17/12/2019 நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் பல்வேறு வகையிலான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற சூழலில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும் பலவழிகளிலும் பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பிரிபடாத நாட்டுக்குள் அதி உச்ச அதிகாரப்பகிர்வு முறைமையின் ஊடாக சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு அரசியல் தீர்வு தமக்கு கிடைக்கவேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளின் கோரிக்கையாகவும் நிலைப்பாடாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் புதிய அரசாங்கம் எவ்வாறான நகர்வுகளை எடுக்கப்போகிறது? எந்தத்தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்போகின்றது என்ற கேள்விகளும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.
எனினும் புதிய அரசாங்கம் இந்த விடயத்தில் எவ்வாறான அணுகுமுறையை முன்னெடுக்கப்போகின்றது என்பது தொடர்பாக இதுவரை ஒரு தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் காணப்படுகின்றன. அதுவரை ஒரு இடைக்கால அரசாங்கமே தற்போது அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே அரசாங்கம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமா என்பதும் தெளிவில்லாமல் இருக்கிறது.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கென்று உள்ளக சுயநிர்ணய உரிமை உள்ளது. அவை எந்தவித தடைகளும் இன்றி தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும், எனினும் நீண்டகாலமாக எமது சுய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறு இருப்பினும் எமது சுய உரிமைகளை பெறுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சிப்போம். அதனை எவராலும் தடுக்க முடியாது என்றும் கூட்டமைப்பின் தலைவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் அரசியல் தீர்வுகளுக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து, அரசியல் தீர்வு சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. வாய்ப்புகளைப் பார்த்து நாம் ஒருபோதும் அரசியல் தீர்வைத் தேடிப்போவதில்லை. எமது மக்களுக்கான நியாயமான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் ஒரே நோக்கத்தில் மட்டுமே நாம் அரசியல் செய்கின்றோம்.
சிங்கள மக்களைப்போன்று தமிழ் மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை வழங்கினால் தான், நாடு பொருளாதார ரீதியாக முன்னேற முடியும். அரசியல் அதிகாரப் பகிர்வினூடாகவே உலகில் உள்ள அனைத்து மக்களும் சமமாகவும் சமாதானமாகவும் வாழ்கிறார்கள் எனவும் சம்பந்தன் எடுத்துரைத்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி அரசியல் தீர்வு விடயத்தில் எந்த அரசாங்கத்தையும் பகைத்துக் கொள்ள நாம் விரும்பவில்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்காக, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் எப்போதும் அரசாங்கத்திற்கு உதவத் தயாராகவே இருக்கின்றோம். தமிழ் மக்களின் பிரச்சினைகள் காலதாமதமின்றி தீர்க்கப்பட வேண்டும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது பல தடவைகள் அவருடன் கலந்துரையாடி உள்ளோம். இந்தியாவுக்குச் சென்று நாம் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளோம் எனவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தவகையில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் பல முக்கியமான விடயங்களை தமிழ் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக வெளியிட்டிருக்கிறார். விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்து தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் கூறியிருக்கிறார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதலாவது வெளிநாட்டு விஜயமாக கடந்த மாதம் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அப்போது இந்தியப் பிரதமருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது. இருதரப்பு சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள இந்தியப் பிரதமர் மோடி இலங்கையின் ஜனாதிபதி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவார் என நம்புவதாக தெரிவித்திருந்தார். அந்தவகையில் இந்தியாவும் இந்த விடயத்தில் ஒரு அக்கறையுடன் இருப்பதை அவதானிக்க முடிகிறது. அதனடிப்படையிலேயே விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்து தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். அபிவிருத்தி எந்தளவு தூரம் தமிழர் பகுதிகளில் முக்கியமோ, அதேபோன்று அரசியல் அதிகாரங்களும் மிக முக்கியமானவை என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். அதன் காரணமாகவே இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே தமிழ் மக்கள் அரசியல் அதிகாரத்தை கோரிவருகின்றனர். தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெறும் நோக்கிலான முன்னெடுப்புகள் கடந்த காலங்களில் பல வடிவங்களில் இடம்பெற்றன. எனினும் அவற்றின் ஊடாக வெற்றிக்கனியை பெறமுடியவில்லை. அரசியல் தீர்வு என்பது தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரையில் எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
எனினும் தமிழ் தரப்பு பிரதிநிதிகள் தற்போது தமக்கான தீர்வு தொடர்பில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். இதனை பெரும்பான்மை அரசியல் தலைமைத்துவங்கள் புரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக பிரிபடாத பிரிக்கப்பட முடியாத நாட்டுக்குள்ளேயே தமக்கான அரசியல் அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பதில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உறுதியாக இருக்கின்றனர்.
எனவே அதனை உணர்ந்து அந்த மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் முன்வரவேண்டும். முக்கியமாக புதிய அரசாங்கமானது அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனூடாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வுத்திட்டம் உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் பேசும் மக்களிடம் உள்ளது.
அதனால் அந்த இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்கவேண்டும். 70 வருடங்களாக இந்த அரசியல் தீர்வு பிரச்சினை நீடித்து வருகிறது. அதனைத் தொடர்ந்தும் இழுபறியான நிலைமைக்கு நீடிக்கவிடாமல் ஒரு நியாயமான தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும். இந்த நாட்டில் அதிகாரப்பகிர்வுடன் கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்துவதன் ஊடாகவே சிறப்பான எதிர்காலத்தை அடைய முடியும் என கூட்டமைப்பின் தலைவர் அடிக்கடி கூறி வருகிறார். இதற்கு அவர் பல்வேறு நாடுகளையும் உதாரணம் காட்டுகிறார். எனவே அவர் இது தொடர்பில் அரசாங்கத்தில் இருக்கின்ற தரப்பினர் பரிசீலிக்கவேண்டும். பன்முகத்தன்மையில் வெற்றியை காணவேண்டுமாயின் அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்பது அவசியமாகும். ஒற்றுமையுடன் பயணிப்பது என்பது அந்தந்த மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதை குறிக்கிறது. ஒரு மக்கள் பகுதியினர் தமக்கான அரசியல் பகுதியினை கோரும்போது அவை தொடர்பில் ஆராய்ந்து பார்க்கலாம். அதுவும் அனைத்து மக்களினதும் அங்கீகாரத்துடன் பிரிபடாத நாட்டுக்குள்ளான தீர்வு முறைமையே தமக்கு தேவை என தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்ற விடயத்தையும் அதிகாரத்தரப்பினர் புரிந்துகொள்ளவேண்டும். அதனூடாக விரைவாக தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உறுதிப்படுத்தும் வகையிலான ஒரு தீர்வுத்திட்டத்தை அடைவதற்கு அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் முயற்சிக்கவேண்டும் என்பதே முக்கியமான தேவையாக காணப்படுகின்றது.
(17.12.2019 இன்றைய வீரகேசரி நாளிதழின் ஆசிரிய தலையங்கம் ) நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment