ஒரு பிடி சாம்பல் (சிறுகதை) - உஷா ஜவாகர் (அவுஸ்திரேலியா)


19.08.2019 அன்று காலை 8 மணியளவில் சந்திரன் தன் அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருக்கும் போது தான் அவனது நெருங்கிய நண்பன் ஸ்ரீதரன் அவனை மொபைலில் அழைத்து அந்த துயரச் செய்தியை தயக்கத்துடன் தெரிவித்தான்.
"சந்திரா உன்ர பழைய மனிசி சுனிதா காரோட்டிட்டு போகேக்கில சில்வர் வாட்டர் டிராபிக் லைட்ஸ்க்கு(Silverwater traffic lights) கிட்ட முன்னுக்கு வந்த டிரக்குடன் அவளின்ர கார் மோதி சீரியஸான நிலைமையில் அவளை ஹாஸ்பிடலில அட்மிட் பண்ணின பிறகு அங்கு ஹாஸ்பிடலில் அவள் செத்துப் போய்விட்டாளாம். வெரி ஸாரி மச்சான்!" என்று கூறிவிட்டு மொபைலை துண்டித்துவிட்டான்.
சந்திரனுக்கு தலை சுற்றுமாற் போலிருந்தது. நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக் கொண்டது. அலுவலக ரிசப்ஷனிஸ்ட்டை தொடர்பு கொண்டு தான் ஒரு கிழமை அலுவலகத்துக்கு வர இயலாது என தெரிவித்தான். தன்னுடைய மேலதிகாரிக்கும் தான் ஒரு கிழமை வர இயலாது எனவும் அதற்கான காரணத்தையும் எஸ்.எம் .எஸ் (SMS) மூலம் அனுப்பினான்.
சந்திரன் தங்கள் ஹாலில் மாட்டப்பட்டிருந்த தங்கள் திருமண புகைப்படத்தை உற்று நோக்கினான்.அவனையும் அறியாமல் அவன் கண்கள் கலங்கின.
ஏழு வருடங்களுக்கு முன் கொழும்புக்கு போய் சுனிதாவை திருமணம் செய்யும் போதும் மணவறைக்கு முன்னே கொழுந்து விட்டெரிந்த அக்கினியிலிருந்து கிளம்பிய புகையால் அவன் கண்கள் கலங்கின. அப்போது சந்திரனின் தங்கை ரமா தான் அதைக் கவனித்து தன் கையிலிருந்த கைக்குட்டையை அவனிடம் கொடுத்து அவன் கண்களை துடைக்கச் செய்தாள்.

திருமணச் சடங்குகளிலும் சுனிதா வேண்டா வெறுப்பாக கலந்து கொள்வதை சந்திரன் அவதானித்தான். கொழும்பில் பிறந்து வளர்ந்த பெண் ஆதலால் சடங்குகளில் நம்பிக்கை இல்லாத பெண் ஆக இருப்பாளோ என்ற ஐயம் அவனது மனதில் கிளம்பியது.
அந்த ஐயத்தை அடக்கிக் கொண்டே சுனிதாவின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டான் சந்திரன்.
முதல் இரவன்றும் அவன் அவளை ஆசையுடன் நெருங்கியபோதும் சற்றே விலகியே இருந்தாள் அவள். சில நாட்களில் அவர்களது தாம்பத்திய வாழ்க்கை சரியாகியது.
ஆனால் சுனிதா பிடிவாதக் குணம் உடையவளாகவே இருந்தாள். சந்திரன் ஏதும் கூறினாலும் அதற்கு ஏறுமாறாகவே நடப்பாள்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் கழிந்தவுடன் சந்திரன் சுனிதாவையும் அழைத்துக் கொண்டு சிட்னிக்கு வந்துவிட்டான்.
அவன் லிட்கம்(Lidcombe) என்ற இடத்தில் வாங்கியிருந்த இரண்டு அறை பிளாட்டில் (Flat) தான் அவர்களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது.
அவர்களது நண்பர்களினது வீடுகளுக்கு சந்திரன் அவளை அழைத்துச் செல்லும் போதெல்லாம் வேண்டா வெறுப்பாகவே வந்தாள்.
சிலவேளைகளில் சமையலில் மிகுந்த அக்கறை எடுத்து சமைத்து வைப்பாள். பலவேளைகளில் பெரிதாக ஒன்றும் சமைத்தது வைக்கமாட்டாள்.
இப்படியே ஆறுமாதங்கள் ஓடியிருக்கும். சுனிதா தானும் வேலைக்குச் செல்லவேண்டும் என அடம்பிடித்தாள்.
சிட்னியில் தம்பதிகள் இருவரும் வேலைக்குப் போனால் வசதியாக வாழலாம் தான். எனவே சந்திரனும் சுனிதா வேலைக்குச் செல்வதற்கு சம்மதம் அளித்தான்.
அவள் பிரைவேட் கம்பெனி ஒன்றில் ரிசப்ஷனிஸ்ட் ஆக வேலை செய்வதற்கு தெரிவுசெய்யப்பட்டாள். அவளது அழகும் நாகரிக தோற்றமும் நுனிநாக்கு ஆங்கிலமும் அவளுக்கு அந்த வேலையைப் பெற்றுக் கொடுத்தன.
அவளது அந்த அபரிமிதமான அழகும் நுனி நாக்கு ஆங்கிலமுமே அவளை  திசை மாறிய பறவையாக்கி விட்டன. அவள் அந்த அலுவலகத்தில் சேர்ந்த சில மாதங்களிலேயே அங்கே வேலை பார்த்த அவளது மேலதிகாரி ஸ்டீவ் (Steve) மேல் காதல் கொண்டாள். ஸ்டீவ்வின் அழகும் கம்பீரமான தோற்றமும் வேலையில் அவன் காட்டிய திறமையும் அவளை இரும்பைக் கவர்ந்த காந்தம் போல் கவர்ந்து விட்டன.
ஸ்டீவும் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வாழ்பவன். அவனுக்கு ஒரு தற்காலிக துணை, காதலி தேவைப்பட்டாள். அதற்கு சுனிதா பலியாகிவிட்டாள்.
ஸ்டீவும் சுனிதாவும் ஆரம்பத்தில் காபிக்காக, பின்னர் மதிய உணவுக்காக வெளியே சென்றார்கள். வெளியே சென்ற அவர்களது அன்பு எல்லை மீறியது.
சுனிதாவும் பெண்ணுக்கே உரித்தான நாற்குணங்களான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற அந்த நற்குணங்களையும் நாற் திசையிலும் பறக்கவிட்டாள். குடும்ப மானத்தை கப்பலேற்றிவிட்டாள்.
ஆரம்பத்தில் இது பற்றி அறியாத சந்திரன் அவர்களது இரண்டாவது திருமண நிறைவு நாளுக்காக வெள்ளையில் ரோஜா மொட்டுக்கள் விரிந்திருந்த ஒரு அழகான சேலையை வாங்கி வந்து தன் அலுமாரியில் தன் உடுப்புகளுக்கு அடியே ஒளித்து வைத்திருந்தான்.
அடுத்த நாள் சனிக்கிழமை. அவர்களது இரண்டாவது திருமண நிறைவு நாள். வெள்ளிக்கிழமை இரவு வேலை முடித்து வந்த சந்திரன் தொலைக்காட்சியில் மூழ்கிப் போயிருந்த சுனிதாவிடம் "சுனிதா! நாளைக்கு எங்கட இரண்டாவது வெடிங் ஆனிவஸரி! நாளைக்கு விடிய எழும்பினவுடனேயே தோய்ஞ்சு போட்டு பிள்ளையார் கோயிலுக்கு ஒருக்கா போயிட்டு வருவமென்ன? " என்றான்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்களை நிலைத்திருக்க சுனிதா வேண்டா வெறுப்பாக " . கே." என்றாள். 
அடுத்த நாள் சனிக்கிழமை விடிந்ததும் கட்டிலிலிருந்து எழுந்த சந்திரன் தன் அருகே படுத்திருந்த சுனிதாவைக் காணவில்லை என்றதும் ஒரு வேளை பாத்ரூமில் தலை முழுகிக் கொண்டிருப்பாள் என்றே நினைத்தான்.
சுனிதா சந்திரனையே தலைமுழுகி விட்டு ஸ்டீவுடன் ஓடிப் போனது பின்னால் தான் தெரியவந்தது.
அவனது மொபைலுக்கு சுனிதா ஒரு குறுஞ் செய்தியை அனுப்பியிருந்தாள். "சந்திரன் எனக்கு உங்களுடன் வாழ ஏனோ பிடிக்கவில்லை! எனக்கு எல்லா விதத்திலும் பொருத்தமாயிருக்கிற ஸ்டீவுடன் நான் வாழ போகிறேன்" இது தான் அந்த குறுஞ் செய்தி.
செய்தி குறுஞ் செய்தி தான். ஆனால் அந்த குறுஞ் செய்தி அவனை நிலைகுலைய வைத்துவிட்டது. அவன் பதைபதைத்து  துடிதுடித்துப் போனான்.
அடுத்த இரண்டு மாதங்களும் அவனால் ஒழுங்காக சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. அலுவலகத்துக்கும் செல்ல முடியவில்லை. அவன் மிகுந்த மனச் சோர்வுக்குள்ளானான்.
விஷயம் கேள்விப்பட்ட அவனது நண்பன் ஸ்ரீதரனும் அவன் மனைவி லதாவும் தான் சந்திரனுடைய வீட்டுக்கு வந்து அவனுக்கு ஆறுதல் கூறினார்கள். இரவில் அடிக்கடி உணவு சமைத்து வந்து அவனுடன் கூடவே இருந்து சாப்பிட்டார்கள்.
சந்திரன் மிகுந்த மனச் சோர்வுக்கு உள்ளாகியிருந்ததை உணர்ந்து ஸ்ரீதரன் சந்திரனை தங்கள் குடும்ப வைத்தியரிடமும் அழைத்துச் சென்றான்.
மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிய சந்திரன் வேலைக்குப் போகத் தொடங்கினான். ஆனால் இரவுகளில் தனிமையிலிருக்கும் போது மட்டும் "ஏன் சுனிதா இப்படி செய்தாள்? ஏன் என்னை விட்டு விலகி ஓடினாள்?" என்ற கேள்வி பூதாகரமாய் எழுந்து அவனது மனதை போட்டு உலுக்கும். ஆனால் அவன் மனதை உலுக்கிய உருக்கிய கேள்விக்கு அவனுக்கு விடை கிடைக்கவேயில்லை.
காலமகள் சிறகை விரித்து பறக்கத் தொடங்கினாள். நாட்கள், மாதங்களாகி, ஓர் ஆண்டாயிற்று. சுனிதா அவனிடமிருந்து விவாகரத்து கோரி அதை பெற்றுக் கொண்டாள்.
சந்திரனுக்கு விவகாரத்து அளிக்க மனமில்லை தான். ஆனால் "வேண்டாத பாரத்தை, பாவத்தை நீ மடியிலயும் நெஞ்சிலயும் சுமந்து கஷ்டப்படாதே சந்திரா" என்று ஸ்ரீதரனின் வற்புறுத்தலுக்கு இணங்கித்தான் சந்திரன் சுனிதாவுக்கு விவாகரத்து அளித்தான்.
சந்திரனுக்கு சுனிதாவுக்கு விவகாரத்து அளித்தாலும் அவனது உள்ளத்திலிருந்து அவளை ரத்து செய்ய முடியவில்லை. அவளை பற்றிய எண்ணங்களை அவனது உள்ளத்தில் மரத்துப் போகவில்லை. அவளை மறக்கவில்லை. அப்போது இலையுதிர் காலம்! மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்துகொண்டேயிருந்தன. ஆனால் அவன் மனத்திலிருந்து அவளது நினைவுகள் உதிரவேயில்லை. இப்படியே இரண்டு வருடங்கள் ஓடின. இலங்கையிலிருந்து அவனது தாய் அவ்வப்போது தொலைபேசி அழைப்பு எடுத்து "தம்பி, இப்பிடி எத்தனை நாளைக்குத்தான் தனிய கிடந்து கஷ்டப்படப் போறாய்? உனக்கும் பிற்காலத்துல ஒரு துணை வேணும் தானே! உனக்கு இங்கே இருந்து ஒரு பொம்பிளை பார்த்து அனுப்பவா?" என தயவாக கேட்டாள். மன்றாடிப் பார்த்தாள். அவனது தங்கை ரமாவும் அவன் மறுமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்தினாள். அவன் முடியவே முடியாது என்று விட்டான். "என்னால ஏனோ சுனிதாவை மறக்க முடியேலை! இன்னொரு கலியாணத்தை என்னால நினைச்சு கூட பார்க்க முடியேலை" என ஆணித்தரமாக மறுத்துவிட்டான்.
சுனிதா அவனை விட்டுப் பிரிந்த நாளிலிருந்து அவன் தன் தலைக்கு தலையணை கூட வைத்துப் படுப்பதில்லை! அவ்வப்போது அவளுக்காக அவன் வாங்கி வந்த சேலையை எடுத்துப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் அலுமாரியின் உள்ளேயே வைத்துவிடுவான்.
இதற்கிடையில் சுனிதா ஸ்டீவுடன் ஒரு வருடம் வாழ்ந்து விட்டு பிரிந்துவிட்டாள். பிறகு லிட்கமுக்கு (Lidcombe) அருகிலுள்ள ஆர்பனில் (Auburn) வசித்து வருவதாக கேள்விப்பட்டான்.
"இந்த சுனிதா ஏன் இப்படி என்னை விட்டு விட்டு சென்றாள்? என்ற கேள்வி அவனுள் எழும்போது சில சமயம் அவள் மீது கோபம், ஆத்திரம்,எரிச்சல் ஏற்பட்டதுண்டு. தன்மீது ஆற்றாமையும் ஏற்பட்டதுண்டு.
இப்போது ஸ்ரீதரனின் தொலைபேசி அழைப்பால் கலங்கிப் போயிருந்த சந்திரனுக்கு அடுத்த நாள் ஆர்பன் (Auburn) ஹாஸ்பிடலிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
முன்னர் எப்போதோ அவர்கள் ஒற்றுமையாயிருக்கும் போது சுனிதா ஆர்பன் ஹாஸ்பிடலுக்கு போகும்போது நெருங்கிய உறவினர் யார் என்ற கேள்விக்கு அவள் அந்த படிவத்தில் சந்திரனின் பெயர், கைத்தொலைபேசி இலக்கத்தை கொடுத்து வைத்திருந்தாள்.
ஹாஸ்பிடலிலிருந்து வந்த அழைப்பில் சுனிதாவின் உடலை சந்திரன் வாங்க சம்மதிக்கிறானா என்று தான் கேட்டிருந்தார்கள்.
சந்திரன் அவர்களிடம் இரண்டு நாள் அவகாசம் கேட்டு விட்டு அன்றிரவே யாழ்ப்பாணத்தில் இருந்த தன்  தந்தைக்கு தொலைபேசியில் அழைத்தான்.
"அப்பா..... அப்பா!" என கலங்கினான் சந்திரன்!
"என்ன தம்பி சொல்லு?" என்றார் பல மைல்களுக்கப்பால் இருந்த தந்தை.
"சுனிதா கார் ஆக்சிடென்ட் ஒன்றில செத்து போய்விட்டாள்! இப்ப அவளது உடலை நான் பொறுப்பெடுப்பேனா? என ஹாஸ்பிடலிலிருந்து கேட்கிறார்கள்! எனக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேலை! விசர் பிடிச்சிரும் போல இருக்கு" என கதறினான் சந்திரன்.
"அந்த ஓடுகாலி கழுதை உன்னை விட்டிட்டு போய் கன வருஷமாச்சு. உனக்கும் அவளுக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்ல. இப்ப நீங்க புருஷன், பெண்டாட்டி இல்லை எண்டு ஹாஸ்பிடல்  ஸ்டாஃவுக்கு (Staff) நீ விளங்கப்படுத்து! அதைவிட நீ இப்ப அவளின்ர உடலை எடுத்து ஈமக்கிரியைகள் செய்தா நீ அவளது சொத்துக்காக தான் அப்பிடி செய்யுறாய் எண்டும் எங்கட சனம் கதைக்கும், 'விட்டது சனியன்' எண்டு நீ பேசாம இரு தம்பி! இதுக்குத் தான் நான் உன்னிட்ட படிச்சு படிச்சு சொன்னனான் உன்னை இன்னோரு கலியாணம் கட்டச் சொல்லி" என்று சொல்லிவிட்டு அவர் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
சந்திரன் அப்படியே தலையில் கையை வைத்துக் கொண்டு ஹாலில் போடப்பட்டிருந்த சோஃபாவில் சரிந்தான். சிறிது நேரம் அப்படியே கிடந்தவன் மனதை தேற்றிக் கொண்டான்.
"என்ன இருந்தாலும் சுனிதா என்னோட இரண்டு வருடங்கள் வாழ்ந்தவள். கோபதாபம், மனக்கஷ்டம் இருந்தாலும் என்ர மனைவி ஸ்தானத்தில இருந்தவள். அவளது உடலை எடுத்து ஈமக்கிரியைகள் செய்யும் பொறுப்பை நான் தானே எடுக்க வேணும்!"இப்படி முடிவு செய்த சந்திரன் ஆர்பன் ஹாஸ்பிடலுடன் தொடர்பு கொண்டான். பிறகு நேரே ஹாஸ்பிடலுக்கு   சென்று சில அலுவலக படிவங்களை நிரப்பினான்.
அடுத்த கிழமை லிட்கமிலுள்ள ருக்வுட் மயானசாலையில் (Rookwood Cemetry) சவுத் சப்பலில் (South Chapel) ஈமக்கிரியைகளுக்கு ஏற்பாடு செய்தான். சில குடும்ப நண்பர்கள் வந்திருந்தார்கள்.
சந்திரன் சுனிதாவுக்கென ஆசையாய் வாங்கி வைத்திருந்த சேலையை அவளது உடலுக்கு அங்கு வாலன்டியர் (Volunteer) ஆக வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் உடுத்தி விட்டிருந்தார்.
சுனிதா சவப்பெட்டியிலும் அழகாகத் தான் இருந்தாள். எந்தக் கழுத்திலிருந்து தாலி வேண்டாம் என வீசி விட்டுப் போனாளோ அதில் பெரிய காயம் ஒன்று ஏற்பட்டிருந்தது. கை ஒன்றும் கழன்றிருந்தது.
எது எப்படியோ ஈமக்கிரியைகளை முடித்த சந்திரன் மூன்றாம் நாள் ருக்வுட் மயானசாலையின் ஆபிஸுக்கு போய் சுனிதாவின் சாம்பல் நிறைந்த சிறிய பானை ஒன்றைப் பெற்றுக் கொண்டான். 
பிறகு சந்திரன் மூடியிருந்த அந்தப் பானையை மெல்லத் திறந்து பார்த்தான். அங்கே கருகிய சுனிதாவின் உடலின் சாம்பலைப் பார்த்தான். இரண்டு நிமிடங்கள் அந்த சாம்பலை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்து விட்டு அந்த குட்டிப் பானையை மூடினான்.
இதுவரை சுனிதா மேல் கொண்டிருந்த கோபம், எரிச்சல், ஆற்றாமை, ஆதங்கம் எல்லாமுமே அந்த சாம்பலில் கலந்திருப்பது போன்ற பிரமை சந்திரனுக்கு ஏற்பட்டது.
-->
சந்திரன் பெருமூச்சு ஒன்றை விட்டபடி அந்த சாம்பல் நிறைந்த பானையை மார்போடு அணைத்த வண்ணம் தனது காரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.






No comments: