வாழ்வெனும் நதியாக- திதி [1] - வெங்கடேஷ்

.படம் ஒளி கரைந்து உள் நுழையும் காட்சியாக, (ஃபேட்-இன்)  செஞ்சுரி கவுடாவின் இருமலுடன், ஆடு கோழிகளின் சப்தத்துடன் துவங்குகிறது. கர்நாடகாவில், மாண்டியாவின் கடைக்கோடி உட்கிராமம் நோடேகொப்பலு. செஞ்சுரி கவுடாவிற்கு 101 வயது. தெருவின் மண்டபப் படியில் ஊன்றி நடக்கும் குச்சியுடன் உட்கார்ந்துகொண்டு, போவோர் வருவொரிடமெல்லாம் எகத்தாளம் பேசிக்கொண்டிருக்கிறார். இவரின் பழக்கமே இதுவென்பதால் யாரும் இவரைச் சட்டை செய்வதில்லை.
தெருவில் மாடு பிடித்துக்கொண்டு போகும் பெண்ணைப்பார்த்து, “ஏம்மா, வீட்டுல யாரும் ஆம்பளைங்க இல்லயா?… நீ எதுக்கு புடிச்சிட்டு போற…போ…போய் வீட்டுல தூங்கு,” என்கிறார். பள்ளி குழந்தைகள் கடந்து போகும்போது “ஓய்…வந்துட்டிங்களா…வாங்க…வாங்க…நில்லுங்க…” என்று சத்தம் போடுகிறார். குழந்தைகள் கிளுகிளுவென்று சிரித்துக்கொண்டே ஓடுகின்றன. கறுப்பு கோட் போட்டுக்கொண்டு வரும் இன்னொருவரைப் பார்த்து “என்னாப்பா…உன் பொண்டாட்டி இன்னொருத்தர் கூட ஓடிப் போயிட்டாளாமே…இப்ப என்ன பண்ணப்போற…” ஹா…ஹா…வென்று சிரிக்கிறார். கறுப்பு கோட்காரர் எதுவும் பேசாமல் எதிர்க்கடைக்குச் சென்று செய்தித்தாள் வாங்கிக்கொண்டு போகிறார். “போ…போ…அப்படியே ஊரவிட்டுப் போயிரு,” என்கிறார்.
மெதுவாக குச்சி ஊன்றி எழுந்து, எதிர் கடைக்காரரைப் பார்த்து, “ஏனு…இன்னிக்கு காபி கொடில்லா…நானு ஹோகுதினி…” என்று சொல்லிவிட்டு “உன்னையும்…உங்கம்மாவையும்…” என்று கெட்டவார்த்தைகளில் திட்டிக்கொண்டே உட்தெருவில் மெதுவாக நடந்துபோகிறார். ஒரு வீட்டின் மண்சுவரோரம் இடதுகையில் குச்சி ஊன்றிக்கொண்டே, மடங்கி சிறுநீர் கழிக்க உட்காருகிறார். சட்டென்று வலதுபக்கம் மண் தரையில் சாய்ந்து இறந்துவிடுகிறார்.
“திதி” டைட்டில் கார்டு இங்கு வருகிறது.
~oOo~

திதி என்பது இறந்தபின், பதினோராம் நாள் நடத்தப்படும் ஈமச் சடங்குகள். இப்படம் செஞ்சுரி கவுடாவின் இறப்பு நாளிலிருந்து அவரின் திதி நாள் வரை நடக்கும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு. நோடேகொப்புலுவில், செஞ்சுரி கவுடாவிற்கு மூன்று தலைமுறைகள். மகன் கட்டப்பா (மெல்லிய “ட்”), பேரன் தமண்ணா, கொள்ளுப் பேரன் அபி.
கட்டப்பா பல வருட தாடியோடும், கலைந்த தலையோடும் ஊரின் காட்டுப்பாதைகளில் ஹிப்பி போல் சதா நடைந்தலையும் ஒரு ஆத்மா. வாழ்க்கை பீடிகளோடும், டைகர் விஸ்கியோடும். கைகளில் சதா ஆடுபுலி ஆட்டத்திற்கான காய்களை உருட்டிக் கொண்டேயிருக்கிறார்.
கட்டப்பாவின் மகன் தமன்ணா, விவசாயம் செய்யும், மனைவியோடும் குழந்தைகளோடும் ஊருக்குள் வாழும் சம்சாரி.
தம்மண்ணாவின் மகன் அபி, இளவயது. பொறுப்பில்லாமல், ஆற்றில் மணல் அள்ளுவது, மரம் வெட்டுவது போன்ற சின்னச் சின்ன வேலைகள் செய்கிறான்; நண்பர்களுடன் சீட்டாடுவது, கோலிக்குண்டு விளையாடுவது, அவ்வப்போது குடிப்பது என்றிருக்கிறான்.
செஞ்சுரி கவுடாவின் மரணம், இம்மூன்று தலைமுறைகளில் ஏற்படுத்தும் சலனங்களே  ‘திதி’.
திதியை பதினோராம் நாள் வைத்து, செஞ்சுரி கவுடா நூறு வயது வரை வாழ்ந்து மறைந்ததால், கொஞ்சம் விமர்சையாகவே திதியை நடத்துமாறு பஞ்சாங்கம் பார்ப்பவர் சொல்கிறார். குறைந்தது 500 பேருக்கு சாப்பாடு போடச்சொல்கிறார்.
தமண்ணாவின் நண்பர் தமண்னாவிடம், செஞ்சுரி கவுடாவின் 5 ஏக்கர் நிலத்தை இப்போதே கட்டப்பாவிடமிருந்து எழுதி வாங்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறார். தமண்ணாவிடம் கட்டப்பா, எனக்கு நிலம் எதுவும் வேண்டாம், நீயே எடுத்துக்கொள், ஆனா நான் எங்கும் வரமாட்டேன் என்கிறார். நகரத்தில், மர வியாபாரம் செய்யும் தனக்குத் தெரிந்த ஒருவர் நிலத்தை வாங்கிக்கொள்வார் எனவும், அவரைப் போய் பார்க்கும்படியும் சொல்கிறார் சண்போகா. பத்திரங்களைப் பார்க்கும் அவர், நிலம் செஞ்சுரி கவுடாவின் பேரில்தானே இருக்கிறதென்றும், அவர் இறந்து விட்டதால் அவர் மகன் கட்டப்பாவிற்குத்தானே செல்லும் என்கிறார். கட்டப்பாவும் இறந்துவிட்டதாக, தமண்ணா அவரிடம் பொய் சொல்கிறார். அப்படியென்றால் இருவரின் இறப்புச் சான்றிதழை கொண்டுவருமாறும், நிலம் பிடித்திருந்தால் உடனே வாங்கிக் கொள்வதாகவும் சொல்கிறார். தாசில்தார் ஆபீஸில் 25000 லஞ்சம் கொடுத்து கட்டப்பாவிற்கும் இறப்பு சான்றிதழ் வாங்குகிறார் தமண்ணா. சான்றிதழ் கொடுப்பவர், கட்டப்பாவை தலைமறைவாக யார் கண்ணிலும் படாமல் எங்கேனும் அனுப்பி விடுமாறு சொல்கிறார்.
திதிக்காக, ஊரின் கமலாக்காவிடம் 15% வட்டிக்கு 2 லட்சம் கடன் வாங்குகிறார் தமண்ணா. நிலம் ஏக்கர் 4 லட்சம் வீதம், 20 லட்சத்திற்கு முடிவு செய்து, திதிக்கு மறுநாள் பணம் கொடுத்து பதிந்துகொள்வதாக முடிவு செய்யப்படுகிறது. கட்டப்பாவிற்கு பணம் கொடுத்து, யாத்திரை போய்வரும்படி, பஸ் ஏற்றிவிடுகிறார் தமண்ணா. ஆறு மாதத்திற்கு யார் கண்ணிலும் படக்கூடாதென்று அபியின் தலைமேல் சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
கட்டப்பா அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி டைகர் விஸ்கி வாங்கிக்கொண்டு, அந்தக் கிராமத்தில் கூடாரம் அடித்துக்கொண்டு தங்கியிருக்கும் செம்மறியாடு மேய்ப்பவர்களுடன் சேர்ந்துகொள்கிறார்.
அபி திதி பத்திரிக்கையை ஊரில் எல்லா வீட்டிற்கும் கொடுக்கிறான். திதியன்று சமைப்பதற்காக, தமண்ணா செம்மறி ஆடுகள் வாங்கக் கொடுக்கும் காசை, அபி சீட்டாட்டத்தில் தொலைக்கிறான். இரவில் நண்பர்களுடன் சேர்ந்து, செம்மறி ஆடுகள் மேய்ப்பவர்கள் வைத்திருக்கும் பட்டியிலிருந்து இரண்டு செம்மறி ஆடுகள் திருடுகிறான் (அபி, அந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்தின் காவேரி எனும் பெண்மேல் ஆசைகொண்டிருக்கிறான்). மறுநாள் ஆடுகள் காணாமல் போயிருப்பதைப் பார்த்து, செம்மறி ஆடுகள் மேய்க்கும் குடும்பங்களுக்குள் சண்டை வருகிறது. கட்டப்பா அவர்களுக்குப் பணம் கொடுக்கிறார். அவர்கள் அந்த ஊரைவிட்டுப் போக முடிவுசெய்கிறார்கள். கட்டப்பாவும் அவர்களுடன் செல்கிறார்.
அந்த நாளில்தான் திதி. திதி செய்வதற்காக ஊர் முழுதும் செஞ்சுரி கவுடாவின் நிலத்தில் கூடியிருக்கிறது. கட்டப்பாதானே காரியம் செய்யவேண்டும், எங்கே கட்டப்பா? என்று ஊர் பெரியவர்கள் கேட்கிறார்கள். கட்டப்பா எங்கு போனார் என்று தெரியவில்லையென்றும், தானே காரியங்கள் சேய்கிறேன் என்றும் சொல்கிறார் தமண்ணா. காரியங்கள் செய்வதற்காக ஊருக்குள் சென்று குடத்தில் தண்ணீர் கொண்டுவரும் பெண், செம்மறி ஆட்டுக் கூட்டத்தோடு செல்லும் கட்டப்பாவைப் பார்த்துவிடுகிறாள். சத்தம் போட்டு ஆட்களைக் கூப்பிட்டு, எல்லோரும் சேர்ந்து கட்டப்பாவைத் தூக்கிக்கொண்டு திதி நடக்கும் நிலத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்கள்.
நிலத்தை வாங்கும் மர வியாபாரம் செய்பவர், யதேச்சையாக, நண்பர்களுக்கு நிலத்தை காட்டுவதற்காக அங்கு ஜீப்பில் வருகிறார். தமண்ணாவின் அப்பாவான கட்டப்பா உயிருடன் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி கொள்கிறார். தமண்ணாவை தனியே கூப்பிட்டு, கோபத்தில் நன்றாக திட்டிவிட்டு, நிலத்தை வாங்கிக்கொள்ளப் போவதில்லை என்று பேப்பர்களை விசிறியடித்துவிட்டு சென்றுவிடுகிறார். 20 லட்சங்கள் கைவிட்டுப் போன விரக்தியிலும் கோபத்திலும், தமண்ணா கட்டப்பாவிடம் ஊர்க்காரர்கள் முன்னால் சண்டை போடுகிறார். ஊர்க்காரர்கள் விலக்கி விடுகின்றனர்.
கறியோடும், களியோடும் பந்தி நடக்கிறது. இரவு தெருவில் மேடை போட்டு செஞ்சுரி கவுடாவின் புகழ் பாடும்/பேசும் கச்சேரி. தூரத்தில் காட்டு வெளியில் சுள்ளிகள் போட்டு தீவைத்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார் கட்டப்பா.

~oOo~
கி.ரா – வின் ஒரு கரிசல் நாவலை படித்து முடித்த ஒரு மனம் நிறை உணர்வு ததும்பியது படம் பார்த்து முடித்ததும். இத்தனை இயல்பாய், இத்தனை இயற்கையாய் ஒரு படம் எடுக்க முடியுமா?. படம் நெடுகிலும் கேமரா எங்கிருந்தது? படத்தில் யாருமே நடிகர்கள் இல்லை. நோடேகொப்புலுவின் மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார் இயக்குநர் ராம் ரெட்டி. கதை கூட அங்கு நடந்த உண்மையான சம்பவம்தான். படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து, இறுதிக்காட்சி வரை ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகும், உண்மையும், இயல்பும்…ஒரு துளியும் செயற்கை கலக்காத, துருத்தித் தெரியும் காட்சிகளில்லாத…ஒரு அசல் கிராமம் மற்றும் அதன் மனிதர்கள். படத்தில் பின்னணி இசை என்ற ஒன்று கிடையாது; இயற்கையான கிராமத்து ஓசைகள் மட்டுமே. படம் நெடுகிலும் வியாபித்திருக்கும் கிராமத்துக்கே உரித்தான அந்த இயல்பான பகடி அபாரமாய் வெளிப்பட்டிருக்கிறது.
அபி திதி பத்திரிக்கையை கிராமத்தில் வீடு வீடாகச் சென்று கொடுக்கிறான். ஒரு வீட்டில், அந்த அம்மா “இருப்பா, டீ குடிச்சிட்டுப் போ” என்று உட்காரச் சொல்கிறாள். அங்கு ஒரு வயதான பெரியவர் உட்கார்ந்திருக்கிறார். “யாருப்பா நீ?” என்கிறார். “தமண்ணா பையன். தாத்தா இறந்துட்டாரு. திதி பத்திரிக்கை கொடுக்க வந்தேன்” என்கிறான். “கட்டப்பா போய்ட்டானா? யாரும் எனக்கு சொல்லவேயில்லயேப்பா?” என்கிறார். “இல்ல, இறந்தது செஞ்சுரி கவுடா” என்கிறான். “செஞ்சுரி கவுடாவா…அவன் அந்தக்காலத்துல மைனராச்சே…அவன் பொண்டாட்டிங்க எத்தனை பேருன்னு விரல்விட்டு எண்ண முடியாதே…” என்கிறார்.
இன்னொருவர் பத்திரிகை வாங்கியவுடன், “சாப்பாடு இருக்கில்ல? கறி இருக்கா?” என்கிறார். திதிக்கு செல்வதற்கு டிராக்டரில் உட்கார்ந்து கொண்டு “சீக்கிரம் எடுப்பா, போகலாம். கூட்டம் சேர சேர, கறி கம்மியாயிடுமில்ல” என்கிறார். திதி பூஜையின்போது பக்கத்திலிருப்பவரிடம் “எத்தனை ஆடு வெட்டியிருக்காங்க?” என்று கேட்கிறார்.
நிலத்தை தன் பெயருக்கு மாற்றுவதற்காக, கட்டப்பாவைத் தேடிப் பிடித்து பேசச் செல்கிறார் தமண்ணா. கட்டப்பா ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பீடி பிடித்துக்கொண்டிருக்கிறார். தமண்ணா பேசுவதை முழுதும் கேட்டுவிட்டு பீடிய ஒரு இழுப்பு இழுத்துவிட்டு “இப்ப உனக்கு என்ன பிரச்னை?” என்கிறார். என் சிரிப்பு அடங்க நேரமானது. சோசியல் மீடியாவிலும் இக்காட்சி மிகப்பிரபலமானது.
நிலம் விற்க ஆலோசனை கேட்பதற்கு சண்போகா வீட்டிற்கு போகிறார் தமண்ணா. சண்போகா வீட்டின் மேல் கூரை ஓடு மாற்றிக் கொண்டிருக்கிறார். தமண்ணாவைப் பார்த்ததும் கீழே வந்து வீட்டினுள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கூரை மேலிருந்து வேலை செய்பவன் உள்ளே எட்டிப்பார்த்து, “அண்ணா! அக்கா வர்ராங்க” என்கிறான். சட்டென்று சண்போகா எழுந்து கொள்கிறார். மனைவி வீட்டிற்குள் வந்ததும் “உங்கள் ஓடு மாத்தச் சொன்னா, உள்ள உட்கார்ந்து என்ன கத பேசிட்டிருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே அடுப்படிக்குப் போகிறாள்.
இரண்டு சிறுவர்கள் செஞ்சுரி கவுடாவின் படத்தை வீட்டு முக்கில் உயரமான கம்பத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார்கள். பக்கத்தில் கீழே ஒருவர் தமண்ணாவிற்கு போன் செய்துகொண்டிருக்கிறார். பூ, ஊதுபத்தி கொஞ்சம் அதிகமாக வாங்கி வருமாறு சொல்லிக் கொண்டிருக்கிறார். செஞ்சுரி கவுடாவின் படம் தொப்பென்று கம்பத்திலிருந்து கீழே விழுகிறது. ஒரு சிறுவன் இன்னொருவனிடம் “ஏண்டா, ஒழுங்கா கீழ புடிக்க மாட்டியா?” என்கிறான்.
நான் விரும்பிய காட்சிகளை சொல்ல வேண்டுமென்றால், முழுப் படத்தையுமே ஃபிரேம் பை ஃபிரேமாகச் சொல்லவேண்டும். சண்போகாவின் மனைவி, ஸ்டேஷனரி கடையில் வேலை செய்யும் அந்தப் பெண், Band முன் ஆடும் அந்த வெண்முடிக் கிழவர், செம்மறி ஆடுகள் மேய்க்கும் அக்கூட்டத்தின் பெண்கள், அவர்களின் கன்னட மொழி…எல்லாம் என் பிறந்த கிராமத்தை நினைவுறுத்தியது.
~oOo~
கட்டப்பா, செம்மறி ஆடுகள் மேய்க்கும் குடும்பங்களுடன் இருக்கும்போது, ஒரு நாள் இரவுணவு முடித்து எல்லோரும் அமர்ந்திருக்க, தன் கதையை சொல்கிறார்…
“நாங்க நாலு பசங்க. நான்தான் மூத்தவன். எங்க அப்பா புரோக்கர் வேல பாத்தாரு. அம்மாவுக்கு ஒருநாள் திடீர்னு உடம்பு சரியில்லாம போயி கொஞ்ச நாள்ல செத்துப்போனாங்க. அப்புறம் நாந்தான் தம்பிகளப் பார்த்துக்கிட்டேன். ஒருநா, அப்பா வேல முடிச்சிட்டு வரும்போது ஒரு சின்னப் பொண்ண கூட்டிட்டு வந்தாரு. என்னய அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கடான்னாரு. நான் எனக்கு இன்னும் வயசாகல, வேண்டான்னேன். அப்பா ரொம்ப கட்டாயப்படுத்தினார். எனக்கும் அந்த சுசிலாவ புடிச்சிருந்தது. கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தைகளும் ஆச்சு. நீங்க செம்மறி ஆடுங்க வளர்க்கற மாதிரி, நாங்க ஆடுங்க வளர்ப்போம். ஆடுங்களுக்கு, நாந்தான் தழைங்கல்லாம் வெட்டிட்டு வருவேன். அப்படித்தான் ஒரு நாள், எங்க கரும்புத் தோட்டத்துக்கிட்ட மரத்துல தழை வெட்டப்போனேன். நான், மரத்துல ஏறி உயரத்துலருந்து கீழ பார்த்தா தோட்டத்துக்குள்ள எங்க அப்பாவும், எம் பொண்டாட்டியும். எல்லாத்தியும் பார்த்தேன். கொஞ்ச நேரத்துல எங்க அப்பா போயிட்டார். கோபத்தில ஓங்கி ஒரு கிளைய வெட்டினேன். சத்தம் கேட்டு எம் பொண்டாட்டி நிமிர்ந்து பார்த்தா; என்னயப் பார்த்துட்டா; ஒண்ணும் பேசல. நான் கீழ இறங்கி வந்ததும், கூடவேதான் நடந்து ரெண்டுபேரும் வீட்டுக்கு வந்தோம். அப்பவும் ஒண்ணும் பேசிக்கல. ராத்திரிக்கு சமைச்சா. எல்லோரும் சாப்புட்டு படுத்துட்டோம். நடுசாமம் இருக்கும். தடால்-னு சத்தம் கேட்டு முழிச்சேன். ஒரே இருட்டு. ஏதோ தப்பா தோணுச்சி. ஓடிப்போய் பின்னால் இருக்குற கிணத்துல எட்டிப் பார்த்தேன். ரெண்டு குழந்தைங்களோட குதிச்சுருக்குறா. நானும் பின்னாடியே குதிச்சேன். ஒரு குழந்தயதான் காப்பாத்த முடிஞ்சது. அன்னியிலருந்து வளர ஆரம்பிச்ச தாடிதான். அப்புறம் என் பேரும் கட்டப்பா-னு (தாடிக்காரர்) ஆயிடுச்சி. இதெல்லாம் உண்மையிலேயே நடந்ததா இல்ல நேத்து ராத்திரி நான் கண்ட கனவானு எனக்கு தெரியல”
என்று முடிக்கிறார். தலையில் குளிருக்கு முக்காடு போட்டுக்கொண்டு எல்லோரும் அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மென் வெளிச்சம். படம் பார்த்துக் கொண்டிருக்கும் நானும் அங்கிருக்கிறேன்.
“அதனால நாம எப்பவும் சந்தோஷமா இருக்கறத தவிர வேற ஒண்ணும் முக்கியமில்ல” என்று சிரிப்போடு சொல்கிறார்.
எந்த ஒரு கலைப் படைப்பு நம் ஆழத்துக்குள் இறங்கி, மனதை அசைத்து தங்கி விடுகிறதுதோ – எது மானுடம் தழுவிய ஒரு தரிசனத்தை, இயல்பான வாழ்வை சொல்லி, உண்மையான மேலெழும்பிய ஒரு பேருண்மையை சுட்டிக்காட்டி அமர்கிறதோ அதுதான் மானுடத்தை மேம்படுத்துகிறது ராம் ரெட்டி என்னும் சஹ்ருதயனை அணைத்துக்கொள்ள தோன்றுகிறது. நன்றியும், வணக்கங்களும், பேரன்பும் நண்பனே…
வாழ்வெனும் பெருநதி ஓடிக்கொண்டிருக்கிறது. நோடேகொப்புலு அதில் ஒரு துளி. நான் பிறந்த மதுரையின் ஓடைப்பட்டி மற்றொரு துளி. வாழ்வு “இன்று” “இப்போது” எனும் காலத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. நம்மின் இறந்த காலங்களின் நிகழ்வுகள், உண்மையில் நடந்ததா அல்லது கட்டப்பா சொன்னதுபோல் நாம் கண்ட கனவா? யாருக்குத் தெரியும்?
~oOo~
பின் குறிப்புகள்:
[1] திதி – 2016 ஆண்டின் சிறந்த கன்னடப் படமாக தேசிய விருது பெற்ற படம். உலகளவில் 2015 ஆம் ஆண்டின் லொகார்னோ பட விழாவில் தங்கச் சிறுத்தை விருது பெற்றதால் பல விழாக்களுக்கு அழைக்கப்பட்டிருந்தது.
இயக்குநர்: 26 வயதே ஆன ராம் ரெட்டி. [மீதி விவரங்களுக்கு பார்க்க விக்கிபீடியாவின் பதிவை: https://en.wikipedia.org/wiki/Thithi_(film) ]
உலகத் திரைப்படப் பிரமுகர்களில் சிலரும் இதைப் பாராட்டியுள்ளதாகத் தெரிகிறது. அந்த விவரங்களுக்கு இங்கே செல்லவும்:
https://www.scoopwhoop.com/Why-You-Should-Watch-The-Kannada-Film-Thithi/#.p82o5ws5t

No comments: