் பெயர் மீபுரா. இப்போது அது இருந்த சுவடே இல்லை. அந்த இடத்தில் மீனவர்கள் கறுவாடு காயப்போடுகிறார்கள். அதுதான் அந்த மணம் இங்கு வரையும் வருகிறது. “ என்றாள் சுபாஷினி. அபிதா தரையில் கையூண்றி எழுந்து, கடற்கரையில் பல வடிவங்களில் பரவியிருக்கும் சிப்பி, சோகி பொறுக்கத்தொடங்கினாள். பொறுக்கியவற்றை தனது சேலை முந்தானையில் பொட்டலமாகக் கட்டிக்கொண்டாள். அவளது செயல், குழந்தைகளின் குதூகலத்திற்கு ஒப்பானதாக இருந்தது. ‘ இவற்றை அள்ளிக்கொண்டுபோய் என்னதான் செய்யப்போகிறாளோ…? ‘ சற்று நேரத்தில் சுபாஷினியின் கைத்தொலைபேசி சிணுங்கியது. மறுமுனையில் மஞ்சுளா. அபிதா திரும்பிப்பார்த்தாள். மீண்டும் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் படகு தரித்து நிற்கும் திசையை சுபாஷினி சொன்னாள். அதன் பிறகு எழுந்து நின்று வீதியை பார்த்தாள். அபிதா மடி நிறைய சிப்பி, சோகிகளுடன் வந்து, கையோடு எடுத்துவந்த ஒரு பிளாஸ்ரிக் பையில் போட்டாள். “ இதனை என்ன செய்யப்போறீங்க..? “ “ பொறுத்திருந்து பாருங்க. எனக்கு ஒரு குளுடெக் மாத்திரம் வாங்கித்தாங்க.. “ மாலை மங்கிக்கொண்டிருக்கிறது. பட்டம் விட்டுக்கொண்டிருந்த சிறுவர்கள் கூச்சலும் கும்மாளமுமாக அகன்றுகொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மழை வந்தாலும் குதூகலம், வெய்யில் வந்தாலும் கொண்டாட்டம். மழைக்காலத்தில் முற்றத்தில் தேங்கியிருக்கும் தண்ணீரில் காகிதப்படகு விடுவார்கள். வெய்யில் வந்தால், மெல்லிய ரிசு காகிதத்தில் பட்டம் செய்து பறக்கவிடுகிறார்கள். பருவகாலத்தை தமக்குத்தோதாக மாற்றிக்கொண்டு குதூகலமாக வாழும் அந்தப்பருவத்தை நினைத்து சுபாஷினி ஏங்கினாள். “ நாங்களும் ஒருநாளைக்கு இங்கே வந்து பட்டம் விடுவோமா சுபா..? “ எனக்கேட்டாள் அபிதா. இவள் என்ன குறிப்புணர்ந்த குணவதியா….? நான் என்ன நினைக்கின்றேனோ, அதுவாகவே மாறிவிடுவதற்கு எத்தனிக்கிறாளே..! சுபாஷினி அபிதாவின் மைன்ட் ரீடிங்கை மனதிற்குள் வியந்தவாறு வீதியைப்பார்த்தாள். ஒரு ஓட்டோவில் மஞ்சுளா வந்து இறங்கினாள். கையிலிருந்த ரோஸ் நிற கைக்குட்டையை காற்றில் அசையவிட்டு, தாங்கள் நிற்கும் இடத்தை சுபாஷினி காண்பித்தாள். கற்பகம் ரீச்சரின் கதைகளை தெரிந்துவைத்திருக்கும் அபிதா, இப்போது தனது கதைகளை தெரிந்துகொண்டாள். மஞ்சுளாவுக்கும் ஜீவிகாவுக்கும் பின்னாலும் இருக்கும் கதைகளை இவள் அறிவாளா..? காலம் வரும்போது தெரிந்துகொள்ளட்டும். இவள் இங்கே எமது கதைகளைக் கேட்கவா வந்தாள்…? சமைக்க வந்தாள். வீட்டு வேலைகளை செய்ய வந்தாள். அந்த எல்லையைத்தாண்டி எவ்வாறு எங்கள் மனதிற்குள் இவளால் ஊடுறுவிக்கொள்ள முடிந்தது. அதற்கான அனுமதியை நாம்தானே கொடுத்துவிட்டோம். அந்தரங்கங்கள் அவரவருக்குள் இருக்கும்வரையில்தான் புனிதமானது. அம்பலமாகிவிட்டால்…? அந்த வீட்டிலிருக்கும் மஞ்சுளாவைத்தவிர மற்ற அனைவருக்கும் தாய் – தகப்பன் என்று ஏதோ ஒரு உறவிருந்தது. ஆனால், மஞ்சுளா அவை இருந்தும் இல்லாத வாழ்க்கையைத்தானே தொடருகின்றாள். பாவம்! மஞ்சுளா தனது அழகிய கூந்தலை வெட்டி குட்டையாக்கியதன் பின்னணிக்கதையை ஒருநாள் கேட்ட கற்பகம் ரீச்சரும் ஜீவிகாவும் தானும் அதிர்ந்து உறைந்துபோன நாள் சுபாஷினிக்கு அப்போது நினைவுக்கு வந்தது. காற்றில் பறக்க எத்தனிக்கும் தனது குட்டையான கேசத்தை லாவகமாக ஒதுக்கியவாறு ஒயிலாக மஞ்சுளா நடந்துவரும் காட்சியை சுபாஷினி ரசித்தவாறு, “ எங்கள் வசந்தமாளிகை வாணிஶ்ரீ வாராள். “ எனச்சொல்லிச்சிரித்தாள். “ ஒருவாறு மழைவிட்டு ஓய்ந்துவிட்டது இல்லையா…? எனச்சொல்லிக்கொண்டு அவர்களருகில் வந்தாள் மஞ்சுளா. காகிதத்தில் சுற்றப்பட்ட பருப்பு வடையை அவளிடம் நீட்டினாள் அபிதா. “ தேங்ஸ். எத்தனை மணிக்கு வந்தீங்க…? இன்னமும் வடையில் சூடு ஆறவில்லை. “ “ எப்போதும் பேங்கில் மிகவும் பிஸி என்பாய். இன்று எப்படி..? “ எனக்கேட்டாள் சுபாஷினி. அபிதா கடலில் கால் நனைக்கச்சென்றிருந்தாள். “ எல்லாம் வழக்கம்போலத்தான். அபிதா பாவமடி. வீட்டில் எவ்வளவு வேலை கொடுத்தாலும் முகம் சுழிக்காமல் செய்யிறா. ஏதும் செய்து கொண்டு வா என்று உன்னிடம்தானே சொன்னேன். வழியில் கடைகளில் ஏதும் தின் பண்டம் வாங்கலாம் என்று நீதானே சொன்னாய். இது என்ன..? அபிதா வீட்டில் வடை சுட்டு எடுத்து வந்து நீட்டுகிறாள். “ ஒரு தண்ணீர்போத்தலை அவளிடம் நீட்டியவாறு, “ அபிதா வந்த புதிதில் என்னவெல்லாம் சொன்னீங்களடி. அவளது மெலிந்த உடல் வாகைப்பார்த்துவிட்டு நெத்தலி என்றோம். நீதான் அவளது சுறுசுறுப்பை பார்த்துவிட்டு, ‘ புதிய துடைப்பம் நன்றாகத்தான் துடைக்கும் ‘ என்றாய். நான் இப்போது எனது மனதிற்குள் அபிதா குறித்து வைத்திருக்கும் பெயர் என்ன தெரியுமா..? “ “ நீயே சொல்லு… “ “ குறிப்பறிந்த குணவதி. ஜீவிகா சொன்ன ஒரு வார்த்தையால் ரொம்பவும் அப்செட்டிலிருந்தேன். இன்றைக்கு வேலைக்கும் போகவில்லை. என்னைத் தேற்றி இங்கே அழைத்துவந்தும் அபிதாதான். அதற்குள்தான் எத்தனை வேலைகளை வீட்டில் செய்துமுடித்துவிட்டாள். இனிமேல் அவளை நெத்தலி, புதுத் துடைப்பம் என்றெல்லாம் கூப்பிடவேண்டாம். பாவம். “ எனச்சொன்னவாறு கடலில் கால் நனைத்துக்கொண்டிருக்கும் அபிதாவைப்பார்த்தாள் சுபாஷினி. மஞ்சுளா அவ்வேளையிலும் தனது கைத்தொலைபேசியில் முகநூல் பார்க்கத் தொடங்கியிருந்தாள். கடல் அலைகள், எழுந்து வந்து ஓசையுடன் கரையில் மோதி, நீண்டு விரிந்து வடிந்து மீண்டும் உள்ளே ஓடுவதுமாக தன்னியல்போடு வாழ்கின்றன. பேரலைகள் எழுந்து மடிந்து, தரையை தழுவிவிட்டு, மீண்டும் பின்வாங்கிச்சென்று, மீண்டும் அலையாக உருவாகி ஆவேசத்துடன் வந்து அடங்கி உட்பிரவேசிக்கும் அழகே அற்புதம்தான். அபிதா அந்த அற்புதத் தரிசனத்தை மனித வாழ்வுடன் ஒப்பீடு செய்தவாறு சேலையை கணுக்கால் வரையில் உயர்த்தி கால்களை நனைத்துக்கொண்டிருந்தாள். மஞ்சுளாவையும் சுபாஷினியையும் அழைத்தாள். அவர்களும் பாதணிகளை கழற்றிவிட்டு எழுந்து வந்தனர். அந்தப்பாதங்களை அபிதா பார்த்தாள். மஞ்சுளாவின் பாதம் எழுமிச்சை பழ நிறத்திலும், சுபாஷினியின் பாதம் பழுப்பு நிறத்திலும் இருந்தன. மஞ்சுளாவின் கால் நகப்பூச்சு அழகாக இருந்தது. சுபாஷினிக்கு நகப்பூச்சு பூசும் பழக்கமில்லை. அலைகள் வரும்போது மஞ்சுளா சிலிர்த்தவாறு அபிதாவின் கரத்தை பிடித்துக்கொண்டாள். இவள் எப்போது தனக்கென ஒரு கரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளப்போகிறாள்? அந்த வீட்டிலிருப்பவர்களில் இவளுக்குத்தான் வயதும் குறைவு. அழகாகவும் இருக்கிறாள். தலைமுடியை குட்டையாக வெட்டாமல் கூந்தலாக வளரவிட்டிருந்தால் மேலும் அழகாக இருப்பாள். ஒருநாள் தான் ஏன் கூந்தலை கட்டையாக்கியது பற்றியும் மஞ்சுளா என்ற பெயர் எவ்வாறு சூட்டப்பட்டது பற்றியும் அபிதாவிடம் சொன்னதிலிருந்து, அவளிடத்திலும் அபிதாவுக்கு அனுதாபம் இருந்தது. அன்றைய தினம் இவர்கள் இருவரும் மாத்திரமே வீட்டிலிருந்தனர். வங்கியில் மேசையொன்று எதிர்பாராதவகையில் இடுப்பில் இடித்தமையால், வந்த நோவை, கடைக்குச்சென்று சித்தாலேப குப்பி வாங்கிவந்து தடவி அழுத்தி குணப்படுத்தியது அபிதா. “ அந்தக்கடையில் வின்டோஜனும் டைகர் பாமும் இல்லை. இதுதான் கிடைத்தது. “ மஞ்சுளாவை அவளது அறைக்கட்டிலில் படுக்கவைத்து மென்மையாக அந்த கிறீமைத் தடவி சூடுபறக்கத் தேய்த்துவிட்டு குணமாக்கியபோதுதான் அபிதாவிடம் தனது கதையை சொன்னாள். “ என்னை அபிதா முதலில் நீங்க மன்னிக்கவேண்டும். நீங்கள் இந்த வீட்டுக்கு வந்தபுதிதில், அதற்கு முன்னர் இருந்த சேர்வண்ட்ஸ் போன்றுதான் இருப்பீங்கள் என நினைத்துக்கொண்டு சில நாட்கள் ஏதாவது சொல்லி காயப்படுத்தியிருப்பன். தாயின் அரவணைப்பு இல்லாமலிருக்கும் எனக்கு ஒரு தாயாக மாறியிருக்கிறீங்க. “ என்றவள் கண்ணீருக்கிடையே சொன்ன கதைகளால் அபிதா அன்று சோகத்தில் ஆழ்ந்திருக்கிறாள். “ வீட்டில் நான் ஒரு குமர்ப்பிள்ளை இருப்பதும் மறந்து ஒருவனோடு ஓடிப்போனவள்தான் என்ர தாய். அவன் அப்பாவின் சிநேகிதன். அப்பா, சிங்கப்பூருக்கு வேலைக்குப் போனபிறகு வந்த கள்ள உறவு. மத்திய கிழக்கிற்கு பணிப்பெண் வேலைக்கு மனைவிமாரை அனுப்பிவிட்டு, இங்கே கள்ள உறவு தேடிய ஆம்பிளைகளின் கதைகள் பற்றி அறிந்திருக்கின்றேன். ஆனால், என் வீட்டுக் கதை வேறு மாதிரி அமைந்துவிட்டது. அம்மா போனதும் , அத்தை அறிவித்து அப்பா வந்தார். அந்த அத்தை அப்பாவின் தங்கை. என்னை அத்தையிடம் ஒப்படைத்துவிட்டுப்போனார். எங்கள் வீடு பூட்டிக்கிடந்தது. தொடர்ந்து நான் அத்தையின் பராமரிப்பிலிருக்க வேண்டுமானால், நாம் இருந்த வீட்டை தனக்கே எழுதித்தரவேண்டும் என்று அத்தை கட்டாயப்படுத்திக்கொண்டிருந்தா. அப்பா எனது செலவுக்கும் அத்தை – மாமாவுக்கும் பணம் அனுப்பிக்கொண்டிருந்தார். ஓடிப்போனவளின் மகள் என்ற பட்டத்தை சுமந்துகொண்டு ஒருவாறு படித்து முடித்து, வங்கியில் வேலைதேடிப் பெற்றேன். அத்தையின் மகளும் என்னோடுதான் படித்தாள். ஆனால், அவளுக்கு வங்கியில் வேலை கிடைக்கவில்லை. அதனைப்பொறுக்காத அத்தை, ஒரு நாள், “ ஓடுகாலிகளின் பிள்ளைக்கு வேலை கிடைக்குது என்ர மகளுக்குத்தான் இன்னமும் இல்லை “ என்று சொன்னதை என் காதாலேயே கேட்டேன். அப்பாவுக்கு கடிதம் எழுதியும் போண் பண்ணியும் என்ர நிலைமையை சொன்னேன். அப்பா, கிடைத்த வங்கி வேலையை விட்டுவிட்டு, சிங்கப்பூருக்கு வரச்சொன்னார். போனேன். ஆனால், நல்லவேளை எனக்கு கிடைத்த வேலையை விட்டுவிடாமல்தான் போனேன். அங்கு எனக்கு மற்றும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்பா, அங்கே தனக்கு வேறு ஒரு துணையைத் தேடியிருந்தார். எனக்கு ஏன் இப்படி நடக்கவேண்டும்… ? நான் என்ன பாவம் செய்தேன்…? அப்பாவுடன் கோபித்து சண்டை போட்டுவிட்டு திரும்பி வந்தேன். ஜீவிகாவின் தொடர்பு நான் வேலை செய்த வங்கியிலிருந்து ஆரம்பமானது. அது தனிக்கதை. ஆண்களையும் பெண்களையும் நம்பமுடியாது. என்னையும் சிலர் லவ் பண்ணப்பார்த்தாங்கள். நான் திருமணமே வேண்டாம் என்று, இனி இப்படியே இருப்பது என்று முடிவுசெய்துவிட்டேன். ஜீவிகாவின் பெரியப்பா. அதுதான் இந்த வீட்டின் சொந்தக்காரர். லண்டனிலிருக்கிறார். ஒரு தடவை இங்கே வந்து என்னைப்பார்த்துவிட்டு, தனது லண்டனிலிருக்கும் மகனுக்கு கேட்டும் பார்த்தார். அவருக்கும் ஜீவிகா சொல்லி, நான் இங்கே வந்து சேர்ந்த கதை தெரியும். நான் வேலை செய்யும் வங்கியில் என்னோடு வேலை செய்த ஒருவன். விரும்பினான். எனது கூந்தல் அழகாக இருக்கிறது என்றான். மறுநாள் கூந்தலை கட்டையாக வெட்டிக்கொண்டு சென்றேன். அப்பொழுதும் நான் அழகாக இருக்கிறேன் என்றான். உடனே, நான், “ அப்படியா, நாளை முகத்தில் அசிட் ஊற்றிக்கொண்டு வருகிறேன். அப்போதும் நான் அழகாக இருப்பதாகச்சொல்லுவியா ? எனக்கேட்டேன். சில நாட்களில் அவன் இடமாற்றம் பெற்று போய்விட்டான். என்னை விரும்பிக்கேட்டவன்கள் பலபேர். அம்மா – அப்பாவின் செய்கைகளுக்குப் பிறகு எனக்கு தாம்பத்திய வாழ்க்கையே வெறுத்துவிட்டது. ஆண் சுகமே வேண்டாம் என்று தனித்து வாழ்கின்றேன். இன்னும் ஒருத்தன், அவன் கற்பகம் ரீச்சர் வேலை செய்யும் ஸ்கூலில் ஆசிரியர். தான் ஒரு பட்டதாரி எனச்சொல்லிக்கொண்டு வந்து என்னை விரும்புவதாக கற்பகம் ரீச்சர் மூலம் தூது அனுப்பினான். நான் மறுத்து தூது அனுப்பினேன். ஒருநாள் வேலை முடிந்து வந்தபோது ரீச்சர் மீண்டும் அவனை கட்டுமாறு எரிச்சல் மூட்டிக்கொண்டிருந்தார். தாமதிக்காமல் ரீச்சர் மூலமே அவனுக்கு போண் எடுத்து வரவழைத்தேன். அவனும் மனம் நிறைய எதிர்பார்ப்புடன் வந்திருப்பான். ரீச்சருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. வந்தவனை அமரச்செய்து, “ ஏன் என்னை திருமணம் செய்ய விரும்புகிறீர்..? “ எனக்கேட்டேன். நான் மிகவும் அழகாக இருப்பதாகவும் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுவதாகவும் அப்பாவித்தனமாகச் சொன்னான். அப்பொழுதுதான் அத்தை, அதுதான் எனது அப்பாவின் தங்கை சொன்னது நினைவுக்கு வந்தது. “ சீறி வரும் பாம்பையும் நம்பலாம். சிரித்துப்பேசும் பெண்ணை நாம்பாதே “ என்று ஒரு போடு போட்டேன். கற்பகம் ரீச்சரும் திகைத்துப்போனா. என்ற அம்மாவும் நல்ல அழகுதான் அபிதா. அவ சிரித்தாலும் கன்னத்தில் குழிவிழும். இறுதியில் அவவும் ஒரு குழியில் விழுந்து காணாமலேயே போய்விட்டாள். “ ஒரு தாயன்பு எப்படி இருக்கவேண்டும் என்பதை உங்களது பரிவிலிருந்து தெரிந்துகொண்டதனால் எனது கதையை உங்களுக்குச் சொன்னேன். அவள் அன்று அபிதாவிடம் அவ்வாறு சொன்னபோது, அவளது முகம் மேலும் சிவந்திருந்தது. இன்று கடலில் சூரியன் முற்றாக மறைந்த பின்னரும் அடிவானம் சிவப்பாகத்தான் காட்சி தந்தது. ( தொடரும் )
-->
No comments:
Post a Comment