சங்கடப்படுவாரா கோத்தாபய ?


03/10/2019 ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அறி­வித்தல் வெளி­யா­கி­யதும் தேர்­த­லுக்கு சுமார் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே நாட்டின் அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. அந்த பர­ப­ரப்பு பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு இட­ம­ளித்து, வேட்பு மனு தாக்கல் செய்­யப்­ப­டு­கின்ற இறுதித் தரு­ணத்தில் எதிர்­பா­ராத திருப்­பங்­களைக் கொண்ட கள­மாக மாற்றம் பெற்­றுள்­ளது.
இந்தத் திருப்­பங்கள் முக்­கிய கட்­சி­களின் வேட்­பா­ளர்­க­ளாக யார் யார் அதி­கா­ர­பூர்­வ­மாக வெளிப்­படப் போகின்­றார்கள் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தி­லேயே அமையும் என்று எதி­ர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் தொடர்பில் இந்தத் திருப்பம் ஏற்­படக்கூடும் என்­பதே அந்த எதிர்­பார்ப்பு.
பெரு­ம­ள­வி­லான ஆத­ர­வா­ளர்­க­ளையும் பொது­மக்­க­ளையும் ஒன்று திரட்டி முன்னாள் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரா­கிய கோத்­தாபய ராஜ­பக்ஷவை தனது வேட்­பா­ள­ராக அறி­வித்த பொது­ஜன பெர­முன இப்­போது திரி­சங்கு சொர்க்க நிலை­மைக்கு ஆளா­கி­யுள்­ளது.
அமெ­ரிக்க பிர­ஜை­யா­கவும் இலங்கை பிர­ஜை­யா­கவும் இரட்டைக் குடி­யு­ரிமை பெற்­றி­ருந்த கோத்­தாப­யவின் குடி உரிமை நிலை­மையைத் தீர்­மா­னிப்­பதில் ஏற்­பட்­டுள்ள சிக்­க­லான நிலை­மையே இதற்குக் கார­ண­மாகியுள்­ளது.

அமெ­ரிக்க குடி­யு­ரிமை பெற்ற ஒருவர் தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது என்­பது தேர்தல் சட்ட விதி. அமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையை ரத்துச் செய்­வதில் ஏற்­பட்­டி­ருந்த நடை­முறைச் செயற்­பா­டு­களில் ஏற்­பட்­டி­ருந்த தாமதம் அவர் வேட்­பா­ள­ராக முடி­யுமா என்ற சந்­தே­கத்தை சட்­டத்­துறை வட்­டா­ரங்­களில் ஏற்­ப­டுத்தியிருந்­தது. எனினும் அந்த விவ­காரம் சட்ட ரீதி­யாக முடி­வுக்கு வந்­தது.
ஆனால், இப்­போது அந்த நிலைமை வேறு வடி­வத்தில் விசு­வ­ரூ­ப­மெ­டுத்து அவ­ரையும் பொது­ஜன பெர­மு­ன­வையும் அச்­சு­றுத்­த­லுக்குள்­ளாக்கி இருக்­கின்­றது. அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை பெற்­றி­ருந்த அவர் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராகப் பதவி ஏற்­ப­தற்­காக இலங்­கைக்கு வருகை தந்­த­போது இலங்கைக் குடி­யு­ரி­மைக்­கான ஆவ­ணங்­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக அவ­சர அவ­ச­ர­மாகக் கையாண்ட வழி­மு­றை­களே இந்த அச்­சு­றுத்­தல்­க­ளுக்குக் கார­ண­மாகியுள்­ளன.
சட்­ட­ரீ­தி­யான சந்­தே­கங்­களும்  கேள்­வி­களும்
அமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையை ரத்­துச்­செய்­வதில் ஏற்­பட்­டி­ருந்த தாம­த­மான கண்­டங்­களைக் கடந்து வந்­துள்ள கோத்தாபய இலங்கைக் குடி­மகன் என்­ப­தற்­காகப் பெற்­றுக்­கொண்ட தேசிய அடை­யாள அட்டை அதன் அடிப்­ப­டையில் பெற்­றுக்­கொண்ட கட­வுச்­சீட்டு என்­பன­வற்றின்   சட்ட வலுவை உறு­திப்­ப­டுத்திக்கொள்­வதில் சிக்­கல்கள் எழுந்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.
மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் எழுப்­பப்­பட்­டுள்ள  சட்­ட­ரீ­தி­யான கேள்­வி­களும் சந்­தே­கங்­களும் இந்தச் சிக்­கல்­க­ளுக்கு வழி­கோலி இருக்­கின்­றன. கோத்­தாபயவின் இலங்கைக் குடி­யு­ரி­மையின் அதி­கா­ர­பூர்வ நிலைமை குறித்து சிவில் செயற்­பாட்­டா­ளர்­க­ளான காமினி உயங்­கொட மற்றும் பேரா­சி­ரியர் சந்­தி­ர­குப்த தேனு­வர ஆகிய இரு­வரும் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் ரீட் மனு ஒன்றைத் தாக்கல் செய்­துள்­ளனர்.
இந்த மனு தொடர்­பான விசா­ர­ணை­களில் கோத்­தாபயவின் இரட்டைக் குடி­யு­ரிமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் எதுவும் பாது­காப்பு அமைச்­சி­டமும் குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­தி­டமும் இல்லை என்று தெரி­ய­வந்­துள்­ள­தாகக் குற்ற விசா­ரணை பொலிஸ் பிரிவு நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்­ளது.
பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராகப் பதவி ஏற்­றி­ருந்த கோத்­தாபய­வின் குடி­யு­ரிமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் அந்த அமைச்­சிடம் இருக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பில் அந்த அமைச்­சிடம் நடத்­திய விசா­ர­ணையில் அத்­த­கைய ஆவ­ணங்கள் எதுவும் தங்­க­ளிடம் இல்லை என அதி­கா­ரிகள் கைவி­ரித்­துள்­ள­தாக குற்­ற­வி­சா­ரணை பொலிஸ் பிரிவு நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்­ளது.
அந்த ஆவ­ணங்கள் தொடர்பில் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திடம் விசா­ரிக்­கு­மாறு பாது­காப்பு அமைச்சு அதி­கா­ரிகள் குற்ற விசா­ரணைப் பிரி­வி­ன­ருக்கு வழி­காட்­டி­யி­ருந்­தனர்.
அதற்­க­மைய உரிய நீதி­மன்ற உத்­த­ர­வுடன் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திடம் நடத்­திய விசா­ர­ணை­களில் அந்தக் குடி­யு­ரிமை தொடர்­பி­லான ஆவ­ணங்கள் எதுவும் தங்­க­ளிடம் இல்லை என அந்தத் திணைக்­கள அதி­கா­ரி­களும் கையை விரித்­துள்­ள­தாக குற்ற விசா­ரணைப் பிரி­வினர் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்­ளனர்.

மாற்று ஏற்­பா­டுகள்
அமெ­ரிக்கக் குடி­யு­ரி­மையைப் பெற்­றி­ருந்த கோத்­தாபய ராஜ­பக்ஷ  இலங்கைக் குடி­யு­ரிமை பெற்­றவர் அல்ல என சுட்­டிக்­காட்டி, அவர் அவ்­வாறு கூறு­வதைத் தடுப்­ப­தற்­கான இடைக்­காலத் தடை உத்­த­ரவை வழங்க வேண்டும் என்று தாங்கள் அவ­ரு­டைய குடி­யு­ரிமை தொடர்பில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ரீட் மனுவில் கோரி­யி­ருப்­ப­தாக காமினி உயங்­கொட கூறி­யுள்ளார்.
அமெ­ரிக்கக் குடி­யு­ரிமை பெற்று அங்கு வசித்து வந்த அவர் 2005ஆம் ஆண்டு தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ வெற்றி பெற்­ற­தை­ய­டுத்து நாடு திரும்பி பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் பத­வியைப் பெற்­ற­போது அவ­ருக்கு வழங்­கப்­பட்ட இரண்­டா­வது இலங்கைக் குடி­யு­ரிமை தொடர்­பி­லான மூல ஆவ­ணங்கள் தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே பாது­காப்பு அமைச்சு மற்றும் குடி­வ­ரவு, குடி­ய­கல்வு திணைக்­கள அதி­கா­ரிகள் இவ்­வாறு கையை விரித்­துள்­ளனர்.
இந்த ரீட் மனு தொடர்­பான தொடர் விசா­ர­ணைகள் உட­ன­டி­யாக நடத்­தப்­பட்டு, நாளை மறு­தினம் வெள்­ளி­யன்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தின் முடிவு அறிவிக்கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. நீதி­மன்­றத்தின் முடிவு கோத்­த­பா­யவுக்கு சாத­க­மாக அமைந்தால் அவர் வேட்பு மனு தாக்கல் செய்­வ­தற்­காகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள 7 ஆம் திகதி திங்­க­ளன்று  வேட்­பா­ள­ராகக் களம் இறங்க முடியும். நீதி­மன்­றத்தின் முடிவு அவ­ருக்குப் பாத­க­மாக அமைந்தால் தேர்­தலில் போட்­டி­யிடும் தகு­தியை அவர் இழக்க நேரிடும்.
ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள கோத்­தாபய ராஜ­பக் ஷ எதிர்­கொண்­டுள்ள இந்த நெருக்­கடி நிலைமை குறித்து தேர்தல் ஆணை­யாளர் மஹிந்த தேசப்­பி­ரிய பொது­ஜன பெர­முன கட்­சி­யி­னரை எச்­ச­ரிக்கும் வகையில் ஆலோ­சனை கூறி­யுள்­ள­தா­கவும் தக­வல்கள் வெளி­யாகியுள்­ளன.
மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ரீட் மனு தொடர்­பி­லான முடிவு அந்தக் கட்­சி­யி­ன­ருக்குப் பாத­க­மாக அமையக் கூடும் என்­பதைக் கவ­னத்­திற்­கொண்டு வேறு ஒரு வேட்­பா­ளரைக் கள­மி­றக்­கு­வ­தற்­காகத் தயா­ராக இருக்­கு­மாறு அவர் கூறி­யுள்ள ஆலோ­ச­னையும் பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் தொடர்­பி­லான நெருக்­கடி நிலையின் தீவி­ரத்­தன்­மையை வெளிப்­ப­டுத்தியுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் மஹிந்த ராஜ­பக் ஷ குழு­வினர் பொது­ஜன பெர­மு­னவின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் தீவிர ஆலோ­ச­னை­யிலும் மாற்று ஏற்­பா­டு­க­ளிலும் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வெளி­யாகியுள்­ளன.
சித­று­கின்ற நம்­பிக்கை
பொது­ஜன பெர­முன என்ற புதிய கட்­சியை மிகக்குறு­கிய காலத்தில் உரு­வாக்கி அதன் தலை­வ­ராக பொறுப்­பேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் ஐக்­கிய தேசிய கட்­சிக்கும் ஜனா­தி­பதி தேர்­தலில் வலி­மை­கொண்­டதோர் அர­சியல் சக்­தி­யாகப் பரி­ண­மித்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ இந்தத் திடீர் திருப்­பத்­தினால் தேர்தல் களத்தில் பின்­ன­டைவைச் சந்­திக்க வேண்­டிய நிலை­மைக்கு ஆளா­கி­யுள்ளார்.
கோத்­தாபயவுக்குப் பதி­லாக ஆளு­மையும் மக்கள் செல்­வாக்கும் கொண்ட ஒரு­வரை வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­வதில் பொது­ஜன பெர­முன கட்­சியின் முக்­கி­யஸ்­தர்­களும் மஹிந்த ராஜ­பக் ஷவும் சிர­மங்­களை எதிர்­கொள்ள நேரிட்­டுள்­ளது. வெறு­மனே ஒரு வேட்­பா­ளரைக் கள­மி­றக்­கு­வது என்­ப­தற்கும் அப்பால், பொது­ஜன பெர­முன கட்­சியின் எதிர்­கால வளர்ச்சி மக்கள் மத்­தி­யி­லான அதன் செல்­வாக்கு என்­ப­னவற்­றையும் மஹிந்த ராஜ­பக் ஷவின் உறு­தி­யான எதிர்­கால அர­சியல் நிலைப்­பாடு என்­ப­னவற்­றையும் மஹிந்த ராஜ­பக் ஷ அணி­யினர் கவ­னத்திற்கொள்ள வேண்­டி­ய­வர்­க­ளாக உள்­ளனர்.
அதே­வேளை இத்­த­கை­ய­தொரு நெருக்­கடி நிலை­மையை எதிர்­பார்த்து அதற்­கான தயார் நிலையில் அவர்கள் இருந்­தி­ருக்க வேண்டும். ஆனாலும் அத்­த­கைய எதிர்­பார்ப்பு இல்­லாத ஒரு நிலையில் அர­சியல் ரீதி­யாக அவர்கள் ஒரு தவிப்பு நிலை­மைக்கு ஆளாகி இருப்­ப­தா­கவே தெரி­கின்­றது.
நவம்பர் மாதம் 16ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான முன்­க­ளத்தில் பௌத்த தேசி­யத்தில் பற்றுக் கொண்­டுள்ள சிங்­கள மக்கள் மத்­தியில் செல்­வாக்­குள்ள வேட்­பா­ள­ராக கோத்­தாபய ராஜ­பக்ஷ கரு­தப்­பட்டார். சிங்­கள பௌத்த தேசி­யத்தின் வல்­ல­மை­யுள்ள ஓர் அர­சி­யல்­வா­தி­யா­கவும், அந்தத் தேசி­யத்தை மேலும் வலுப்­ப­டுத்தி வளர்த்­தெ­டுத்துச் செல்­வதில் ஆளுமை கொண்­ட­வ­ரா­கவும் அவர் தேர்தல் களத்தில் உரு­வ­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.
இதனால் ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் சிங்­கள மக்கள் மத்­தி­யிலும் பொது­ஜன பெர­முன கட்சி வட்­டா­ரங்­க­ளிலும் எதிர்­காலம் குறித்து திட­மான நம்­பிக்கை நிலைமை காணப்­பட்­டது. ஆனால் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்தில் கோத்­தாபய­­வுக்கு எதி­ராகத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள ரிட் மனு­வினால் அந்த நம்­பிக்கை தகர்ந்து சித­று­கின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.
தீவிரப் போக்கில் தளர்வா....?
இந்த ரீட் மனு­வா­னது சிங்­கள பௌத்த தேசியப் பற்­று­டைய சிங்­கள மக்கள் மத்­தி­யி­லான எதிர்­பார்ப்­புக்­களை மட்டும் தளர்­வ­டையச் செய்­ய­வில்லை. கோத்தாபயவின் அர­சியல் பிர­வே­சத்தைத் தமது எதிர்­கால அர­சியல் நலன்­க­ளுக்­கு­ரிய மிக சாத­க­மான நிலைப்­பா­டாகக் கரு­திய பௌத்த தேசி­யத்தில் தீவிர பற்­று­க்கொண்­டுள்ள பொது­பல சேனா அமைப்பு உள்­ளிட்ட தீவிர மத­வாத அர­சியல் போக்கைக் கொண்­டுள்ள பௌத்த பிக்­கு­க­ளையும் அர­சியல் ரீதி­யாகத் தளர்­வ­டையச் செய்­துள்­ளது என்றே கூற வேண்டும்.
கோத்­தாபய வேட்­பா­ள­ராகப் பெய­ரி­டப்­பட்­ட­தை­ய­டுத்து, தேர்­தலில் வெற்றி பெற்று அவரே ஜனா­தி­ப­தி­யா­கி­விட்­டது போன்­ற­தொரு பிரமை நிலை­யி­லேயே பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லா­ள­ரா­கிய ஞான­சார தேரர் நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரத்தில் அடா­வ­டித்­த­ன­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்தார். அது மட்­டு­மன்றி மத உரிமை சார்ந்த இன­வி­வ­கார அர­சி­யலில் எரியும் பிரச்­சி­னை­யாக உரு­வெ­டுத்­துள்ள நீரா­வி­யடி பிள்­ளையார் ஆலய விவ­கா­ரத்தில் இந்­துக்­க­ளி­னதும் தமிழ் மக்­க­ளி­னதும் மனங்­களைக் கீறிக்­கா­யப்­ப­டுத்தி எதிர்­காலம் பற்­றிய அச்ச உணர்­வை­யும்­கூட அவர் ஏற்­ப­டுத்தியிருந்தார்.
நீரா­வி­யடி பிள்­ளையார் கோவில் தீர்த்­தக்­க­ரையில் கொலம்பே மேதா­னந்­த­தே­ர­ரு­டைய பூதவுடலை பலாத்­கா­ர­மாக எரித்­ததன் பின்னர், இந்த நாடு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கே உரி­யது. ஏனைய மதத்­த­வர்­க­ளுக்கு இங்கு இட­மில்லை என்று அப்­பட்­ட­மாக இன­வாத விஷத்தை அவர் கக்கியிருந்தார்.
தீவி­ர­மான இன­வாத அர­சியல் போக்­கையும் இரா­ணுவ ரீதி­யான மன நிலை­யையும் கொண்­ட­வ­ராகத் தமிழ் மக்­களால் கரு­தப்­ப­டு­கின்ற கோத்­த­பாய ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டால் தமது எதிர்­காலம் என்­ன­வாகும் என்ற அர­சியல் ரீதி­யான கவலை சிறு­பான்மை இன மக்­களைப் பீடித்­தி­ருந்­தது.
இந்த நிலையில் கோத்­தாபயவின் வேட்­பாளர் தகுதி கேள்­விக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ள­தனால்  சிங்­கள பௌத்த தேசி­யத்தின் தீவிரப் போக்கில் ஏற்­பட்­டுள்ள தளர்வு நிலை சிறு­பான்மை இன மக்கள் மத்­தியில் அர­சியல் ரீதி­யான ஆறுதல் மூச்சு வெளி­வ­ரு­வ­தற்கு வழி­வ­குத்­துள்­ள­தா­கவே தோன்­று­கின்­றது. ஆனாலும் அது நிரந்­த­ர­மான நிம்­ம­தி­யா­குமா என்ற சந்­தே­கமும் இருக்­கத்தான் செய்­கின்­றது.
தேர்தல் களத்தில் ஏற்­பட்­டுள்ள திருப்­பங்­க­ளுக்­கான நிலைமை ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் எந்த வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது என்று தமிழ் மக்கள் மேற்­கொள்ள வேண்­டிய தீர்­மா­னத்­திலும் திருப்­பத்தைக் கொண்டு வரக்­கூடும் என்ற நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றது.
இறுதி நேரத்­திலும் இய­ல­வில்­லையே
ஜனா­தி­பதி தேர்தல் களத்தில் கோத்­தாபயவை­விட ஐக்­கிய தேசிய கட்­சியின் வேட்­பா­ள­ரா­கிய சஜித் பிரே­ம­தாச, ஜே.வி­.பி.யின் வேட்­பா­ள­ரா­கிய அனுர குமார திசா­நா­யக்க ஆகிய இரு வேட்­பா­ளர்­களும் முன்­ன­ணியில் உள்­ளனர்.
பொது­ஜன பெர­மு­னவின் சார்பில் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வுக்குப் பதி­லாக வேறு ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிறுத்­து­கின்ற நிலைமை உரு­வா­கினால் அதற்­காகத் தெரிவு செய்­யப்­ப­டு­பவர் கோத்­தாபய ராஜ­பக்ஷவின் பிர­சன்­னத்­தினால் ஏற்­பட்­டி­ருந்த ஒரு தீவிர நிலைமை உரு­வா­க­மாட்­டாது என்ற கருத்தும் நில­வு­கின்­றது.
இது தமக்­கு­ரிய சரி­யான ஒரு வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் தமிழ் மக்­க­ளுக்கு உள்ள கடி­ன­மான நிலைமை சற்று இள­கு­வ­தற்கும் வழி­யேற்­ப­டுத்தியுள்­ளது என்றும் கரு­தலாம். ஆனாலும் கடும்­போக்­கா­ளர்கள் உள்ள கடு­மை­யான கள நிலைமை தமிழ் மக்கள் சரி­யான தீர்­மா­னத்தை மேற்­கொள்­வ­தற்கு உத­வக்­கூடும் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.
ஏனெனில் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்­வ­தற்கு இத­மான நிலையில் பொது வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன விளங்­கினார். அத­னை­ய­டுத்து அவரைத் தெரிவு செய்த சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு அவ­ரு­டைய ஆட்சிக் காலத்தில் நிவா­ர­ணங்கள் எதுவும் கிட்­ட­வில்லை. பிரச்­சி­னைகள் எதுவும் தீர்க்­கப்­ப­ட­வு­மில்லை என்ற வெறுப்­புக்­கு­ரிய விளைவே ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.
தற்­து­ணிவின் மூலம் தீர்த்­தி­ருக்கக் கூடிய பிரச்­சி­னை­க­ளுக்­குக்­கூட, தன்னை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்த மக்­க­ளுக்­காக மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் தீர்வு காண முடி­ய­வில்லை.
தீர்வு காண முடி­ய­வில்லை என்­ப­திலும் பார்க்க அத்­த­கைய அர­சியல் மன நிலையை அவர் கொண்­டி­ருக்­க­வில்லை என்றே கூற வேண்டும்.
ஜன­நா­ய­கத்­தையும் ஊழ­லற்ற ஆட்­சி­யையும் நிலை­நி­றுத்தப் போவ­தாக சூளு­ரைத்து பத­விக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு சில மாதங்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் முல்­லைத்­தீவு நீராவி­யடி பிள்­ளையார் கோவில் வளா­கத்தில் சிங்­கள பௌத்த தீவி­ர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்ட அப்­பட்­ட­மான அடா­வ­டித்­தன செயலைக் கண்­டிப்­ப­தற்­குக்­கூட அவரால் முடி­யாமல் போயுள்­ளது.
இந்தத் தேர்தல் காலத்தில் சுய தேர்தல் நன்­மையைக் கருத்­திற்­கொண்டு, சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு ஆறுதல் தரத்­தக்க வகையில் அர­சியல் ரீதி­யான பிர­சார கருத்­தா­கக்­கூட அவர் அந்த விட­யத்தில் அனு­தாபம் தெரி­விக்­கவோ அல்­லது அந்த விடயம் குறித்து உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று கூற முடி­யாமல் போயுள்­ளது.
ஒன்­றி­ணை­வது முதன்மைத் தேவை
இத்­த­கை­ய­தொரு ஜனா­தி­பதி தேர்தல் படிப்­பி­னையைப் பெற்­றுள்ள தமிழ் மக்கள் திருப்­பங்­களை எதிர்­கொண்­டுள்ள இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தமது எதிர்­கால அர­சியல் நலன்­களை வென்­றெ­டுக்­கத்­தக்க வகையில் தந்­தி­ரோ­பாய ரீதியில் சரி­யான முடிவை மேற்­கொள்­வார்­களா என்­பது தெரி­ய­வில்லை.
பல்­வேறு பிரச்­சி­னைகள், பல்­வேறு நிலைப்­பாட்டைக் கொண்டு பல பிரி­வு­க­ளாகப் பிரிந்து கிடக்­கின்ற தமிழ் அர­சியல் கள நிலையில் அர­சியல் தலை­மைகள் மீது நம்­பிக்கை அற்­ற­வர்­க­ளாகத் திகழும் அந்த மக்­க­ளுக்கு நம்­பிக்கை அளிக்­கத்­தக்க வகையில் சரி­யான வழியை யார் காட்டப் போகின்றார்கள் என்பதும் தெரியவில்லை.
அரசியல் தலைமைகள் மீது நம் பிக்கை இழந்து தாங்களே தமது பிரச்சி ஸ்ரீனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அரசியல் பொறுப்புக்களை வலிந்து ஏற்றுக் கொண்டுள்ள ஒரு சாராரான தமிழ் மக்கள் இன்று சரியான அரசியல் வழிகாட்டலின்றி தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள். அரசி யல் தலைமையின்றி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்ற அவர்களின் நம்பிக்கையும் போக்கும் இந்த ஜனாதி பதி தேர்தலில் தகுதியான முடிவை மேற் கொள்வதில் சவால்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றி ணைந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற அரசியல் தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. அதேபோன்று மாறுபட்ட அரசியல் கொள்கைகளையும், அதேவேளை தமிழ்த்தேசியத்தின் பால் பற்றுக்கொண்டு ஒரே கொள்கையைக் கொண்டிருந்தாலும் ஒன்றுபட முடியாத நிலைப்பாட்டையும் கொண்டுள்ள தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தத் தேர்தலுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியமும் உள்ளது.
சிறுபான்மை இன மக்கள் மீது பேரின அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர் களும் அதேபோன்று சிங்கள அரசியலில் ஆதிக்கம் கொண்டுள்ள பௌத்த சங்கத்தினர் உள்ளிட்ட சிங்கள பௌத்த தீவிரவாத சக்திகளும் கொண்டுள்ள அடக்குமுறை அரசியல் போக்கினை எதிர்த்துத் தமது இருப்பையும் அரசியல் உரிமைகளையும் நிலைநாட்டுவதற்கு தமிழ் மக்களின் அரசியல் ரீதியான இந்த ஒன்றிணைவு மிக மிக அவசியம்.
இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் இணைந்து ஒரே சக்தியாக வாக்களிப்பதா அல்லது பிரிந்து நின்று வாக்களிப்பதா என்பதைக் கள நிலைமைகளின் தன்மைக்கேற்ப தீர்மானிக்க வேண்டியது முக்கியம். அதற்கு அடிப்படையாக தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டியது முதன்மை நிலையில் அவசியத் தேவையாக உள்ளது.
பி. மாணிக்கவாசகம் - நன்றி வீரகேசரி 














No comments: