அன்றும் இன்றும் - அங்கம் 01 - ரஸஞானி

.


பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகளும் தூங்குதப்பா!
                                                                                      


உலகம் தோன்றிய காலத்திலிருந்து பார்ப்போமேயானால்,  வனாந்தரமயமாதல், பாலைவனமயமாதல், வறட்சிமயமாதல், வெப்பமயமாதல், கிராமமயமாதல், நகரமயமாதல் முதலான  பரிணாம வளர்ச்சியும்,  இவை தொடர்பான சிந்தனையும் மேலோங்கியிருந்தன. கடந்துவிட்ட  சில நூற்றாண்டுகளிலிருந்து பார்த்தால் உலகமயமாதலும் பேசுபொருளாகிவிட்டது. இதற்கு  தேசங்கள் பலியாகியிருப்பதை காணமுடிகிறது.
சமூகத்தில், மதங்களில், நோய் உபாதைகளில், வெகுஜன அமைப்புகளில், உள்நாட்டு மற்றும் உலக அரசியலில் மாற்றங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அன்று நாம் வாழ்ந்த வாழ்க்கை இன்றில்லை. இன்று நாம் அனுபவிக்கும் வாழ்க்கை அன்றிருக்கவில்லை.
"கல்தோன்றி மண்தோன்றாக்காலத்திற்கு முந்திய இனம் தமிழினம்" என்று தொடர்ச்சியாக ஒரு வாய்ப்பாடாகவே சொல்லிவருகிறார்கள். எம்மத்தியில் முன்னர் வாழ்ந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் - "எஸ்.பொ. " என நன்கு அறியப்பட்ட எஸ்.பொன்னுத்துரை,  ஒரு சந்தர்ப்பத்தில், " இந்த மூத்த தமிழ்க்குடிமக்கள், கல்தோன்றி மண்தோன்றாக்காலத்திற்கு முன்னர் பிறந்திருந்தால், மலம் கழிப்பதற்கு எங்கு சென்றார்கள்...? " என்று அங்கதமாகக்கேட்டார்.
ஒவ்வொரு இனக்குழுமத்தின் தோற்றத்திற்கும் வாழ்விடங்களுக்கும் இடப்பெயர்வுகள், புலப்பெயர்வுகளுக்கும் வரலாறு இருக்கிறது.
அண்மைக்காலத்தில் இலங்கையிலும் அண்டைநாடான இந்தியாவிலும் மற்றும் உலக நாடுகளிலும் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களை பார்க்கும்போது, கடந்துவிட்ட இருபதாம் நூற்றாண்டு காலத்தில் நடந்த சம்பவங்களும் மனதில் துளிர்க்கின்றன.
மக்களின் நினைவு மறதி யாருக்கு இலாபம்?  என்று யோசித்தேன். உடனடியாக நினைவுக்கு வந்தவர்கள்  அரசியல்வாதிகள்தான்!
கடந்த ஒக்டோபர் மாதம் இறுதியில் இலங்கையில் திடீரென்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் ஊடகங்களுக்கும் முகநூல்கார்களுக்கும் பெரிய கொண்டாட்டமாகிவிட்டது.




ஹெலிகொப்டரில் வந்து நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் ஒரு பிரதமருக்கும்,  அலரிமாளிகையை விட்டுச் செல்லமாட்டேன் என தனது உரிமையை விட்டுக்கொடாமல் அடம் பிடிக்கும் ஒரு பிரதமருக்கும் மத்தியில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டுக்கான காரணங்களை வலியுறுத்திவருகிறார்.
மக்களின் வாழ்க்கைத்தரம் பற்றி பேசவேண்டியவர்கள் நாட்டின் அதிபரது உளநலம் குறித்த மருத்துவசோதனை பற்றி பேசுகிறார்கள்!
தேசத்தில் மக்களின் வாழ்க்கைச்செலவீனங்கள் உயர்ந்துகொண்டிருக்கிறது. நாணயப்பெறுமதி தாழ்கின்றது. பணவீக்கம் அதிகரிக்கிறது.
"நாடாளுமன்றில் மிளகாய்த்தூளுக்கும் கத்திக்கும் என்ன வேலை?  அங்கு சமையலா நடக்கிறது?"  என்றும் நாடாளுமன்ற வாசலில் இருந்து ஒரு வியாபாரி அவற்றை வைத்துக்கொண்டு " லாபாய், லாபாய்" ( மலிவு - மலிவு) என்று கூவி அழைத்து விற்பனை செய்வதாக கேலிச்சித்திரங்களும் முகநூல்களிலும் ஊடகங்களிலும் பதிவாகின்ற காலத்தில் வாழும் மக்கள், முன்னர் இருந்த அரசியல் தலைவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை நினைத்துப்பார்த்து நனவிடை தோய்கின்றனர்.
ஒரு பிரதமர் ஹெலிகொப்டரில் வந்திறங்குவதற்கு எவ்வளவு செலவாகியிருக்கிறது என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கிறது! அலரிமாளிகையில் திரளாக குழுமியிருக்கும் ஐக்கிய தேசியக்கட்சி தொண்டர்களின் சாப்பாடு குளிர்பானச்செலவுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கிறது!
காலிமுகத்திடலுக்கு முன்பாக அமைந்திருந்த முன்னைய நாடாளுமன்றத்திற்கு தகநாயக்கா என்ற முன்னாள் அமைச்சர் ( இவர் பிரதமராகவும் இருந்தவர்) இலங்கை போக்குவரத்துச்சபையின் பஸ் வண்டியில் வந்து போயிருக்கிறார்.


அவருக்கு முன்னாலும் பின்னாலும் மெய்ப்பாதுகாவலர்கள் செல்லவில்லை.
காலி தொகுதியில் அவருடைய வாசஸ்தலத்திலிருந்த தொலைபேசியை அவர் பயன்படுத்தியதைவிட ஊர் பொதுமக்கள்தான் அதிகம் பாவித்தனர். இது பற்றியும் நாடாளுமன்ற பட்ஜட் விவாதத்தில் அன்று பேசப்பட்டது.
"என்னை தெரிவுசெய்த மக்களுக்கு,  அரசு தரும் தொலைபேசி வரப்பிரசாதத்தையும் கொடுத்துள்ளேன்"  என்பதுதான் அவரது தரப்பு வாதமாக அன்று இருந்தது.
இவ்வாறு ஒரு சாதாரண குடிமகன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரது வாசஸ்தலத்தின் தொலைபேசியை பயன்படுத்துவதற்கு இன்றைய   காலத்தில் முடியுமா?
இன்று முகநூலிலும் ட்விட்டரிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி தங்கள் கருத்துக்களை உடனுக்குடன் பதிவிடுவதற்கு முடிகிறது.
இந்த வாய்ப்பும் வசதிகளும் இதே பதவிகளில் முன்னர் அமர்ந்திருந்தவர்களுக்கு கிடைத்ததா?
தமிழ்நாட்டில் காமராஜர் என்ற பெயரில் ஒரு முதலமைச்சர் இருந்தார். அவர் அந்தப்பதவியை ஏற்றதும், அவர் பயணித்த வாகனத்திற்கு முன்பாக காவலர்கள் மற்றும் ஒரு வாகனத்தில் சைரன் ஒலியை எழுப்பியவாறு சென்றார்கள்.


அந்தச்சத்தம் என்ன? என்று கேட்ட முதல்வர் காமராஜர், தான் பயணித்த வாகனத்திலிருந்து இறங்கி,  அந்தக்காவலர்களை அழைத்து " உங்களுக்கு வேறு வேலை கிடையாதா? எனக்கு மக்களை சந்திப்பதற்கு எப்படிச்செல்லவேண்டும் என்பது தெரியும். நீங்கள் சென்று உங்கள் பொலிஸ் நிலையங்களில் மக்களுக்கு செய்யவேண்டிய பணிகளை கவனியுங்கள்" எனச்சொல்லி விரட்டிவிட்டார்.
அவரது தாயார் சிவகாமி அம்மையார் விருதுநகரிலிருந்து சென்னைக்கு அரசு பேரூந்தில்தான் வந்தார். முதல்வரான மகனது சுகநலன் விசாரிக்க வந்த அந்த மூதாட்டியை பார்த்துப்பேசியதன் பின்னர் அரசு பேரூந்திலேயே திருப்பி அனுப்பியவர் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர்.
இதுபோன்ற சம்பவங்கள் கற்காலத்தில் நடக்கவில்லை!  நாம் கடந்துள்ள இருபதாம் நூற்றாண்டில்தான் நடந்திருக்கின்றன.
இலங்கையில் தம்புள்ள தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சமூக சேவைகள் மற்றும் கலாசார அமைச்சராகவும் பதவி வகித்த டீ. பி. தென்னக்கோன் கவிஞராகவும் அறியப்பட்டவர். எளிமையாக வாழ்ந்த இவர், தேர்தலில் தோற்றபின்னர், தனது ஊரில் பஸ் நிலையங்கள் - பொதுச்சந்தைகளின் முன்பாக தான் எழுதிய கவிதைகளைப் பாடி அந்த கவிதைகளின் பிரசுரங்களை பொதுமக்களுக்கு சதங்களுக்கு விற்று வாழ்க்கையை கடந்தவர்.
அவரை கவிகொலகாரயா என்றும் மக்கள் அன்று செல்லமாக அழைத்தனர். ஏழை மாணவர்களுக்கு மதிய உணவாக பணிஸ் வழங்கிய கல்வி அமைச்சர் தகநாயக்காவை அன்று பணிஸ்மாமா என்று அழைத்தனர்.
இன்று,  நாடாளுமன்ற உறுப்பினர்களை செத்தல் மிளகாய் வியாபாரி என்று அழைப்பதா? பட்டாக்கத்தி பைரவன் என்று அழைப்பதா?  
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் மக்களின் வரிப்பணத்தில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். அவர்கள் செல்லும் நாடுகளில் எவ்வாறு அரசு இயங்குகிறது? மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது? என்று பார்க்கமாட்டார்களா?
இலங்கையில் நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் இயங்கும்போது நாளொன்றின் செலவுகள் எவ்வளவு என்பதற்கு பதில் இருக்கிறது. பன்முக வரவு செலவுத்திட்டம் அறிவிக்கப்படும்பொழுது, ஒவ்வொரு நாடாளு மன்ற உறுப்பினருக்கும் ஒதுக்கப்படும் நிதி எவ்வளவு என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது.


ஆனால், அந்த நிதி எவ்வாறு உரியமுறையில் மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா?
இவ்வாறு அன்றும் இன்றும் தொடரும் கேள்விகளுக்கும் பதில்களுக்கும்  மத்தியில் பொதுமக்களின் நினைவாற்றல் குறித்து அதே மக்களால் தேர்வுசெய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எள்ளலவும் கவலை இல்லை.
அன்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய " பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலைகளும் தூங்குதப்பா" என்ற பாடல் வரிகளும் இன்று நினைவுக்கு வருகின்றது.
( தொடரும்)
( நன்றி: " அரங்கம்" இலங்கை இதழ்)



No comments: