தமிழ் சினிமா - அசுரன் திரைவிமர்சனம்


ஆடுகளம், வடசென்னை வரிசையில் தற்போது தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் வந்துள்ள அடுத்த படம் 'அசுரன்'. தனுஷ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் எப்படி இருக்கு? வாருங்கள் பார்ப்போம்..
கதை:
சிவசாமி (தனுஷ்) தன்னுடைய இளைய மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்) உடன் காட்டிற்கு பதுங்கி பதுங்கி செல்லும் காட்சியுடன் துவங்குகிறது படம்.
பின்னர் என்ன நடந்தது என பிளாஷ்பேக் காட்சிகள் விரிகிறது. அழகான மனைவி மஞ்சு வாரியர், இரண்டு மகன்கள் ஒரு மகள் என சந்தோசமாக வாழ்த்து வருகிறது தனுஷின் குடும்பம். அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் மஞ்சு வாரியாரின் அண்ணன் பசுபதி.
வடக்கூர், தெற்கூர் என இரண்டாக பிரிந்திருக்கிறது ஊர். தெற்கூரில் இருக்கும் அனைத்து விவசாய நிலங்களையும் மிரட்டி வாங்கி வைத்துக்கொண்டிருக்கிறார் வில்லன் ஆடுகளம் நரேன். அங்கு ஒரு சிமெண்ட் பேக்டரி கட்ட வேண்டும் என்பது அவர்களது திட்டம். ஆனால் தனுஷ் மட்டும் தன்னுடைய 3 ஏக்கர் நிலத்தை தரமாட்டேன் ஏன நிற்கிறார்.
சுற்றிலும் பல்வேறு விதங்களில் குடைச்சல் கொடுக்கிறார் வில்லன். தனுஷின் மூத்த மகன் முருகன் (டீஜே அருணாச்சலம்) அதை தைரியமாக கோபத்துடன் தட்டி கேட்கிறார். அவரை போலீஸ் பிடித்துச்செல்ல ஊரில் இருக்கும் அனைவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் தனுஷ்.
அதன் பிறகு முருகன் வீட்டிற்கு திரும்பினாலும், பின்னர் கொடூரமாக கொலை செய்கிறது வில்லன் கும்பல்.அதற்கு பழிதீர்க்க விருப்பம் இல்லாமல் மனதிற்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருக்கிறார் தனுஷ். அப்பா கோழையாக இருப்பதை பார்த்து இளைய மகன் சிதம்பரம் கடும் கோபமாகிறார்.
அதே கோபத்தில் அவர் செய்யும் விஷயத்தால் தான் தற்போது தனுஷ் அவரது குடும்பத்துடன் தலைமறைவாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தனுஷ் ஏன் இப்படி இருக்கிறார், இளம் வயதில் எப்படி இருந்தார் என மேலும் ஒரு பிளாஷ்பேக் வருகிறது.
இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி வில்லன் குரூப்பை எப்படி ஜெயித்தார் ஹீரோ தனுஷ் என்பது தான் மீதி கதை.
பாசிட்டிவ் & நெகடிவ்:
+ தனுஷின் நடிப்பு. வயதான கதாபாத்திரம் போல தத்ரூபமாக நடித்துள்ளார் அவர். அவருக்கு தேசிய விருது காத்திருக்கிறது இந்த வருடம்.
+ வெற்றிமாறன் திரைக்கதை. வெக்கை என்ற நாவல் கதையை படமாக்கி இருந்தாலும், திரைக்கதை மற்றும் ரியலாக இருந்த காட்சியமைப்புகள் எந்த இடத்திலும் சலிப்படைய வைக்கவில்லை.
+ ஜீ.வி.பிரகாஷின் பின்னணி இசை, ராமரின் எடிட்டிங்.முதல் பாதி படத்தில் நம்மை சீட்டின் நுனியிலேயே வைத்திருந்ததில் பெரிய பங்கு இசை மற்றும் எடிட்டிங்கிற்கு உண்டு.
+ மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டீஜே, அம்மு அபிராமி, பசுபதி, பிரகாஷ்ராஜ் என படத்தில் நடித்த அனைவரும் கச்சிதமாக நடித்திருந்தனர்.
+கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் சொல்லும் கருத்துக்கு கிளாப்ஸ் அள்ளுகிறது. "நம்மிடம் பொருள் இருந்தால் புடிங்கி கொள்வார்கள். ஆனால் படிப்பு இருந்தால்.." என மகனுக்கு அவர் செய்யும் அட்வைஸ் தற்போதைய இளைய சமுதாயத்திற்கு நிச்சயம் சொல்லப்படவேண்டிய ஒன்று.
மொத்தத்தில் அசுரன் ஒரு வார்த்தையில் சொன்னால் 'வெறித்தனம்'. 
நன்றி CineUlagam

No comments: