ஐந்து இலட்சம்
தமிழ்த்திரையில் நட்சத்திர நடிகையாகத் திகழ்ந்த சரோஜாதேவி தனது திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஆனால் சில கால்திலேயே படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். என்றாலும் முன்னரைபோல் எம். ஜி. ஆருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டவில்லை. ஆனாலும் சிவாஜி ஜெமினி ஆகிய இருவருடனும் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பம் அவருக்கு அமைந்தது. அந்த வகையில் ஜெமினியுடன் அவர் நடித்த பணமா பாசமா படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பலனாக மேலும் சில படங்களில் இணைந்து நடிக்கும் சந்தர்பம் தொடர்ந்தது.
அவ்வாறு ஜெமினியுடன் சரோஜாதேவி ஜோடியாக நடித்த படம் தான் ஐந்து இலட்சம். படத்தை தயாரிப்பதற்கே ஐந்து இலட்சம் ரூபாய்தான் 69ம் ஆண்டு ஆகியிருக்கும். அதனால்தானோ என்னவோ படத்திற்கு ஐந்து இலட்சம் என்று பெயரிட்டு விட்டார்கள்.
இந்த காலத்தில் முன்பின் அறிமுகபமில்லாதவர்களுடன் facebook, whatsapp போன்றவற்றின் மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இதற்கு இருந்த ஒரே சாதனம் பேனா நண்பர்கள் ஆகும். முன்பின் தொடர்பில்லாதவர்கள் கடிதம் மூலம் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு கருத்துப் பறிமாறி நட்பு பாராட்டுவது பேனா நண்பர்கள் என்ற வழிமூலம் நடந்து கொண்டிருந்தது. இதன் இன்றைய விஞ்ஞான வளர்ச்சிதான் facebook, whatsapp ஆகும்.
கல்கத்தாவில் இருக்கும் கதாநாயகியும் சென்னையில் இருக்கும் கதாநாயனுக்கும் பேனா நண்பர்கள் என்ற அஞ்சல் வழி மூலம் தொடர்பு ஏற்பட்டு பின்னர் நேரில் சந்தித்து காதல் உருவாகிறது. கதாநாயகியோ கோடீஸடவரி. கதாநாயகனோ ஒன்றுமில்லாதவன். வேலை வெட்டி கூட இல்லாதவன்.
இப்படிப்பட்டவனுக்கு எப்படி தன் மகளை கொடுப்பது என்று கவலைப்படும் கதாநாயகியின் தந்தை ஒரு விசித்திர நிபந்தனையை கதாநாயகனுக்கு விதிக்கிறார்.
ஐந்து இலட்சம் ரூபாயை அவனிடம் கொடுத்து ஐந்து மாதங்கள் கழித்து மேலும் ஒரு நூறு ரூபாயுடன் வந்து சேர் அல்லது கொடுத்த பணத்துடனாவது வா என் மகளை உனக்குத் தருகிறேன் என்கிறார். ஐந்து இலட்சத்துடன் செல்லும் கதாநாயகன் என்ன செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
படத்தை தயாரித்து டைரக்ட் செய்தவர் ஜீ. ராமகிருஷ்ணன். நகைச்சுவைப் படமாக இருக்க வேண்டும் என்று கருதி படத்தில் ஏராளமான நகைச்சுவை நடிகர்களை நடிக்க வைத்திருந்தார். சோ மனோரமா தேங்காய் சீனிவாசன் சுருளிராஜன் சச்சு, காந்திமதி ராமராவ் என்று பலர் படத்தில் நகைச் சுவையை வழங்கினார்கள்.
கதாநாயகனுக்கு உதவுவதாகக் கூறி சோ போடும் திட்டங்களும் அதனால் ஏற்படும் விளைவுகளும் ரசிக்கும்படி இருந்தன. சரோஜாதேவியின் தந்தையாக வரும் சுந்தரராஜன் மட்டும்தான் படத்தில் ஒரளவு சீரியஸாக நடித்திருந்தார்.
படத்தின் வசனங்களை மாரா எழுதியிருந்தார். படத்திற்கு இசையமைத்தவர் எஸ். எம். சுப்பையா நாயுடு. இவருடைய இசையில் நான் பாடிய முதல் பாட்டு, ஆசைப்பட்டது நானல்ல வயது , ஆகிய பாடல்கள் கேட்கும்படி இருந்தன.
நகைச்சுவை, பொழுதுபோக்கு, இவற்றை மூலதனமாகப் போட்டு ஐந்து இலட்சம் இலாபம் பார்த்தது!
No comments:
Post a Comment