பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 18


துணைவன்


தமிழில் ஏராளமான பக்திப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.  அவை யாவும் புராண கதைகளை அடிப்படையாகக் கொண்டே உருவாகின.  1969ம் ஆண்டு வெளிவந்த துணைவன் படம் இதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. முதன் முறையாக சமூக கதையை அடிப்படையாகக் கொண்ட பக்திப் படமாக இந்தப்படம் உருவானது.  

எம்.ஜி.ஆரையும் மிருகங்களையும் நடிக்க வைத்து தொடர்ந்து படங்களை தயாரித்து வந்த சாண்டோ சின்னப்பா தேவர் ஒரு மாறுதலாக பக்திப்படம் ஒன்றை தயாரித்தார்.  தான் முழுமையாக நம்பும் முருகப் பெருமானின் பெருமையைக் கூறும் படமாக இதனை அவர் எடுத்தார். 

மருதமலை கோயிலையே தஞ்சம் என கருதி கோயிலில் மணியடித்து இட்ட வேலைகளை செய்து வரும் படிப்பறிவில்லாத கதாநாயகன் அநியாயமான வீண் பழி சுமத்தப்பட்டு கோயிலை விட்டும் ஊரைவிட்டும விரட்டப்படுகிறான்.  அதனால் கடவுளை நம்பமறுக்கிறான்.

நகரத்திற்கு வரும் கதாநாயகன் சமய சொற்பொழிவு ஒன்றிற்கு சென்று கடவுளை நம்பவேண்டாம் கடவுள் இல்லை என்று கலாட்டா செய்கிறான்.  சொற்பொழிவாற்றும் பெரியவர் அவனை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறி நம்பிக்கையூட்டி அனுப்பி வைக்கிறார்.  தொடர்ந்து பழக்கடை ஒன்றில் வேலை கிடைக்கிறது. வேலை வணங்கியவனுக்கு வேலை கிடைத்ததுடன் வேளையும் கூடி வருகிறது.  இலட்சாதிபதியாகிறான்.  படித்த பெண்ணையும் மணக்கிறான்.  ஆனால் அவளோ இறை நம்பிக்கை இல்லாதவள்.
இப்படி போகும் துணைவன் படத்தில் கதாநாயகனாக ஏவி.எம்.ராஜனும் நாயகியாக சௌகார்
ஜானகியும் நடித்தனர்.  இவர்களுடன் சுந்தரராஜன்,  நாகேஷ், சச்சு ஆகியோரும் நடித்தனர்.  படத்தில் முருகனாக நடித்தவர் பேபி ஸ்ரீதேவி.  இதுவே ஸ்ரீதேவியின் முதல் படமாகும்.

இவர்கள் எல்லோருடனும் இன்னுமொரு முக்கியயஸ்தரும் படத்தில் தோன்றினார்.  குருமுருககிருபானந்த வாரியார் படத்தில் தோன்றி முருகன் பெருமைகளை எடுத்துச் சொல்லி ரசிகர்களை பக்தர்களாக்கினார்.  

படம் சில காட்சிகளில் தோன்றும்படி தேவர் கேட்ட போது வாரியார் ஆரம்பத்தில் மறுத்துவிட்டார். 
ஆனால் தேவர் தொடர்ந்து அவரை வற்புறுத்தவே இறுதியில் வாரியார் சம்மதித்தார்.  படத்தில் வாரியாரின் சீடராக தேவர் வருகிறார்.

முதற் பகுதி படம் கறுப்பு வெள்ளையாகவும் பிற்பகுதி வண்ணத்திலும் படமாக்கப்பட்டிருந்தது.  தேவர் தயாரித்து முதல் கலர் படம் என்று இதனை சொல்லலாம்.  முருகன் கோயில்களை கலரில் காட்டி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தனார் தேவர்.

முருகன் பெருமை கூறும் படத்திற்கு பாலமுருகன் கதைவசனத்தை எழுதினார். நல்ல வசனகர்த்தாவான இவரின் வசனங்கள் அர்த்தத்துடனும் சிந்திக்கத் தக்கனவாகவும் அமைந்தன.  பாலமுருகனின் வசனங்களை தங்கள் நடிப்பின் மூலம் மேன்மை படுத்தினார்கள் ராஜனும் சௌகாரும்.
துணைவன் படத்திற்கு மறறுமொரு துணையாக அமைந்தவர் கே.பி.சுந்தரம்பாள் படத்தின் பிற்பகுதியில் வரும் அவர் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை பக்திப் பரவசத்திற்கு இட்டுச் சென்றார்.  வாரியாரும் சுந்தரம்பாளும் படத்திற்கு ஒரு பிளஸ் பொயின்ட் என்றால் மிகையில்லை.

தேவரின் படங்களுக்கும் பக்திப் படங்களுக்கும் வழக்கமாக இசையமைக்கும் கே.வி.மகாதேவன் துணைவனுக்கும் அருமையாக இசையமைத்திருந்தார்.  மருதமலையானே, கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது பர்வதராஜனின் மகனே ஞானமும் கல்வியும் நல்லருள், பழனிமலை மீதிலே நான் யார் என்பதை போன்ற பாடல்கள் இனிமையாக கண்ணதாசனினதும் மருதகாசியின் வரிகளிலும் கருத்துடன் அமைந்தன.
துணைவன் படத்தை எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்திருந்தார்.  படத்தை சலிப்பு தட்டாமல் விறுவிறுப்பாக எடுத்திருந்தார்.  கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று ராஜனும் சௌகாரும வாதம் பண்ணும் உணர்ச்சிகரமாக காட்சிகள் ஊனமுற்ற குழந்தையை பார்த்து குவிக்கும் காட்சிகள் என்று ராஜனும் சௌகாரும் உணர்ச்சிகரமாக நடித்திருந்தார்கள்.  இவர்களுடன் கே.பி.சுந்தரம்பாள் வாரியார் பங்களிப்பும் படத்தின் வெற்றிக்கு வழிகோலியது.

பிற்காலத்தில் பல சமூக கதைகளை கொண்ட பக்திப் படங்கள் வந்த போதும் அவற்றிற்கு இந்தப் படமே முதற்படியானது.

திரையிடப்பட்ட போது நூறு நாட்கள் ஓடிய துணைவன் ஒவ்வோர் ஆண்டும் கந்தசஷ்டி காலத்தில் தொலைக்காட்சியில் வந்து ரசிகர்களை மகிழ்விக்கிறது!

No comments: