.
"சிறந்த சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது"
அண்டனூர் சுரா எழுதிய "பிராண நிறக்கனவு" கதைத்தொகுதி
தமிழில் சிறுகதை இலக்கியம் வ.வே.சுஅய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்ற கதையிலிருந்து தொடங்கியிருப்பதாக இலக்கிய ஆய்வாளர்கள் சொல்லிவருகிறார்கள். இலங்கையிலும் தமிழகத்திலும், சிங்கப்பூர், மலேசியா உட்பட தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்நிய தேசங்களிலும் தமிழ்ச் சிறுகதை இலக்கியம் பல்வேறு பரிமாணங்களைப் பெற்றிருப்பதனால், தலை முறை அடிப்படையில் சிறுகதை எழுத்தாளர்களின் வீச்சையும் படைப்பாளுமையையும் விமர்சகர்கள் இனம் கண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிராண நிறக்கனவு கதைத் தொகுப்பினை வரவாக்கியிருக்கும் தமிழகத்தைச்சேர்ந்த அண்டனூர் சுரா எனது தொடர் வாசிப்பு அனுபவத்தில் புத்தம் புதிய தலைமுறையைச் சேர்ந்தவராகவே இனம் காணப்படுகிறார். இவரது கதைகள் ஏற்கனவே இலக்கியப்
பரிசில்களும் பெற்றுள்ளன. அண்மையில்
தமிழ்நாடு தேனியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை
முதல் மாநில மாநாட்டில் அண்டனூர் சுராவின் ‘ பிராண நிறக் கனவு ‘ சிறுகதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது.
முதல் மாநில மாநாட்டில் அண்டனூர் சுராவின் ‘ பிராண நிறக் கனவு ‘ சிறுகதைத்தொகுப்பு வெளியிடப்பட்டது.
இந்த நூல் குறித்து எனது வாசிப்பு அனுபவத்தை இங்கு பதிவுசெய்கின்றேன்.
புதிய தலைமுறையைச் சேர்ந்தவராயினும் இவரது ஆற்றல் முதிர்ச்சியடைந்த படைப்பாளிகளுக்கு நிகரானது. இத்தொகுப்பில் "மிடற்றுத்தாகம்" முதல் "
ம் " என்ற கதை வரையில் ஒவ்வொன்றும் தனித்துத் தெரிவதும் சிறப்பு.
அதனால் அயர்ச்சியின்றி வாசகரினால் எளிதாக நெருங்கவும் முடிகிறது.இவரது கதைகளில் அவதானிப்பு, பாத்திரச் சித்திரிப்பு, சுற்றுச்சூழல், இந்திய மாநிலங்களின் பண்பாட்டுக்கோலங்கள், பிரதேச பேச்சு மொழி வழக்கு, சமூகச்சிக்கல்கள், குடும்ப உறவுகள், குறியீட்டுப் படிமங்கள், நனவோடை உத்தி, பின் நவீனத்துவம் முதலான அம்சங்கள் அனைத்தும் முழுமை பெற்றிருப்பதனால், ஒவ்வொரு கதையும் ஆச்சரியப்படவைக்கின்றன.
சில கதைகள் தொடக்கத்திலிருந்தே வாசகரை பதற்றத்தில் வைத்திருக்கின்றன. மிடற்றுத்தாகம், தாழ்ச்சி மக்கள், மிகத் துல்லியத் தாக்குதல், ஒரு டி.எம்.சி. கண்ணீர், பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் முதலான கதைகளைப் பதற்றத்துடன் தான் வாசிக்க முடியும்.
மாமிசத்துண்டு என்ற கதையை இவர் எப்படித்தான் எழுதினாரோ..? என்ற ஆச்சரியத்திலிருந்து இன்னும் விடுபட முடியவில்லை.
“ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்தபின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு சிறந்த சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது.” எனச்சொல்வர். அண்டனூர் சுராவின் கதைகளும் வாசகரின் சிந்தனையில் ஊடுருவியிருப்பதுடன் தொடர்ந்து சிந்தையிலும் வந்துகொண்டிருக்கின்றன. ஒரு டி.எம்.சி கண்ணீர் கதைக்கும் மிகுத்துல்லியத்தாக்குதல் கதைக்கும் இடையில் பல செய்திகளை பொதிந்துவைத்துள்ளார்.
இரண்டு கதைகளின் களங்களும் வேறு வேறானவை. அந்தக்களத்தில் இருந்துகொண்டுதான் யதார்த்தமாக சித்திரிக்க முடியும். இவர் வெகுஇயல்பாகவே சித்திரித்துள்ளார்.பிராண நிறக் கனவு கதையை பிரசவ வலி வரும் கர்ப்பிணித் தாய்மாராலும் அவ்வாறு யதார்த்தமாக சித்தரித்து எழுதமுடியுமா? என்பது சந்தேகமே!
ஆனால், அண்டனூர் சுராவால் அது முடிந்திருக்கிறது. மில்லி கிராம் மாத்திரை சிரிப்பை வரவழைத்தது. சகிக்கமுடியாத ஒரு விடயத்தையும் சகிப்புணர்வோடு வாசிக்கத்தூண்டும் கதை.“அம்மா... தாயீ... புள்ளைக்கு பால் கொடுங்கம்மா" எனத் தொடங்கும் முதல்கதையின் இறுதிவரையில் நாம் அந்தக்குழந்தைபற்றிய சாதாரண புரிதலுடன், அதன் வயிற்றுப்பசிக்கான உருக்கமான வேண்டுகோளாகவே நினைத்துக்கொண்டு அவளது ஏழ்மைக்காக இரங்குவோம்.
அத்தனை மணிநேரமும் அவள் கால்கடுக்க நின்று பால் கேட்டது எதற்காக என்பது இறுதியில்தான் தெரிகிறது.“தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாரதி சொன்னார். ஒரு குழந்தைக்குப் பால் இல்லை என்றால் எதனைத்தான் அழிப்பது? அது எந்தநிலையிலிருக்கும் குழந்தை...?! முடிவை வாசகர்கள் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.
“மனிதனுக்கு இரண்டு காதுகளின் அவசியம் காஷ்மீரிகளுக்குத் தேவையென இருந்தது. ஒரு காது பாகிஸ்தானிற்கு. இன்னொன்று இந்தியாவிற்கு. "வாழ்கிற நாள்வரைக்கும் இந்தியா என்கிறப் பெயரை உச்சரிக்கக்கூடாது" என்கிறது பாகிஸ்தான். "சாகும் பொழுதும் பாகிஸ்தானை நினைக்கக்கூடாது." என்கிறது இந்தியா.
இரண்டு காதுகளையும் ஏறாமல் இறங்காமல் பார்த்துகொண்டவர்கள் மட்டும் பள்ளத்தாக்கில் தப்பிப்பிழைத்துக் கொண்டிருந்தார்கள்.” இவ்வாறு மிகத்துல்லியத்தாக்குதல்" என்ற கதையில் ஒரு பத்திவருகிறது. இந்த வரிகளைப்படித்தபோது, அந்த எல்லையில் வாழும் மக்களின் இரண்டக நிலையை தவிப்புடன் புரிந்துகொள்கிறோம்.
பிராண நிறக் கனவு - ஆசிரியர்: அண்டனூர் சுரா
வெளியீடு: பண்முக மேடை வெளியீடு - தேனி, தமிழ்நாடு
( நன்றி: தமிழ்நாடு தீக்கதிர் இதழ்)
1 comment:
சிறந்த வாசிப்புக்கும் பகிர்வுக்கும் இனிய பெருமிதச் செவ்வாழ்த்துக்கள் தோழர்களே...!
Post a Comment