கங்காரு மண்ணில் கம்பனுக்கு விழா மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


 புலம்பெயர்ந்த நாட்டில் அதுவும் ஆங்கிலம்பேசும் நாட்டில் கம்பனுக்கு விழா எடுப்பது தேவையா ? அப்படி எடுப்பதால் ஏதாவது பயன் ஏற்படுமா ? இப்படியும் சிந்திக்கும் பலரும் இருக்கிறார்கள். பொதுவாக தமிழ் தொடர்பான விழாக்கள் இந்த மண்ணில் நடத்துவது பொருத்தமா என்று கேட்கும் பலரையும் காணமுடிகிறது.
 இந்தியாவில் நடத்தலாம்,இலங்கையிலும் நடத்தலாம்.ஏன்.. மலேசியா, சிங்கப்பூரிலும் கூட நடத்தலாம். எப்படி அவுஸ்திரேலியாவில் நடத்தலாம்? என்றொரு கேள்வி எழுகிறது. தமிழர்கள், தமிழர் நாகரிகம், தமிழர் மொழி செறிந்து இருக்குமிடத்தில் கம்பனுக்குவிழா எடுத்தால் அது பொருத்த மானதாக இருக்கும்.ஆனால் அப்படியான எந்த தன்மையும் அற்ற நாட்டில் கம்பனுக்கு விழா தேவதானா? என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது. கம்பன் விழாவில் பொதுவாக கவி அரங்கம் சொல்லரங்கம்,வழக்காடு மன்றம், பட்டிமன்றம், எனப்பல நிலைகளில் நிகழ்ச்சிகள் இடம்பெறுவது வழக்கம். இந்தவகையில்.. அவுஸ்திரேலியாவில் கம்பன்விழா தேவையா” .”தேவையில்லையா” ..என்றுகூட பட்டிமன்றம் நடத்தலாம் போலத் தோணுகிறதல்லவா?

  விஷயத்துக்கு வருவோம்.புலம்பெயர்ந்து வந்திருக்கும் தமிழர்கள் தமது கலை, கலாசாரங்களை,விழவிடாமல் கட்டிக் காப்பாற்ற உறுதுணையென நம்பியிருப்பது விழாக்களையும்  பண்டிகைகளையும்தான்.அவை சமயம் சார்ந்ததாகவும் இருக்கும்.மொழி பண்பாடு சார்ந்ததாகவும் கூடஇருக்கும். அந்தவகையில் பார்க்கும் பொழுது கம்பனுக்கு எடுக்கும் விழா எல்லா வகையிலும் பொருந்தக் கூடியதாகவே காணப்படுகின்றது.இதனால்த்தான் இந்தநாட்டிலும் கம்பன் விழா நடத்தப்படுகிறது என்பது யாவரும் மனமிருத்த வேண்டிய விடயம் எனலாம்.
  தமிழின் இனிமை,தமிழின் ஆற்றல்,தமிழர் பண்பாடு, தமிழர் நாகரிகம், அத்தனையையும் கம்ப‌னில் கண்டுகொள்ளலாம்.புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகின்றவர்கள் தம்மைப்பற்றி சிந்திப்பதோடு தமது சந்ததிகளைப் பற்றியே பெரிதும் சிந்தித்து அவர்கள்மீது மிகவும் அக்கறை கொள்ளுவது மிக மிக அவசியமானதாகும். அப்படிச் சிந்திக்காது, உழைப்பது, உண்பது,உறங்குவதுமாக இருந்துவிடின்.. நாளாவட்டத்தில் யாவுமே உறங்கியே போய்விடும் நிலைதான் ஏற்பட்டுவிடும் . எனவே எதைச் செய்தாலும் எதிர்காலத்தை எண்ணியேதான் செயற்படவேண்டும்.அப்படி எண்ணியதன் விளைவாகத்தான் அவுஸ்த்திரேலியாவில் கம்பனுக்கு விழா எடுக்கப்படுகிறது..

 அன்னியச் சூழலில் வளருகின்ற எங்கள் பிள்ளைகளுக்கு, எமது அடிப்படை பற்றி சொல்லுவதும், அதன்படி அவர்களை வழி நடத்துவதும் பெரியவர்களான‌ எங்களுக்குள்ள பாரிய பொறுப்பாகும்.இதனை நாங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது கோவில்களைக் கட்டுகின்றோம். சங்கீதம், பரதநாட்டியம், பழக்குகின்றோம்.இவையெல்லாம் எதற்காக? எங்களின் பிள்ளைகள் தடம் மாறிவிடக்கூடாது என்ற நோக்கத்துக் காகத்தானே?
 இந்தவகையில் கம்பன்விழா எதைத்தரும் என்று எங்கள் பிள்ளைகளுக்கு நாங்கள் சொல்லக் கூடியவர்களாக இருக்கவேண்டும்.யாவுமே கணனி மயம். பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருப்பது கணணிதான்.கணணி வழியாகவே சகலதும் நடைபெறுகிறது. இது காலத்தின் கோலம்.விஞ்ஞானம் பல வசதிகளை ஏற்படுத்தியிருப்பது உண்மதான். ஆனால் அதன் வளர்ச்சியால் எங்களின் உள்ளுணர்வுகளுக்கு மதிப்பில்லா தன்மை நாளடைவில் ஏற்பட்டு விடுமோ என்ற ஏக்கமே வியாவித்து நிற்கிறது எனலாம்.
 குடும்ப உறவுகள் சரிகின்றன.மரியாதையை விலை கொடுத்துத்தான் வாங்கவேண்டிய நிலை.நெறி முறை பற்றிச் சிந்திக்க வேண்டி வருகிறது.பற்று, பாசம்,நேசம்,அன்பு, கருணை,அத்தனையும் கணணியின் கைவசம் ஆகி விட்டது.இது நீடிக்கின்றது. இதற்குள் எங்கள் பிள்ளைகள் ஈர்க்கப்படுகின்றனர் இவர்களையெல்லாம் வெளிக்கொண்டு வருவதற்கு பல அரிய பெரிய விஷயங்க ளெல்லாம் கம்பனிடம் இருக்கிறது.அதை நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு விளங்கும்படி செய்யவேண்டும்.    
  அப்பா,அம்மா, பிள்ளை உறவு எப்படி இருக்கவேண்டும்? சகோதரங்களோடு எப்படி இருக்கவேண்டும்?நட்பு என்றால் என்ன?கணவன் மனைவி என்றால் எப்படி வாழவேண்டும் எப்படி இருக்கவேண்டும்? இராமன் என்னும் கதாபாத்திரத்தைக் கொண்டு கம்பன் எங்களுக்கு பாடம் சொல்லித்தருகின்றான் என்னும் செய்தியை நாங்களும் உள்வாங்கி அதனை எமது பிள்ளைகளுக்கும் தெரியப்படுத்தவேண்டும். ஒருவனுக்கு ஒருத்திஎன்னும் தத்துவம் கம்பனால் சொல்லப்பட்டது மருத்துவ் ரீதியாகவும் சரி, குடும்ப ரீதியாகவும்சரி, எத்தனை தீர்க்க தரிசன‌மானது என்பது தற்போது புலனாகிறதல்லவா? இந்த‌ தத்துவத்தை கடைப்பிடித்து ஏக பத்தினிவிரதனாக இராமன் விளங்கியதால் வணங்கத்தக்க தெய்வமாகிறான்.
  இது எமக்கெல்லாம் நல்லதொரு நெறியும் வாழ்க்கைப் பாடமும் அல்லவா? இறைவனிடம் வரங்கள் பல பெற்றாலும்,அதனால் உரங் கொண்டு நின்றாலும், நெறியில்லா முறையில், காமத்துக்கு அடிமைப்பட்டு, ஆணவ நிலைக்கு சென்றால்.. எந்தவரமும், உரமும்,பயனற்றுப்போய் அழிவையே தந்து நிற்கும் என்னும் மிகச் சிறந்த நீதி இராவணன் பாத்திரத்தின் மூலம் கம்பன் எமக்கு காட்டி எம்மை யெல்லாம் எச்சரிக்கின்றான்.இந்தநிலை எமக்கும் வராமல் இருப்பதற்கே இந்த எச்சரிக்கை. நாங்களும் இராவணனாக உருவாகாமல் இராமனாக இருக்கவேண்டும் என்பதற்கே இந்தப்பாடம் உதவும்.
ஒருவரிடம் எதைச் சொல்ல வேண்டும்?எதைச் சொல்லக் கூடாது? எப்படிச் சொல்ல வேண்டும்? இதற்காக கம்பனால் இராயணத்தில் வந்து நிற்பவன் அனுமான். அனுமனது பாத்திரம் சொல்லும் செய்தி எங்கள் அனைவர்க்கும் நல்லதையே தரவல்லது.
 அரசநீதி, குடும்பநீதி, ச‌மூகநீதி, சம‌ய நீதி, அத்தனையும் கம்பனில் காணலாம். புலம்பெயர்ந்த மண்ணில் காணப்படும் சூழலால் எங்களின் பிள்ளைகள் தடம் மாறிப்போகும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருக்கின்றன. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் தத்துவத்தை உணரமுடியாத சூழல் இங்கு காணப்படுகிறது என்பதை நாமெல்லாம் உணர்ந்து கொள்ள முடிகிறது. தனிமனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் எங்கள் பிள்ளைகளிடத்து இல்லாமல் போய்விடுமோ என்னும் ஏக்கமும் பல பெற்றோரிடத்தும்  காணப்படுகிறது.  இவையெல்லாவற்றும் ஏற்ற விடைகளை கம்பன் தனது காவியத்தில் பல பாத்திரங்கள் ஊடாக உளவியலை உள்வாங்கி  மிகவும் சிறப்பாகவே வழங்கி இருக்கிறான். இந்த அரிய பெரிய விடயங்களையெல்லாம் கம்பன் விழா வழங்கி நிற்பதால் கம்பனது விழா இங்கு நடைபெறுவது எங்களுக்குத் தேவையாகவே இருக்கிறது என்றுதான் கருதவேண்டி இருக்கிறது. கம்பன் விழா என்பது களியாட்ட விழா அல்ல‌ கருத்துக்களை அள்ளித்தரும் பயன்தரும் பெரு விழா.
 உடை மாறலாம்.உணவுவகை மாறலாம்.மொழி பேசும் தன்மையிலும் கூட மாறுதல் ஏற்படலாம்.ஆனால் எங்களது அடிப்படை மட்டும் எந்தக்காலத்தும் மாறவே கூடாது. அடிப்படை என்பது..எங்களின் பண்பாடும்,விழுமியங்களும்தான்.  எங்கு  சென்றாலும் வேருக்கு பழுதுவராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

கம்பனுக்கு விழா எடுப்பதும், வள்ளுவனுக்கு விழா எடுப்பதும்,  எடுப்பதும், எங்களின் சந்ததியைக் காப்பதற்கு எடுக்கின்ற விழா என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது.

தமிழுக்கு கதிஎது தெரியுமா? கம்பராமாயணமும் திருக்குறளும் ஆகும். கதி என்னும் பதம் ஏற்பட்டதே - கம்பராமாயணத்திம் முதல் எழுத்தும், திருக்குறளின் முதல் எழுத்தும் இணைந்தே என்பதை மனமிருத்தல் வேண்டும். இதனால்த்தான் புரட்சிக் கவி பாரதிகூட  யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல்என்று பாடியிருப்பது மனக்கொள்ளத் தக்கதாகும். கம்பனும் ,வள்ளுவனும், தமிழின் காவலர்கள் என்பதுதானே இதன் அர்த்தமாகிறது அல்லவா. தமிழுக்கு மட்டு மல்ல சமூகத்துக்கும் காவலர்கள்தான்.
 இங்கு நடைபெற்ற  கம்பன் விழாவால் எங்கள் பிள்ளைகளுக்கு நல்ல‌ உணர்வு  ஏற்படலாம்.அதற்கு பெற்றோர்கள் பல நிலைகளில் உதவி நிற்க வேண்டும். கம்பன் விழாவில் நடைபெறும் ஒவ்வொரு அம்சங்களையும் பிள்ளைகளுக்கு எடுத்து விளக்குதல் வேண்டும். இங்கு நடைபெறும் கம்பன் விழாவில் பல இளையவர்களும் பங்கு கொள்ளுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.வயது வந்த எங்களைவிட எங்களின் வாரிசுகளாக வளர்ந்து வருபவர்களுக்கு நல்ல பயனைக் கம்பன் விழா நல்குவதுதான் கம்பன் விழாவின் முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டும். அந்த நோக்கத்தை கம்பன் விழா அமைப்பாளர்களும் கருத்தில் இருத்தியே செயற்பட்டு வருவதால் கங்காரு மண்ணில் கம்பனுக்கு விழா எடுப்பது மிகவும் பொருத்தம் என்றே எண்ணக் கூடியதாக இருக்கிறது..

தந்தைசொல் காத்தமைந்தன் தாய்மயை மதித்தசெம்மல்

சொந்தங்கள் தூய்மையாக துணிந்துமே நின்றவள்ளல்

நந்தமிழ் கம்பன்காட்டும் நாட்டையே துறந்தவீரன்

எந்தையே ராமன்பாதம் என்றுமே போற்றுவோமே


-->
கம்பனின் விழாவில்நாளும் கற்றிடும் பாடமெல்லாம்

எம்சிறார் வாழ்விலென்றும் ஏற்றமாய் இருக்குமன்றோ 
சென்றிடுவோர்கள் எல்லாம் சிறந்திடும் கருத்தைக்கேட்பர்
நந்தமிழ் கம்பனாடன் நல்விழா சிறந்து வாழ்க


No comments: