வெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
சுவிஸ் தூதரக ஊழியர் கைது
சுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்!
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதி!
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படுவது புனையப்பட்ட கதை ; தூதரகத்தின் நடவடிக்கையில் தவறில்லை - தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
சுவிஸ் தூதரக அதிகாரி விடயத்தில் நானே பாதிக்கப்பட்டவன் - ஜனாதிபதி
காணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது ; குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம் - ஜனாதிபதி
இலங்கையிடம் சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கை!
சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு யாழில். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் விசாரணை
வடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்
செங்கலடி பிரதேச செயலாளரை விசாரணை செய்யக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர்!
வெள்ளை வேன் ; சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
16/12/2019 ராஜித சேனாரத்ன அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தன்னை வெள்ளை வேன் சாரதியாக அறிமுகப்படுத்திக் கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கிருலப்பனை - ஹேவ்லொக் வீதியில் உள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தலைமையகத்தில் ராஜித சேனாரத்ன தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தபோதே இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நன்றி வீரகேசரி
சுவிஸ் தூதரக ஊழியர் கைது
16/12/2019 கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் ஊழியர் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சுவிஸ் தூதரக அதிகாரி பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அங்கொட மனநல வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதன் பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சுவிஸ் தூதரக ஊழியருக்கு விளக்கமறியல்!

பொய்யான வாக்குமூலங்களை வழங்கியமைக்காக அவரை கைதுசெய்து நீதமன்றில் ஆஜர்படுத்துமாறு இன்று சட்ட மா அதிபர் சி.ஐ.டி. என்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.
இந் நிலையில் அவர் இன்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்பேதே நீதிவான் அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாக சுவிட்சர்லாந்து உறுதி!
16/12/2019 இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் (Hanspeter MOCK) இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

அண்மையில் ஜனாதிபதி பெற்றுக்கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அரசாங்கத்தின் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்த தூதுவர், “நான் அனைத்து இலங்கையர்களினதும் ஜனாதிபதி ஆவேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டமையை தான் மிகவும் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
இலங்கையுடனான தொடர்புகள் பலமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் பயனுள்ள வகையில் காணப்படுதல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மகிழ்ச்சியடைகின்றது.
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் சேவையாற்றும் உள்நாட்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட அலுவலர் ஒருவருடன் தொடர்புபட்ட சம்பவம் குறித்து கவனம் செலுத்திய சுவிஸ் தூதுவர், இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நோக்கமும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு இல்லை எனவும் வலியுறுத்தினார்.
“இரு நாடுகளின் நன்மைக்காகவும் நாம் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இந்த அசௌகரியமான நிலைமையிலிருந்து மீண்டு, ஏதேனும் தவறான அபிப்பிராயம் காணப்படின் அதனை நீக்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என சுவிஸ் தூதுவர் குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி,
கடத்தலுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டதொரு சம்பவமாகும் என்பது தற்போது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊபர் அறிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சீசீடிவி காட்சிகள் போன்ற மறுக்க முடியாத ஆதாரங்கள் இதனை உறுதி செய்கின்றன.
எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக ஏதேனும் தரப்பினரின் தேவைக்காக தூதரக அலுவலர் இவ்வாறு செயற்பட்டிருக்கக்கூடும். சம்பவத்துடன் தொடர்புடைய அலுவலர் ஏன் இவ்வாறு செயற்பட்டார் என்பது இன்னும் தெளிவாகவில்லை என குறித்த விசாரணை பற்றிய முன்னேற்றத்தினை தூதுவருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
குறித்த சம்பவம் பற்றி அறியக் கிடைத்தவுடன் சுவிட்சர்லாந்து தூதரகம் செயற்பட்ட விதம் தொடர்பில் தான் எவ்வித தவறையும் அவதானிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததோடு, அச்செயற்பாடு நியாயமானதாகும். தமது அலுவலகத்தில் பணிபுரியும் உறுப்பினர் ஒருவர் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும்போது தூதரகம் அதில் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகும்.
குறித்த விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுவிஸ் தூதுவரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி , இதனூடாகவே உண்மை வெளிப்படுமெனத் தெரிவித்தார்.
தூதரகத்தின் முதற் செயலளார் சிதோனியா கெப்ரியல்லும் (Sidonia Gabriel) இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படுவது புனையப்பட்ட கதை ; தூதரகத்தின் நடவடிக்கையில் தவறில்லை - தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு
17/12/2019 “சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டதொரு சம்பவம் என்பது தற்போது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக்கிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ வை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி பெற்றுக்கொண்ட தேர்தல் வெற்றி தொடர்பில் தனதும் தமது அரசாங்கத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை இதன்போது தெரிவித்த தூதுவர், “நான் அனைத்து இலங்கையர்களினதும் ஜனாதிபதி ஆவேன்” என ஜனாதிபதி குறிப்பிட்டமையை தான் மிகவும் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
“இலங்கையுடனான தொடர்புகள் பலமாகவும் பரஸ்பர புரிந்துணர்வுடனும் பயனுள்ள வகையில் காணப்படுதல் தொடர்பில் சுவிட்சர்லாந்து மகிழ்ச்சியடைகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் சேவையாற்றும் உள்நாட்டில் இணைத்துக்கொள்ளப்பட்ட அலுவலர் ஒருவருடன் தொடர்புபட்ட சம்பவம் குறித்து ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்த சுவிஸ் தூதுவர், இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுத்துவதற்கான எந்தவொரு நோக்கமும் சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு இல்லை என வலியுறுத்தினார்.
“இரு நாடுகளின் நன்மைக்காகவும் நாம் இணைந்து செயற்படுவதற்கு எதிர்பார்க்கின்றோம். அத்தோடு இந்த அசௌகரியமான நிலைமையிலிருந்து மீண்டு, ஏதேனும் தவறான அபிப்பிராயம் காணப்படின் அதனை நீக்கிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்” என சுவிஸ் தூதுவர் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி “கடத்தலுடன் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் புனையப்பட்டதொரு சம்பவமாகும் என்பது தற்போது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊபர் அறிக்கைகள், தொலைபேசி உரையாடல்கள் மற்றும் சீசீரிவி காட்சிகள் போன்ற மறுக்க முடியாத ஆதாரங்கள் இதனை உறுதி செய்கின்றன. எனக்கும் எனது அரசாங்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக ஏதேனும் தரப்பினரின் தேவைக்காக தூதரக அலுவலர் இவ்வாறு செயற்பட்டிருக்கக்கூடும். சம்பவத்துடன் தொடர்புடைய அலுவலர் ஏன் இவ்வாறு செயற்பட்டார் என்பது இன்னும் தெளிவாகவில்லை” என குறித்த விசாரணை பற்றிய முன்னேற்றத்தினை தூதுவருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
சுவிட்சர்லாந்து தூதரகம் செயற்பட்ட விதம் தொடர்பில் தான் எவ்வித தவறையும் அவதானிக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்ததோடு, அச்செயற்பாடு நியாயமானதாகும் என்றும் தமது அலுவலகத்தில் பணிபுரியும் உறுப்பினர் ஒருவர் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் போது தூதரகம் அதில் தலையீடு செய்ய வேண்டியது அவசியமாகும். என்று ம் குறிப்பிட்டார்.
மேலும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சுவிஸ் தூதுவரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி இதனூ டாகவே உண்மை வெளிப்படும் எனவும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
சுவிஸ் தூதரக அதிகாரி விடயத்தில் நானே பாதிக்கப்பட்டவன் - ஜனாதிபதி
17/12/2019 சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவராக நானே இருக்கின்றேன். இதுவரை நடைபெற்ற விசாரணை களிலிருந்து அவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்த விடயம்தொடர்பில் சுவிஸ் தூதுவரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்.விசாரணை க்கு குறித்த அதிகாரியை பூரணமாக ஒத்துழைக்குமாறு வலியுறுத்தியிருக்கின்றேன் என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைககளின் ஆசிரியர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவனாக நானே இருக்கின்றேன். இதுவரை நடைபெற்ற விசாரணைகளில் அவ்வாறான ஒரு சம்பவம் நடைபெறவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியான சாட்சிகள், சிசி.ரி.வி. , தொலைபேசி, ஊடான சாட்சியங்கள் ஊபர் சாரதியின் சாட்சியம் அந்த சாரதி தெரிவித்த குறித்த அதிகாரி சென்ற வீட்டரது சாட்சியங்கள் என்பவற்றை வைத்துப் பார்க்கும் போது சம்பவம் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. சுவிஸ் தூதரகமானது பொறுப்புடன் செயற்பட்டிருக்கவேண்டும். சுவிஸ் தூதுவர் பிரதமரை சந்தித்து சம்பவம் தொடர்பில் விசாரணை வேண்டும் என்று கோரியிருந்தார். இதற்கிணங்க உயர்மட்ட விசாரணை இடம்பெற்றது. விசாரணையின் பின் அவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என்பது உறுதியாகியிருக்கின்றது.
இன்றைய தினம் சுவிஸ் தூதுவரை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடினேன் விசாரணைக்கு ஊழியரை ஒத்துழைக்குமாறு தெரிவிக்கும்படி அவரிடம் நான் கேட்டுக்கொண்டேன்.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சுவிஸ் தூதரகத்தை குற்றம்சாட்ட முடியாது. தூதரகத்தின் ஊழியர் ஒருவருக்கு சம்பவம் நடந்திருந்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டியது தூதரகத்தின் கடமையாகும். இதற்கிணங்கவே தூதரகம் செயற்பட்டிருந்தது. நாமும் எமது கடமையினை செய்திருந்தோம்.
இந்த விடயத்தில் நான்தான் பாதிக்கப்பட்டவனாவேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் கண்களை கட்டி துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. முறைப்பாடு தெரிவிக்கப்படுவதற்கு முன்னரே நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் கடத்தல் குறித்து செய்தி வெளியாகியிருந்தது. முன்னாள் அமைச்சர்களும் இதற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். சஜித் பிரேமதாஸ கூட கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு குறித்த ஊழியர் ஆதரவாக இல்லை. விசாரணைகளின்போதும் சுகவீனமாக உள்ளதாகவும் வேறு காரணங்களையும் அவர் கூறி வருகின்றார். இதுவரையான தொழில்நுட்ப ரீதியான சாட்சியங்களின் அடிப்படையில் இவ்வாறான சம்பவம் இடம்பெறவில்லை என்றே தெரிகின்றது. ஏன் இவ்வாறான நடவடிக்கையில் அந்த ஊழியர் ஈடுபட்டார் என்பது குறித்து ஆராயவேண்டியுள்ளது. சரியான முழுமையான விசாரணை முடிவுக்கு வந்த பின்னரே இது குறித்து தெரியவரும்.
கேள்வி: தேர்தல் பிரசாரத்தின்போது வெள்ளைவான் விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன செய்தியாளர் மாநாட்டில் குற்றம் சுமத்தியிருந்தார். அந்த குற்றச்சாட்டுக்கும் சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்திற்குமிடையில் தொடர்பு இருக்குமா?
பதில்: முதலைக்கதைக்கும் இந்த சம்பநத்திற்குமிடையில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன அரசியல்வாதி, அரசியலில் பொய் சொல்வது என்பது வழமையான செயற்பாடு. இந்த கலாசாரத்தை மாற்றியமைக்கவே நான் விரும்புகின்றேன். தேர்தல் பிரசாரக்காலத்தில் இவர்கள் மேற்கொண்ட இத்தகைய பொய்ப்பிரசாரங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வெள்ளைவேன் கடத்தல் தொடர்பான செய்தியாளர் மாநாடு இடம்பெற்றதையடுத்து எனக்கு 2 இலட்சம் வாக்குகள் வரையில் கூடுதலாக கிடைத்தது. இதேபோன்று நாலு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்க முடியும் .
தமிழ், முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமான வாக்குகள் கிடைத்திருக்கும். அழுத்தங்கள் காரணமாகவே தமிழ், முஸ்லிம் மக்கள் இவ்வாறன தீர்மானத்தை எடுத்திருந்தார்கள். சிங்கள மக்கள் அரசியல்வாதிகளின் பொய் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவற்றை நிராகரித்து வாக்களித்துள்ளார்கள். நன்றி வீரகேசரி
காணாமல் போனவர்களை மீளக் கொண்டுவர முடியாது ; குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம் - ஜனாதிபதி
17/12/2019 யுத்த களத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுவர். இராணுவத்தில் 6000 பேர் வரையில் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இதேபோன்றே புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்கலாம். காணாமல்போனோர் விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டமையினாலேயே தீர்வு காணமுடியாதுள்ளது.
மரணச்சான்றிதழ்களை வழங்குவதுடன் அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்க முடியும். இதனைவிட அவர்களை மீள கொண்டுவர முடியாது என்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயம் தொடர்பில் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் பரிசீலிக்க குழுவொன்று அமைக்கப்படும். இதேபோன்றே அம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
கேள்வி: வடக்கு, கிழக்கில் காணாமல் போனோரது உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெனிவாவிலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. இந்த காணாமல்போனோர் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்போகிறீர்கள்?
பதில்: காணாமல்போனோர் பிரச்சினையானது அரசியல்மயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால்தான் இதற்கான தீர்வு இழுபட்டு செல்கின்றது. எமது இராணுவத்தினரிடம் 5000பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். யுத்தத்திற்கு சென்றவர்கள். மீளத்திரும்பி வரவில்லை. யுத்த பூமிக்கு செல்பவர்கள் உயிரிழக்கின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படமுடியாவிடின் அவர்கள் காணாமல்போனவர்களாகவே கருதப்படுகின்றனர். யுத்தத்தின்போது புலிகள் மற்றும் இராணுவத்தினருக்கு இவ்வாறு நடந்துள்ளது. யுத்தத்தின்போது 6000 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்க்கப்படவில்லை. யுத்த களத்தில் சடலங்கை மீட்க முடியாத சூழல் ஏற்படும். அது தொடர்பான அனுபவம் எனக்கு இருக்கிறது.
ஆனால் சடலங்கள் மீட்கப்படாவிட்டால் தனது பிள்ளைகளோ கணவரோ இறந்ததை அந்த குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எமது இராணுவத்தரப்பிலேயே உடல்கள் மீட்கப்படாதவர்களது உறவினர்கள் பலர் சாத்திரக்காரர்கள் குறித்த நபர் உயிருடன் இருப்பதாக கூறுவதாக கூறுவார்கள். முகமாலை யுத்தத்தின்போது 129 இராணுவத்தினரின் சடலங்கள் மீட்கப்படவில்லை. ஒரு மாதத்திற்குப் பின்னர் செஞ்சிலுவைச் சங்கம் சிதைந்தநிலையிலான சடலங்களை எம்மிடம் கொண்டுவந்து ஒப்படைக்கப்பார்த்தது. ஆனால் அடையாளம் தெரியாத அந்த சடலங்களை நாங்கள் பொறுப்பேற்கவில்லை. ஏனெனில் அடையாளங் காணாத சடலங்களை நாம் எப்படி உறவினர்களிடம் கையளிப்பது.
எமது ஆட்சியின் போத நிலத்தடியில் சிறைகூடங்கள் உள்ளதாகவும் அதற்குள் காணாமல்போனவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.ஆனால் கடந்த அரசாங்கத்தில் அந்த குற்றச்சாட்டுக்கள் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது. காணாமல்போனோர் உயிரிழந்துள்ளதே உண்மையாகும். நாம் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது.
காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாது. இந்த விடயம் தொடர்பில் இவ்வாறான தீர்வையே காணமுடியும்.
கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்குவேன் என்று தேர்தல் பிரசாரத்தின்போது உறுதி கூறியிருந்தீர்கள். அதற்கான நடவடிக்கை எடுப்பீர்களா?
பதில்: எல்லா விடயத்தையும் ஒன்றாக செய்ய முடியாது. தற்போத நாம் முதல்கட்டமாக வரிச்சலுகைகளை வழங்கியுள்ளோம். நுகர்வோருக்கு இதன்மூலம் குறைந்த விலைகளில் பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் வரிகள் குறைக்கப்பட்ட போதிலும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏன் விலைகள் குறைக்கப்படவில்லை என்று ஊடகங்களும் கேள்வி எழுப்ப வேண்டும். இந்த விடயம் குறித்து நிதி அமைச்சின் அதிகாரிகளுடனும் நான் கலந்துரையாடியுள்ளேன்.
இதேபோன்று ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிபுணத்துவம் இல்லாத 1 இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். க.பொ.த. சாதாரண தரம் சித்தி பெறாதவர்களுக்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கும் இத்தகைய தொழில்களை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏழ்மை காரணமாக கல்வி கற்க முடியாத நிலை, சுயதொழில்களை செய்ய முடியாத நிலை, விவசாயம் செய்ய முடியாத நிலை இவ்வாறு பல்வேறு தரப்பினரும் உள்ளனர். எனவே இத்தகையவர்களுக்கு நிபுணத்துவம் இல்லாத வேலைகளை வழங்குவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.
பட்டதாரிகள் நியமன விடயத்திலும் சீரான நடைமுறை கையாளப்படவேண்டியுள்ளது.
கேள்வி: மிலேனியம் சவால் ஒப்பந்தம் தொடர்பில் எத்தகைய முடிவினை எடுக்கப்போகிறீர்கள்?
பதில்: மிலேனியம் சவால் ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் பரிசீலனை செய்யவேண்டும். அதில் என்ன விடயங்கள் அடங்கியிருக்கின்றது. அதனால் நாட்டுக்கு ஏற்படும் நன்மை என்ன? தீமை என்ன? என்பது குறித்து குழுவொன்றினை அமைத்து ஆராயவுள்ளோம்.
கேள்வி: புதிய ஆண்டு பிறக்கப்போகின்றது. புதிய ஆண்டில் உங்களுக்குள்ள சவால் என்று எதனைப் பார்க்கின்றீர்கள்?
பதில்: நாம் உறுதியளித்த வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றவேண்டும். அதுவே எமக்குள்ள சவாலாகும். இந்த வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அவசியமாகும். யுத்தத்தை நிறைவு செய்வதற்கு அனைவரும் ஒத்தழைத்தது போல் இதற்கும் ஒத்துழைக்கவேண்டும்.
கேள்வி: பாராளுமன்றம் 3ஆம் திகதிகூடவுள்ளது. அன்றைய தினம் உங்களது அக்ராசன உரையை அடுத்து மீண்டும் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கம் எண்ணம் இருப்பதாக கூறப்படுகின்றது. அது குறித்த உங்களின் நிலைப்பாடு என்ன? பாராளுமன்ற தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவீர்களா?
பதில்: பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்துவேன். அதன் பின்னர் மாகாணசபை தேர்தலையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: அம்பாந்தோட்டை துறைமுக குத்தகை விவகாரத்தில் மாற்றங்களை செய்வீர்களா?
பதில்: இந்த விடயம் தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளது. கட்சியாக நாம் இந்த விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். பாதுகாப்பு சம்பந்தமாக நான் கூடிய அக்கறை செலுத்துகின்றேன். அனைத்து துறைமுகங்களும் நிர்வாகமும் அரசாங்கத்திடம் இருக்கவேண்டும் என்றுதான் நான் எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி: பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியின் சார்பில் எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?
பதில்: பொதுஜன பெரமுனவின் உறுப்பினரானபடியால்தான் நான் அந்தக்கட்சியில் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன். பாராளுமன்றத் தேர்தலின்போது கூட்டணியாக போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது. எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. பாராளுமன்றத் தேர்தலின்போது அரசியல் அனுபவமும் பெற்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியிலான தீர்மானங்களை எடுப்பார். அதேபோன்றே செயற்றிறன் மிக்க செயற்பாட்டாளரான பஷில் ராஜபக்ஷ தேர்தலுக்கான செயற்பாடுகளை மேற்கொள்வார். நான் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன்.
தேர்தலில் ஒருவாக்கினையேனும் கூட பெறக்கூடிய சின்னத்தை தெரிவு செய்து நாம் போட்டியிடுவோம்.
கேள்வி: 19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றத்தை கொண்டுவருவீர்களா?
பதில்: ஆம் அந்த சட்டத்தை மாற்றியமைக்கவேண்டும். அதில் தெளிவற்றத்தன்மை காணப்படுகின்றது. கடந்த அரசாங்கத்திற்குள் இந்த தெளிவற்றத்தன்மையால் பிணக்கு ஏற்பட்டது. யாரிடம் அதிகாரம் உள்ளது என்ற விடயத்தில் தெளிவற்றத் தன்மை காணப்படுகின்றது. 19ஆவது திருத்த சட்டத்தில் ஒரு விடயத்தையேனும் நல்ல விடயமாக நான் பார்க்கவில்லை. எனவே இதனை திருத்தி அமைக்கவேண்டும். நன்றி வீரகேசரி
இலங்கையிடம் சுவிஸ் தூதரகம் விடுத்த கோரிக்கை!
17/12/2019 இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரக பெண் ஊழியர் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கும் போது நாட்டின் நீதி மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைய, குறித்த பெண் ஊழியரின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அதனை உறுதி செய்வது இந்நாட்டு நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என்று சுவிஸ் வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் தூதரக பெண் ஊழியர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு வெளிவிவகார திணைக்களம் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியைத் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவது தாம் கண்டிக்கத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது நாட்டின் நீதி மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைய, குறித்த அதிகாரியின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அதனை உறுதி செய்வது இந்நாட்டு நீதிமன்றத்தின் பொறுப்பாகும்.
குறித்த தூதரக அதிகாரி சார்பில் சுவிஸ் தூதரகம் தொடர்ந்தும் முன்னிற்கும். அவருக்காக முடிந்தவரை அனைத்து நடவடிக்கைகளையும் சுவிஸ் தூதரகம் முன்னெடுக்கும்.
இலங்கை ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நாடு என நற்பெயரைக் கொண்டுள்ள இந்தத் தருணத்தில், தூதரக அதிகாரியின் உடல் நல பாதிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து மத்தியஸ்த மற்றும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை சுவிஸ் தூதரகம் எதிர்ப்பார்க்கின்றது.
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் திங்கட்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து தூதரக அதிகாரியின் விடயம் குறித்து பேசியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி வீரகேசரி
சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
17/12/2019 சித்தாண்டியின் சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்ட விரோத மண் அகழ்வினால் மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர் நோக்குக்கின்றனர்.

பாதை மோசமாக பாதிக்கப்படுத்தல், ஆறு அகலமாக்கப்படுத்தல் , வெள்ள நீரினால் மக்கள் உயிர் ஆபத்தினை எதிர் கொள்ளுதல், உள்ளக மண் வளத்தினை உள்ளக தேவைக்குப் பயன்படுத்த முடியாதென்று பல விதமான சவால்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

இதனை எதிர்த்து பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமையில் இன்று விவசாயிகள் , பொதுமக்கள் என்று பலர் கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதன் போது மக்களால் மகஜர்கள் கையளிக்கப்பட்டன. நன்றி வீரகேசரி
ஜனாதிபதியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்
17/12/2019 ஜனாதிபதி செயலகத்தில் நேற்று தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ்களை வழங்குவதுடன் குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து சிந்திக்க முடியும். அவர்களை மீளக்கொண்டுவர முடியாதென தெரிவித்தார்
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்பாட்டம் இன்று மாலை 4 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1032 நாட்களாக போராடிவரும் உறவினர்களாலே இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது இது ஒரு பெளத்த சிங்கள நாடு என்ற கோசம் தான் இன்று இலங்கையில் மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்திருக்கிறது. எனவே கைது செய்து தண்டிக்கப்பட வேண்டியவர் சீ.வி.விக்னேஸ்வரன் ஐயா அல்ல. இனங்களுக்கிடையே உள்ள சகஜ வாழ்வைச் சிதைத்து, நல்லிணக்கத்தை குழப்பி, நாட்டுக்குள் மீண்டும் ஒரு இனக்கலவரத்தை நடத்தி முடிக்க அழைப்பு விடும் வியத்மக, எலிய, சிங்கள லே போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களையே கைது செய்ய வேண்டும்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் எமக்கு புலப்படுத்தும் உண்மைகள் என்னவென்றால், நாங்கள் ஒற்றையாட்சிக்குள் இவர்களோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழ்த் தேசமாக சுயநிர்ணய உரிமையோடு பிரிந்து செல்வது தான் தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தர பாதுகாப்பையும், இனப்பிரச்சினைக்கு தீர்வையும் தரும் என்பதேயாகும் என்ற பதாகையை தாங்கியவாறும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நன்றி வீரகேசரி
சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு யாழில். எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
18/12/2019 வடக்கில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில். இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிதாகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஐபக்ஷ மணல் வழித்தட அனுமதியை இரத்துச் செய்துள்ளதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் தீவகம், அரியாலை, வடமராட்சி கிழக்கு உட்பட பல இடங்களிலும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் அதிகரித்துள்ளன.

அதேபோன்று வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களிலும் இந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகப் பல தரப்பினர்களும் தொடர்ச்சியாகக் குற்றம் சுமத்தி வருவதுடன் இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி வருகின்றனர்.


இந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உரிய நடவடிக்கை களை எடுக்க வலியுறுத்தியும் பல தரப்புக்கள் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்தனர். நன்றி வீரகேசரி
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியிடம் இன்றும் விசாரணை
19/12/2019 சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா பனிஸ்ட பிரான்சிஸின் தேசிய மனநல நிறுவனத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அவர் தொடர்பாக விசேட மனநல வைத்திய நிபுணர்கள் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய தேசிய மனநல நிறுவனத்திற்கு இன்று வியாழக்கிழமை மீண்டும் அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள கானியா பனிஸ்ட பிரான்சிஸின், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த விசாரணைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய கடந்த திங்கட்கிழமை நான்காவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னி லையான குறித்த பெண் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விசேட வைத்திய நிபுணரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அங்கிருந்த சில அதிகாரிகளினால் அவர் தேசிய மனநல நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுமார் 5 மணிநேரத்தின் பின்னர், அங்கிருந்து மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த பெண் அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை முன்வைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
வடக்கு ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதி இணக்கம்

இதற்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனிடம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார். இருப்பினும், அவர் அதனை மறுத்துவிட்டார். நன்றி வீரகேசரி
19/12/2019 மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் அவர்களின் ஊடக அடக்குமுறைக்கு எதிராக இன்று மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை நிறுத்து, வெளியேறு வெளியேறு ஊடக சுதந்திரத்தை மிதிக்கும் அரச அதிகாரியே வெளியேறு, அரச அதிகாரிகளே ஊடகவியலாளர்களை அடக்க நினைக்காதே போன்ற பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் ஊடகவியலாளரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளருமான செ.நிலாந்தன் மீது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முறைப்பாடு செய்ததற்கு எதிராகவும் பிரதேச செயலாளர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களை அரசாங்க விசாரணை செய்யவேண்டும் எனக் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடுசெய்திருந்தது குறித்த ஆர்ப்பாட்டத்தில் மதகுருமார், சிவில் சமூக அமைப்புகள், பொதுமக்கள் பெண்கள் அமைப்புகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரயநேத்திரன் , மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன கட்சியின் அமைப்பாளர் ப.சந்திரகுமார் மற்றும் பொது மக்கள்,எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரயநேத்திரன் , மட்டக்களப்பு மாவட்ட பொதுஜன பெரமுன அமைப்பாளர் ப.சந்திரகுமார் ஆகியோரிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

நன்றி வீரகேசரி
அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர்!
(எம்.எப்.எம்.பஸீர்)
20/12/2019 சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

சி.ஐ.டி.யின் பணிப்பாளராக இருந்த போது, தன்னை காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக பதவி நிலையில் கீழ் இறக்கியமை ஊடாக தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் அதற்கு ஒரு கோடி ரூபா நட்ட ஈட்டைப் பெற்றுத்தருமாரும் ஷானி அபேசேகர குறித்த மனுவூடாக கோரியுள்ளார்.
இதனைவிட, தன்னை பதவி கீழிறக்கல் செய்த உத்தரவை இரத்து செய்யுமாறும் மீளவும் தன்னை சி.ஐ.டி. பணிப்பாளர் பதவியில் அமர்த்துமாறு உத்தரவிடுமாறும் அந்த மனு ஊடாக கோரப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment