இளைய தலைமுறையினருக்கு முன்னோடிச்சிந்தனையாளரின் தாரக மந்திரங்களை நினைவுபடுத்தும் முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “ - பாமினி செல்லத்துரை


( கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட உரை )

ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 
இது மகாகவி பாரதியின் தீர்க்கதரிசனம் மிக்க தாரகமந்திரம்.
தனது ஞானகுருவாக  பாரதி ஏற்றுக்கொண்டவர் எமது இலங்கைத்திருநாட்டின் வடபுலத்தில் பிறந்த அருளம்பலம் சுவாமி அவர்கள்.
எமக்கு   ‘ இலங்கையில் பாரதி  என்ற  ஆய்வு நூலை வராக்கியிருக்கும்  எழுத்தாளர் முருகபூபதி அவர்கள்  பாரதியை தனது ஆதர்சமாகவும் ஞானத்தந்தையாகவும் ஏற்றுக்கொண்டு வாழ்பவர்.
சுப்பிரமணியன்  பிறந்த எட்டயபுரத்தையும்,   அவர் பாரதியாக பட்டம் பெற்ற எட்டயபுரம் அரண்மனையையும் இறுதியில் பாரதி சென்னையில் வாழ்ந்த இல்லத்தையும் - அங்கு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மதம்பிடித்த யானையொன்று பாரதியை  தூக்கி எறிந்த இடத்தையும் மாத்திரம் தரிசித்து எழுதாமல், யாழ்ப்பாணத்தீசன் என்று பாரதி வர்ணித்த அருளம்பலம் சுவாமி  சமாதியாகியிருக்கும்  பருத்தித்துறை வியாபாரிமூலை ஆலயத்தையும் தரிசித்துவிட்டு வந்தே, இந்த அரிய நூலை எமக்கு வழங்குகின்றார்.
முருகபூபதி அவர்களுக்கு  அறிமுகம் அவசியமில்லை. இவர் எமது தாயகத்தில் நீர்கொழும்பூரில் பிறந்தவர்.  அங்கு 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இன்றைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியின் முதலாவது மாணவர்.  அக்காலத்தில் அதன்பெயர் விவேகானந்தா வித்தியாலயம்.  இவருக்கு 1954 ஆம் ஆண்டு ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்த ஆசான் பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களுக்கே இந்த நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். பண்டிதரே அந்தக்கல்விச்சாலையின் முதல் அதிபர்.
முருகபூபதி   கடந்த  ஜனவரி  மாதம் இலங்கை வருவதற்கு முன்னர்,  பிரான்ஸ் நாட்டிற்குச்சென்று, அங்கு நடந்த பண்டிதர் மயில்வாகனனார் நூற்றாண்டு விழாவில் கலந்துரையாற்றிவிட்டு,  அவுஸ்திரேலியா திரும்பும் வழியில் இங்கும் வந்து தனக்கு எழுத்தறிவித்த பண்டிதர் அவர்களின் நூற்றாண்டை எமது கல்லூரியிலும்  நடத்திவிட்டே சென்றார்.
அந்தக்கல்லூரியில்தான் நானும் கல்வி கற்றேன். எனது தமிழ் ஆசிரியர் வேறு யாருமல்ல..! அவர்தான் திருமதி மாலதி முருகபூபதி அவர்கள்.
இந்த நூலின் உள்ளடக்கத்தை முருகபூபதி அவர்கள் முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் காலைக்கதிர் நாளிதழின் வாரப்பதிப்பில்தான்  நாற்பது வாரங்கள் எழுதினார்.
அதன் தேவை உணர்ந்து பலரதும் வேண்டுகோளின் பிரகாரம் இந்தத்  தொடர் அவுஸ்திரேலியா சிட்னியிலிருந்து வெளியாகும் தமிழ்முரசு இணைய இதழிலிலும்  வெளியாகியிருக்கிறது.
தற்காலத்தில் எம்மவர்கள் மத்தியில்  நூல்களை வாசிக்கும் பழக்கம் அருகிக்குறைந்து வருவதனால், இந்தத் தொடரை தனியாக ஒரு நூல் வடிவில் வெளியிடும் எண்ணத்தை இவர் கொண்டிருக்கவில்லை என்பதையும் இவருடனான உரையாடலின்போது தெரிந்துகொண்டேன்.
எனினும்,  இந்த நூலின் உள்ளடக்கம்,   பல செய்திகளை சொல்வதனாலும் இளம் தலைமுறையினர் அறியாத பல அரிய தகவல்களை பதிவுசெய்திருப்பதனாலும், இதனை நூலாக்குமாறு முருகபூபதி அவர்களைத் தூண்டிக்கொண்டிருந்தவர் எனது ஆசிரியர் திருமதி மாலதி அவர்கள்.
தூண்டிக்கொண்டிருந்தது மட்டுமன்றி இலங்கை வந்து இதனை நூலாக்கி அதன் பதிப்பாளராகி இங்கு எங்களுக்கு வரவாக்கியிருக்கிறார். அதனால் அவரை முதலில் பாராட்டுகின்றேன்.   எனது உரையின் தொடக்கத்தில்
 அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 
என்ற மகாகவியின் தாரகமந்திரத்தை இங்கு உச்சரித்தமைக்கும் முக்கிய காரணம் ஒன்றுண்டு.

முருகபூபதி அவர்கள் , இந்தத் தாரக மந்திரத்தையே ஒரு மகுடவாசகமாக ஏற்று,  தான் புகலிடம் பெற்ற அவுஸ்திரேலியா கண்டத்தில் 1989 ஆம் ஆண்டளவில் , இலங்கையில் நீடித்த போரினால் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை மெல்பனில் ஆரம்பித்தார். ஆறு குழந்தைகளுக்கு முதலில் உதவிய இந்த அமைப்பின் பெயர்தான்  இலங்கை மாணவர் கல்வி நிதியம்.
இந்த அமைப்பு  இதுவரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு உதவியிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் முருகபூபதி தொடர்ந்தும் ஒரு தொண்டனாவே பயணித்தவர்.
முப்பது ஆண்டுகளின் பின்னர் தற்போதுதான் இந்த அமைப்பின் தலைவராகியிருக்கிறார். இந்த நிதியம் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும் சுநாமி கடல்கோள் அநர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும்,  முன்னாள் பேராளிகளாக இயங்கி புனர்வாழ்வு பெற்ற  மாணவர்களுக்கும்,  வறுமைக்கோட்டில் வாழும்  மாணவர்களுக்கும் உதவியிருக்கிறது.  அவர்களை இன்று நல்ல நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
இந்த கல்வி நிதியத்தின் உதவியை பெற்று கல்வியை நிறைவுசெய்துகொண்ட பல மாணவர்களில் நானும் ஒருத்தி என்பதை இங்கு தெரிவிக்கின்றேன்.
இந்த நிதியுதவியை நான் பெற்ற தொடக்க காலத்தில் என்னை முருகபூபதி அய்யாவுக்குத் தெரியாது. என்னை இந்த நிதியத்திற்கு தெரிவுசெய்தவர் எனது மதிப்பிற்குரிய ஆசிரியர் மாலதி அவர்கள்.
குழந்தைப்பருவத்தில் நான் எனது தந்தையாரை இழந்துவிட்டேன்.  இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் உதவியினால் நான் கல்வி கற்று,  பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி, இன்று நுவரேலியா மாவட்டத்தின் கல்வி வலயத்தில்  பிரதி கல்விப்பணிப்பாளராக பணியாற்றிவருகின்றேன்  என்பதை மிகவும் தன்னடக்கத்துடன்தான் இங்கு பதிவு செய்கின்றேன்.
1989 ஆம் ஆண்டு இந்த இலங்கை மாணவர் கல்வி நிதியத்தை முருகபூபதி அய்யா அவுஸ்திரேலியாவில் தொடங்கியபோது அவர் அங்கு ஒரு அகதியாகவே வாழ்ந்தவர் என்பதையும் அறிந்துள்ளேன்.
தனது இரண்டாவது நூல் சமாந்தரங்கள் கதைத் தொகுதியை மெல்பனில் வெளியிட்டு,  அதன்மூலம் கிடைத்த நிதியை மூலதனமாக வைத்துக்கொண்டு இந்த கல்வி நிதியத்தை தொடக்கியிருக்கிறார்.
அதன்பின்னர் பல அன்பர்களும் அவருடன் இந்தத் திட்டத்தில் இணைந்து ஏராளமான மாணவர்களுக்கு உதவி வருகின்றனர். அவுஸ்திரேலியா அரசில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பாக இயங்கிவரும் இந்நிதியத்தின் தாரகமந்திரம்தான் பாரதியின் அந்த மகத்தான வரிகள்.
எங்கள் தேசத்தில் இன்னமும் நிலமற்று நிரந்தர வீடுகள் அற்று ஏன், மலசலகூட வசதிகளும் இல்லாமல் ஏராளமானவர்கள் வாழ்கிறார்கள். இந்த நிலைதான் பாரதி வாழ்ந்த காலத்திலும் தமிழகத்தில் இருந்தது. இன்றும் இருக்கிறது.
நாட்டுக்காக அரசுகள் ஏதோவெல்லாம் செய்கின்றன. மக்களும் செய்கிறார்கள்.
பாரதி தீர்க்கதரிசி. கல்வியின் மகத்துவம் உணர்ந்தவர். அதனால்தான், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றார்.
அவ்வாறு எழுத்தறிவிக்கப்பட்டு இன்று உங்கள் முன்னிலையில் பேசிக்கொண்டிருக்கின்றேன்.
முருகபூபதி அவர்கள் பாரதியைப்போன்றே நண்பர்களை உருவாக்கிவருபவர். அதனால்தான் அவரால் பொதுப்பணிகளில் இணைந்து இயங்கமுடிகிறது.
பாரதியின் நண்பர்கள் பற்றியும் இலங்கையில் பாரதி நூல் விபரித்துள்ளது. இந்நிகழ்விற்கு தலைமை தாங்கும் திரு. தெளிவத்தை ஜோசப் அய்யா அவர்கள் நாடறிந்த எழுத்தாளர்.   சாகித்திய ரத்னா. அத்துடன் தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் இலக்கிய அமைப்பின் விஷ்ணுபுரம் விருதும் பெற்றவர்.
இந்நிகழ்வில் இலங்கையில் பாரதி ஆய்வுத் தொடரை நாற்பது வாரங்கள் வெளியிட்ட யாழ்ப்பாணம் காலைக்கதிர் ஆசிரியர் திரு. வித்தியாதரன் அவர்களும்   கலந்துகொண்டு சிறப்பித்து, வெளியீட்டுரை நிகழ்த்துவது குறிப்பிடத்தகுந்தது. இந்தச்செயல் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்கு முன்மாதிரியானது.
இலங்கையில் பாரதி நூலை  மதிப்பீடு செய்யவந்துள்ள ஞானம் மாத இதழின் ஆசிரியர் மதிப்பிற்குரிய மருத்துவர் தி. ஞானசேகரன் அவர்களும் ஈழத்தின் மூத்த எழுத்தாளர். இலக்கியத்திற்காக பல விருதுகள் பெற்றவர். இதே மண்டப வளாகத்தில் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முருகபூபதி அய்யாவுடன் இணைந்த பலர் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின்  பிரதம இணைப்பாளராகத் திகழ்ந்தவர்.
பாரதி குறித்த பல விடயங்களுக்கு  முன்னுரிமை கொடுத்தவர். அவைபற்றியெல்லாம் இந்த நூல் விரிவாகப்பேசுகிறது.
புதிய தலைமுறைகளுக்கு அரங்குகளில் முக்கிய இடம் வழங்கவேண்டும் என்று விரும்புபவர் முருகபூபதி.  இந்த நிகழ்வில் அவர் என்னை மாத்திரம் அல்ல மேலும் இரண்டு புதிய தலைமுறையினரையும்  அறிமுகப்படுத்துகிறார்.
செல்வி வானதி ஆறுமுகம் அவர்கள் எங்கள் நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் பணியாற்றுபவர். கலை, இலக்கிய ஆர்வலர் மொழியியலில் சிறப்புக்கலை தேர்ச்சி பெற்றவர்.  அத்துடன்  மொழியாய்வாளர், திறனாய்வாளர், வானதிச்சந்ரா என்ற புனைபெயரிலும் எழுதிவருபவர்.
கௌரி அனந்தன், இலங்கை – சிங்கப்பூர் என பறந்துகொண்டே சமூகப்பணிகளும் மேற்கொண்டவாறு இலக்கியப்பிரதிகள் எழுதிவருபவர். அத்துடன் நீடித்து முற்றுப்பெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வழிகளிலும் மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவரும் தன்னார்வலர்.
இவர் அவுஸ்திரேலியாவில் முருகபூபதி அய்யா அங்கம் வகிக்கும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்பட்ட அனைத்துலக பெண்கள் தின விழாவிலும் உரையாற்றியவர் என்பதையும் அறிந்துள்ளேன்.  
இன்றைய நிகழ்வில் இலங்கையில் பாரதி நூலின் சிறப்பு பிரதிகளை பெற்றுக்கொள்ள வருகை தந்திருக்கும் திரு. மீலாத் கீரன் அவர்கள், ஈழத்தின் மூத்த எழுத்தாளர், நாவலாசிரியர் இளங்கீரனின் புதல்வராவார். இளங்கீரன் பற்றியும் இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
திருமதி ஜெயந்தி விநோதன் அவர்களின் அன்புக்கணவரின் பெயரில் அமைந்த மண்டபத்திலிருந்துதான் நாம் பேசிக்கொண்டிருக்கின்றோம். இவரும் முருகபூபதி அய்யாவின் நீண்டகால குடும்ப நண்பர். இவரும் அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் எழுத்தாளர் விழாக்களில் முன்னர் கலந்துகொண்டிருப்பவர் என்பதையும் அறிகின்றோம்.
இந்நூலின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ளும் புரவலர் ஹாஸிம் உமர் அவர்கள் புரவலர் புத்தகப்பூங்கா என்ற பதிப்பகத்தை நடத்தி,  பல இளம் தலைமுறையினரின் நூல்களை வெளிக்கொணர்ந்தவர். அத்துடன் இலங்கையில் தலைநகரம் உட்பட பல பிரதேசங்களில் இடம்பெறும் தமிழ் நூல் வெளியீட்டு அரங்குகளில் கலந்து சிறப்பித்து முதல் பிரதிகளை பெற்றுக்கொள்ளும் இலக்கிய ஆர்வலரும் பரோபகார சிந்தனையாளருமாவார்.
இலங்கையில் பாரதியின் சிந்தனைத் தாக்கம் எத்தகையது என்பதை மாத்திரம் இந்த நூல் பேசவில்லை. இந்த நாட்டின் கலை, இலக்கியவாதிகள், மற்றும் ஊடகவியலாளர்கள்  வெகுஜன அமைப்புகள் பாரதி குறித்து மேற்கொண்ட பல அரிய பணிகளையும்  ஆதாரங்களுடன் பேசுகின்றது.
புதிய இளம் தலைமுறையினருக்குத்  தெரியாத பல அரிய – சுவாரஸ்யமான செய்திகளையும் இந்த நூல் உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது. அதனால், பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளில் உயர்தர வகுப்பில்  படிக்கும் மாணவர்களுக்கும் சிறந்த உசாத்துணை நூலாகவும் இலங்கையில் பாரதி விளங்குகிறது.

---0---



-->










No comments: