நடன அரங்கேற்றம் - மாதுமை கோணேஸ்வரன்


-->
தமது வாழ்க்கையிலே பெரிதாக ஒன்றைச் சாதிக்க விரும்புகின்றவர்கள் இலட்சியக் கனவுகளைக் காண்பார்கள்.  அந்தக் கனவுகளை நனவாக்க எத்தனையோ முயற்சிகளைச் செய்து, அயராது பாடுபடுவார்கள்.  அவர்கள் கண்ட கனவு நனவாகும் போது அவர்கள் அடைகின்ற மகிழ்ச்சியை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.
அப்படியொரு கனவு நனவான ஒரு நடன அரங்கேற்றத்தைக் கண்டு களிக்கும் அரிய வாய்ப்பொன்று எனக்குச் சென்ற வாரம் கிட்டியது. 
தனது பரத நாட்டியக் கலையை அரங்கேற்றியவர் செல்வி மாதுமை கோணேஸ்வரன்.  தனது சிறு வயது முதலே, தான் என்றேனும் ஒரு நாள் நடன அரங்கேற்றஞ் செய்வேன் என்று கனவு கண்டு வந்திருக்கின்றார்.  அந்தக் கனவை நனவாக்க அவர் பட்ட சிரமங்களையும், தாண்டிய தடைகளைப் பற்றியும் அறிந்த போது பிரமிப்பாக இருந்தது.
அவரது தாயார் திருமதி கோணேஸ்வரன் அலுவலகப் பணி காரணமாக இலங்கையில் பல இடங்களுக்கு மாற்றலாகிச் செல்ல வேண்டியிருந்தது.  சிறுமி மாதுமையும் தனது தாயாருடன் புதிய இடங்களுக்கு அடிக்கடி மாறிக் கொண்டே இருந்தாள்.  ஆனாலும் அப்படிப் போன இடங்களில் எல்லாம் ஒரு நடன ஆசிரியரைத் தேடிப் பிடித்து நடனத்தை விடாமல் பழகிக் கொண்டு வந்திருக்கின்றார் செல்வி மாதுமை.
இப்படிப் பல ஆசிரியர்களிடமும் நடனத்தைப் படித்ததே அவருக்கு எந்த நடனத்தையும் எளிதாக ஆடக் கூடிய வல்லமையையும் ஒரு வித்தியாசமான நடன பாணியையும் தந்திருக்கின்றது!
சிட்னி, அவுத்திரேலியாவில் அவருக்குத் திருமதி அபிராமி குமரதேவன் குருவாக அமைந்து அவரது நடனக் கலையின் நிறைவுச் சுற்றை நன்றாகவே மெருகேற்றி இருக்கின்றார்.
நியுசவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அரங்கேற்றம் பிள்ளையார் வணக்கத்துடன் தொடங்கிற்று.  “விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்” என்ற திருமுறைப் பாடலுக்குச் செல்வி மாதுமை நடனமாடி அரங்கேற்ற நிகழ்வை ஆரம்பித்த போது பரவசமாக இருந்தது!

பாடலை மேடையில் பாடியவர் திரு அகிலன் சிவானந்தன்.  இவரே தனது அரங்கேற்றத்தில் பாட வேண்டும் என்று பல காலமாக விருப்பமுற்று அந்த விருப்பத்தையும் அன்று செல்வி மாதுமை நிறைவேற்றி இருக்கின்றார்.
அரங்கேற்றத்தில் அடுத்து மல்லாரியும், மயூர அலாரிப்பும் இடம்பெற்றது.  தான் நாட்டியத்தில் மிகவும் தேர்ந்தவர் என்பதை மாதுமை எடுத்த எடுப்பிலேயே இந்த நடனத்தில் காட்டி விட்டார்.
அடுத்து வந்த ஜதீஸ்வரம் பகுதிக்கான பாடலை திரு அகிலன் அவர்களே இயற்றி இசையமைத்திருந்தார்.  இராக மாலிகையாகவும், தாள மாலிகையாகவும் அமைந்த பாடல் அருமையாக இருந்தது.  ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் திரு அகிலன் அவர்களின் இசையைக் கேட்ட போது அவர் இக்கலையிலே எவ்வளவு தூரம் பயணித்து வந்து விட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது.  பாடல்களை நன்றாகப் பாடி அரங்கேற்றத்தைச் சிறப்பித்தார் திரு அகிலன்.
அடுத்து வந்தது சிவபஞ்சாட்சர தோத்திரம். இது இராக மாலிகையாக 5 இராகங்களில் அமைந்திருந்தது.  புகழ் பெற்ற அடையாறு இலட்சுமணன் அவர்கள் நாட்டிய அமைப்பை ஏற்படுத்தி இருந்தார்.  அந்த நடன அமைப்பில் அமைந்த மிக நீண்ட இந்தப் பகுதியை செல்வி மாதுமை சளைக்காமல் ஆடி எம்மை மிகவும் மகிழ்வித்தார்.
வர்ணத்துக்கு மதுரை ஆர் முரளிதரன் இயற்றிய பாடலைத் தேர்ந்திருந்தார் செல்வி மாதுமை.  அதற்கான நாட்டிய அமைப்பை அவரது குரு திருமதி அபிராமி குமரதேவன் ஏற்படுத்தி இருந்தார்.  இதிலே மாதுமையின் அபிநயம் மிகவும் அற்புதமாக இருந்தது.
இடைவேளையின் பின் மதுரங்கம் என்ற பகுதியை வழங்கினார் மாதுமை.  அரங்கேற்றத்தில் இது அமைந்தது முற்றிலும் வித்தியாசமாக இருந்தது.
தமிழ்ப் பண்பாட்டிலும், கலைகளிலும் மூழ்கி வளரும் ஒரு பெண் அது பற்றிய சமூகத்தின் விமரிசனங்களைக் கண்டு அஞ்சாது, தனது விருப்பத்தில் ஆழ்ந்து பின்னர் வெற்றி பெறும் கதையை நாட்டிய நாடகமாகச் செல்வி மாதுமை ஆடிக் காட்டி எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார்!
இந்தப் பகுதியின் ஆரம்பத்தில் வந்த மீனாட்சித் தாலாட்டில் தாயாகப் பாவனை செய்து ஆடியவர் அடுத்து வந்த மீனாட்சி பிள்ளைத் தமிழ் பகுதிக்குச் சிறு குழந்தை மீனாட்சியாக வந்து எங்கள் மனத்தை ஆட்சி செய்து விட்டார்!
குழந்தை வளர்ந்து பெரியவளான போது மாதுமை பாரதியின் பாடலுக்கு நடனமாடிப் பாரதியின் புதுமைப் பெண்ணை எங்கள் கண் முன்னே நிறுத்தி விட்டார்.
இப்பகுதியின் நிறைவாகத் தனது நண்பன் ஜனார்த்தனுடன் சேர்ந்து இயற்றிய “உலகம் முழுதும் எதிர்த்த வேளையில்” என்னும் பாடலுக்கு நடனமாடினார் செல்வி மாதுமை.
மதுரங்கம் என்னும் இந்தப் பகுதியில் அவர் காட்டிய முக பாவனையும், இயல்பான நடன அசைவுகளும் இன்னமும் கண்களிலே நிறைந்திருக்கின்றன.
தில்லானாவுடனும், மங்களத்துடனும் அரங்கேற்றம் நிறைவடைந்த போது ஒரு மிக நல்ல அரங்கேற்றத்தைக் கண்டு களித்த மன நிறைவு ஏற்பட்டது.
அரங்கேற்றத்துக்காக வெளிநாடுகளில் இருந்து கலைஞர்களை அழைத்து வராது உள்ளூர் இளங் கலைஞர்களைப் பங்கு கொள்ள வைத்தமை மிகவும் பாராட்டுதலுக்குரியது.  இத்தகைய செயற்பாடுகள் தான் கலைகளை இங்கே வளர்க்க உதவும்.  அரங்கேற்றம் செய்ய இருக்கும் மற்றவர்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்பது எமது வேண்டுகோள்!
பெற்றோர்களைத் தொல்லைப் படுத்தாமல் அரங்கேற்றம் தொடர்பான எல்லா ஆயத்தங்களையும் செல்வி மாதுமை தானே ஏற்பாடு செய்திருக்கின்றார் என்று அறிந்த போது  உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 
மிக நல்லதோர் அரங்கேற்றத்தை எமக்கு வழங்கிய செல்வி மாதுமை இன்னமும் பல சாதனைகளைச் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

கவிஞர். த. நந்திவர்மன்
No comments: