மழைக்காலம் தொடங்கிவிட்டது.
அபிதா நிகும்பலைக்கு வந்த நாளன்று காலை விசிய மழைக்காற்று அடிக்கடி தொடருகிறது.
“ இனி எப்போது மழைவரும்
எப்போது விடும் என்று சொல்லமுடியாது “ என்றாள்
சுபாஷினி.
“ உங்களுக்கு மழைக்காலம்
பிடிக்குமா, கோடைகாலம் பிடிக்குமா..? “ எனக்கேட்டாள்
அபிதா.

அபிதாவுக்கு சிரிப்பு வந்தது. “ மழைநீர் தேங்கிவிடுவதும் உண்டு. அவ்வாறுதான் பணமும்
சில இடங்களில் தேங்கிவிடும். “ என்று அவள்
சொன்னதும், சுபாஷினி, வியப்புக்கலந்த பார்வையோடு அபிதாவை ஏறிட்டுப்பார்த்தாள்.

அன்று அபிதாவுடன் நளபாகம் பற்றிப்பேசியபோது இறுதியுத்த காலத்தில்
கணவன் பார்த்திபனிடம் வாங்கி அருந்திய அரிசிக்கஞ்சி பற்றிய கதையை சொல்லவந்து, கதறி
அழுத சம்பவத்தையும் கூறிவைத்திருந்தாள்.
சுபாஷினிக்கு மிகவும் பிடித்தமான திரைப்படப்பாடல்தான் நினைவுக்கு
வருகிறது. “ வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்.
வாசல் தோறும் வேதனை இருக்கும்…. “
சுபாஷினியின் வாழ்க்கை கதையிலும் வேதனைகள் இருக்கின்றன. எவரும்
அவற்றை நினைவூட்டும் வகையில் பேசிவிடாதிருக்கத்தக்கதாக நெருக்கடிகளை சமாளித்துக்கொள்பவள். அபிதா அந்த வீட்டுக்கு
வேலைக்காரியாக வருவதற்கு முன்னர், ஜீவிகாவிடம் மாத்திரம், அங்கு வந்து தங்குவதற்கு
மஞ்சுளா அனுமதி கேட்டு அதற்கான வாடகையை தீர்மானித்த வேளையில் சொல்லியிருக்கிறாள்.
ஆனால், மஞ்சுளாவிடமோ, கற்பகம் ரீச்சரிடமோ ஜீவிகா அந்தக்கதைகளை
சொல்லிவிடக்கூடாது எனச்சத்தியமும் வாங்கியிருந்தாள் சுபாஷினி.
அபிதா சம்பந்தப்பட்ட கதைகள் சிலவற்றை ஜீவிகா தன்னிடம் சொன்னதுபோன்று,
தனது கதைகளையும் ஜீவிகா இந்த அபிதாவிடம் சொல்லியிருப்பாளா..? இருக்காது.
“ சமூகம்
என்பது நாலுபேர். ஒருவர் இல்லாத இடத்தில் அவர் பற்றி பேசுவதுதான் சமூகம் “ என்று அபிதா ஜீவிகாவிடம் சென்னதன் பின்னர்தான், “ இவள் அசாதாரணமானவள். இவளுடன் பேசும்போது கொஞ்சம்
எச்சரிக்கையாகத்தான் இருக்கவேண்டும். “ என்ற
வசனம் வந்திருக்க வேண்டும்.
அந்த வீட்டில் நான்கு பெண்கள் இருந்தும் வீட்டு வேலைகளை கவனிக்கவும்
சமைக்கவும் நேரம் இல்லாமல், பாண், ஜேம், பட்டர், கடைகளில் வாங்கும் இடியப்பம், புட்டு,
தோசை, நூடில்ஸ் என்று காலத்தை கடத்தியதனால் மாத முடிவில் கணக்குப்பார்த்து வந்த கலக்கத்தினால்தான்
எப்படியும் ஒரு சமையல்காரியை வீட்டோடு வைத்துக்கொள்ள தீர்மானித்தார்கள். ஆனால், இப்போது
வந்திருப்பவள் தொழில் ரீதியாக அனுபவம் பெற்ற வேலைக்காரியோ, சமையல்காரியோ அல்ல என்பது
இவளது பேச்சிலும் செயல்களிலும் புரிகிறது.
“ வாழ்கைச் செலவுகள் எங்கும் அதிகம்தான். ஜீவிகா அம்மா
என்னை இங்கே அழைத்திருந்தாலும், இங்குள்ள செலவுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
எல்லா வரவு – செலவு கணக்கும் அவுங்கதானே பார்க்கிறாங்க. “
“ அதனால்தான் உங்களை
இங்கே ஜீவிகா அழைத்தாள். தினமும் கடைச்சாப்பாடு.
எவருக்கும் சமைக்கநேரம் இல்லை. மாதம் முடிய கணக்குப்பார்த்தால், ஒவ்வொருத்தருக்கும்.
தலைசுற்றுது. இந்தத் தெருவில்தான் பார்த்திருப்பீங்களே பத்தடிக்கு ஒரு சாப்பாட்டுக்கடை. “ என்று சுபாஷினி அபிதாவுடனான உரையாடலை வேறு திசைக்கு
மாற்றியதும், ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அபிதாவுக்கு
நினைவுக்கு வந்தது.
“ அன்றைக்கு ஒருநாள்
வீட்டில் காய்கறி இல்லை. வாங்கவேண்டும் என்று ஜீவிகா அம்மாவிடம் சொன்னேன். வேலைக்குப்புறப்படும்போது
பணம் தந்தாங்க. தெரு முனையிலிருக்கும் சந்தைக்குப்போய் வாங்கிக்கொண்டு வரும்போது, பக்கத்தில்
பார்த்திருப்பீங்க…. ஒரு காரைநகர் பொம்பிளை
செவ்விளநீர் - வாழைப்பழம் விற்கிறா. தாகமாக
இருந்தது. செவ்விளநீர் குடித்து கணகாலம். ஒன்று வாங்கிக்குடித்தேன். அவதான் வெட்டித்தந்தா.
குடிப்பதற்கு ஸ்ரோவும் தந்தா. விலை கேட்டேன்.
எழுபது ரூபா சொன்னா. கொடுத்தேன். அப்போது ஒரு வெளிநாட்டு வெள்ளைக்காரன் ஒருத்தன் சண்கிளாஸ்
போட்டுக்கொண்டு கையில் கெமராவுடன் வந்து, ஆங்கிலத்தில்
செவ்விளநீர் விலை கேட்டான். அந்த மனுஷி, நான் பக்கத்திலிருப்பதையும் மறந்து, “ Eighty rupees “ என்று சொன்னாள்
பாருங்க.! ஒரு செக்கண்டில் பத்து ரூபா உயர்த்திவிட்டாள்.
ஏன் இப்படி என்று நான் அவளிடம் கேட்டது அந்த வெள்ளைக்காரனுக்கு புரிந்திருக்காது. அவன்
இளநீர் குடித்துவிட்டு “ Good.. Thanks “ எனச்சொல்லிவிட்டு
நூறு ரூபா தாளை நீட்டி மிகுதி இருபது ரூபா வாங்கிக்கொண்டு போனான்.
அவன் அங்கிருந்து அகன்றபிறகு, “ வந்தமா, இளநீர் குடித்தோமா, போனோமா “ என்று என்னை முறைத்துப்பார்த்துச்சொன்னாள் அந்தப்பொம்பிளை.
இனி அங்கே போகமாட்டேன். “ என்றாள் அபிதா.
“ அதுக்குத்தான் சொல்றது
காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவேண்டும். அந்தப்பெண்
பிழைக்கத் தெரிந்தவள். எங்களுக்கு ஒரு விலை. வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிக்கு ஒரு விலை.
என்று எனச்சொல்லிவிட்டு சுபாஷினி கலகலவென சிரித்தாள்.
“ அது சரி, அந்தப்பெண்
காரைநகரைச்சேர்ந்தவள் என்பது உங்களுக்கு எப்படித்தெரியும்..?
“ எனக்கேட்டாள் சுபாஷினி.
“ ஒருநாள் கற்பகம் ரீச்சர் அங்கே வாழைப்பழம் வாங்கச்சென்றபோதும்,
நான் சந்தித்த அதே அனுபவத்தை என்னிடம் சொல்லியிருக்கிறாங்க. அந்த மனுஷியின் ஒரு பிள்ளை கற்பகம் ரீச்சர் படிப்பிக்கும்
ஸ்கூலில்தான் படிக்குதாம் “ என்றாள் அபிதா.
காரைநகரிலிருந்து உழைப்புத் தேடி வந்திருக்கும் அந்தப்பெண்ணுக்குப்பின்னாலும்
கதைகள் இருக்கலாம். முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்து, வவுனியா வந்து தற்போது நிகும்பலைக்கு
வந்திருக்கும் தனக்குப்பின்னாலும் கதைகள் இருக்கின்றன.
சொல்ல முடிந்த கதைகள், சொல்ல முடியாத கதைகள் பல ஒவ்வொருவர் வாழ்விலும்
இருக்கலாம். இருக்கவேண்டும்.
மழைக்காற்று தொடர்ந்து வீசிக்கொண்டிருந்தது. இக்காற்று சொல்ல
வரும் கதை யாது..? என்பது தெரிந்தமையால், வெளியே பின்முற்றத்தில் காயப்போட்டிருந்த
உடைகளை எடுப்பதற்கு அபிதா விரைந்துசென்றாள்.
சுபாஷினியும் அவளைப்பின்தொடர்ந்து ஒத்தாசையாக உடைகளை எடுத்துவந்தாள்.
இரண்டு மாணவர்கள் ஒரு குடையை பிடித்துக்கொண்டு வந்து கேட்டருகே
நின்றவாறு , “ ரீச்சர்… ரீச்சர்… “ என்று குரல் கொடுத்தனர்.
கற்பகம் ரீச்சரிடம் அவ்வப்போது வந்து பாடங்களில் சந்தேகம் கேட்கும்
மாணவர்கள். ரீச்சர் மூன்று நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு ஊருக்கு, நல்லூருக்கு போயிருந்தாள்.
அபிதா, அந்த மாணவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே வந்து அமரச்செய்தாள்.
சுபாஷினி வந்து பார்த்துவிட்டு தனது அறைக்குள் திரும்பிச்சென்று காயப்போட்டு எடுத்துவந்த
தனது ஆடைகளை மடித்துவைத்தாள்.
மஞ்சுளாவும் ஜீவிகாவும் வேலையால் திரும்பியிருக்கவில்லை.
வீட்டின் விறாந்தையில் மழைத்தூரல் விழுந்தமையால் அந்த மாணவர்களை
வீட்டின் கூடத்துக்குள் வந்து அமருமாறு சைகையால் சொன்ன அபிதா, “
ரீச்சர்… ஊருக்குப்போயிருக்கிறாங்க. தெரியாதா…? ஸ்கூலில் பார்த்திருக்கமாட்டீங்களே..
பிறகு ஏன் இந்த மழைநேரத்தில் வந்தீங்க….?
“
“ தெரியாது….. ஊர்ச்சங்கத்தின் அறநெறிப்பாடசாலையில் போட்டி வருகிறது.
பேச்சு எழுதித்தருவதாகச்சொன்னாங்க ரீச்சர். அதுதான் வாங்கிப்போக வந்தோம் . “ என்றான் ஒரு மாணவன். அவனுக்கு பத்துவயதிருக்கும்.
மற்றவனுக்கு அவனைவிட ஒன்று அல்லது இரண்டு வயது அதிகம் இருக்கலாம் என்று அபிதா ஊகித்தாள்.
“ ரீச்சர் நாளை அல்லது நாளை மறுநாள்தான் வருவாங்க.
நளைக்கு வந்து பாருங்க. “ என்றாள் அபிதா.
“ மன்றத்தில் பெயர்கொடுத்துவிட்டோம்.
முதல் தெரிவுப்போட்டி சனிக்கிழமை வருது. இன்னும் நான்குநாள்தான் இருக்கிறது. அதுதான் ரீச்சரிடம் வந்தோம்
என்றான் பெரிய மாணவன். அவர்கள் இருவரதும் முகம் வாடியிருந்தது. அந்தப்போட்டியில் பங்குபற்ற
முடியாமல்போய்விடுமோ என்ற கலக்கம் அந்த வாட்டத்தில் தெரிந்தது.
கற்பகம் ரீச்சர், நாளை அல்லது நாளை மறுநாள் நிச்சயமாக திரும்பி
வந்துவிடுவாளா..? எதற்கும் அவளது கைத்தொலைபேசியில் பேசிப்பார்க்கலாம்.
அபிதா உள்ளே சென்று தனது கைத்தொலைபேசியில் அழைப்பு எடுத்தாள்.
வெளியே மின்னல் வெட்டியது. மழையும் பெய்யத் தொடங்கிவிட்டது. எங்கோ இடியோசை கேட்டது.
அத்தருணம் கைத்தொலைபேசியில் பேசுவதற்கும் அபிதா தயங்கினாள்.
அந்த மாணவர்களைப்பார்க்க பாவமாக இருக்கிறது. மறுமனையில் கற்பகம்
ரீச்சரின் இணைப்பு கிடைத்தது. அங்கும் தொடர்ச்சியாக மழைபெய்வதாகவும். அதனால் வார இறுதியில்
சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைதான் வரவிருப்பதாகவும் கற்பகம் ரீச்சர் சொன்னாள்.
அந்த மாணவர்கள் அபிதாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றார்கள்.
மறுமுனையில் என்ன சொல்லப்படுகிறது என்பதை அறியமுடியாது அபிதாவை ஏக்கத்துடன் பார்த்தார்கள்.
மாணவர்கள் ரீச்சரை
தேடி வந்திருக்கும் காரணத்தை அபிதா சொன்னாள்.
அதற்காக உடனடியாக வரமுடியாது என்றும் வேறு யாரும் ரீச்சர்மாரிடம்
கேட்டு பேச்சை எழுதிக்கொள்ளுமாறு சொல்லும்படியும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள்
கற்பகம் ரீச்சர்.
“ ரீச்சருக்கு சுகமில்லையாம்.
வருவதற்கு ஞாயிற்றுக்கிழமையாகலாம். நீங்கள் இருவரும் வேறு ரீச்சர்மாரிடம் கேட்டுப்பாருங்கள் “ என்றாள் அபிதா. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது.
அபிதா உள்ளே சென்று சமையலறையிலிருந்து ஒரு எவர்சில்வர் தட்டத்தில்
கேசரி துண்டுகளை எடுத்துவந்து அந்தச்சிறுவர்களிடம் நீட்டினாள். அவர்கள் எடுக்க தயங்கினர்.
பரவாயில்லை. இனி மழைவிட்டால்தான் நீங்கள் போகமுடியும். அதுவரையும் இருங்க. ஃபெண்டா
குடிக்கிறீங்களா..?
அபிதா மீண்டும் உள்ளே சென்றாள். அதற்கு முன்னர் அந்தச்சிறுவர்கள்
எத்தனையோ தடவை அங்கு வந்திருக்கிறார்கள். ஆனால், கற்பகம் ரீச்சர் அவ்வாறு ஏதும் தின்பண்டங்கள்,
குளிர்பானம் தந்து உபசரித்ததில்லை.
அபிதா நீட்டிய இரண்டு கண்ணாடித்தம்ளர் ஃபெண்டாவையும் “ தேங்க்ஸ் அன்ரி “ எனச்சொல்லி வாங்கி அருந்தினார்கள்.
அந்த ஊரில் முதல் முதலில் தன்னைப்பார்த்து கனிவோடு அன்ரி
எனச்சொன்ன அந்தச்சிறுவர்களின் தலையை அபிதா ஆதரவுடன் தடவிவிட்டாள்.
‘அவர்களுக்குத் தேவையான
பேச்சை தானே எழுதிக்கொடுத்துவிட்டால் என்ன..? பாவம் பிள்ளைகள்! ‘ ‘அபிதா தனக்குள் யோசித்தாள்.
வெளியே மழைக்காற்றுடன் சரசமாடிக்கொண்டு மழை பொழிந்துகொண்டிருந்தது.
( தொடரும் )
No comments:
Post a Comment