கச்சதீவும் அதன் வரலாறும்.


மீனவர்களுடன் தொடர்புடையதாகவே பார்க்கப்பட்டு வரும் கச்சத்தீவு என்றால் என்ன? எப்படி உண்டானது? ஏன் இந்தியாவின் கையைவிட்டு போனது என்பது குறித்த விரிவான தகவல்கள்..
கச்சத்தீவு அமைப்பு
கச்சத் தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். கச்சத் தீவு தமிழகத்தின் ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ளது. கடலோர எல்லை, நாட்டிக்கல் மைல் (NAUTICAL MILES) அளவு கொண்டு சர்வதேச அரங்கில் கணக்கிடப்படுகிறது. அதன்படி கச்சத் தீவு ராமேஸ்வரத்திலிருந்து 12 நாட்டிக்கல் (Nautical Miles) மைல் அளவுக்கும் குறைவான தூரத்தில் அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் ராமநாதபுரம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த 8 தீவுகளில் கச்சத் தீவும் ஒன்றாகும். 1480ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட்டு வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டானதாக சொல்லப்படுகிறது.
1. ராமேஸ்வரம், 2. குந்துகால், 3. புனவாசல், 4. முயல் தீவு, 5. பூமரிசான் தீவு, 6. முல்லைத் தீவு, 7. மணல் தீவு, 8. வாலித் தீவு (கச்சத் தீவு), 9. அப்பா தீவு, 10. நல்ல தண்ணீர் தீவு, 11 உப்பு தண்ணீர் தீவு, 12 குடுசடி தீவு
கோடிக்கணக்கான இந்து மதத்தினர் நம்பும் ராமாயண இதிகாசத்தில் ஸ்ரீராமரும், வாலியும் போரிட்ட தீவுதான் கச்சத் தீவு. 23.07.1974-ல் நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில், அப்போதைய குவாலியரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிற்கால பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கச்சத் தீவை, ‘வாலி தீவு’ என கூறியுள்ளார்
பாக் நீரிணை (Palk Strait)
பாக் நீரிணை என்பது இலங்கையின் வடக்கு கடற்கரைப் பகுதியையும் இந்தியாவின் தன் கிழக்குக் கடற்கரைப் பகுதியையும் இணைக்கும் 22 மைல் அகலமுள்ள நீர்ப்பரப்பாகும். இது ஆங்கிலக் கால்வாயை விட சிறியது.
1755 முதல் 1763 ஆன் ஆண்டு வரை சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்த ராபர்ட் பாக் என்பவரின் பெயர் நீரிணைக்கு சூட்டப்பட்டுள்ளது. பாக் நீரிணையும் மன்னார் வளைகுடாவும் பாம்பன் நீரிணை என்ற சிறிய பரப்பால் இணைக்கப்படுகின்றன. இந்தப்பகுதியில் கடலின் அகலம் வெறும் 1350அடி. ஆழம் 10 முதல் 15 அடி வரை தான் இருக்கும்.

அந்தோணியார் ஆலயம்
கச்சத்தீவில் புகழ்பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் ஒன்று உள்ளது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த தேவாலயத்தை கட்டினார். இலங்கையில் இனக் கலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது.


இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கை எல்லைக்கு போனது. ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. மீன் பிடிக்க அனுமதி இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு திரும்பினர். தொடர்ந்து கடந்த ஆண்டு வரை கச்சத்தீவு விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் இருந்து அதிகளவில் பக்தர்களும், பத்திரிகையாளர்களும் சென்று திரும்பினர்.
2011ஆம் ஆண்டு ஆலயவிழா, மார்ச் 20 அன்று இரு நாட்டு பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனையுடன் சிறப்பாக நடந்தேறியது.
இந்திய நீதிமன்றமும் கச்சத் தீவும்

கீழக்கரை வாசுதேவன் செட்டியார் என்பவர் கச்சத் தீவிற்குச் சில பொருட்களைக் கொண்டு சென்றார். இந்திய அரசின் சுங்க இலாகாவினர் அவரைத் தடுத்தனர். பொருள்களைப் பறித்தனர். வழக்கு உச்ச நீதிமன்றம் வரைச் சென்றது. விசாரணை செய்த நீதிபதிகள், “கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே. அங்கு சென்று வாணிகம் செய்ய ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமையுண்டு. இந்தியர் யார் வேண்டுமானாலும் அங்கு போகலாம்” என்று தீர்ப்பளித்தனர்.

ஒரு முறை கச்சத் தீவுப் பகுதியில் ஒருவர் முத்துக்குளித்து எடுத்து வைத்திருந்த சங்குகளை வேறொருவர் திருடிவிட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவ்வழக்கை ஏற்று விசாரித்துத் தீர்ப்பளித்தது. இதனால் கச்சத் தீவுப் பகுதியில் சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவைகளின் அதிகாரம் அமுல்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது.
இந்திய அரசின் முன்னாள் வழக்கறிஞர் (Attorney General) நிரேன்டே “அன்றும் சரி, இன்றும் சரி, கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே” என்று கூறினார்.

மற்றொரு தீர்ப்பில் இராமநாதபுரம் துணை ஆட்சியர் இலங்கையின் தலைமன்னாருக்கு 5 கிலோ மீட்டர் மேற்கு வரை தன் அதிகாரத்தைச் செலுத்தியுள்ளார். பாம்பன் வந்த அரபுப் பயணிகளைக் குள்ளக்காரன் பெட்டியிலேயே இறக்கிவிட்ட இலங்கைப் படகோட்டிகள் மீது தொடரப்பட்ட வழக்கில் இலங்கைப் படகோட்டிகளுக்கு அபராதம் விதித்து மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டது.

தமிழக அரசு அதிகாரிகளின் அலட்சியம்

a) 1972
ஆம் ஆண்டு சூலை மாதம் 15 ஆம் தேதி தமிழக அரசு ஆவணக் காப்பகத்தின் மூலம் இராமநாதபுரம் மாவட்ட அரசு இதழின் திருத்திய புதுப்பதிப்பு வெளியிடப்பட்டது. அந்நூலின் தொடக்கத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் வரைபடம் அச்சாகியுள்ளது. அந்த வரைபடத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் பகுதியாகக் கச்சத்தீவு காட்டப்படவில்லை. அன்றைய தேதியில் இந்தியப் பகுதியான கச்சத்தீவை விட்டுவிட்டு எப்படி வரைபடம் வரைந்தார்களோ தெரியவில்லை. முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் முன்னுரையையும் பெற்றுள்ளனர்.

b)
பத்தாண்டுகட்கு ஒரு முறை எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் குடியில்லாத ஊர்ப் பகுதிகள் கூடத் தவறாமல் குறிக்கப்படுவது வழக்கம். ஆனால் 1951, 1961, 1971 ஆண்டுகளில் ஆள் அற்ற பல இடங்களும் தீவுகளும் குறிக்கப்பட்டிருக்கக் கச்சத்தீவு விடுபட்டுள்ளது. இது தவறான செயல் ஆகும்.
கட்சத்தீவு தாரை வார்புப் பின்னணி
1920 ஆம் ஆண்டில் கச்சத் தீவு எங்களுக்குத் தான் சொந்தம் என்று இலங்கை அரசு கூற ஆரம்பித்தது. இந்தியா 1956ம் ஆண்டிற்குப் பின்னால் தன்னுடைய கடல் எல்லை கோட்டை 3 கடல் மைல்களில் இருந்து 6 கடல்மைல்களாக விரிவுப்படுத்தியது. அத்துடன் மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைல்கள் தூரத்திற்கு விரிவுபடுத்தியது. கச்சத்தீவை கைப்பற்ற இந்தியா எடுக்கும் முயற்சி என்று இதனை இலங்கை அரசு கருதி போட்டியாக 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை வெளியிட்டது.
1973ம் ஆண்டு அன்றைய பிரதமரான இந்திராகாந்தி இலங்கை சென்றார். 1974ம் ஆண்டு இலங்கை அதிபர் சிறிமாவோ பண்டார நாயகே இந்தியா வந்தார். இந்திராவும், சிறிமாவோவும் நடத்திய பேச்சு வார்த்தையில் தமிழகத்தை கேட்காமலே கச்சத்தீவு கை மாறியது.
28.06.1974-ல் கச்சத் தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து, அந்த ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் இலங்கை பிரதமர்கள் கையெழுத்திட்டனர். ஆனாலும், ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம். இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்றெல்லாம் விளக்கமளித்து, அப்போது தமிழக மக்களை சமாதானப்படுத்தியது அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு.
இது தொடர்பான விவாதம் 23.07.1974 அன்று நாடாளுமன்றத்தில் நடந்தபோது அதில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சா; ஸ்வரன்சிங், “1921-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் மீன்பிடி எல்லை (FISHERY LINE) வகுக்கப்பட்டு கச்சத் தீவின் மேற்குப் பகுதியில் இந்திய மீனவர்களும், கிழக்குப் பகுதியில் இலங்கை மீனவர்களும் மீன் பிடித்து வந்துள்ளனர். இலங்கைக்கு அருகே உள்ளது கச்சத் தீவு. இலங்கைக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இந்தியாவுக்கும் கச்சத் தீவுக்கும் இடையே உள்ள தூரம் அதிகம்” என்று பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து, கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதற்கு சப்பைக் கட்டு கட்டினார்.
1976 ஆம் ஆண்டு ஒப்பந்தம் (இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன்பிடி உரிமை பற்றிய கடிதப் போக்குவரத்து நடந்தது. அந்த கடிதங்களே 1976 மார்ச் மாதம் ஒப்பந்தமாக அங்கீகரிக்கப்பட்டது) கச்சத் தீவு பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லவும் கூடாது. மீன் பிடிக்கவும் கூடாது. கச்சத்தீவு அந்தோனியார் கோயில் திருவிழாவிற்கு மக்கள் செல்லகூடாது என்று முற்று புள்ளி வைத்தே விட்டது.
1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21லிருந்து இன்றுவரை நாம் தீர்மானம் நிறைவேற்றி கொண்டே இருக்கிறோம்.சீன ராணுவம் கச்சத் தீவை தனது தளமாக பயன்படுத்த இலங்கை அனுமதித்துள்ளது என செய்திகள் வருகின்றன. அதன்படி பார்த்தால் கச்சத் தீவை நாம் மீட்காவிட்டால் எதிர்காலத்தில் இந்தியாவிற்கு – குறிப்பாக தமிழகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கச்சத்தீவு இருக்கப் போகிறது.
1971 முதல் 1974 ஆம் ஆண்டு வரை அந்தோணியார் விழாவின் போது இலங்கை முப்படைகளம் அங்கு முகாமிட்டன. இராணுவ ஹெலிகாப்டர் கச்சத் தீவில் வட்டமிட்டுக் கொண்டேயிருந்தது. போர்க் கப்பல் கஜபாகு கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தியா கடுமையான எதிர் நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை; தன் படையையோ அதிகாரிகளையோ அனுப்பி உரிமையை நிலைநாட்டவில்லை. தன் நாட்டுத் தீவு என்ற அக்கறையே இல்லாமல் இருந்தது. பாகிஸ்தான், சீனப் போரில் பல்லாயிரக்கணக்கான சதுர மைல் பூமிகளை அந்நாட்டிடம் இழந்து இன்னும் அதை மீட்க முடியாத இந்திய அரசு – மேற்கு வங்கத்தின் பெருவாரியை வங்க நாட்டுக்கும், அந்தமான் நிக்போபர் அருகில் உள்ள கொக்கோ தீவை பர்மாவிற்கும் தானம் செய்த இந்திய அரசு அதுபோல் கச்சத் தீவைத் தாமாகவே இலங்கைக்குக் கொடுக்க முடிவு செய்து விட்டது.
இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” இலங்கை எளிதாக ஆக்கிரமிப்புச் செய்தது. இந்திய மண்ணில் அடிக்கடி கால் வைத்தது.
இலங்கை முப்படையினர் கச்சத் தீவில் முகாம் இட்டும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டதால் கச்சத் தீவு இலங்கைக்கு உரியது என்று ஒப்புக் கொண்டது என்பதே பொருளாகும். இது இந்திய அரசின் மாபெரும் தவறாகும். தமிழகம் அவற்றைக் கண்டு மவுனம் காத்தது அதைவிடப் பெரிய தவறு.
கச்சத்தீவு ஒப்பந்தம்
ஸ்ரீலங்கா மற்றும் இந்திய குடியரசு நாடுகளுக்கிடையே நீண்ட கடல்(Historic Waters) எல்லையும் சம்மந்தமான விவகாரங்களுக்கான ஒப்பந்தம் 26,28 ஜூன் 1974
ஸ்ரீலங்கா மற்றும் இந்திய குடியரசு நாடுகளுக்கிடையே நீண்ட கடல் (Historic waters) எல்லை வகுக்கவும் மற்றும் அது சம்மந்தமான விவகாரங்களை நடுநிலையான, தெளிவான, முறையில் தீர்க்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது.
எல்லா கேள்விகளுக்கும், எல்லா கோணங்களிலும் ஆய்ந்துள்ள நிலையில், அதிலிருந்து வரலாற்று மற்றும் பிற ஆதாரங்களையும், சட்ட நுணுக்கங்களையும் கணக்கில் கொள்ளப்பட்டது.
பின்வருமாறு ஒப்புக்கொள்ளப்பட்டது.
சரத்து-1
கடலில் ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவுக்கான எல்ல, பால்க் ஜலசந்தி முதல் ஆதாம் பாலம் வரையிலான பெருவட்ட வில் அல்லது பின்வரும் அட்சக்கோடு(Latitude) அல்லது தீர்க்கக்கோடு (longitude)
நிலை 1: 10° 05’ வடக்கு 80° 03’ கிழக்கு
நிலை 2: 9° 05’ வடக்கு 70° 35’ கிழக்கு
நிலை 3: 9° 40.15’ வடக்கு 79° 22.60’ கிழக்கு
நிலை 4: 9° 21.80’ வடக்கு 79° 30.70’ கிழக்கு
நிலை 5: 9° 13’ வடக்கு 79° 32’ கிழக்கு
நிலை 6: 09° 06’ வடக்கு 79° 32’ கிழக்கு
சரத்து - 2
சரத்து-1 இல் குறிப்பிட்டுள்ள நிலைகளின் ஆயக்கூறுகள் அனைத்தும் புவியியல் ஆயக்கூறுகள் (Co-ordinates) மற்றும் அவற்றை இணைக்கும் நேர்க்கோடுகள் கொண்ட இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அவை இரு அரசுகளின் அளவையர்களால் கையெழுத்திடப்பட்டுள்ளது.
சரத்து - 3
கடல் மற்றும் கடல் படுகையின் மேலுள்ள, மேலே குறிப்பிட்ட நிலைகள் யாவும் எந்த முறைமையில் என்பது இதே நோக்கங்களுக்காக முறையே அங்கீகரிக்கப்பட்ட அளவையர்களால், ஏக மனதுடன் தீர்மானிக்கப்படும்
சரத்து - 4
இரு நாடுகளும் தன்னௌடைய எல்லைக்குல் கடல், தீவுகள், கண்டத்திட்டுகள், கீழ்மண் மேல் இறையாண்மை, தனிப்பட்ட எல்லை மற்றும் கட்டுப்பாடு கொண்டிருக்கும்.
சரத்து - 5
முந்தைய விவகாரங்களால், இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் இதுவரை உள்ளது போல் கட்சத்தீவு நுழைவை அனுபவிக்கலாம் மற்றும் இந்த விசயங்களுக்கு ஸ்ரீலங்காவுக்கு விசாவோ, பயண ஆவணமோ பெற வேண்டியதில்லை.
சரத்து - 6
ஸ்ரீலங்கா மற்றும் இந்திய அகப்பல்கஆள் தங்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமையை அனுபவிக்கலாம்.
சரத்து - 7
ஏதாவது ஒரு புவியியல்சார் பெட்ரோலியம் அல்லது இயற்கை வாயு வயல்கள் அல்லது ஏதாவது மணல், சரளைகள் மற்றும் கனிமபடிவு வயல் அல்லது புவியியல் அமைப்பு, சரத்து-1 இல் குறிப்பிட்டுள்ள எல்லையை தாண்டி விரிவாக்கப்பட்டால், அந்தப்பகுதி அல்லது வயல், சுரண்டப்பட்ட பகுதி, முழுதும் அல்லது பகுதி, எல்லை எனக் கொண்டு, இரு நாடுகளும் சுரண்டப்பட்ட வயல்பகுதி பற்றி ஒப்பந்தத்திற்கு தேட வேண்டும். மேலும் எந்த பாங்கில் வரையறுக்கலாம் எனபது பகிர்ந்தளிக்கப்படும்.
கொழும்பு, 26, ஜூன்,1974
புது டில்லி 28,ஜூன்,1974
நீதிமன்றத்தில் வழக்கு
கச்சத்தீவு ஒப்பந்தம் செல்லாது என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தப்படி கச்சத்தீவு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமை இல்லை என இந்திய அரசு, நீதிமன்றத்தில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் நலனுக்கு ஊறு விளைவிக்கும், ஒன்றிய அரசின் செயல் குறித்து, தமிழக முதல்வரும், தமிழக எதிர்கட்சி தலைவரான வை. கோவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக மக்களுக்கு நியாயம் கோரி கடிதம் அனுப்பியுள்ளனர்.
கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்தான சட்ட விமரிசனங்கள்
கச்சத்தீவு ஒப்பந்தம் சட்ட ஏற்பு பெற வேண்டுமானால் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 368 இன்படி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 1 இல் சட்ட திருத்தம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இந்திய ஒன்றிய அரசு அவ்வாறு மேற்கொள்ளவில்லை.
தமிழகத்திற்கு சொந்தமான ஒரு பரப்பு என்பதால் அதை அந்த மாநில சட்டமன்ற தீர்மானம் மற்றும் ஒப்புதல் பெறவில்லை.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு. 3 இன் படி மாநில எல்லைகளை மாற்றம் பற்றி செய்யப்படும் சாதாரணச் சட்டம் கூட நாடாளுமன்றத்தில் இயற்றப்படவில்லை.
1974 கச்சத்தீவு ஒப்பந்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது. “பாக் நீரிணைக்கும் ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய வரலாற்று நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்” என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தாகிய போது 1958 ஆம் ஆண்டு ஐ.நா. சட்டம் செயலில் இருந்தது.
கடல் பரப்பு குறித்த ஐக்கிய நாடுகள் சபை ஒப்பந்தம், 1958’ (1958 GENEVA CONVENTIONS ON THE LAW OF THE SEA) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையை பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதி முறையையும் கூறுகிறது. இரண்டு அண்டைநாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பை சரியாக பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரையிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்ததில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு (equidistance principle) பின்பற்றப்படவில்லை. இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல். சம தொலைவில் எல்லைக் கோடு வகுப்புதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப் பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு இராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் தலைமன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது. இவ்வொப்பந்தத்தில் வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டுள்ளது.
1974 –ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் சம தொலைவுக் கோட்பாடு மீறப்பட்டு 10 மைலுக்கு 20 மைல் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கம். தவிர இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. 1958ஆம் ஆண்டு ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திராகாந்தி - சிறீமாவோ ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதுவும் சொல்லப்பட வில்லை.
தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன?
மத்திய அரசால் எடுத்துச் செல்லப்பட்ட கட்சத் தீவு ஆவணங்கள் அனைத்தும் மீட்க வேண்டும்
உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை தூரிதப்படுத்தி 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை முறிக்க வேண்டும்.
ஜெர்மனி, ஹேம்பர்க்கில் இயங்கி வரும் சர்வதேச கடல்சார் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்து கட்சத்தீவை மீட்க வேண்டும்.
நன்றி: Lr. C.P.சரவணன்,
வழக்கறிஞர் 9840052475
-->











No comments: