கத்ரி கோபால்நாத் - கானா பிரபா


நான் பாடும் சந்தம்
வார்த்தை உன் சொந்தம்

குரல் வேறு ஆனாலும்
பொருள் ஒன்று அல்லவா

எல்லாமே நம் வாழ்வில்
இரண்டாக உள்ளது

காலம் ஒரு டூயட்
அதிலே இரவு பகல்
இரண்டும் உண்டு......


எஸ்.பி.பி பாடி முடித்து அப்படியே அதை ஏந்தும் சாக்ஸபோன் குழலிசை வாசிப்பு ஒரு நிமிடம் 30 விநாடிகளைத் தொடும் நிறைவு வரை கண் மூடி மோன நிலையில் இருப்பேன். அது வானொலி நிலையத்தில் இருந்தவாறே ஒலிபரப்பினாலோ அன்றித் தனியே இந்தப் பாடலை எனக்கு மட்டுமே கேட்கும் தொலைவில் வைத்திருந்தாலோ இத்தகு தியான நிலைக்கு இட்டுச் சென்று விடும் இந்த வாத்தியக் கட்டின் வாசிப்பு.

டூயட் படம் சாக்ஸபோன் வாத்தியத்தை முன்னுறுத்திய படைப்பு. இதற்கு முன்னரும் பின்னரும் கூடத் திரைப் படைப்புகள் குறித்தவொரு இந்தியப் பாரம்பரிய இசை தழுவிய செவ்வியல் வாத்தியத்தையோ அன்றி மேற்கத்தேய வாத்தியத்தையோ முக்கியத்துவப்படுத்தி வந்திருந்தாலும் இங்கே இது நாள் வரை நமக்குப் புதுமையாக இருந்த வெள்ளைக்கார வாத்தியம் சாஸ்திரிய சங்கீதத்தையும் பாடுகிறதே என்ற ஆச்சரியம் தான் டூயட் படப் பாடல்கள் வெளி வந்த காலத்தில் எழுந்தது. வேடிக்கை என்னவென்றால் இது மாதிரி புதுசு புதுசாகக் கேட்க வேண்டும் என்று மாண்டலின் ஶ்ரீனிவாசின் வாத்திய இசை ஒலிநாடாவை எல்லாம் வாங்கி வைத்துக் கேட்டது என் சக நண்பர்கள் அனுபவத்தில் இதுவே தொடக்கம் எனலாம்.

“டூயட் படத்துக்கு சாக்ஸபோன் வாசிச்சத்து ஒருத்தர் அல்ல, இருவர். ஒருத்தர் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான கத்ரி கோபால்நாத், இன்னொருவர் இதோ இன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும் ராஜூ” என்று அறிமுகப்படுத்தினார் பல்லாண்டுகளுக்கு முன் ஜெயா டிவியில் “என்னோடு பாட்டுப் பாடுங்கள்” நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். ஆனால் டூயட் பாடல்கள் வந்த நாள் முதல் இன்று வரைக்கும் கத்ரி கோபால்நாத் அவர்களுக்குக் கிடைத்த வெகுஜன அங்கீகாரம் சொல்லி மாளாது.  ஒரு தீவிர இலக்கியக்காரன் வணிக சஞ்சிகை வழியாகக் கடைக்கோடி வாசகனை அடைவது மாதிரியானதொரு புகழ் இது. கத்ரி கோபால்நாத் என்ன மகோன்னதம் பொருந்த கலைஞருக்கும் அப்படியே. 

வாத்தியக்காரரை அவரின் போக்கில் வாசிக்க விடடு அதில் தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வார் ரஹ்மான் என்று கடம் வித்துவான் விக்கு விநாயக்ராம் சொன்னதையே புல்லாங்குழல் நவீனும் சொல்லியிருக்கிறார். இதே மாதிரி ஒரு அனுபவத்தோடே ரஹ்மானுடன் கத்ரி கோபால்நாத் கூட இணைய முடிந்தது. 

ஒரு வாத்தியத்தை நினைக்கும் போது அதில் சாகித்தியம் பண்ணியவரே முன்னுக்கு நினைவில் வருமளவுக்கு ஒருவர் தன்னைத் தக்க வைப்பது எப்பேர்ப்பட்ட வெற்றி. விருதுகள் எல்லாம் அப்புறம் தான்.

என்னய்யா இது 69 எல்லாம் சாகிற வயசா என்று இன்று எத்தனை பேர் மனதில் கவலையோடு கேள்வி எழுந்திருக்கும். ஆனால் வழக்கமான எழுத்துச் சம்பிரதாயத்தைத் தாண்டி கத்ரி கோபால்நாத் 
அந்த ஊது குழலின் காற்றாய் இருப்பார்.

வாழ்க்கை ஒரு டூயட்
அதிலே இன்ப துன்பம்
இரண்டும் உண்டு......


No comments: