இலங்கைச் செய்திகள்


அம்பாறையில் புதிய நிரந்தர சோதனை சாவடி 

சிறுவர்தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம்

பலாலி விமான நிலையத்தை பெயர்மாற்றத் தீர்மானம் 

நிதீஷாவை கரம்பிடித்தார் யோஷித்த ராஜபக்ஷ 

ஜனாதிபதி தேர்தல் ; 20 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

அரசியலில் பரபரப்பு ! சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார் 

 நீதிமன்ற தீர்ப்பையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பொதுஜன பெரமுனவினர்

ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் : ரணில் விக்கிரமசிங்க

ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்



அம்பாறையில் புதிய நிரந்தர சோதனை சாவடி 

01/10/2019 அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இன்று திங்கட்கிழமை (30) மாலை திடிரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் 15 க்கும்  அதிகமான  இராணுவத்தினர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடை சந்தியில் நிரந்திர சோதனை சாவடி ஒன்றை அமைத்து சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
அதே போன்று இராணுவத்தினருக்கு இன்று  கிடைக்கப்பெற்ற  தகவல் ஒன்றினையடுத்து கனரக வண்டி ஒன்றில் சுமார் 40க்கும் அதிகமான இராணுவத்தினர்  சாய்ந்தமருது பகுதியில்  தேடுதலில் ஈடுபட்டனர்.
 குறித்த தேடுதல் நடவடிக்கையானது  சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள   வீடுகள்,  மையவாடியை அண்டிய  பகுதிகளில் தேடுதலை மேற்கொண்டதுடன்  குறிப்பிட்ட பிரதேசத்தில் வீதியில் சென்ற பொதுமக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 
மேலும் அண்மைக்காலமாக அடிக்கடி இடம்பெறும் இராணுவ சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த பகுதிகளில் கடந்த ஒரு வாரங்களாக  இராணுவத்தினரால்  தொடர் தேடுதல்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










சிறுவர்தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம்

01/10/2019 சர்வதேச சிறுவர் தினமான இன்று வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது.
வவுனியாவில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 10மணிக்கு குறித்த ஆர்பாட்டம் இடம்பெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே எமக்காக குரல் கொடுக்க எழுத்திரு,கையளிக்கபட்ட மாணவர்கள் எங்கே, குடும்பமாக ஒப்படைக்கபட்ட சிறுவர்கள் எங்கே,
பத்துவருடங்கள் காத்திருந்தோம் இன்னும் எத்தனை வருடங்கள் வேண்டும், போன்ற பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்ததுடன். இலங்கையில் காணாமல் போன தமிழ் சிறுவர், மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களையும் கையில் ஏந்தியிருந்தனர்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரொன்றும் இதன்போது அனுப்பி வைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, பிரதேச்சபை உறுப்பினர்கள், பொதுமக்கள்,சிறுவர்கள், என பலர் கலந்துகொண்டனர்.  நன்றி வீரகேசரி 










பலாலி விமான நிலையத்தை பெயர்மாற்றத் தீர்மானம் 

03/10/2019 பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று  பெயரிடுவதற்கு தீர்மானித்திருப்பதுடன், சர்வதேச பயணங்களுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதியளவில் விமானநிலையத்தைத் திறந்துவைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
பலாலி விமான நிலையத்திற்கு யாழ் சர்வதேச விமானநிலையம் என்று பெயரிடுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. 
அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் பிராந்திய விமானநிலையமாக விளங்கிய யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான பணிகள் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்டதுஇந்த அபிவிருத்தி நிர்மாணப்பணிகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச பயணங்களுக்காக இந்த விமானநிலையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த ஏதேனுமொரு திகதியில் திறந்துவைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று மட்டங்களில் அபிவிருத்தி செய்யப்பட்டுவரும் யாழ் சர்வதேச விமானநிலையத்திற்கான சர்வதேச சிவில் விமானசேவை அமைப்பின் குறியீட்டு இலக்கம் வி.சி.சி.ஜே ஆகும். அதன் சர்வதேச விமானப்போக்குவரத்து அமைப்பின் குறியீட்டு இலக்கம் ஜே.ஏ.எப் ஆகும். அதேவேளை மட்டக்களப்பு விமானநிலையத்திற்கு மட்டக்களப்பு சர்வதேச விமானநிலையம் எனவும், இரத்மலானை விமானநிலையத்திற்கு கொழும்பு இரத்மலானை சர்வதேச விமானநிலையம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது இலங்கையில் உள்ள சர்வதேச விமானநிலையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம், கொழும்பு இரத்மலானை சர்வதேச விமானநிலையம், யாழ் சர்வதேச விமானநிலையம், மட்டக்களப்பு சர்வதேச விமானநிலையம் மற்றும் மத்தள சர்வதேச விமானநிலையம் என்பவையே அவையாகும்.  நன்றி வீரகேசரி 










நிதீஷாவை கரம்பிடித்தார் யோஷித்த ராஜபக்ஷ 

03/10/2019 முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான லெப்ரினன்ட் கொமாண்டர் யோஷித்த ராஜபக்ச இன்றையதினம் நிதீஷாவை கரம்பிடித்தார்.
இந்த திருமண நிகழ்வு இன்றைய தினம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
பிரபல வர்த்தகரான ஆனந்த ஜெயசேகரவின் மகளையே யோஷித ராஜபக்ஷ இன்றைய தினம் கரம்பிடித்தார்.
இந்த திருமண வைபவத்தில் அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இருவருக்கும் ஏற்கெனவே திருமணப்பதிவு இடம்பெற்றிருந்த நிலையிலேயே இன்றைய தினம் இருவரும் கரம்பிடித்துக்கொண்டனர்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ஷவுக்கும் நில்மினிக்கும் கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 












அரசியலில் பரபரப்பு ! சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தினார் 

04/11/2019 ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு என்ற பெயரில் கட்டுப்பணத்தை சமல் ராஜபக்ஷ செலுத்தியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று மாலை வெளிவரவுள்ள நிலையிலேயே சமல் ராஜபக்ஷ இவ்வாறு கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார். நன்றி வீரகேசரி 






 நீதிமன்ற தீர்ப்பையடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பொதுஜன பெரமுனவினர்


04/10/2019 முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக ஏற்றுக்கொள்வதை தடுத்து உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி யசந்த கோதாகொட இன்று மாலை தீர்ப்பறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாப ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடங்கல் நீங்கியுள்ளது.
இந் நிலையில் இந்த வெற்றியினை கொண்டாடும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

நன்றி வீரகேசரி 















ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் : ரணில் விக்கிரமசிங்க


05/10/2019 பலாலி விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 17 ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து முதலாவது விமானம் பலாலி விமான நிலையத்தை வந்தடையும் எனவும் கூறினார்.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்த கருத்துக்களை முன்வைத்திருந்தார். அவர் மேலும் கூறுகையில், 
எமது அரசாங்கத்தின் மூலமாக முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரதானமான ஒன்றாக பிராந்திய விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். 
இதில் பலாலி விமான நிலையம் இப்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. பலாலி விமான நிலையத்திற்கு தென் இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17 ஆம் திகதி வரவுள்ளது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சேவைகள் முன்னெடுக்கப்படும். 
அதேபோல் மட்டகளப்பு விமான நிலையத்துக்கு எயார் இந்தியா விமான சேவை விமானங்களும் வரவுள்ளது. இலங்கையில் இருந்தும் தனியார் விமான நிறுவனங்கள் இரண்டு தமது சேவைகளை முன்னெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன்கான  அமைச்சரவை பத்திரமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும். கொழும்பு ரத்மலானை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இலங்கையில் ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரி 












ஞானசார தேரரைக் கைது செய்யக்கோரி யாழில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

05/10/2019 முல்லைத்தீவு- நீராவியடியில் நடைபெற்ற சம்பவத்தைக் கண்டித்தும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய வலியுறுத்தியும் யாழ்.நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார்  ஆலய விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீறி, பௌத்த பிக்குவின் உடல் ஆலய முன்றிலில் எரிக்கப்பட்டதைக் கண்டித்தும்  அடாவடியில் ஈடுபட்ட ஞானசார தேரர் மற்றும் அவரது குழுவினரையும் கைது செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், சாதாரண இளைஞர்கள் செய்கின்ற சிறிய குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படுகின்ற நிலையில் மதத்தை இழிவுப்படுத்திய ஞானசாரர் உள்ளிட்ட ஏனைய பௌத்த பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்னவென இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உட்பட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘சட்டம் ஒழுங்கு யார் கையில்? அரசே பதில் சொல்’, ‘தேசிய சண்டியனான ஞானசார தேரரைக் கைது செய்’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 

நன்றி வீரகேசரி 









No comments: