ஈராறு முகமுடைய இனியதமிழ் கந்தவேளே
தீராதவினை யனைத்தும் தீர்த்துவிடும்
கந்தவேளே
மாறாத சூரரது மனந்திருந்தும் வகையினிலே
மயில் சேவலாக்கி வரங்கொடுத்தாய்
கந்தவேளே !
போராடும் குணமனைத்தும் போக்கிவிடு கந்தவேளே
பொய்களவு எனுமனைத்தும் பொசுக்கிவிடு
கந்தவேளே
ஆராத காதலுடன் அனுதினமும் வணங்குகிறோம்
ஐயாநீ ஓடிவந்து அரவணைத்துக் காத்துவிடு
!
உண்ணாமல் நாமிருந்து உனைப்போற்றி நிற்கின்றோம்
எண்ணமெலாம் உன்நினைப்பே எப்போதும்
இருக்குதையா
பண்கொண்டு உனைப்பரவி பாடியாடி நிற்கின்றோம்
பார்த்துவிடு திருக்குமரா பதம்பணிந்தே
தொழுகின்றோம் !
மண்மீது பிறந்துநாம் வாழ்கின்ற
பொழுதெல்லாம்
உன்மீது புலன்செல்ல உமைமைந்தா
அருளிவிடு
கண்திறந்து பார்க்கையிலே கந்தாநீ
வரவேண்டும்
கலியுகத்தில் உனையன்றி வேறுதுணை ஏதையா !
-->
No comments:
Post a Comment