அம்மாவின் பிள்ளை (சிறுகதை) யோகன்- கன்பெரா


கதவைத் தட்டும் சத்தம் கேக்குது. சரி இப்பவும் ஒரு பொய் சொல்ல வேணும். கொஞ்சம் பதட்டமாக இருக்கு. கதவைத்  தட்டுவது பக்கத்துக்கு யுனிட் ஜோன்  என்று எனக்கு நல்லாத் தெரியும். இதோட மூன்றாவது தரமாகத் தட்டுது. பாவம். முதல் இரண்டு தரமும் கேட்டும் கேளாதது போல இருந்து விட்டேன். அதுக்கு மனம் கேட்கவில்லை போலும். வீட்டுக்குப் போய் போன் அடிச்சிது. பாத்ரூமில குளிச்சுக் கொண்டிருந்ததாலும், பியானோ வாசித்துப் பழகிக் கொண்டிருந்ததாலும் கதவு தட்டிய சத்தம் கேக்கவில்லை எண்டு ரெண்டு பொய் சொன்னேன். இப்ப இன்னொரு பொய்யா?

அப்பாவும் அம்மாவும் ஆறு மணிக்கே  எழும்பி வெளிக்கிட்டு எனக்கும் குட்டிக்கும் கிஸ் தந்து விட்டு வேலைக்குப் போட்டினம். எங்களை வீட்டிலை தனியா விட்டிட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்குப் போனது இதுதான் முதல் தரம்.
அம்மா திரும்ப திரும்ப சொல்லி விட்டுத்தான் போனா. யார் வந்து கதவைத் தட்டினாலும் திறக்க வேண்டாம் என்று. பக்கத்து யூனிட் ஜோன் எண்டாலும்  கூட என்று. நான் ஓமெண்டு தலையை ஆட்டினேன்.
எனக்கு பத்து   வயது நடக்கிறதாம். என்னையொத்த வயதுப் பெண் பிள்ளைகளை கிட்னப் பண்ணுகிறார்களாம். டிவி யிலும் நெடுகிலும் காட்டுவினம். நான் டிவி பார்ப்பதும் குறைவு. என்னை பார்க்க விடுவதில்லை.  பிள்ளைகளுக்கான  சனல் மட்டும் தான் பார்க்கலாமாம். ஏன் அம்மாவும் அப்பாவும் என்னை இப்பிடிப் பயப்படுத்துகினமோ தெரியவில்லை.


குட்டி ப்ளூ காய்சசல் வந்து உள்ளே படுத்திருக்கிறாள். இப்ப எனக்கு மூண்டு கிழமை பள்ளிக்கூடம் லீவு எண்டதால் இந்த மூண்டு கிழமை என்னையும் குட்டியின் அதே கிரெஷ்  இல் கொண்டு போய் விட அப்பா ஒழுங்கு செய்தார்.  
குட்டிக்கு காய்சசல் வந்ததால் இந்தக் கிழமை கிரெஷ்க்கு அவளை விடவில்லை. வருத்தம் எண்டால் கிரெஷ்க்கு போக ஏலாது. வருத்தம் மற்றப் பிள்ளைகளுக்கும் தொத்தி விடும் எண்டதாலை. அதாலை நானும் வீட்டிலைதான் நிக்கிறன்.
அம்மா வேலைக்குப் போகாமல் மூண்டு நாள் எங்களோடை நின்றா. அம்மா டெம்பரரி ஆக வேலை செய்கிறா அதாலை தொடர்ந்து 1 கிழமை  லீவு எடுக்க அவவுக்கு பயம். அடிக்கடி லீவு எடுத்தால் வேலையால நிற்பாட்டி விடுவினம் எண்டு.  வேலையால  நிப்பாடினால் வீட்டு  லோன் கட்டுவது கஷ்டமாம். அப்பாவின் சம்பளத்தில் மட்டும் சமாளிக்க எலாதாம். எண்டபடியால் தான் ப்ளூ வந்து படுத்திருக்கும் குட்டியையும் என்னையும்
வீட்டிலை விட்டிட்டு அம்மா வேலைக்குப் போனா. இண்டைக்கு நாளைக்கும் நானும் குட்டியும்  வீட்டிலை  தனியாத்தான் நிக்கப் போறம்.  அப்பாவுக்கும் கொண்ட்ராக்ட் வேலை. லீவு எடுக்க ஏலாது.
படுத்திருந்த குட்டியை கிஸ் பண்ணி பை சொன்னபோது காலமை  அம்மாவுக்கு கண் கலங்கியது.
அதை கண்டு விட்டு அப்பா "இண்டைக்கு ஒரு நாள் சமாளிப்பம். நாளைக்கு நான் லீவு எடுக்கிறன்" எண்டு சொன்னார்.
அதாலை அம்மாவுக்கு கொஞ்ச ஆறுதல். 

எங்களோட நல்லாப்  பழகும் பக்கத்து வீட்டு யுனிட் ஜோனையும் சிவா அங்கிளையும் விட எங்களுக்கு தெரிந்தவர்கள் இந்த நாட்டில் இல்லை.  சிவா அங்கிள் அப்பாவின் கசின் முறை. கொஞ்சம் தூரத்தில் இருக்கிறார்கள். சந்திரா ஆண்ட்டியும் வேலைக்குப் போகிறவ. அவர்களும் பிசிதான். மகள்
ஏஞ்சலாவை என்ரை பேர்த்டேக்கு கூட்டிவந்த பிறகு அவர்களும் வந்து கனகாலம்.


ஜோன் அப்பாவுக்கு நல்ல பிரெண்ட். ஜோனுக்கு அறுபது வயது இருக்கும். தனியாகத்தான் அந்த யுனிட் இலை இருக்குது. ஜோனின்ரை வைய்ஃப் முந்தியே செத்துப் போட்டாவாம். ஸ்கொட்லாண்டில் பிறந்த ஜோன்  அவுஸ்ரேலியா வந்து 55 வருசமாம்.  5 வயது மட்டிலை அது வந்திருக்கு.
இப்ப இங்க ஒரு பாக்டரியில வேலை செய்யிது. அப்பாவுடன் சேர்ந்து பியர் குடிக்கும். சில வேளைகளில் பியர் குடித்துக் கொண்டே புகைத்து தள்ளும் சிகரெட் துண்டுகளை ஆஷ்ட்ரேயில் எடுக்கவரும் அம்மா முகத்தைச் சுளித்துக் கொள்வா.
பின்னேரம் மூண்டு மணி ஆஃப்டர்னுன் ஷிஃப்ட் வேலைக்குப் போகும் ஜோன்  பகல் முழுவதும் வீட்டில்தான் நிற்கும். பகல் முழுக்க சிகரெட் தான் குடிக்குமோ?

குட்டியில் ஜோனுக்கு நல்ல விருப்பம். 4 வயதாகும் குட்டியை தன்ரை கிராண்ட் டோட்டர் போலதான் என்று அடிக்கடி சொல்லும். ஜோன் வீட்டுக்கு வந்தால் குட்டி தமிழிலை "கோப்பி வேணுமா" எண்டு கேப்பாள். இந்த ரெண்டு தமிழ்ச் சொல்லுதான் அதுக்கு விளங்கும். ஓமெண்டு தலையாட்டிக் சிரிக்கும்.

ஜோனுக்கு  ஒரு மகள்தான். ஆனால் எங்கேயோ அவை தனியா இருக்கினம். அவையளை ஒருநாளும் நான் காணவேயில்லை. ஜோனுக்கு வயிற்றிலை ஒரு ஒப்பரேஷன் செய்தபோதும் அவையள் வரவில்லை. அப்பாதான் ஹொஸ்பிரலுக்கு கொண்டு போய் விட்டுப் பிறகு கூட்டி வந்தார். எப்படி அவையள் மனம் வந்து தகப்பனை மறந்திருக்கினம். என்னாலை அப்பாவை ஒருக்காலும் தனியா விட்டு இருக்க எலாது.


எண்டாலும் எங்கடை அம்மா சரியான பயந்தாங்கொள்ளி. இண்டைக்கு காலமை வேலைக்குப் போய் சேர்த்தவுடனை முதல் வேலையா எங்களுக்கு போன் பண்ணினா. "கவனம் கவனம்" திருப்பி திருப்பி இதைத்தான்   சொன்னா.
எனக்கு கேட்டு அலுத்துப் போய்ச்சு. அனோய் பண்ணிற மாதிரி. இந்த நாடு அப்படியாம், என்ரை வயது அப்படியாம். எதுக்கும் உதவும் எண்டு சுவரில் எழுதி கொழுவியுள்ள போலீஸ், அம்புலன்ஸ் போன் நம்பரையும்  அடிக்கடி ஞாபகப்படுத்தினா. எனக்கு எல்லாம் தெரியும்தானே? ஸ்கூலிலேயே எல்லாம் சொல்லித் தந்திட்டினம்.

குட்டிக்கு காய்ச்சல் எண்டு ஜோனுக்கு தெரியும். அதுவும் அப்பாவுடன் ஃபாமிலி டொக்ரரிடம் குட்டியை கொண்டு போனபோது சேர்ந்து போனது.  ஆனால் ஜோன் வந்து கதவைத் தட்டினாலும் திறக்க வேண்டாமென்று திரும்பவும் சொல்லுறா. இது என்ன  நியாயம்?  இஞ்சை ஒருவரையும் நம்ப முடியாதாம். அம்மா நினைக்கிறா எல்லா வைற்ஸ் உம் கூடாதவர்களெண்டு.

முதல் ரெண்டு தரமும் கதவைத் தட்டி திறக்காததால் ஜோன் பயந்து போய் இருக்க வேணும். போனில் கவலையாகக் கதைத்தது. பாத்ரூமும், பியானோ லெசனும் நல்ல பொய்கள். சீ ... நானும் இப்பிடி பொய் சொல்லுகிறேனே எண்டு வெறுப்பா இருக்கு.


கதவைத் தட்டும்  சத்தம் கேட்டு குட்டி முழித்து விடடாள். அறையில் அவள் அழும் சத்தம் கேக்குது. வருத்தத்தில் கிடைப்பதால் அடிக்கடி அழுகிறாள். அம்மா பிரிஜ்ஜில வைச்சிருக்கிற மருந்தை குடுக்க  வேணும். 
கொஞ்சம் திறந்திருந்த விண்டோ பிளைண்ட்க்குள்ளால வெளியில ஜோன் கதவுக்குப் பக்கத்தில நிக்கிறது தெரியுது. பிளைண்ட்க்கு பின்னுக்குள்ள கண்ணாடியை உயர்த்த சொல்லி கையைக் காட்டிய ஜோன்
எதோ பெலத்து சொல்லுறது உள்ளுக்கு கேக்கவில்லை.  நான் கண்ணாடியை கொஞ்சம்  மேலே உயர்த்தினன்.

"ஏன் குட்டி அழுகிறாள். அவளுக்கு காய்ச்சல் கூடிவிட்டதா "?
குட்டி அழுதது வெளியே ஜோனுக்கு கேட்டு விட்டது.

“ அவளுக்கு இப்ப ஓகே."

“ கதவைத் திற நான்  வந்து பார்க்க வேணும்"

ப்ளூ காய்சசல் வந்த நாளிலிருந்து ஜோன் ஒவ்வொரு நாளும் குட்டியை சுகம் கேட்டபடிதான்.  ஜோனுடைய முகத்தைப் பாக்க பாவமாக இருக்கு. இருந்தாலும் அம்மாவின் சொல்லைக்  கேட்டு உரக்கக் கத்துகிறேன்.

" கதவின் லொக்கை என்னால்  எட்ட  ஏலாது."

கைக்கு எட்டும் உயரத்திலுள்ள லொக் எனக்கு நல்லா எட்டும் எண்டு அதுக்குத் தெரியாம இருக்குமா? பயத்தில உடம்பும் நடுங்கிக் கொண்டிருக்கு.

கொஞ்ச  நேரம் வாசலடியிலை நிண்டு விட்டு ஜோன் திரும்பிப் போவது  பிளைண்ட்க்குள்ளால் தெரியுது.
இந்தப் பொய் சொன்னதை நினைக்க என்னிலை வெறுப்பாக இருக்கு.
நான் ஒரு  லையரா இல்லாட்டி அம்மாவின் பிள்ளையா?

(நன்றி: மரபு 1992)
-->


No comments: