01/10/2019 ஹொங்கொங்கில் பல வாரங்களாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டதில் முதல் தடவையாக ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
தாய் ஹா வீதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நபர் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார்.
நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் காணப்படுவதையும் அவரிற்கு மருத்துவகிசிச்சை வழங்கப்படுவதையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.
காவல்துறையினர் துப்பாக்கிபிரயோகம் செய்வதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்குதலிற்கு உள்ளானதால் காவல்துறையை சேர்ந்த ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்,அவ்வேளை ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் காயமடைந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்வதை காண்பிக்கும் வீடியோவை ஹொங்கொங் பல்கலைகழக மாணவர்கள் வெளியிட்டுள்ளனர்.
கறுப்பு உடையணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இரும்புதடிகளால் காவல்துறையினரை தாக்குவதை வீடியோ காண்பித்துள்ளது.
நபர் ஒருவர் காவல்துறையை சேர்ந்த ஒருவரை தாக்குவதையும் அவ்வேளை துப்பாக்கி பிரயோகம் இடம்பெறுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.
சீனா மக்கள் குடியரசு ஸ்தாபிக்கப்பட்டு எழுபது வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வுகள் சீனாவில் இடம்பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை ஜனநாயக ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றும் ஹொங்கொங்கில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட அதேவேளை கண்ணீர்புகை பிரயோகத்தையும் துப்பாக்கி பிரயோகத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை ஆர்டிஎச்கே ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் ஒருவர் ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை சேகரித்துக்கொண்டிருந்தவேளை இனந்தெரியாத பொருளினால் தாக்கப்பட்டுள்ளார்.
வன்முறைகளுடன் கூடிய ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்தவேளை அவரது கண்ணில் இனந்தெரியாத பொருளொன்று தாக்கியுள்ளது.