மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீப நினைவுவணக்க நிகழ்வு 2019.

நீர் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த தியாகி திலீபனின் 32 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மெல்பேணில் கிளேன் வேவலி சென் கிறிஸ்தோபர் ஆரம்ப பாடசாலை மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 22 – 09 – 2019 அன்று சிறப்பாக, உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.
இளைய செயற்பாட்டாளர் செல்வி மது பாலசண்முகன் நிகழ்வை தொகுத்து வழங்க மாலை மணிக்கு நினைவு கூரல் நிகழ்வு ஆரம்பமானது.
அவுஸ்திரேலிய தேசியகொடியை இளைய செயற்பாட்டாளர் யது பாலசண்முகன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழ தேசிய கொடியை இளைய செயற்பாட்டாளர் பவித்திரன் சிவநாதன் ஏற்றிவைத்தார்.

தியாகதீபம் லெப்ரினன்ற் கேணல் திலீபன் அவர்களது திருவுருவப் படத்திற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் சிவானந்தன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார். மூத்த தளபதி கேணல் சங்கர் அவர்களுடைய திருவுருவப் படத்திற்கு தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திலகராஜன் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார். சிறப்புத் தளபதி கேணல் ராயு அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் தயாபரன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்விற்கு வருகை தந்த அனைத்து மக்களும் வரிசையாக சென்று மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அனைவரும் எழுந்து நின்று அகவணக்கம் செலுத்தினர்.
தொடர்ந்து தியாகதீபம் வணக்க நடனத்தை நடனாலாய பள்ளி மாணவி செல்வி ஷரணா ஜெயரூபன் வழங்கினார். “கதிரவனின் கதிராகவும் ஒளிதரும் நிலவாகவும் தியாகத்தின் திருவுருவம் திலீபன் அண்ணா என்ற பாடலுக்கான அந்த நடனம் மிகவும் உணர்வுபூர்வமானதாக அமைந்திருந்தது.
அடுத்து தியாக தீபத்தின் நினைவுகளையும், சமகால அரசியல் நிலவரங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட சிறு காணொளி தொகுப்பு அகலதிரையில் திரையிடப்பட்டது.
தொடர்ந்து இளம் மாணவி செல்வி அபிதாரணி சந்திரன் அவர்கள் தியாகி திலீபன் நினைவு தொடர்பான கவிதை ஒன்றை வழங்கினார். அதனைத்  தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் வசந்தன் சமகால கருத்துரையை வழங்கினார். 
தொடர்ந்து தியாகதீப நினைவு நாளின் சிறப்பு நிகழ்வாக தாயகப் பாடல்களையும்தீயாக தீலீபன் நினைவு சுமந்த பாடல்களை உள்ளடக்கியதான கலைமாலை நிகழ்வு இடம்பெற்றது. இறுதியில் இந் இசைநிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ்கள் மூத்த செயற்பாட்டாளர் திருமதி மனோ நவரத்தினம் அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
சமூக அறிவித்தல்கள் வாசிக்கப்பட்ட பின்னர், தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதை தொடர்ந்துஉறுதியேற்றலுடன் நிகழ்வு 8.05க்கு நிறைவுபெற்றது.

No comments: