இலங்கைச் செய்திகள்


கொழும்பு துறைமுக நகரத்தின் காணி குத்தகை ஒப்பந்தம் ஜனாதிபதி முன்னிலையில் சீன நிறுவனத்திடம் கையளிப்பு

கருணா, பிள்­ளையான் வழி­காட்­டலில் தேர்தல் சதி: முஸ்லிம் காங்­கிரஸ் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திடம் முறைப்பாடு

 'Millennium Challenge Corporation' இலங்கைக்கு 480 மில்லியன் டொலர் நிதியுதவி!

 மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் உறுதிப்பத்திரம் பேராயரிடம் கையளிப்பு

சென்னை - யாழ்ப்பாணத்துக்கிடையிலான விமான சேவை 10 ஆம் திகதி முதல்!


கொழும்பு துறைமுக நகரத்தின் காணி குத்தகை ஒப்பந்தம் ஜனாதிபதி முன்னிலையில் சீன நிறுவனத்திடம் கையளிப்பு

30/10/2019 
2015ஆம் ஆண்டு தமது அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன், காணிப் பரிமாற்றத்தினூடாக நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படமாட்டாது என்பதை உறுதிசெய்து கொள்வதற்காக கொழும்பு துறைமுக நகர ஒப்பந்தம் தொடர்பில் மீண்டும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இதன்போது காணி உரிமையை இலங்கைக்கு தக்க வைத்துக்கொள்வதற்கு உறுதியளிக்கக்கூடிய பரஸ்பர, ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தங்களை மேற்கொள்ள இரு தரப்பினராலும் முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் செங் சுவான் ஆகியோரின் முன்னிலையில் கொழும்பு துறைமுக நகரத்தின் காணி குத்தகை ஒப்பந்த பத்திரத்தை கையளிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
குறித்த காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு கையளிப்பதற்கான பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் பின்னர் அதிகார சபையினால் நில உரிமையை தம்வசம் தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான குத்தகை அடிப்படையில் காணி CHEC Port City Colombo தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது.
துறைமுக நகர செயற்திட்டமானது இலங்கையில் நீண்டகால அபிவிருத்திக்கான பெறுமதிமிக்க ஒரு முதலீடாகும் என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள் இதனால் பெருமளவு அந்நிய செலாவணி நாட்டுக்கு கிடைக்கப்பெறும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மற்றும் சீன தூதுவரின் முன்னிலையில் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்கவினால் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எஸ்.வி.ரத்நாயக்கவிடம் உரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தினால் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் காணிக்கான ஆவணங்கள் CHEC Port City Colombo தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் Jiang Houliang யிடம் கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.டபிள்யு.கருணாரத்ன உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.  நன்றி வீரகேசரி 











கருணா, பிள்­ளையான் வழி­காட்­டலில் தேர்தல் சதி: முஸ்லிம் காங்­கிரஸ் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திடம் முறைப்பாடு

30/10/2019 ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல் கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளை யான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்த வர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது.


இது தொடர்பில் அக்கட்சி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் 
அவ்வமைப்பின் தேர்தல் கண்காணிப்பு குழுவின் அரசியல் பகுப்பாய்வாளர் மேரி பொலன்ட், தமது குழுவின் சார்பில் பிரியங்கா முனசிங்கவுடன் நேற்று  செவ்வாய்க்கிழமை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் வெளிநாட்டு விவகார பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். பாயிஸ் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாணத்திலும் பொதுவாக சிறுபான்மை மக்கள் செறிந்தும், பரவியும் வசிக்கும் நாட்டின் இதர பகுதிகளிலும் இவ்வாறான முறைகேடுகளும், அடாவடித்தனங்களும் நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளதாக  இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் அச்சம் தெரிவித்துள்ளது.
ஜனநாயக ரீதியில் சுதந்திரமாக நடைபெறவேண்டிய ஜனாதிபதி தேர்தலை மோசடிகள் மலிந்ததாக்கி தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளரின் வெற்றிவாய்ப்பை மழுங்கடிக்கச் செய்வதற்காக கிழக்கு மாகாணத்தில் சதி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுறை சந்திரகாந்தன் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்களை தேர்தலின்போது களமிறக்கி மீண்டும் தலைதூக்கச் செய்வதற்கான முன்னேற்பாடுகளின் விளைவுகள் ஆபத்தானவையாக அமையலாம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
கோர யுத்தம் நடந்த காலத்தில் வட மாகாணத்தில், வன்னியில் வசித்துவந்த நிலையில் பின்னர், இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற வேறு மாவட்டங்களில் வசித்துவரும் வாக்காளர்கள் பூர்வீக வசிப்பிடத்தில் தமது வாக்குகளை அளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த வாய்ப்பு யுத்தம் முடிவடைந்துவிட்ட காரணத்தினால் இனியும் அவசியமில்லை என கூறி மறுக்கப்படும் நிலைமை தோன்றியுள்ளது. இது பற்றியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இவ்வாறான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் இதற்கு முன்னர் வாக்குரிமையுள்ள குறித்த இடத்துக்கு சென்று வாக்களிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வந்தமை பற்றியும் கூறப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐரோப்பிய ஒன்றியம் சார்பாக இலங்கைக்கு வருகைதரும் அறுபதுக்கும் மேற்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஒரு தொகுதியினர் ஏற்கனவே இங்கு வந்து, முன் மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர்.
தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நேரத்தை நீடிப்பது சம்பந்தமான விடயத்தை பொறுத்தவரை, வாக்களிப்பின் இறுதிக் கட்டத்தில் வாக்காளர்களை மிரட்டி பலவந்தமாக வாக்குச் சாவடிகளில் வைக்கப்படும் பெட்டிகளுக்குள் கள்ள வாக்குகளை திணித்தல் மற்றும் மோசடிகள், அச்சுறுத்தல் என்பன மேற்கொள்ளப்படும் நிலைமை பற்றியும் விளக்கி கூறப்பட்டது.
மாலைவேளை, புவியியல் ரீதியில் தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமங்களின் அமைவிடம் போன்றவை இவ்வாறான ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு பெரிதும் ஏதுவாக அமைந்துவிடுவதை இவ்வாறான பிரதேசங்களின் கடந்தகால தேர்தல் அனுபவங்கள் நன்கு உணர்த்துவதாகவும் எடுத்துரைக்கப்பட்டன.
கடந்த தேர்தல்களில் மட்டக்களப்பு மற்றும் திகாமடுல்ல மாவட்டங்களில் மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றமை பற்றியும் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான காரியங்களில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுத் தேர்தலில் நடந்துகொண்ட விதம் இவற்றுக்கு சான்றாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
தனியார் தொலைகாட்சிகள் சிலவும், அச்சு ஊடகங்கள் சிலவும் ஒரு குறிப்பிட்ட ஜனாதிபதி வேட்பாளரை முன்னிலைப்படுத்தி, பக்கச்சார்பாக நடந்துகொண்டு வாக்காளர்களை தவறாக வழிநடத்தி வருவது குறித்தும் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் விசனம் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடத்திலும் அவருடனான கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது சுட்டிக்காட்டப்பட்டதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் கூறினார்.
வாக்களிப்பு மோசடிகள் பெருமளவில் மேற்கொள்ளப்படக்கூடிய கிராமங்கள் மற்றும் வாக்குச் சாவடிகள் பற்றிய பட்டியலொன்றை தமது கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்கும், வெளிநாட்டு, உள்நாட்டு கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கவுள்ளதாகவும் இதன்போது அறிவிக்கப்பட்டது.
தன்சானியா, சியராலியோன், சிம்பாப்வே, பங்களதேஷ், பாகிஸ்தான், ஹொங்கொங் ஆகிய நாடுகளில் பொதுநலவாய மற்றும் சார்க் நாடுகளின் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களில் இடம்பெற்றதன் மூலம் தாம் செய்த பங்களிப்புகள் பற்றியும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது நினைவூட்டினார்.
இந்த ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல் தினத்திற்கு முன்னர் இரண்டாம் கட்டமாக இங்கு வரவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு குழுவில் பிரதான கண்காணிப்பாளர் மரிசா மார்டியஸ் இடம்பெறுவார்.
அத்துடன் பலத்த பலப் பரீட்சையாகவும், தீர்க்கமானதும், விறுவிறுப்பானதாகவும் அமையப்போகும் 2019ஆம் ஆண்டின் இந்த ஜனாதிபதி தேர்தலை பொதுநலவாய நாடுகளினதும், சார்க் நாடுகளினதும் தூதுக்குழுக்களும் கண்காணிப்பதற்கு முன்வந்துள்ளன.   நன்றி வீரகேசரி 











 'Millennium Challenge Corporation' இலங்கைக்கு 480 மில்லியன் டொலர் நிதியுதவி!

30/10/2019 அமெரிக்க அரசாங்கத்தின் புத்தாயிரமாம் ஆண்டின் சவால்கள் Millennium Challenge Corporation தொடர்பான நிறுவனம் இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.
இந்த நிதியை பெற்றுக் கொள்வதற்காக அமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
அமெரிக்காவிடமிருந்து இந்த நன்கொடையை பெற்றுக் கொள்ளும் 37ஆவது நாடு இலங்கையாகும்.
இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளது.  நன்றி வீரகேசரி 













 மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் உறுதிப்பத்திரம் பேராயரிடம் கையளிப்பு

29/10/2019 மன்னார் மாவட்டத்தில் மடு திருத்தலம் அமைந்துள்ள பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதற்கான உறுதிப்பத்திரத்தை மன்னார் மறை மாவட்ட பேராயர் இம்மானுவேல் அபேர்டினன்ட் அவர்களிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (29) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கையளித்தார்.
கத்தோலிக்க பக்தர்களின் யாத்திரைக்குரிய புனித தலமாக விளங்கும் மடு தேவாலயம் பௌத்த மற்றும் இந்து பக்தர்களினதும் வழிபாட்டிற்குரிய தலமாக விளங்குதல் விசேட அம்சமாகும். மடு தேவாலயத்தின் வருடாந்த உற்சவத்தின்போது மாத்திரமன்றி, வருடம் பூராகவும் யாத்திரிகர்களும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலட்சக்கணக்கில் அங்கு வருகை தருகின்றனர்.
கடந்த கால யுத்தத்தின்போது பெரும் பாதிப்புக்குள்ளானதுடன், நீண்ட காலமாக முறையான பராமரிப்பும், புனரமைப்பும் மேற்கொள்ளப்படாதமையினால் மடு தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் குறைந்த வசதிகளைக் கொண்ட ஒரு பிரதேசமாக மாற்றமடைந்துள்ளது.
2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, வரலாற்று முக்கியத்துவமிக்க வணக்கஸ்தலமாகிய மடு தேவாலயத்தை பாதுகாத்து, அங்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது அத்தியாவசியமாகும் என்பதனை உணர்ந்து, இப்பிரதேசத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்துவதற்கான ஆலோசனையை முன்வைத்ததுடன், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது. இதற்கமைய அப்பிரதேசத்திற்கான போக்குவரத்து, வீதி வசதிகள், நீர்வழங்கல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் வணக்கஸ்தலத்திற்கு வருகை தரும் மக்களுக்கான தங்குமிட வசதிகள், ஓய்வு மண்டபங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்குமான விசேட அபிவிருத்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மடு திருத்தலத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக திருத்தலத்தை சூழவுள்ள 300 ஏக்கர் நிலப்பரப்பு தேவாலயத்தின் சமய டிநடவடிக்கைகளுக்கான கட்டிடங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளதுடன், இதற்கு மேலதிகமாக சுமார் 5,000 ஏக்கர் பரப்புடைய காணியை பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக பாதுகாப்பதற்கும் உரிய வர்த்தமானியினூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் வணக்கத்திற்குரிய வரலாற்று சிறப்புமிக்க மடு தேவாலயத்தை புனித பூமியாக பிரகடனப்படுத்தி, அதனை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிந்தமை தனது பதவிக்காலத்திற்குள் நிறைவேற்றப்பட்ட மேலுமொரு விசேட செயற்பணியாகும் என்பதை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
பேராயர் இம்மானுவேல் பெர்னாண்டோ உள்ளிட்ட கத்தோலிக்க பாதிரியார்களும் அமைச்சர் ஜோன் அமரதுங்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.  நன்றி வீரகேசரி 











சென்னை - யாழ்ப்பாணத்துக்கிடையிலான விமான சேவை 10 ஆம் திகதி முதல்!

01/11/2019 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. 
குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும்.
டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும்.
இதவேளை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.  நன்றி வீரகேசரி 








No comments: