ஹிட்டான பாட்டு - ச.கண்மணி கணேசன்

.

(1996ல் மதுரை வானொலியில் ஒலிபரப்பான எனது முதல் உரை)

விடுமுறை தொடங்கியவுடன் பிள்ளைகள் விருப்பத்திற்காகப் பொழுது
போக்கத் திரைப்படம் சென்றோம். சம்பந்தமே இல்லாமல் ஒரு பாட்டிற்குள் பத்து முறை உடைமாற்றம்; திடீரென்று குழுநடனம்; கனவுக்காட்சி; ஆழ்ந்து ரசிக்க  முடியவில்லை. அரங்கை விட்டு வெளியேறிய போது என் காதில் விழுந்த விமர்சனங்கள்-


“அத்தனை பாட்டும் சூப்பர்ஹிட்டுப்பா”

“பாட்டுக்காகவே இந்தப்படம் ஓடும்”; என்னைப் பாடலை ஊன்றிக்
கேட்க வைத்தன. அப்படி என்ன இருக்கிறது இந்தப் பாடல்களில்?...... தோண்டிப் பார்த்தால்…….


"விஸ்கி பீரு மத்தவன் காசுல ஓசியில் கெடச்சா டோன்ட் மிஸ்ஸு

வேலவெட்டி ஏதுமில்லாம சோறு கெடச்சா டோன்ட் மிஸ்ஸு" பாடலை
எழுதியவர் யாரென்று பார்த்தால்; இனம் புரியா வலி. 



இது காந்தி பிறந்த மண்; இங்கே காந்தியை தேசத்தந்தை என்று
அழைக்கிறோம். காந்தீய சிந்தனை என்று பல்கலைக்கழகங்களில் பாடங்களும் துறைகளும் உள்ளன. நானும் அப்பாடத்தைப் படித்திருக்கிறேன்; மாணவர்களுக்கு அப்பாடத்தை நடத்தியும் இருக்கிறேன். காந்தியடிகள் கள்ளுக்கடை மறியல் தான் செய்தார்; அதற்காக விஸ்கி பீரை அடுத்தவன் காசில் வாங்கிக்


குடிப்பது ஒழுக்கச் சீர்கேடு இல்லையா? 

" எக்ஸாமு எக்ஸாமு வந்தா எஸ்கேப்பு பண்ணாத சும்மா 

பேப்பர் ட்ரேசோ பிட்டு அடிச்சோ பாஸப் பண்ணப்பா"; தவறுதலாகக்
கரண்டில் கைவைத்து விட்டதுபோல் உதறலெடுத்தது. விழிப்புணர்வோடு பாட்டைக் கேட்டேன்.



"டாடி போட்ட ஃபுல்ஹான்ட் ஷர்ட்டுல சில்லரை இருந்தா டோன்ட்
மிஸ்ஸு"



அப்பாவின் பையிலிருந்து மூன்று பேனாக்களைச் சொல்லாமல் கொள்ளாமல்
எடுத்துவிட்டுத் தன் மனசாட்சி உறுத்த பெற்றவரிடம் கடிதமூலம் மன்னிப்புக் கேட்ட தலைவரின் வரலாறைப் பள்ளியில் பாடமாகப் படித்திருக்கிறேன். ஆனால் இன்றோ வளரும் பிள்ளைகள் மனதில்...அப்பா சட்டைச் சில்லரையை எடுக்கச் சொல்லித் தூண்டுகிறோம்- திரைப்படப் பாடல் மூலம்…





இப்படி வெளிப்படையாக இளைய வட்டத்தைத் தவறான பாதைக்கு அறைகூவி
இழுக்கும் கலைஞர்கள் யார்? படத்தின் இயக்குநர், பாடலை எழுதிய கவிஞர், இசையமைப்பாளர், பின்னணி பாடியவர், வாயசைத்தவர்- இந்த ஐவகைக் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக எப்படிப் பொறுப்பற்று இருக்கிறார்கள்?!! அனைவரும் வாணிப நோக்கில் அல்லவா செயல்பட்டுள்ளனர். 



கலைஞர்கள் நாட்டின் பொதுச்சொத்து; ஒவ்வொரு கலைஞனுக்கும்
அவனது கலைப்படைப்பு பெற்றபிள்ளையைப் போன்றதல்லவா? நுண்கலைஞர்க்கு; அதாவது படைப்பாளிகட்குத் தாய்மையுணர்வு தானே சுரக்குமே! அது அவரது உடன்பிறப்பு அல்லவா? அந்த உணர்வைக் கொன்றவன் சிறந்த கலைஞனாக முடியாது.  



கலைஞனின் சக்தி கணக்கிட முடியாதது; உலக வரலாற்றில் போரை
நிறுத்திய கலைஞர்கள் உண்டு; போராட்டத்தைத் தூண்டிய கலைஞர்கள் உண்டு; அரசு இயந்திரத்தைத் திசை மாற்றிய கலைஞர்கள் உண்டு; சமூகத்தைச் சீர்திருத்திய பெருமைக்குரிய கலைஞர்கள் உண்டு; சிந்தனையைத் தூண்டிய சீரிய கலைஞர்கள் உண்டு.



"புல்லாங்குழலை நெம்புகோலாக்குங்கள் 


பூமியைக் கூடப் புரட்டி விடலாம்"; என்ற புதுக்கவிஞனின் 

வார்த்தைகள்
வெறும் எழுத்துச் சேர்க்கை அல்ல; நிதர்சனமான உண்மை.



கலைஞன் என்பவன் தன் நாட்டை, அதன் பண்பாட்டை, கலாச்சாரத்தை,
சமூகநிலையை; எடைபோடத் துணை செய்யும் சிறப்புக்கூறு. அவனது படைப்புகள் எடைக்கற்கள். 



வயிற்றுக்காக எழுதி, வயிற்றுக்காக இசையமைத்து, வயிற்றுக்காகப்
பாடி, வயிற்றுக்காக வாயசைத்து; வயிற்றுக்காக இத்தனையும் செய்யும் திரைப்படக் கலைஞர்கள் ஒரு நொடிப்பொழுது தம்மை இந்தச் சமுதாயத்தின் பொறுப்பு மிக்க பொதுச்சொத்தாக, தாய்மை உணர்வுடைய அங்கத்தினராக எண்ணிப் பார்த்துச் செயல்பட வேண்டாமா? பொதுமக்களிடையே தரமான ரசிப்புத்தன்மையை


உருவாக்க முயல வேண்டாமா? 

"நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே- நம்நாடு என்னும்

 தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே"; என்று எழுதிய கவிதை
உலகம் ஏன் இப்படித் திசை மாறியது? சந்தனம் அரைத்த கைகள் சாணம் தட்ட வந்தது ஏன்?



சுதந்திர இந்தியாவில் எல்லோருக்கும் எழுத்துச் சுதந்திரம்
உண்டு. ஆனால் எல்லாச் சுதந்திரத்திற்கும் ஒரு வரையறை உண்டே! வரையறை இல்லாத சுதந்திரம் அழிவுக்கே இட்டுச் செல்லும். நம் திரைப்படக் கலைஞர்களுக்கு எது வரையறை?



நடைமுறையோடு ஒட்டி; நல்லவற்றைக் கூறி; சுவைபட எடுத்துச்
சொல்லி; பொழுது போக்குப் படங்கள் எத்தனையோ வெற்றிகரமாக நடைபோட்டுள்ளன அன்று. இன்று 'பாட்டுக்கு அர்த்தம் தேவையில்லை; இசையை ரசித்தால் போதாதா?' என்று கேட்காமல் கேட்டு இளைய சமுதாயத்தினரின் ரசனையைச் சீர்கெட வைத்து விட்டனர். இந்தச் சீர்கேட்டுக்கு முழுப் பொறுப்பும்


ஒருவராக முடியாது. மக்கள் தொடர்புச் சாதனங்கள் பெருமளவுக்கு இளைஞர் எண்ணங்களை வடிவமைப்பதில் பங்கெடுக்கின்றன. 


திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி போன்றவை எப்படிப்பட்ட
ரசனையை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கின்றனவோ; அவ்வளவு தூரம் தான் இளைஞர் உலகம் பண்பட முடியும். மண்ணைப் பிள்ளையாராகவும் பிடிக்கலாம்; குரங்காகவும் பிடிக்கலாம். திரைப்படங்கள் இளைஞர் உள்ளங்களைப் பண்படுத்த வேண்டும்; சீரழிக்கக் கூடாது. அது எதிர்கால சமுதாயத்தையே


பாதிக்கும். 


நுண்கலைகளை இலகுகலைகளாக்கித் தரும் மக்கள் தொடர்புச் சாதனங்கள்
இசையை, நடனத்தை, நாடகத்தை, கலை உலகத்தை; இன்னும் எத்தனையோ துறைகளை நச்சுக்கலந்து கெடுப்பது நியாயமா?



பாதிக்கப்படும் இளைஞர்களே;- இந்த இலகுகலைப் போதைக்கு அடிமையாகி
விடாதீர்கள். உங்கள் கைகளை, உழைப்பை, மனத்தூய்மையை, நற்பண்பை நம்பித்தான் உங்கள் எதிர்காலமும், அடுத்த தலைமுறையின் எதிர்காலமும் உள்ளன. நீங்கள் நினைத்தால் இத்தகைய விஷக்கலைகளை ஓரங்கட்டலாம். பாதிக்கப்படப் போகிறவர்கள் நீங்கள் தாம்; உங்கள் ரசனையைக் கெடுத்துப் பணம்


பண்ணுகிறவர்கள் அல்லர். எனவே நீங்கள் தாம் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். இன்றைய சூழல் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சவால். இந்த சவாலைச் சமாளிக்க நிச்சயம் உங்களால் முடியும். 


"ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம்; ஓல்டையெல்லாம் ஓரங்கட்டுவோம்";
என்று எண்ணாமல்;



'ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒவ்வாத கலைகளை ஓரங்கட்டுவோம்';
என்று சொல்லி ஒதுங்கி விடுங்கள். இந்தப் பணம் பண்ணுகிறவர்கள் தாமாக உங்கள் வழிக்கு வருவார்கள். 



கலைஞனே; நீ நினைத்தால் இந்தப் பூலோகத்தைச் சொர்க்கலோகமாக்கி
எங்களை ஒளிவெள்ளத்தில் உலவவிட்டு நீயும் இறவாப் புகழுடன் இணையின்றிப் பறக்கலாம். 



நீ நினைத்தால் இந்தச் சமுதாயத்தையே நரகக் குழியாக்கி எங்களை
எல்லோரையும் இருளில் அமிழ்த்தி நீயும் அழிந்து படலாம். 



என் அருமைக் கலைஞனே! இந்த நாடு, இதன் எதிர்காலம், இங்குள்ள
பிஞ்சுகள், குஞ்சுகள், நாகரிகம் எல்லாம் உன் கையில். உன் கலை மாயா ஜாலங்களைச் செய்யும் சக்தி மிகுந்தது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கண்மூடித்தனமாகக் கலையைத் தொழில் ஆக்கினால் அது உவ்வா உவ்வா உவ்வா தான். 


ச.கண்மணி கணேசன்              
                    

No comments: