பய பக்தி – குறுங்கதை ( யோகன், கன்பரா )

.

         
                           

கோடை இரவு அது. பகலெல்லாம் வீசும் அனல் காற்று தணிந்திருந்தாலும் புழுக்கம் குறையவில்லை.
பெரும் இடிச் சத்தம் கேட்டு அவர் திடுக்கிட்டு  விழித்துக் கொண்டார். அந்தப்  பேரோசையின் அதிர்வு  அடங்கு முன் தொடர்ந்து  மின்னல் வெளிச்சம் யன்னல் திரையின் ஒரத்துக்குள்ளால் அவர் படுக்கையறையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இன்னொரு நெடும் மின்னல் காற்றை கிழித்து நிலத்தை முட்ட வருகிறது. பேரிடி விழப்போகிறது. காதை பொத்தக்   கையை எடுக்குமுன் அது நிலத்தில் இறங்கி விட்டது.
படுக்கையறைக்கு மிக அருகிலேயே விழுவது போல உணர்ந்தார். அதி  சக்தி கொண்ட  ஆட்டிலரி ஷெல் வந்து விழும் சத்தத்துக்கு நிகரான அந்தச் சத்தம் அடங்கு முன்னேயே வெளியே  பெரிய டியூப் லயிட் ஒன்று  எரிய தொடங்கு முன் அடிக்கடி மின்னுவது போல அடுத்தடுத்து மின்னல்களின் பால்  வெளிச்சம்.  படுக்கையிலிருந்து எழும்பாமலேயே அந்த வெளிச்சத்திலேயே சுவர்  மணிக் கூட்டைப் பார்த்தார். மணி ஒன்றரை.
யன்னல் திரையைத் திறந்து வெளியே பார்க்கவே துணிவில்லை.  இருளில்  நீந்தியபடியே மெல்ல வரவேற்பறை யன்னலுக்குப் போய்ப் பார்க்கலாமா? இந்த நேரத்தில் மின் விளக்குகள் எதனையும் போட முடியாது.
மெல்ல நடந்து அந்த வரவேற்பறையை அடைவதற்குள் இடைவெளியில்லா முழக்கங்களின் அதிர்வில் இதயமே அறுந்து தொங்குவது போல உணர்ந்தார்.  அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டார். 
மனைவி வீட்டிலில்லை. அவளுக்கு இன்று ஆஸ்பத்திரியில் இரவு ஷிஃப்ட் வேலை. அவளுக்குப் போன் பேசிப்  பார்க்கலாமா? அதுவும் இப்போது ஆபத்தானதுதான்.
வரவேற்பறை யன்னல் திரையை மெல்லியதாக  திறக்க இன்னொரு மின்னல் கோடு. வெளியே அதன் வெளிச்சத்தில் முன் தோட்டத்தில் நிழல் மரம்  ஒன்று விறைத்தபடி  நிற்கிறது. காதை  இறுக்கப் பொத்தினார். ஆனால் அதையும் மீறி  அடுத்தடுத்து மூன்று நான்கு அடுத்தடுத்து விழுந்து பேரோசையை எழுப்பின. அந்த  சத்தம்  முழக்கி வாசிக்கும் தவிலினை  நினைப்பூட்டியது.   யன்னல் அதிர்வில் நடுங்குகிறதா?  அது உண்மையானால் விழுவதெல்லாம் மிக அண்மையில்தான்.  அவர் போகுமிடமெல்லாம் துரத்தி வருகிறது.  இலக்கு அவர் தான் என்பது புரிந்தது.
இடையறாது மின்னும் வெளிச்சத்தில் முழுப் பகலாகிவிட்ட இரவில் ஒரு அரக்கன் போல நெருங்கி வரும் அது அடுத்த அடியை தன்னை நோக்கி வைக்கப் போகிறது. கூரையை பொத்துக் கொண்டு  அது தன் தலையிலேயே கனமான அதன் கால்களை    வைத்து நசுக்கக் கூடும்.
சோபாவொன்று முழங்காலில் இடித்ததையும் பாராமல் இருளில் துளாவியபடியே படிப்பறை நோக்கி நகர்கிறார். அங்கே முழங்காலில் தெண்டனிட்டு சில செக்கன்கள் கண்ணை மூடிய ஜெபம். கடவுளே இந்த ஒரு முறை மாத்திரம் என்னை விட்டுவிடு.  அவர் மனம் பேசுவது அவருக்கு கேட்டது.
அப்படியே ஆகக்கடவது என்று முத்தாய்ப்பு வைத்து விட்டு எழும்பாமல் முழங்காலிலேயே நகர்ந்து படிக்கும் மேசைக்கு வந்து கணினியை அழுத்தி தனது வங்கிக் கணக்கு இணைத்தளத்தை அடைந்தார்.  அவரது பல வங்கிக் கணக்குகளில் இப்போ அவருக்கு வேண்டியதை அழுத்தித் திறந்தார். ஒரு  லட்சத்து  இருபதினாயிரம். அதில் அந்த ஒரு லட்சமும் பாவப்பட்ட  பணம்தான். கிளையண்ட்ஸ்  நால்வரின் உழைப்பை உறிஞ்சியெடுக்கப்பட்டது.  எல்லா குடும்பங்களுமே  உடல் வருந்த உழைக்கும் அன்றாடம் காய்ச்சிகள். யூதாஸின் முப்பது வெள்ளிக் காசுகளைப் போல எறிந்து விட வேண்டும். பாவத்தின் சம்பளம் மரணமல்லவா?
நான்கு முறை வெவ்வேறாக இருபத்தைந்தாயிரம் தன்  கணக்கிலிருந்து அவர்கள் கணக்கிற்கு மாற்றினார். கணினியை அணைத்து விட்டு படுக்கையில் வந்து விழுந்தார். இப்போதும்  இடியும் மின்னலும் தொடந்தது. ஆனால் இம்முறை அவருக்கு நித்திரை வந்தது. ஒரு மலைப் பாம்பு போல அது அவரை விழுங்கியது.

காலை ஏழு மணிக்குப் பிறகு மனைவி  வீடு வந்து சேர்ந்தாள். கெத்திலில்  தண்ணீர் வைத்து விட்டு ஏதோ நினைவுக்கு வர வரவேற்பறைக்குப் போனாள். மாலையில் வேலைக்குப் போக முன் போகும்போது குளிர்  காற்று வருவதற்காக உயர்த்தி விட்ட யன்னலின் ஒலி  புகாத  கண்ணாடி ஷட்டரை இழுத்து மூடினாள். பிறகு    படுக்கையறைக்குப் போய்  அங்கும்  ஷட்டரை இழுத்து மூடினாள்.  இதுதான்  அவரின் திடீர் பய பக்திக்கு காரணம் என்று தெரியாமல்  அவர் இன்னும் நித்திரையையாயிருந்தார்.                              


No comments: