காற்றில் குளிர் குறைந்து விட்டது. மூச்சை இழுத்தால் சுவாசப்பையைக்
குளிர வைக்கும் காற்று இப்போது இல்லை.
இப்போது காற்றில் பூக்களின் வாசனை வருகிறது. மலையில் அவ்வப்போது எரியும் காட்டுத்தீயின்
புகை வாசனையும் வரும். இயற்கை இன்னொரு கோடையைச் சந்திக்கத் தயாராகிறது.
அது ஊதா பூக்கள் பூத்துக் குலுங்கும் பிளம் மரங்களின்
வரிசைகளின் நடுவே ஓடும் நடைபாதை. இரு
புறமும் அம்மரங்களே ஒவ்வொன்றும் பெரிய பூங்கொத்துகளாகி நிலமே அவற்றைப் பிடித்துக் கொண்டு யாரையோ வரவேற்க காத்திருப்பதை போல தோன்றும் அந்தத்
காட்சிக்காகவே எவ்வளவு தூரமானாலும் நடக்கலாம்.
இதே மரங்கள்தான் ஒரு மாதத்திற்கு முன்னர் இலைகள்
கொட்டி கிளைகள் வெறும் தடிகளாய்த் தெரிய நின்றிருந்தன.
மரங்களின் இந்த மாறுதல்களை ஒத்ததாய் மனித வாழ்வின் மாறுதல்களை ஒப்பிட்டு எழுதப்பட்ட
இலக்கியங்களுள் டோல்ஸ்டோயின் 'போரும்
அமைதியும்' நாவலில் இதே மனநிலை மாறுதல்களை
எதிர் கொண்ட ஒரு பாத்திரம் நினைவுக்கு வருகிறது.
19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்துடன் தொடங்கும் இந்த
நீண்ட இலக்கியத்தில் ஒரு முக்கிய பாத்திரம் அந்திரேய், நெப்போலியனின் படைகளுடனான யுத்தத்தில்
ஈடுபட்ட ரஷ்ய படையணிகளின் ஓர் அதிகாரி.
யுத்தத்தில் காயப்பட்டுப் பின் காணாமல் போய் யுத்த
களத்திலிருந்து வீடு திரும்பும் போது இவனது இளம் மனைவி லீஸா பிரவசத்தின்போது இறந்து விட்ட தகவல் கேட்டு
மனமுடைந்து விடுகிறான்.
இந்த நாட்களில் அந்திரேய் பாதையருகில் ஒரு முதிர்ந்த
ஓக் மரத்தைக் காண்பதாக டோல்ஸ்டோய் எழுதுகின்றார். அதன் இலைகள் எல்லாம் உதிர்ந்து போய் மொட்டையாக நிற்கும் அது தனது நிகழ் வாழ்வை சுட்டுகின்றதா என்று தனக்குள் கேட்டுக் கொள்வான் அந்திரேய்.
ஆனால் அவன் நினைத்ததுபோல வாழ்க்கை அப்படியே தொடரவில்லை.
எதிர்பாரா விதமாய் இன்னொரு பெண்ணான நட்டாஷாவைச் சந்தித்ததிலிருந்து அவன் மனநிலையிலும், வாழ்விலும் ஏற்பட்ட மாற்றத்தை
டோல்ஸ்டாய் இன்னோரிடத்தில் அதே ஓக் மரத்துடன் ஒப்பிடுகிறார்.
இப்போது அது மீண்டும் துளிர்த்து இலைகள் சடைத்து முற்றாக மாறிப் போய்விட்ட காட்சியை அந்திரேய் காண்கிறான். மீண்டும் அதைத் தனது
நிகழ் வாழ்க்கையின் குறியீடாய் உணர்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை.
நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது என்று தமிழில்
எழுதப்படாத இடங்களே இல்லை. மரங்களின் மாற்றத்திற்கு
ஒத்ததாய் மனங்களின் மாற்றத்தையும் ஒப்பிடுவது தவிர்க்கமுடியாத எழுத்து மரபாகிவிட்டது.
அளவெட்டியில் வாழ்ந்த கவிஞர் மஹாகவி உருத்திரமூர்த்தி
வெள்ளம் வந்து பயிர்களை மூடிப் போய்விட்ட போதும் துவண்டு விடாத மன உறுதி கொண்ட விவசாயியைப் பின்வருமாறு பாடினார். மீண்டும் முளைக்கப் போவது பயிர்கள் மட்டுமல்ல தனது நம்பிக்கையும்தான்
என்ற விவசாயியின் மன ஓர்மத்தையே அவர் பாடினார்.
"பாட்டத்தில் வீழ்ந்தழிந்து பாழாகிப் போய்விடவே
கொள்ளை போல் வந்து கொடுமை விளைவித்து
வெள்ளம் வயலை விழுங்கிற்று
பின்னர் அது வற்றியதும்
ஓயா வலக்கரத்தில் மண்வெட்டி பற்றி
அதோ பார், பழையபடி கிண்டுகின்றான்
சேர்த்தவற்றை முற்றும் சிதறடிக்கும் வானத்தைப்
பார்த்தயர்ந்து நிற்கும் பழக்கமற்றோன்
வாழி,
அவன்.
ஈண்டு முதலில் இருந்து முன்னேறுதற்கு
மீண்டும் தொடங்கும் மிடுக்கு."
(மஹாகவியின் 'மீண்டும் தொடங்கும் மிடுக்கு' கவிதையிலிருந்து)
No comments:
Post a Comment