கிராமத்திலிருந்து பல்கலைக்கழகம்
சென்ற முதல் தமிழ்ப்பெண் !
ஊரே திரண்டு வந்து வாழ்த்திய தங்கேஸ்வரியின்
வாழ்வும் பணிகளும்

இலங்கைப்பயணத்தில் கடந்த மாதம் ( ஒக்டோபர் ) 08 ஆம் திகதி அவரை, அவரது மட்டக்களப்பு இல்லத்தில் சந்தித்தேன். அவர் கடந்த சில வருடங்களாக
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில்
சிகிச்சை பெற்றுவந்தவர்.

எனினும் எவரும் அவரைச்சென்று பார்த்திருக்கவில்லை என்பதை
அன்றைய தினம் அறிந்துகொண்டேன். நண்பர் செங்கதிரோன் கோபாலகிருஸ்ணனுடன் அவரை பார்க்கச்செல்லும்போது
பிற்பகலாகியிருந்தது.
வீட்டின் கதவை தட்டியபோது, உள்ளிருந்து
“ யார்..? “ என்ற அவரது
குரல் கேட்டது. எமது பெயரைச்சொன்னதும்
“ கதவு சும்மாதான் சாத்தியிருக்கிறது வாருங்கள் “ என அழைப்புக்குரல் கொடுத்தார்.
அவர், தரையில் ஒரு துணியை விரித்து படுத்திருந்தார். பார்த்ததும்
நெகிழ்ந்துவிட்டேன். “ என்னம்மா… இப்படி தரையில்
படுத்திருக்கிறீர்கள்..? “ எனக்கேட்டேன்.
“ அவருக்கு வாழைப்பழம் ஒவ்வாமையானது. வாங்கவேண்டாம். “
என்றார் நண்பர். அதனால் அப்பிள் பழங்களுடன்
சென்றேன்.
“ உங்களுக்கு ஏனம்மா
வாழைப்பழத்தின் மீது கோபம் ? “ எனக்கேட்டேன்.
“ அதில் அதிகம்
பொட்டாசியம் இருக்கிறது. சிறுநீரக உபாதையுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய பழம். அதில் அதிகமாக நார்ச்சத்து இருப்பதனால், குடலிலிருந்து
அதிகம் தண்ணீரை உறிஞ்சிவிடும் “ என்றார்.
அவரது உடல்நிலையறிந்து கவலைப்பட்டோம். எஞ்சியிருந்த ஒரு
பூர்வீக காணியையும் விற்று மருத்துவச்செலவுகளை கவனித்ததாகச் சொன்னார். கதிர்காமம் பற்றிய
பூர்வீக வரலாற்றை எழுதி முடித்திருப்பதாகவும், என்னுரைதான் எழுதவேண்டியிருக்கிறது.
அதற்கிடையில் கண்பார்வை குறைந்துவிட்டதாகவும், இனி கண் சிகிச்சையும் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது
என்றார்.

சின்னத்தம்பி கதிராமன் - திருவஞ்சனம் தம்பதியரின்
மகளாக 1952 இல் பிறந்திருக்கும்
செல்வி தங்கேஸ்வரி, தனது ஆரம்பக்கல்வியை கன்னன்குடா மகா வித்தியாலயத்திலும்
இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ரோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலையிலும் உயர்நிலைக்கல்வியை
வின்ட்சன் மகளிர் கல்லூரியிலும் பெற்றவர்.
தனது கிராமத்திலிருந்து முதல் முதலில் பல்கலைக்கழகம்
சென்ற மாணவி என்ற பெருமையும் பெற்றவர். அவ்வேளையில் அவ்வூர் மக்கள் திரண்டு வந்து வாழ்த்தி
வழியனுப்பிவைத்தார்கள் என்ற செய்தியும் உண்டு.
களனி பல்கலைக்கழகத்தில் தொல்லியலில் சிறப்புப்பட்டமும்
பெற்றுள்ளார். தொல்பொருளியல் வரலாற்று ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருக்கும் தங்கேஸ்வரியின்
தொடக்கால எழுத்துக்கள் 1972 இல் வீரகேசரியிலிருந்து ஆரம்பித்திருக்கிறது. நாட்டுப்புற கதைகளும் எழுதியவர்.

பிரதேச அமைச்சின் கீழ் இயங்கிய மட்டக்களப்பு மாவட்ட
கலாசார திணைக்களத்தின் செயலாளராகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பிரிவில்
பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியிருப்பவர்.
2004 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்றமும் சென்றவர். தமது
ஊரில் பல சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்து இயங்கியவர்.
நாம்
2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்திய மாநாட்டில் வெளியிட்ட கட்டுரைக்கோவையில் எழுதியிருக்கும், " கிழக்கிலங்கையில் தொலையும் தொன்மைகளும் தொன்மைக்கிராமங்களும்"
என்ற ஆய்வு கவனத்திற்குரியது.
அதிலிருந்து ஒரு பந்தி: எமது பண்டைய " வன்னிமைகள்"
சிங்களத்தில் "ரட்ட" எனவாகிவிட்டன. குளம் " வெவ" எனவும் - உதாரணம்:
கலாவெவ. மாதுறை என்பது" மாத்தற"
,தேவேந்திரமுனை என்பது "தெவினுவர",மாயவனாறு என்பது, "தெதுறு ஓயா",
காளி தேசம் என்பது " காலி", கடம்ப
நதி என்பது " மல்வத்து ஓயா", பட்டிப்பளையாறு என்பது "கல்லோயா",
முதலிக்குளம் என்பது "மொரவெவ" , மணலாறு என்பது " வெலிஓயா", பார்வதி
கிராமம் என்பது " பதவியா", திருகோணமலை
என்பது "திருக்கிணாமலை", அரிப்புச்சந்தி என்பது " அலியொலுவ" ,
யாழ்ப்பாணம் என்பது " யாப்பனே" , எனவும் நாடுமுழுவதுமே தமிழ்ப்பெயர்கள் மாற்றப்பட்டுவருகின்றன.
"இப்படி தொலைந்துபோகும் தொன்மையையும் தொலைந்துபோன
கிராமங்களைத் தேடுவதும் தமது கட்டுரையின் நோக்கமாகும்"-
என்று பதிவுசெய்துள்ள தங்கேஸ்வரி, விரிவஞ்சி, கிழக்கே மாத்திரம் நிகழ்ந்துள்ள அதிர்ச்சிகரமான
மாற்றங்களை அந்த ஆய்வில் விரிவாக எழுதியிருந்தார்.
இன்றும் இலங்கையில் பிரதேசம் பறிபோவது பற்றி
யாராவது எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இந்நிலையை மாற்றுவதற்கான
செயல்தான் இல்லை.
இவர் தமது ஆய்வுகளுக்காக வடக்கு - கிழக்கு
அமைப்புகளின் பாராட்டு விருதுகளையும்,
கனடா தமிழ் சமூக கலாசார சம்மேளனத்தின் விருதும் பெற்றிருப்பவர். மண்முனை
வடக்கு பிரதேச செயலகத்தினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டவர்.
கலை, இலக்கிய ஆர்வலர். படைப்பிலக்கியத்துறையில் ஈடுபடாவிட்டாலும்
சமூக ஆய்வுகளே இவரது எழுத்தூழியம். அதனால் இவரது ஆய்வுக்கட்டுரைகள் எமது ஈழத்தமிழர்களுக்கும் உலகடங்கிலும் வாழும் தமிழர்களுக்கும்
ஆவணங்களாகத்திகழுகின்றன. தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும்
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உசாத்துணையாகவும் விளங்குகின்றன.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை
ஆகிய மாவட்டங்களில் பல ஊர்களும் குளங்களும் எவ்வாறு பெயர்மாற்றம் பெற்றிருக்கின்றன
என்பதையும் தங்கேஸ்வரி விளக்கியிருக்கிறார்.
இலங்கைகுறித்தும் இங்கு பூர்வீக குடிகளாக வாழ்ந்த
தமிழ் மக்கள் பற்றியும் றொபர்ட் நொக்ஸ், அட்சியன் ரேலண்ட், கிறிஸ்தோபர் சுவைட்சர்,
பேராசிரியர் கிளைக்கோன் ஆகியோர் தரும் ஆதாரங்களையும் முன்வைத்து, சமகாலத்தில்
பறிபோகும் ஊர்கள் பற்றியும் ஊர்களின் பெயர்கள் தொடர்பாகவும் விரிவாக
பதிவுசெய்துள்ளார்.
கலிங்க நாட்டிலிருந்து கி.பி. 1215 இல் இலங்கைக்கு
படையெடுத்து வந்து ஆட்சிசெய்த மாகோன் பற்றி ஆய்வுசெய்திருக்கும் தங்கேஸ்வரி, இந்தத் தமிழ்மன்னன், இரண்டாம்
பராக்கிரமபாகுவின் காலத்தில் பொலன்னறுவையை தலைநகராகக்கொண்டு ஆட்சி
செலுத்தியதாகவும் பகைவர்கள் நெருங்கவே முடியாத வகையில் அரண்கள்
அமைத்திருந்ததாகவும் இவை தொடர்பான விபரங்கள் தம்பதெனிய வம்சம் பற்றிய ஆய்வுகளில்
சொல்லப்பட்டிருப்பதாகவும் விளக்கியிருக்கிறார்.
"சிங்கள வரலாற்று நூல்களில் மாகோன் வரலாறு உரிய முக்கியத்துவம் பெறவில்லை என்பதும்
மகாவம்சம், சூளவம்சம் முதலிய ஆவணங்களைத்தொகுத்தவர்கள் பௌத்த பிக்குகள் என்பதால்,
அந்த ஆவணங்களில் அவன் புகழை மறைக்கும் வகையிலேயே பல செய்திகள் பதிவாகியுள்ளன
என்பதும் இங்கு மனங்கொள்ளத்தக்கது" எனக்கூறும் தங்கேஸ்வரி உண்மையைத்தேடி
உழைத்திருக்கிறார்.
ஒவ்வொரு தேசத்தினதும் வரலாற்றுக்கு முந்திய காலத்து
நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் ஆய்வுக்குட்படுத்துவதே தொல்லியல் ஆய்வுகள் எனக்கூறும்
தங்கேஸ்வரி, அதற்கு உசாத்துணையாக பின்வருவன அவசியம் எனவும் வலியுறுத்துகிறார்.
புவிச்சரிதவியல் ( Geology) , மானிடவியல் (Anthropology)
, சாசனவியல் (Zithology) , நாணயங்கள் (Coins) , இலக்கியங்கள் (Literature) , ஓலைச்சுவடிகள் (Manuscripts), கர்ண பரம்பரைக்கதைகள் (Mythology), இவற்றோடு மேலாய்வு (Exploration), அகழ்வாராய்ச்சி (Excavation).
இலங்கையில் தமிழ்ப்பிரதேசங்கள் படிப்படியாக எவ்வாறு சிங்களமொழியில்
அழைக்கப்பட்டு வருகின்றன என்பதையும் அரச திணைக்களங்களின் பிரசுரங்களிலும் சாதுரியமாக
நிகழும் மொழிமாற்றங்களையும் தெரிந்துகொள்வதற்கு தங்கேஸ்வரியின் ஆய்வுகள் குறிப்பிட்ட
சிறுபான்மைத்தமிழ் முஸ்லிம் தலைவர்களுக்கு உதவியாக இருக்கும்.
தங்கேஸ்வரி,
கிழக்கிலங்கையில் தமிழ்ப்பெயர்கள் மாறியிருக்கும் கோலத்தை
விரிவாகச்சுட்டிக்காண்பித்துள்ளார். அவற்றில் சில:
குடும்பிமலை
(தொப்பிகல)-முதலிக்குளம் (மொரவெவ) -பெரியகுளம் (நாமல்வந்த)-பெரியவிளாங்குளம்
(மகாதிவுள்வெவ)-தீகவாபி(திகாமடுள்ள) -பனிக்கட்டி முறிப்பு
(பனிக்கட்டியாவ)-குமரேசன் கடவை( கோமரன் கடவ)- வெல்வேரி (வில்கம)-வெண்டரசன் குளம்
(வெண்டபுர)- கல்மட்டியான் குளம் ( கல்மட்யாவ) -வானுர் (வான்வெவ)- புடவைக்கட்டு
(சாகரபுர)-தம்பலகாமம் (தம்பலகமுவ)- வைரியூற்று (சுதேங்கபுர)-
அரிப்புச்சந்தி(அலியொலுவ)-கல்லாறு - (சோமபுர)-நிலாப்பனை (நீலபேவ)- ஆண்டான்குளம்
(ஆனந்தகம)-பருத்தித்தளவாய்(பதியந்தலாவ)
இப்படியே சென்றால் புதிய அரசியலமைப்பு மட்டுமல்ல
இலங்கைக்கென புதிய வரைபடமும்
தோன்றிவிடும்!!!
அதில்தமிழைத்தேடுவோம்!
தங்கேஸ்வரி
மறைந்திருக்கும் இவ்வேளையில், தமிழ்
,முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கின்றோம்.
இலங்கையின்
வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை தனது தீவிர ஆராய்ச்சிகளினால்
வெளிப்படுத்திய எங்கள்
இலக்கியக்குடும்பத்தின் சகோதரி செல்வி தங்கேஸ்வரியின் மறைவு ஈடுசெய்யப்படவேண்டிய
இழப்பாகும்.
அவரது
மறைவுக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்துவோம்.
---0--
No comments:
Post a Comment