காலம் தோறும் மாறி வந்த பரத நடன மார்க்கமும் திவ்வியா சுஜேனின் பரத மார்க்கமும் - பாரதி மார்க்கமும் - பேராசிரியர் மௌனகுரு


அண்மைக்காலமாக முக நூலிலும் பத்திரிகைகளிலும் பரத அரங்கேற்றங்கள் பற்றிய செய்திகள் மிக அலங்காரமான புகைப்படங்களுடன் விளம்பரப்படுத்தப்படுகின்றன.  அதிலும் கொழும்பில் நடைபெறும் பரத நடன அரங்கேற்றங்கள் முக்கிய சில பத்திரிகைகளிள் பெரிய அழகிய புகைப் படங்களுடன் வெளியாகின்றன.
சில பத்திரிகைகளில்  அவை முழுப்பக்கத்தையே நிரப்பிகொண்டு உறுத்துகின்றன.
தரமில்லாத நடனங்களும்  அதை நிகழ்த்துவோரும்  ஊடக விளம்பரத்தால்  உயர்ந்த நடனங்களாகவும்  மிகச் சிறந்த நடன தாரகைகளாகவும் கட்டமைக்கப்படுகின்றனர்
ஊசியும் செம்பொனும் ஒப்பவே நோக்கும்
யோக நிலையான பற்றற்ற நிலையை இப்பத்திரிகைகள் அடைந்து விட்டனவோ  என்று எண்ணத் தோன்றுகிறது.
திறமையானவர்கள் இனம் காணப்படுவதில்லை.
ஆடுவோர் எல்லாம் நடனக் கலைஞர் ஆக்கப்பட்டு விடுகிறார்கள்.
தடி எடுத்தோரெல்லாம் தண்டல் காரர் ஆகிவிடுவது போல.
ஒரு பரத நடன விமர்சன மரபு எம்மிடமில்லை.
இதனால் ஆடும் பரத நடனங்கள் யாவும் அற்புதம் என்றும்
ஆடுவோர் அனைவரும் அற்புத நடன மணிகள் என்றும்
கூறும் நிலைக்கு அனைவரும் வந்து விடுகின்றனர்

பரத நடனம் தவிர வேறு ஏதும் ஆடற்கலைகள் தமிழரிடம் இல்லையோ என எண்ணும் அளவுக்கு நிறைய பரத அரங்கேற்றங்கள் நடைபெறுகின்றன.
எங்கு நோக்கினும் பரத அரங்கேற்றங்கள்.
அதன் தரதம்மியம் பற்றி யாரும் பேசுவது இல்லை.
எங்கு நோக்கினும் அரங்கேற்றம் நிகழ்வதற்கான காரணங்களும் உண்டு.
1.     பாடசாலை தொடக்கம் பல்கலைக்ழகம் வரை பரதம் கற்பிக்கப்ப்டுகிறது.
2.     ஒவ்வொரு நடன ஆசிரியரும் பரத கலாலயம் அமைத்து மாணவர்களுக்கு பரதம் கற்பிக்கின்றனர்.
     3.   மாணவர்களின் அரங்கேற்றம் மூலம் தம் இருப்பையும் திறனையும் போட்டி போட்டுகொண்டு வெளிப்படுத்த மிகவும் பாடு படுகின்றனர்.
 4.  அதிகாரமும் செல்வாக்கும் மிக்க பணக்காரப் பெற்றோர்கள் கிடைக்கும் நடன ஆசிரியர்கள் மிகுந்த பாக்கியம் செய்தவர்கள்.
5. பெற்றார் செலவில் தமது தயாரிப்புகளைக் காட்டிவிடுவர்.
6.  இதனைக்கும் மேலால் இது சிலருக்கு அதிக வருமானம் தரும் பெரும் புகழ்தரும் செயலாகவும் மாறிவிட் ட து.
இவற்றை விட,  பரத நடனத்தை அடியொற்றிய நாட்டிய நாடகங்களையும் அரங்கேற்றுகின்றனர்.
பெரும் பொருட் செலவுகளுடனும் கண்கவர் ஆடைகள் அலங்காரங்களுடனும்  முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஆர்ப்பாட்டமாக இவை நடை பெறுகின்றன.

குடும்ப விழாக்களாகவும்   வெறும் சடங்குகளாகவும் அமைந்து விடும் இவ்வரங்கேற்றங்களும் நாட்டிய நாடகங்களும் பெரும்பாலும்   சடங்குகளாகவும்  அரைத்த மாவையே மீண்டும் மீண்டும் அரைக்கும் பிரயத்தனங்களாகவும்  அலுப்பு தரும் நிகழ்வுகளாகவும்   அமைந்து விடுவது  ஒரு கலைச்சோகமே !
நடனம் என்பது ஓர் கலா அனுபவம்.  வெளியை தன் உடல் அசைவுகளாலும் ஆட்டங்களாலும் நிறைக்கும் அற்புத கலை இது.
தம் பாவங்களாலும் அபினயங்களாலும் கற்பனைகளாலும் சிறந்த ரசிகர்களை இன்னோர் உலகத்திற்கு இழுத்து செல்லும் கலை இது.  அந்த அனுபவத்தை இவற்றில் பெரும்பாலானவை தருவதேயில்லை.
ஒரு திருமணச் சடங்கு பார்க்கும் உணர்வுடன் அதனைப் பார்த்து திரும்புவதே இன்று வழமையாகிவிட்ட து.
இதன் நடுவே அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் பரதம் பயிறுவிக்கும் சில இளம் நாட்டிய ஆசிரியைகளையும் காண முடிகிறது.
அதில் சிலரிடம் புதியன புனையும் ஆற்றலும் துணிவும் காணப்படுவது மனதிற்கு ஆறுதலளிக்கும் ஒன்றாகும்.
அத்தகையோர்களுள் ஒருவரே திவ்வியா சுஜேன் அவர்கள்.
அபினயசேத்ரா எனும் கலை நிறுவனம் அமைத்து மாணவிகளுக்கு நடனம் சொல்லித் தருகிறார்.
ஒரு நாள் எனக்கு அவர் தொலைபேசியில் இந்த நடன அரங்கேற்றம் பற்றிக்கூறி அவசியம் வந்து பார்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.
கொழும்பில் நின்றால் வருவேன்     என்றேன்.   அச்சமயம் கொழும்பில்  நின்றேன் சென்றேன்.
பரத அரங்கேற்றத்தில் புதியன புகுத்தியுள்ளார்
திவ்யா.  இது  பரத மார்க்கம்தான்.  ஆனால் , அதனைப் பாரதி மார்க்கம் ஆக்கியுள்ளார்.  பரத அரங்கேற்றத்தில் புதியன புகுத்தியுள்ளார்  திவ்யா.
பரத மார்க்கம்தான்,  ஆனால் அதனைப் பாரதி மார்க்கம் என்கிறார்.  பாவிக்கப்பட்ட பாடல் முழுவதும் பாரதி பாடல்கள்
வாய்ப்பாட்டிசையை மிடற்றிசை எனவும்
மிருதங்க இசையை முழவிசை எனவும்
வயலின் இசையை நரம்பிசை எனவும் அழைப்பிதழில் பதிந்திருந்தார்.

அதுவும் புதிதே!
புதியன புனைவோரே கலைஞர்.
புதியன புனைவோர் மீது எனக்கு பெரு விருப்புண்டு.
.பாலமுரளியின் சீடர் குரலிசை தந்த வீரராகவன்,
டி,என் கிருஸ்ணாவின் சீடர் வயலின் இசைத்த ஈஸ்வர்.
மணியின் சீடர் மிருதங்கம் இசைத்த பரத்வாஜ்.
சந்திரசேகரரின் சீடர் நடன ஆசிரியை திவ்யா.
அனைவரும் துறைபோகியோரின் கீழ் பயின்றவர்கள்.
அனைவரையும் ஒருங்கு சேரக் கண்டமை நிறைவு.
அது ஓர் திறனுடையோர்கள் சங்கமிப்பு.
இச்சங்கமிப்பு ஆற்றுகையில் நன்கு தெரிந்தது.
மிகத் தேர்ச்சி பெற்ற அவர்களுக்கு இணையாக நின்றது திவ்யாவின் கம்பீரமான சுவைமிகுந்த நட்டுவாங்கம்,
கணீரென்ற நல்ல உச்சரிப்பு.
அன்று பெற்றமை நல்லதோர் அனுபவம்.
மாணவி ரோபிணியின் திறமையும் திவ்யாவின் பயிற்சியும் வர்ணத்தில் நன்கு தெரிந்தது.
குருவினதும் சீடரினதும் திறன் அறிவது பரத மார்க்கத்தில் வர்ணத்தில்தான்.   வர்ணம்அமைத்த விதமும் புதுமையே.
அதில் எனக்குச் சில விமர்சனங்கள் இருந்தாலும் அம்முயற்சி என்னை ஈர்த்தது.
தூண்டிற் புழுவினைப்போல் பதம்
ரோபிணியை அபினயித்திலும் வல்லவளாகக் காட்டியது.
அவளுக்கும் எனது வாழ்த்துகள்
ஞால வெளியினிலே-பாரதி மார்க்க அரங்கேற்றம்
முழுவதையும்  இருந்து பார்க்கமுடியாத நிலைமை.
அதற்காக வருந்துகிறேன். எழுந்து வருகையில் திவ்யாவின் அன்னையார் என தன்னை அறிமுகம் செய்த ஒருவர்
இன்னும் சிறிது நேரம் இருந்து செல்லுங்கள் என வேண்டிக்கொண்டார்.  அவ்வன்னையின் வேண்டுகோளை
ஏற்கமுடியாத நிலை.
என்னை அழைத்தமைக்கு நன்றி திவ்யா.
பாரதியாரின் கொள்ளுப் பேரனுடன் உரையாடியமை மகிழ்ச்சி தந்தது.  பாரதியார் மீது எனக்கும் மஹா ப்ரேமையுண்டு.
அந்த நிகழ்வு பற்றியும் அது தந்த அனுபவம் பற்றியும்
பரத நாட்டிய சம்பிரதய மார்க்கம் பற்றியும்  இம்மார்க்கத்தில் திவ்யா புகுத்திய புதுமை பற்றியும் அதன் தன்மை பற்றியும்
விரிவாக எழுத அந்நிகழ்வு என்னைத் தூண்டியுள்ளது
எழுதுவேன்.
-->
--0--









No comments: