சிட்னியில் கம்பன் விழா மற்றும் ஞான வேள்வி செ .பாஸ்கரன்

.


தொடர்ந்து நான்கு நாட்கள் ஞான வேள்வி என்றும் கம்பன் விழா என்றும் காதில் அமுது  பாய்ந்தது. தமிழுக்கும் அமிழ்தென்று பேர் . அந்த அமிழ்தை பாச்சியது அவுஸ்திரேலிய கம்பன் கழகம். திரு ஜெய்ராம் ஜெகதீசன்  இளையோரோடு இணைந்து வருடம் தோறும் தருகின்ற விழாதான் கடந்த நான்கு நாட்களும் சிட்னியில் இடம் பெற்றது.

இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களும் பேராசிரியர்  ஸ்ரீபிரசாந்தன் அவர்களும் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த முனைவர்  .இராதா மாது அவர்களும் பிரிஸ்பேனில் இருந்து வருகை தந்திருந்த திரு. க. குமாரதாசன் அவர்களும் சிட்னி கம்பன் கழக திரு .திருநந்தகுமார், திரு.ஜெய்ராம் ஜெகதீசன் இவர்களுடன் கம்பன் கழக இளவல்களும் இயல் , இசை நாடகம் என்று பொழிந்து தள்ளிவிடடார்கள். ஒருநாள் அல்ல இருநாள் அல்ல நான்கு நாட்கள். அதுவும் சனி ஞாயிறு நாட்களில் இரவும் பகலும் என திரும்பும் இடமெல்லாம் தமிழே ஒலித்தது.

இவ்வருடம் மாருதி விருது டாவினில் வசிக்கும் பேராசிரியர் சபாரத்தினம் பிரதாபனுக்கும் , ஏற்றமிகு இளைஞர் விருது சிட்னியில் வசிக்கும் ஆசிரியர் திருமதி யசோதை செல்வகுமாரன் அவர்களுக்கும், சான்றோர் விருது மெல்பேர்னில் வசிக்கும் வானொலியாளர் திரு நாகமுத்து இராமலிங்கம் விக்ரமசிங்கம், சிட்னியில் வசிக்கும் வணக்கத்துக்குரிய ஜோன் ஜெகசோதி, பிரிஸ்பேனில் வசிக்கும் ATBC வானொலி செய்தியாளர் சாரதா ரவிச்சந்திரன்,
மற்றும் மெல்பேர்னில் வசிக்கும் பரதநாட்டியக்  கலைஞர் திருமதி சாந்தி ராஜேந்திரன் ஆகியோருக்கும் வழங்கி கௌரவிக்கப் பட்டது .

பட்டிமன்றம் ,கவியரங்கம் , வழக்காடு மன்றம் , கலைத்தெரி  அரங்கம் , விவாத அரங்கு, நாடக அரங்கு , கவிநய அரங்கு  என்று தமிழ் எங்கும் பரந்து கிடந்தது. மண்டபம் நிறைந்த மக்கள் இலக்கிய நிகழ்வுக்கு வருகை தந்திருந்தது எதிர் கால நம்பிக்கையை நிலை நாட்டியது.


கம்பவாரிதியின் சொற் பிரவாகத்தை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு, அத்தனை  நயம், அவ்வளவு ஆழம், அவர் நீண்டகாலம் வாழவேண்டும், பல கம்பன் கழக நிகழ்வுகளுக்கு ஆஸ்திரேலியா வருகை தர வேண்டும்.

தம்பி ஜெயராமுக்கும் கம்பன் கழக இளவல்களுக்கும்  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அருமையான நிகழ்வு அருமையான வார இறுதி, இனிதே நிறைந்தது. காத்திருப்போம் அடுத்த கம்பன் விழாவிற்காக
1 comment:

Anonymous said...

உண்மைதான் இவ்வார இறுதி தமிழ் சுவைத்த வார இறுதியாக அமைந்திருந்தது. என்ன தமிழ் , என்ன விளக்கம் , எப்படி எல்லாம் வாதிடுகிறார்கள். எம் குழந்தைகள் பேசும் தமிழ் பார்த்து பரவசம் அடைந்தேன். வாழ்க கம்பன் கழகம்.
சுட சுட இந்நிகழ்வை தந்ததிற்கு வாழ்த்துக்கள் தமிழ்முரசு

காயத்திரி