திரிவண்ணம் புதியதோர் கலை முயற்சி - பரமபுத்திரன்

.பொதுவாக அரங்க நிகழ்வுகளை ஒழுங்கமைப்போர் இந்த நிகழ்வுக்கு இவர்கள்தான் வருவார்கள் என்று முடிவு செய்வார்கள்.  அத்துடன்   நிகழ்வுக்கு தொடர்பானவர்கள் அல்லது அந்த நிகழ்வு சம்பந்தமான அறிவுடைய பார்வையாளர்களை மட்டும் அழைப்பார்கள். உதாரணமாக நடனம் என்றால் நடனம் தெரிந்தவர்களே பார்ப்பர் என்று முடிவு செய்வது.  ஆனால் திரிவண்ணம் கலை என்ற வகையில் வெற்றிபெற்றுள்ளது. காரணம்  வரையறுக்கப்பட்ட நடனம் தெரிந்தவர்களை மட்டும்  மையமாக கொள்ளாது சகல  பார்வையாளர்களும் விரும்பி இரசிக்கும் கலைநிகழ்வாக   உருவாக்கப்பட்டுள்ளமை  இந்நிகழ்வின் சிறப்பு அம்சம் எனலாம். எனவே கலையையும், பார்வையாளர்களையும் ஒன்றிணைக்கும் அடிப்படையில்  நிகழ்வினை தயாரித்த நெறியாளரை பாராட்டலாம்.  இனி நிகழ்வு தொடர்பாக பார்ப்போம்.


2018 ஆம் ஆண்டில் Parramatta Riverside theatre இல் நடன அரங்கேற்றம் மூலம் தங்கள் திறமையை வெளிக்காட்டிய  ஜெரோம் கொன்சிலா  தம்பதியினரின் புதல்விகளான  சகானா, இன்பனா,  ஆரனா ஆகிய  மூன்று சகோதரிகள் மீண்டும் Brayan  Brown theatre  இல் வேறு பரிமாணத்தில்  திரிவண்ணம் நடன நிகழ்வில் தம்மை  வெளிக்காட்டியுள்ளார்கள். அவுத்திரேலியா சிட்னியில் அரங்கேற்றம் செய்த  சகோதரிகள், தங்களது இன்னோர் பக்க திறமையை வெளிக்கொணர்வதற்காக நடன ஆசிரியை கலாநிதி திருமதி ஜெயந்தி யோகராஜா அவர்களை நாடியுள்ளார்கள். அந்த ஆசிரியரே முற்றுமுழுதாக திரிவண்ணம் நிகழ்வினை நெறிப்படுத்தியிருந்தார்.  இந்நடன நிகழ்வு Bankstown, Brayan  Brown theatre மண்டபத்தில் டிசெம்பர் மாதம் 13 ஆம் திகதி நடைபெற்றது. அரங்கத்தில் நடனநிகழ்வு பரத நாட்டிய வழமைக்கு அமைவாக வந்தனத்தில் ஆரம்பித்து திரிவண்ண சங்கமம் வரை விரிந்து சென்றது.
இந்நாள் இளவாலை திருக்குடும்ப கன்னியர் பாடசாலை அதிபர் அருட்சகோதரி சகாயநாயகி பஸ்தியம்பிள்ளை, மற்றும் முன்னாள் அதிபர் அருட்சகோதரி பொனவென்ச இமானுவேல் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாக கலந்துகொள்ள,    திரு. திருமதி சங்கரப்பிள்ளை, திரு. திருமதி.  ரவி  இமானுவேல் ஆகியோரின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து  தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து  பாடி நிகழ்ச்சிக்குள் அழைத்து சென்றார்கள். திரு. திருநந்தகுமார் அவர்கள் ஆரம்ப நிகழ்வுகளை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைத்தார். திரிவண்ணம் நிகழ்வினை வழங்குவதற்காக இலண்டனில் இருந்து கலாநிதி ஜெயந்தி யோகராஜா வரவழைக்கப்பட்டிருக்கின்றார். அவர் தனித்து நடனம் பயிற்றுவிப்பவர் மட்டுமல்ல, நடனம் தொடர்பாக நூலும் எழுதியுள்ளார். இங்கும் அவர் எழுதிய நூல் ஒன்று வெளியிடப்பட்டது. கலாநிதி கார்த்திகா கணேசன் அவர்கள் நூலையும், நடன ஆசிரியரையும் அறிமுகம் செய்தார். அவரின் அறிமுகத்துக்கு சான்று பகர்வதாக நிகழ்வு அமைந்திருந்தது என்று சொல்லமுடியும். எனவே இலண்டன் வரவு மூலம் நடனம் ஆடிய மாணவர்கள் பயன் பெற்றுள்ளார்கள் என்று திடமாக சொல்லமுடியும். காரணம் சகோதரிகள் மூவரும் தனித்தும் இணைந்தும் தங்கள் திறமைகளை கட்டவும் பார்வையாளருக்கு ஏற்றவகையிலும் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தார்.


என்னதான் எம்மிடம் திறமைகள் இருந்தாலும் அதனை வெளிக்கொணரும் வாய்ப்புகள் மிகவும் அரிதாகவே உள்ளது. அதிலும் புலம்பெயர் நாடுகளில் தனிப்பட்ட நிகழ்வு ஒன்றினை செய்வது என்பது ஏறத்தாழ எம்வீட்டு நிகழ்வுக்கு  உறவினரை அழைத்து செய்வது போன்று செய்யப்படவேண்டிய ஒன்றாக  உள்ளது.  இதற்கு பல்வேறு காரணங்களை முன்வைக்கலாம் இருந்தாலும் முக்கிய மற்றும் முதன்மையான காரணம் பொதுவாக எல்லோரும் வேலை இருக்கிறது என்பார்கள். அடுத்து வெளிநாட்டுக்கலைஞர்கள் அல்லது குறிப்பாக இந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களைத்தான் நாங்கள் பார்ப்போம், இரசிப்போம்  என்ற மனநிலையில் இருப்பார்கள். இதனால் புலம்பெயர் நாடுகளில் பிறந்து தங்களை கலைக்காக வளர்த்த கலைஞர்கள் திறமை  இருந்தாலும் வலு  இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள். ஆனாலும் ஜெரோம் கொண்சல தம்பதியினர் பிள்ளைகள் கற்ற கலையினை வெளிக்கொணர மீண்டும் முயன்று வெற்றிபெற்றுள்ளார்கள். இதற்காக அவர்களை பாராட்டலாம்.
பக்கவாத்திய கலைஞர்கள்  இசைவழங்க, சாய்  விக்னேஷ் அவர்கள்  பாடல் இசைக்க,  ஆசிரியர் ஜெயந்தி யோகராஜா அவர்களின் நாட்டுவாங்கத்துடன் மூன்று சகோதரிகளும் உற்சாகமாக நடனமாடியபடி  ஒருவர்  பின் ஒருவராக அரங்கினுள்  நுழைந்தனர். அந்தக்காட்சி ஆரம்ப நிகழ்வாக     மட்டும் அமையாது, தொடர  இருக்கும் நிகழ்வு  எப்படி இருக்கும் என்பதற்கும் கட்டியம் கூறுவதுபோல அமைந்திருந்தது. இறைவனை தொழுது, தங்களை பயிற்றுவித்த ஆசிரியரின் ஆசிபெற்று,   இசை கலைஞர்களுக்கும் மதிப்பளித்து மக்களை வணங்கி வந்தனம் செலுத்தி அரங்கினுள் மீண்டார்கள். அடுத்து தனித்தனியே ஒவ்வொருவராக வந்து தங்கள் திறமையை நிரூபித்தார்கள். பிறப்பினால் சகோதரிகள் என்றாலும் நடனம் ஆடுகையில் ஆளுக்காள் போட்டிபோட்டு ஆடுவது பாராட்டும்படியாக அமைந்த ஒன்று எனலாம்.  .


சீதையின் மனதினுள் புகுந்திட்ட இராமன் சிவதனுசை உடைத்து அவளை கரம்  பிடிக்கும் வரை சீதைக்குள் நடந்த  மனப்போராட்டத்தை, சீதையாக மாறி மனதை நிறைத்த காதலனை மணம் செய்யும்வரை சீதை பட்டிருக்கக்கூடிய துயர், ஏக்கம், பயம், மனவருத்தம், மகிழ்ச்சி என்பவற்றை உள்வாங்கி, அதற்கான  பாவங்களை முகத்தினில் காட்டி, அசைவுகளை நடனத்தால் நிகழ்த்தி, இராமனின்  மணமாலையை பெற்ற சீதை கொண்ட மகிழ்ச்சியை வெளிக்காட்டி கைதட்டலை வாங்கிச்செல்ல, அடுத்து வாணியாக வந்து இறங்கினார்  இன்பனா. கல்வித் தெய்வத்தை வேண்டுவது என்பது சாதாரணமானது அல்ல. வாணியை விரும்பி, மனமுருகி, அமைதியாகவே வேண்டவேண்டும். தனது நடனமூலம் வாணியை வேண்டி, வணங்கும் பக்தராக மாறி, வாணியிடம்  வரம்கேட்டு விண்ணப்பித்து, வணங்கிவிட்டு அரங்கினை  விட்டு வெளியேறினார். அடுத்து துர்க்கை துள்ளி வந்தாள். சகானா துர்க்கையாக அரங்கினுள் நுழைந்தார். மற்ற இருவரும் ஆடிய நடனத்தை பார்த்துவிட்டு வந்திருப்பார் போல. அவர்கள் இருவரும் ஆடியதை காட்டிலும் சிறப்பாக ஆடியிருந்தார். கோபம், வீரம், கருணை, வெற்றி மகிழ்ச்சி என்று பாவங்களும் அதற்கு ஏற்றவாறு ஆடலும் நிகழ்த்தியமை நிகழ்வினை சிறப்பாக்கியது. அதேவேளை எல்லா அம்சங்களும் நிறைந்த ஒரு நடனமாக துர்க்கையின் நடனத்தை குறிப்பிடலாம். அவரின் உற்சாகமான நடனம் பார்வையாளர்கள் எல்லோரையும் கவர்ந்திருந்தது என்று சொல்லமுடியும். காரணம் வார்த்தைகள் அல்ல பார்வையாளர்களின் கரங்கள் பேசின.அடுத்து பெண்மை வெல்லும் நடன நிகழ்வு அரங்கேறியது. மகாபாரதத்தில் இடம்பெறும் பாத்திரமான விசித்திரவீரியன் மணமுடிக்க அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகியோர் வீட்டுமரால் கவரப்பட்டது முதல் அம்பை சிகண்டியாகி வீட்டுமரை எதிர்த்து நின்றவரை நடைபெற்ற சகல சம்பவங்களும் நடனம்  மூலம் காண்பிக்கப்பட்டது. வீட்டுமருக்கு இணையாக நடனத்திலும் ஒருவர் இருந்தார். அவர் இன்பனா. மற்ற இருவரும் மாறிமாறி வேடங்களை ஏற்றார்கள். பெண்மை  வெல்லும் நிகழ்வு பெண் பார்க்கும் படலத்துடன்  ஆரம்பித்தது. பாடல்கள் மூலம் கதை நகர்ந்து செல்ல தொடர்ந்து,  வீட்டுமர் புகுந்து சண்டையிட்டு பெண்களை கவர்ந்து செல்லல்.  அம்பை விசித்திரவீரியனை மணம்  செய்ய மறுத்தல், மேலும் தான்  ஏற்கனவே வேற்றுநாட்டு மன்னன் சால்வனை   விரும்பியதை கூறுதல். அத்துடன்  அவனை நாடிச்செல்ல வீட்டுமரிடம் அனுமதி கேட்டல். வீட்டுமர் அனுமதியுடன் சால்வனிடம் செல்லல். சால்வன் மறுத்தல். மீண்டும் வீட்டுமரிடம் வருதல். வீட்டுமர் தான் ஒரு பிரமச்சாரி என்று காரணம் காட்டி ஏற்க மறுத்தல். அவள் கோபம் கொள்ளல். வீட்டுமரை பழிவாங்க புறப்படுதல். இறைவனிடம் வேண்டுதல்.  இப்பிறப்பில் அது சாத்தியமில்லை என்பதால், தவமிருந்து தீக்குளித்து, தன் உயிர்போக்குதல்.  மீண்டும் சிகண்டியாக  பிறப்பெடுததல்.  இப்பிறப்பு  ஆணுமற்ற பெண்ணுமற்ற ஒரு நிலை. வீட்டுமர் ஆண்களுடன் மட்டும் போர்செய்யும் பழக்கமுள்ளவர். ஆணுமற்ற பெண்ணுமற்ற சிகண்டியை தங்கள் தேரில் அருச்சுனனின் முன்னே நிறுத்தி சிகண்டி அம்பு தொடுக்க, வீட்டுமர் சண்டையிடுவதை நிறுத்த அருச்சுனன் அம்பு எய்து வீட்டுமரை விழுத்துவான். சிகண்டி மகிழ்ந்து ஆடுவாள்.  பாடலுடன் இணைந்து ஒவ்வொரு நிகழ்வினையும் எமக்கு விளங்கும் வண்ணம் அபிநயம் செய்து ஆடினர். வீட்டுமருக்கு சிகண்டியால் எய்யப்பட்ட அம்புகளை வீட்டுமர் கையால் பிடித்து எறிவதும் திடீரென அருச்சுனன் அம்புவிட்டு வீழ்த்துவதும் தத்துருபமாக இருந்தது. நடன நிகழ்வாக அன்றி, அங்கு என்ன நடைபெறும் என்று இனம் கண்டு, அதனை அனுபவித்து நடனமாடியமை நன்றாக இருந்தது. பார்வையாளர்களும் இதனை புரிந்திருப்பார்கள்  காரணம்  யாருடைய வேண்டுகையும் இன்றி கைதட்டல்கள் எழுந்து விழுந்தன. 


இடைவேளையை தொடர்ந்து நிகழ்வின் முக்கிய பாகமாகிய திரிவேணி சங்கமம் ஆரம்பமானது. கங்கை, யமுனை, காவிரி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிப்பதாக பாடல் இசைக்க சகோதரிகள் மூவரும் நீலநிற ஆடையில் தங்கள் கரங்கள் மூலம் அருவியின் நீரசைவுகளை தொடர்ச்சியாக காட்டினார். மிகவும் நேர்த்தியாக, ஒத்திசைவாக, தொடர்ச்சியாக,   சர்வ சாதாரணமாக சங்கமத்தை காட்டியமை சிறப்பு. நெறிப்படுத்திய ஆசிரியர் முற்றுமுழுதாக  இதில் கவனம் செலுத்தியிருப்பார் போல. மாணவர்கள் களைப்போ அன்றி சளைப்போ இன்றி மூவரும் இணைந்து பார்வையாளர்களை தம்வசம் இழுத்து இந்த நிகழ்வினை தந்தார்கள்.      இந்நிகழ்வின்  இன்னோர் சிறப்பம்சம் நிகழ்வினை நெறிப்படுத்திய ஆசிரியர், நடனமாடிய பிள்ளைகளின் பெற்றோர்கள், இலங்கை இளவாலையை சேர்ந்தவர்கள். அதுமட்டுமல்ல இளவாலை திருக்குடும்ப கன்னியர் பாடசாலையின் முன்னைய, தற்போதைய அதிபர்களும் வருகைதந்திருந்தார்கள். இன்னும் இளவாலைமக்கள்  பலர் இணைந்திருந்தனர். இது தங்கள் பூர்வீகத்தை நினைவில்  வைத்திருப்பதை எடுத்துக்காட்டியது. மேலும் இசைக்கலைஞர்கள் வரிசையில் சாய் விக்னேஷ் பாடல்கள் பாட, இசைக்குடும்பத்து சகோதரர்கள் சௌமியா சிறீதரன் வீணை இசைக்க, வெங்கடேஷ் சிறீதரன் புல்லாங்குழல் வாசிக்க,. கிசான் சேகரம் மிருதங்கம் வாசித்து நல்லதொரு இசைச்சூழலை உருவாக்கியிருந்தார்கள். திரிவண்ணம் நிறைவான நிகழ்வு என்று கூறக்கூடிய அதேவேளை மூன்று சகோதரிகளிடமும்  இருக்கின்ற முழுமையான கலைத்திறனும் வெளிக்கொண்டு வரப்படவில்லை என்பது எனது தனிப்பட்ட எண்ணம். இருப்பினும் கிடைத்த காலத்தில் தங்கள் கலையை பயன்படுத்தி  பார்வையாளர்கள் திருப்தி கொள்ளும் வகையில் திரிவண்ணம் வழங்கிய நிகழ்சிக்குழுவினரை மகிழ்வுடன் பாராட்டலாம். 

  
  

No comments: