தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்தில் முரண்படும் இலங்கை அரசினதும் சுவிஸர்லாந்தினதும் நிலைப்பாடுகள்


19/12/2019  கடந்த மாதம் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் உள்நாட்டு பெண் ஊழியர், கடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற விவகாரத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்களையும் சுயாதீனமான பொலிஸ் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படுகின்றவற்றையும் ஏற்றுக் கொண்டு செயற்படுவதற்கு இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. 
இந்த விவகாரத்தை அரசியல் மயப்படுத்துவது உண்மை கண்டறியப்படுவதைத் தடுக்கும் என்பதால் அதை அரசியல் மயப்படுத்தக்கூடாது என்பதில் ஜனாதிபதி மிகுந்த அக்கறை காட்டுகிறார்.
அரசியல் மயப்படுத்துவது அரசாங்கத்திற்கும் , இலங்கைகக்கும் சர்வதேச ரீதியில் அபகரீத்தியை ஏற்படுத்தும் என்று ஒரு வட்டாரம் கூறியது.
இந்த விவகாரம் தொடர்பில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு சாதகமான முறையில் ஜனாதிபதியானால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக ஒரு சிறு சாடைக்குறிப்பேனும் வெளிவருமானால் அதை இலங்கையின் எதிரிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்று வட்டாரங்கள் கூறின. 
ஆனால் சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் 2020 மார்ச்சில் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் உறுப்பு நாடுகளினால் அல்லது இலங்கையை சாடுவதற்கு சிறு துரும்பையும் பயன்படுத்தத் தவறக் கூடாது என்ற எண்ணம் கொண்ட புலம் பெயர் தமிழ் சமூகத்தவர்கள் மத்தியிலுள்ள அமைப்புக்களினால் கிளப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண்மணியான கார்னியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ் ( முன்னர் சியலதா பெரேரா ) கைது செய்யப்பட்டு டிசம்பர் 30 ஆம் திகதி வரை கொழும்பு நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தினால் (சீ.ஐ.டி) பல நாட்களாக மணித்தியாலக் கணக்காகத் துருவித்துருவி விசாரிக்கப்பட்டதை தொடர்ந்தே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த பெண்மணி தான் முன்னர் கூறிய விடயங்களுக்கு முரண்பாடானவற்றை பிறகு கூறுவதாகவும் சம்பவம் தொடர்பில் சீ.ஐ.டி.யினால் பெறப்பட்ட துல்லியமான சான்றுகள் அவர் வெளியிட்ட தகவல்களுடன் ஒத்திசைவாக அமையவில்லை என்றும் பூர்வாங்க விசாரணைகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
பெண்மணியை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் கடத்தல் குற்றச்சாட்டை அவர் முன்வைத்ததற்கான உண்மையான நோக்கத்தை அறிந்து கொள்ள விரும்புகின்றனர். 
இன்னமும் அம்பலத்துக்கு வராத ஒரு இலக்குடன் செயற்படுகின்ற ஒரு சதிகாரக்குழுவின் செயற்பாடுகளின் ஓர் அங்கமாகத்தான் அவர் இவ்வாறு நடந்து கொண்டாரா என்பதையும் அறிய பொலிஸார் அக்கறை கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் அணுகுமுறையைக் கண்டிக்கும் சுவிஸ் கடந்த திங்கட்கிழமை இந்த கடத்தல் நாடகம் புதியதொரு திருப்பத்தை எடுத்தது. இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதற்கு கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் முழுமையாக இணங்கியதாக ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த போதிலும், கூட, சுவிஸ் வெளிவிகார அமைச்சு அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் கடத்தல் சம்பவத்தில் இலங்கை அரசாங்கத்தின் வாதங்களை நிராகரித்திருக்கிறது.
இலங்கைக்கு ஊறு விளைவிக்கும் எந்தவொரு நோக்கத்தையும் சுவிட்சர்லாந்து கொண்டிருக்கவில்லை என்று தூதுவர் மொக் கூறியதாக ஜனாதிபதி செயலக ஊடகப்பிரிவு தெரிவித்தது. ' இரு நாடுகளினதும் நலன்களுக்காக நாம் இணைந்து பணியாற்ற விரும்புகின்றோம். தற்போதைய பதற்ற சூழ்நிலையை வெற்றிகொண்டு தப்பபிப்பிராயங்களை அகற்ற வேண்டிய தேவையும் எமக்கிருக்கிறது." என்று சுவிஸ் தூதுவர் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவிடம் கூறியிருக்கிறார்.
தூதுவரின் கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி கோத்தாபய அந்த சம்பவம் தொடர்பில் இது வரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றத்தைத் தூதுவருக்கு விளக்கிக் கூறினார் என்று தெரிவித்திருக்கும் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிக்கை , ' இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற கடத்தல் சம்பவம் முற்றுமுழுதாக ஒரு திரிபுபடுத்தல் நாடகம் என்பது இப்போது மிகவும் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. ஊபர் பதிவுகள் , தொலைபேசி அழைப்புக்கள் , சி.சி.டி.வி கமராவில் பதிவான காட்சிகள் போன்ற மறுதலிக்க முடியாத  சான்றுகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன. எனக்கும் எமது அரசாங்கத்திற்கும் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு தீய நோக்கம் கொண்ட சில சக்திகளினால் சுவிஸ் தூதரக ஊழியர் நிர்பந்திக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த பெண் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்பது தெளிவாக தெரியவில்லை. " என்று ஜனாதிபதி தூதுவரிடம் கூறினார்.
சம்பவம் குறித்து முதன்முதல் தெரிவிக்கப்பட்ட போது சுவிஸ் தூதரகம் ஆரம்பத்தில் வெளிக்காட்டிய பிரதிபலிப்பில் தான் எந்தத் தவறையும் காணவில்லை என்று கூறிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ, ' அது நியாயமானதே. தனது ஊழியர்களில் ஒருவர் நெருக்கடிக்கு உள்ளானால் தூதரகம் தலையிட வேண்டும். " என்று சொன்னார். சம்பவம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொணர்ந்து , அதற்கு ஒரு முடிவைக் காணுவதற்கு அரசாங்கம் நடத்தும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு தூதுவரிடம் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
ஆனால் சுவிஸ் வெளியுறவு அமைச்சு இலங்கைப் பொலிஸையும் நீதித்துறையையும் கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இலங்கை சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்திருப்பதாகவும் , ஒரு தோல்வி கண்ட அரசாக சர்வதேச ரீதியில் முத்திரை குத்தப்படக் கூடிய ஆபத்து இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
திங்களன்று சுவிஸ் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அந்த அறிக்கையின் விபரம் வருமாறு  தவறான வாக்கு மூலத்தைக் கொடுத்தாகக் கூறி கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியரொருவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த தீர்மானம் குறித்து சுவிஸ் வெளிவிவகார அமைச்சு விசனமடைந்திருக்கிறது.
தூதரகத்தின் ஊழியர்களின் தனிப்பட்ட உரிமைகள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுவதையும் மேற்கொண்டு முன்னெடுக்கப்படும் விசாரணைச் செயன்முறைகளில் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நியமங்கள் உறுதியாக பின்பற்றப்படுவதையும் இலங்கை நீதித்துறை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என்று வெளியுறவு அமைச்சு கூறுகிறது. தொழில் கொள்வோர் என்ற முறையில் சுவிஸ் வெளியுறவு அமைச்சும் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகமும் அவற்றின் பொறுப்புக்களை தொடர்ந்து நிறைவேற்றும். அவை ஊழியர்களுக்கு சாத்தியமான அளவுக்கு ஆதரவளிக்கும்.
சுவிஸ் தூதரகத்தின் உள்நாட்டு ஊழியர் ஒருவர் 25 நவம்பர் 2019 அன்று கொழும்பில் அவரது விருப்பத்துக்கு எதிராக தடுத்து வைக்கப்பட்டு தூதரக உள்தகவல்களை வெளியிடுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சம்பந்தப்பட்ட பெண் ஊழியரும் சுவிஸ் தூதரகமும் இலங்கை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்தனர்.
சட்டத்தின் ஆட்சியை மதித்து செயற்பட வேண்டும் என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு திரும்ப திரும்ப வேண்டுகோள் விடுத்திருக்கிறது. குறிப்பாக அந்த பெண் ஊழியரின் கடுமையான உடல் நலக் குறைவை கணக்கில் எடுக்காது மூன்று நாட்கள் 30 மணித்தியாலயங்கள் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை சுவிஸ் வெளிவிவகார அமைச்சு கண்டிக்கிறது. ஊழியர்களை கைது செய்த பிறகு இலங்கை நீதித்துறை அதன் சொந்த சட்டங்களையும் சர்வதேச நியமங்களையும் உறுதியாக பின்பற்றி செயன்முறைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஊழியர்களின் தனிப்பட்ட உரிமைகளை முன்னரை விட சிறப்பாக பாதுகாக்க வேண்டும் என்றும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சு எதிர்பார்க்கிறது.
பிரயோகிக்கப்படக் கூடிய சட்டத்துக்கு இணங்கவும் ஊழியரின் உடல் நிலையை கருத்தில் எடுத்தும் இலங்கை அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு வேண்டுகிறது. மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டிய இந்த விவகாரத்தில் ஒரு அரசியலமைப்பு அடிப்படையிலான அரசு என்ற வகையில் இலங்கையின் மதிப்பும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று சுவிஸ் வலியுறுத்துகிறது. கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகமும் வெளியுறவு அமைச்சும் அதன் ஊழியர்களுக்கு சாத்தியமானளவிற்கு தொடர்ந்து ஆதரவு தரும்.
பாதுகாப்புடன் தொடர்புபட்ட இந்த சம்பவத்தின் விளைவான சர்ச்சையை ஆக்க பூர்வமான முறையில் இருதரப்பிற்கும் பாதகம் இல்லாத வகையில் இலங்கை அதிகாரிகள் தீர்த்துக் கொள்ள வேண்டு;ம் என்று சுவிஸ் வெளிவிவகார அமைச்சு கூறியிருக்கிறது. 16 டிசம்பர் 2019 அன்று இலங்கை ஜனாதிபதி கோதாபய ராஜபகஷவுடனான பேச்சுவார்த்தையின் போது கொழும்பிலுள்ள சுவிஸ் தூதுவர் இதை வலியுறுத்தி கூறியிருக்கிறார்.
எதிர்கால நிலைவரம் சுவிஸ் வெளியுறவு அமைச்சின் பிடிவாதமானதும் ஆக்ரோஷமானதுமான நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது தூதரக பெண் ஊழியர் விவகாரத்தில் இலங்கை பொலிஸாரும் நீதிமன்றமும் கூறுவதை சுவிட்சர்லாந்து ஏற்றுக் கொள்வதற்கான சாத்தியம் இல்லை. இலங்கையையும் அதன் தலைவர் கோதாபய ராஜபக்ஷவையும் ஜெனீவாவில் கண்டிப்பதற்கு ஏனைய ஐரோப்பிய நாடுகளினதும் வட அமெரிக்க நாடுகளினதும் ஆதரவை திரட்டும்
முயற்சியில் சுவிட்சர்லாந்து இறங்கும் சாத்தியமுள்ளது. குறைந்தபட்சம் 2020 ஏப்ரலில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் பாராளுமன்ற தேர்தல்வரையிலாவது ஐரோப்பாவில் இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை தொடர்வதில் சுவிஸ் அக்கறை காட்டலாம். சீனாவிற்கு ஆதரவானதாகவும் மேற்கு நாடுகளுக்கு எதிரானதாகவும் நம்பப்படுகின்ற ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பதே அதன் இலக்காக இருக்கலாம்.
ஆனால் விசாரணைகளும் நீதிமன்ற தீர்ப்புக்களும் பக்க சார்ப்பற்ற முறையிலும் முற்றிலும் துறைசார் நிபுணத்துவம் அடிப்படையிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமாக இருந்தால் சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தல் விவகாரத்தை சர்வதேச ரீதியில் பெரிதுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே இருக்கும். அதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி ராஜபக்ஷ பொலிஸாரின் விசாரணைகளுக்கும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் ஏற்ற முறையில் செயற்பட தீர்மானித்திருக்கின்றார்.
( பி.கே.பாலச்சந்திரன் - நியுஸ் இன் ஏசியா ) - நன்றி வீரகேசரி 












No comments: