பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 14

பெண்ணை வாழவிடுங்கள்

விலைமகளும் ஒரு பெண்தான் அவளுக்கும் மறுவாழ்வு கிடைக்க வேண்டும என்பதை வலியுறுத்தி கே பாலசந்தர் அரங்கேற்றம் படத்தை உருவாக்கினார். அனாதரவான பெண்ணும் வாழவேண்டியவள்தான் என்பதை உணர்த்தும் வகையில் ஸ்ரீதர் அலைகள் படத்தை தயாரித்தார். ஆனால் இந்த கருத்தை முன்வைத்து அரங்கேற்றம் அலைகள் வெளிவருவதற்கு நான்காண்டுகளுக்கு முன்னமே ஒரு படம் வெளிவந்தது.

அந்தப் படம்தான் பெண்ணை வாழவிடுங்கள். இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளரான எம் கர்ணன் தயாரித்தார்.  ஏ கே சுப்பிரமணியன் படத்தின் மூலக்கதையை எழுதியிருந்தார். 

தொழிலதிபரான ஜெய்சங்கர் நண்பர்களின் சகவாசத்தினால் குடிகாரனாகவும் பெண்பித்தனாகவும் மாறுகிறார். பொது நிகழ்ச்சிகளில் ஆடிப்பாடி பிழைக்கும் ஷீலாவை பெற்றோருக்கும் தெரியாமல் திருமணம் செய்கிறார்.

ஆனால் சர்ந்தர்ப்ப வசத்தினால் ஷீலா மீது சந்தேகம் கொண்டு திருமணத்தினத்தன்றே அவரை விட்டு நீங்குகிறார். பேற்றோர்கள் அவருக்கு கே ஆர் விஜயாவை திருமணம் செய்து வைக்கிறார்கள். விஜயாவின் முயற்சியினால் ஜெய் திருந்துகிறார். சட்டத்தரணியான விஜயாவைத் தேடி ஷீலா ஒரு நாள் வருகிறார். தம் இருவருடைய கணவனும் ஒருவனே என்று அறியாமல் தன் கணவனுடன் சேர்ந்து வாழ சட்டத்தின் மூலம் உதவும்படி விஜயாவை ஷீலா கோர விஜயாவும் அவர் வழக்கை ஏற்று உதவ முன்வருகிறார். அப்போதுதான் இருவர் கணவரும் ஒருவரே என்று விஜயா அறிந்து அதிர்ச்சியடைகிறார். 

இவ்வாறு போகும் படத்தின் வசனத்தை மா லட்சுமணன் எழுதியிருந்தார் கருத்தாழம் மிக்க அவருடைய வசனங்கள் படத்தின் காட்சிகளுக்கு மேலும் மெருகூட்டின.  ஒரு கண்ணில் தூசு விழுந்தால் மறு கண்ணும் கலங்கும். ஒரு பெண்ணுக்கு கஷ்டம் என்றால் மற்றொரு பெண்ணும் கலங்கத்தான் செய்வாள். கணவன் மனைவி உறவு திருக்குறள் மாதிரி ஒரு வரி பிரிந்தால் குறளுக்கு அர்த்தமல்லாத மாதிரிதான் தாம்பத்தியமும் கெட்டுவிடும் போன்ற பல வசனங்கள் காட்சிகளுக்கேற்போல் மா லட்சுமணலால் எழுதப்பட்டிருந்தன.

தன்னால் உணர்ச்சிகரமான பாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்பதை இந்தப் படத்தில் ஜெய்சங்கர் காட்டியிருந்தார். கே ஆர் விஜயாவுடன் அவர் தோன்றும் காட்சிகள் விறுவிறுப்பானவை. மலையாளத்தில் புகழ் பெற்ற ஷீலா இதில் தன் நடிப்பை வழங்கியிருந்தார்.  வி கே ராமசாமி, நாகேஷ், சுந்தரிபாய் ஆகியோர் உணர்ச்சிகரமாகவும் மற்றைய காட்சிகளில் நகைச்சுவையாகவும் தங்கள் நடிப்பை காட்டியிருந்தார்கள். வில்லனாக வரும் எம் ஆர் ஆர் வாசு தன் தந்தை எம் ஆர் ராதாவை நினைவூட்டுகிறார். இவர்களுடன் எஸ் வி சகஸ்ரநாமம், வி எஸ் ராகவன் சைலஸ்ரீ ஆகியோரும் நடித்திருந்தனர்.

பெண்ணை வாழ விடுங்கள் படத்திற்கு இசையமைத்தவர் பழம் பெரும் இசையமைப்பாளர் எஸ் எம் சுப்பையா நாயுடு. இவருடைய இசையில் கண்ணதாசன் இயற்றிய சமையலுக்கும் மையலுக்கும் ஒரெழுத்து பேதம், நெஞ்சே உனக்கொரு விருந்து போன்ற பாடல்கள் இனிமையாக அமைந்தன.

படத்தை பிரபல படத்தொகுப்பாளர் ஆர் தேவராஜன் இயக்கியிருந்தார். எடிட்டர் என்பதால் படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வித்தை அவருக்கு தெரிந்திருந்தது.

வித்தியாசமான கதையைக் கொண்ட இந்தப் படத்தை 1969ம் ஆண்டு தயாரித்த கர்ணன் பின்னர் குடும்பக் கதைகளை தயாரிப்பதை தவிர்த்து அக்ஷன் கவ்போய்! படங்களை அடிதடிப் படங்களை தயாரித்து ஒளிப்பதிவு செய்து டைரக்ட்டும் செய்து புகழ் பெற்றார்.













No comments: