21ஆவது உலகக் கிண்ணப் போட்டிகள் - ரஷ்யா 2018


உருகுவே கோல்காப்பாளர் தாரைவார்த்த  2 வது கோலுடன் அரை இறுதிக்குல் கால்பதித்த பிரான்ஸ்

5 தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கு ஆப்பு வைத்த பெல்ஜியம்

28 வருடங்களின் பின் தகுதிபெற்றது  இங்கிலாந்து

பெனல்டிகளில் கோட்டை விட்டது ரஷ்யா அரை இறுதியில் நுழைந்தது குரோஷியா



உருகுவே கோல்காப்பாளர் தாரைவார்த்த  2 வது கோலுடன் அரை இறுதிக்குல் கால்பதித்த பிரான்ஸ்

06/07/2018 கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா இழைத்த பெருந்தவறு காரணமாக இரண்டாவது கோலைத் தாரைவார்த்த உருகுவேயை, நிஸ்னி, நொவ்கோரோட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் பிரான்ஸ் வெற்றிகொண்டது.
இந்த வெற்றியுடன் முதலாவது அணியாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற பிரான்ஸ், உலகக் கிண்ண வரலாற்றில் ஆறாவது தடவையாக அரை இறுதி வாய்ப்பைப் பெற்றது.
போட்டியின் இரண்டாவது பகுதியில் பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் க்றீஸ்மான் மிகவும் பலமாக இடது காலால் உதைத்த பந்தை தனது உள்ளங் கைகளால் கோல்காப்பாளர் முஸ்லேரா தடுக்க முற்பட்டபோது பந்து அவரது கைகளில் பட்டு கோலினுள் சென்றதுடன் பிரான்ஸின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.
முதல் சுற்றிலும் முன்னோடி கால் இறுதியிலும் ஒரு கோலைத்தானும் விடாமல் இருந்த முஸ்லேரா இப் போட்டியில் இரண்டு கோல்களை விட்டமை உருகுவேக்கு பேரிடியாக அமைந்தது. 
மறுபுறத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் கோல்காப்பளார் ஹியூகோ லோரிஸ் மிகவும் அபாரமாக செயற்பட்டு உருகுவேயின் கோல் போடும் முயற்சிகளைத் தடுத்ததை அவதானிக்க முடிந்தது.
இரண்டு அணிகளும் சமமாக மோதிக்கொண்ட இப்போட்டியின் 39ஆவது நிமிடம்வரை எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.
40ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் முதலில் கோல் போட்டது. ப்றீ கிக் பந்தை தலையால் முட்டிய  ரபாயல் வரேன், பிரான்ஸின் முதலாவது கோலைப் போட்டார். இந்தக் கோல் பிரான்ஸ் வீரர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியதுடன் உருகுவே வீரர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.
இடைவேளையின் பின்னர் பிரான்ஸ் எல்லையை ஆக்கிரமித்து கோல் நிலையை சமப்படுத்த உருகுவே முயற்சித்தபோதிலும் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் அவை முறியடிக்கப்பட்டன. 
உருகுவேயின் முக்கிய வீரர்களில் ஒருவரான எடின்சன் கெவானி உபாதை காரணமாக இப் போட்டியில் வியைாடாதது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஒரு சந்தர்ப்பத்தில் பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹியூகோ லோரிஸ் வலப்புறப் பக்கவாட்டில் தாவி பந்தைத் தடுத்தமை பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.
போட்டியின் 61ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லைக்கு வேளியே இருந்து (சுமார் 20 யார்) க்றீஸ்மான் பலமாக உதைத்த பந்து முஸ்லேராவின் உள்ளங்கைகளில் பட்டு கோலினுள் புகுந்தது. அவர் அப் பந்தை முஷ்டியால் தட்டியிருந்தால் ஒருவேளை அந்த கோல் தடுக்கப்பட்டிருக்கலாம் என்பது பலரது அபிப்பிராயமாகும். 102ஆவது போட்டியில் விளையாடிய முஸ்லெரா இந்தத் தவறை தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கப்போவதில்லை.
போட்டியின் 69ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர் தன்னைத் தாக்கியதாக பாசாங்கு செய்து கீழே வீழ்ந்த 19 வயதுடைய எம்பாப்வே வலியால் துடிப்பதுபோல் நடித்தார். இதனைத் தொடர்ந்து உருகுவே வீரர் க்றிஸ்டியன் ரொட்றிகூஸுக்கும் எம்பாப்பேக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படவே இருவரும் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதன் பின்னர் கோல் போடுவதற்கு உருகுவே எவ்வளவோ முயன்றும் அது எதுவும் பலனிக்காமல் போக பிரான்ஸ் அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது.   நன்றி வீரகேசரி 








 5 தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கு ஆப்பு வைத்த பெல்ஜியம்

07/07/2018 ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலை கஸான் எரினா விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற உலகக் கிண்ண இரண்டாவது கால் இறுதியில் 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் அபார வெற்றிகொண்ட பெல்ஜியம் அரை இறுதியில் பிரான்ஸை எதிர்கொள்ள தகுதிபெற்றது.
முதல் சுற்றுடன் நடப்பு சம்பியன் ஜேர்மனி, முன்னோடி கால் இறுதிகளுடன் முன்னாள் சம்பியன்களான ஆர்ஜன்டீனா, ஸ்பெய்ன், கால் இறுதியில் உருகுவே ஆகிய அணிகளைத் தொடர்ந்து மற்றோரு முன்னாள் சம்பியனான பிரேஸிலும் இப்போது வெளியேற்றப்பட்டுள்ளது.
இந்தப் போட்டி முடிவை அடுத்து ஐரோப்பிய மண்ணில் ஐரோப்பிய நாடு ஒன்று சம்பியானவது உறுதியாகியுள்ளது.
போட்டியின் ஆரம்பத்தில் பிரேஸிலினால் போட்டுக் கொடுக்கப்பட்ட சொந்த கோலும், பெல்ஜியம் கோல்காப்பாளர் திபோட் கோர்ட்டொய்சின் அற்புதமான தடுப்புகளும் பெல்ஜியத்தின் வெற்றிக்கு பிரதான காரணிகளாக அமைந்தன. 
இப் போட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட பிரேஸிலின் கோல் போடும் வாய்ப்புகளை கோர்ட்டொய்ஸ் தடுத்து நிறுத்தியதுடன் பின்கள வீரர்களும் சிறந்த தடுத்தாடும் வியூகங்களுடன் விளையாடி பிரேஸில் முன்கள வீரர்களைக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக பிரேஸில் நட்சத்திர வீரர் நேமாரை அவர்கள் கட்டுப்படுத்திய விதம் சிறப்பாக அமைந்தது. போட்டியின் கடைசிக் கட்டத்தில் கோல் நிலையை சமப்படுத்துவதற்கு நேமார் எடுத்த முயற்சியின்போது பந்தை குறுக்கு கம்பத்துக்கு மேலாக கோர்ட்டொய்ஸ் வலதுகையால் தட்டி பெல்ஜியத்தைக் காப்பாற்றினார். இப் போட்டியில் திறமையாக விளையாடிய பிரெஸிலுக்கு அதிர்ஷ்டம் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.
போட்டியின் 13ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி ப்றயனின் கோர்ணர் கிக் பந்தை தனது தலையால் வின்சென்ட் கொம்ப்பெனி முட்டியபோது பந்து அவரை உராய்ந்தவாறு லூயிஸ் ரோஸா பெர்னாண்டின்ஹொவின் தோளில் பட்டு பிரேஸிலின் சொந்த கோலினுள்ளேயே சென்றது.
ஆனால் போட்டியின் 31ஆவது நிமிடத்தில் கெவின் டி ப்றயன் 18 யார் தூரத்திலிருந்து வலது பாதத்தால் பந்தை தாழ்வாக செல்லும் வகையில் உதைத்து போட்ட பெல்ஜியத்தின் இரண்டாவது கோல் ஒரு சிறந்த கோலாக அமைந்தது. இந்த கோல் போடப்படுவதில் பிரதான பங்காற்றியவர் லூக்காக்கு ஆவார். தனது எல்லையிலிருந்து பந்தை வேகமாக முன்னோக்கி நகர்த்திச் சென்ற லூக்காக்கு பரிமாறிய பந்தையே டி ப்றயன் கோலாக்கினார்.
இடைவேளையின் பின்னர் பிரேஸிலின் ஆதிக்கம் வெளிப்பட்டபோதிலும் அதன் கோல் போடும் முயற்சகள் கைகூடாமல் போயின. மறுபுறத்தில் அவ்வப்போது பிரேஸில் கோல் எல்லையை நோக்கி பெல்ஜியம் வீரர்கள் பந்தை நகர்த்தியபோதிலும் அவர்களால் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முடியவில்லை.
இப் பகுதி ஆட்டத்தின்போது பிரேஸில் சில மாற்றுவீரர்களை களம் இறக்கியதன் மூலம் பலன் கிடைத்தது. போட்டியின் 76ஆவது நிமிடத்தில் இடது புறத்திலிருந்து கூட்டின்ஹோ உயர்வாக பரிமாறிய பந்தை தனது தலையால் தட்டிய மாற்றுவீரர் ரொனாட்டோ ஒகஸ்டோ கோல் நிலையில் 2 க்கு 1 என ஆக்கினார். 
இதனைத் தொடர்ந்து கோல் நிலையை சமப்படுத்துவதற்கு பிரேஸில் கடுமையாக முயற்சித்தது. ஆனால் பெல்ஜியம் பின்கள வீரர்களும், கோல்காப்பாளரும் விவேகத்துடன் செயற்பட்டு தமது அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தனர்.
உலகக் கிண்ண வரலாற்றில் பெல்ஜியம் அரை இறுதிக்கு முன்னேறியிருப்பது இது இரண்டாவது தடவையாகும்.  நன்றி வீரகேசரி 








28 வருடங்களின் பின் தகுதிபெற்றது  இங்கிலாந்து

07/07/2018 சுவீடனுக்கு எதிராக ரஷ்யாவின் சமாரா எரினா விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற மூன்றாவது கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்ற முன்னாள் உலக சம்பியன் இங்கிலாந்து, 28 வருடங்களின் பின்னர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
ஹெரி மெகயர், டேல் அலி ஆகிய இருவரும் தலையால் தட்டி போட்ட கோல்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தன.
1966இல் தனது சொந்த மண்ணில் உலக சம்பியனான இங்கிலாந்து 1990இல் ஜேர்மனியிடம் அரை இறுதியில் பெனல்டி முறையில் தோல்வியைத் தழுவியது. இப்போது மூன்றாவது தடவையாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
ரஷ்யா 2018 உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிகப்படியாக 6 கோல்கள் போட்டு தங்கப் பாதணிக்கு குறிவைத்து விளையாடி வரும் ஹெரி கேனைக் கட்டுப்படுத்துவதில் சுவிடன் அதிக கவனம் செலுத்தியது. இதன் காரணமாக இங்கிலாந்தின் மற்றைய வீரர்கள் கோல் போடுவதற்கான முயற்சியில் இறங்கினர்.
இரண்டு அணிகளும் போட்டியின் ஆரம்பத்தில் மிக நிதானமாகவும் மெதுவாகவும் விளையாடின. போட்டியின் 19ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் ஹெரி கேன கோலை நோக்கி உதைத்த பந்து இலக்கு தவறி வெளியே சென்றது.
30ஆவது நிமிடத்தில் போட்டியில் பதிவான முதலாவது பெனல்டி இங்கிலாந்துக்கு கனி கொடுப்பதாக அமைந்தது. ஏஷ்லி யங்கின் கோர்ணர் கிக்கை நோக்கி உயரே தாவிய மெகயர் தலையால் தட்டி அலாதியான கோல் ஒன்றைப் போட்டு இங்கிலாந்தை முன்னிலையில் இட்டார்.
இதனை அடுத்து எதிர்த்தாடுவதில் சுவீடன் ஈடுபட்ட போதிலும் தவறுகள் காரணமாக பந்தை எதிரணியிடம் தாரைவார்த்த வண்ணம் இருந்தது.
44ஆவது நிமிடத்தில் ஓவ் சைட் வலையில் சிக்கிய ரஹீம் ஸ்டேர்லிங்குக்கு அடுத்த நிமிடம் கோல்போடுவதற்கு கிடைத்த வாய்ப்பை சுவீடன் கோல்காப்பாளர் ரொபின் ஒல்சன் திசைதிருப்பினார்.
இடைவேளையின் பின்னர் 47ஆவது நிமிடத்தில் கோல் நிலையை சமப்படுத்துவதற்கு சுவீடனுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஆனால் மார்க்கஸ் பேர்க் தலையால் தட்டிய பந்தை நோக்கி இடது புறமாக தாவிய இங்கிலாந்து கோல்காப்பாளர் ஜோர்டான் பின்போர்ட் அற்புதமாக தடுத்தார்.
12 நிமிடங்கள் கழித்து ஜெசே லிங்கார்ட் உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய அலி மிகவும் அலாதியாக தலையால் தட்டி இங்கிலாந்தின் இரண்டாவது கோலைப் போட்டார்.
அடுத்த மூன்றாவது நிமிடத்தல் இங்கிலாந்து கோல்காப்பாளர் பிக்போர்ட் இரண்டாவது தடவையாகவும் அற்புதமாக செயல்பட்டு சுவீடன் வீரர் விக்டர் க்ளாசனின் முயற்சியைத் தடுத்தார். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் கோலை நோக்கி வந்த பந்தை பிக்போர்ட் தனது கையால் தட்டி குறுக்குக் கம்பத்துக்கு மேலாக செல்ல வைத்தார்.
இங்கிலாந்துக்கு 78ஆவது நிமிடத்தில் கோல் போடுவதற்கு கிடைத்த வாய்ப்பு வீண் போனது.
அதன் பின்னர் உபாதையீடு நேரம் உட்பட 12 நிமிடங்களுக்கு இரண்டு அணிகளும் வேகத்துடனும் விறுவிறுப்புடனும் எதிரத்தாடலில் ஈடுபட்ட அதேவேளை அவற்றின் தடுத்தாடலும் சமமாக அமைந்ததால் மேலதிக கோல் எதுவும் போடப்படாமல் போட்டி முடிவுக்கு வந்தது.   நன்றி வீரகேசரி 








பெனல்டிகளில் கோட்டை விட்டது ரஷ்யா அரை இறுதியில் நுழைந்தது குரோஷியா

08/07/2018 குரோஷியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி கால் இறுதிப் போட்டியில் 4 க்கு 3 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றிகொண்ட குரோஷியா உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.
இவ்விரு அணிகளுக்கும் இடையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியின் வழமையான முழுநேர ஆட்டத்தின்போது கோல் நிலை 1 க்கு 1 என சமமாக இருந்தது. மேலதிக ஆட்டநேர நிறைவில் கோல் நிலை 2 க்கு 2 என சமநிலையில் இருந்தது. இதனை அடுத்து மத்தியஸ்தரால் அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் வரவேற்பு நாடான ரஷ்யா தோல்வி அடைந்து வெளியேறியது.
பிரான்ஸில் 1998இல் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் முதல் தடவையாக பங்குபற்றி நான்காம் இடத்தைப் பெற்ற குரோஷியா, இப்போது இரண்டாவது தடவையாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
சொந்த நாட்டு இரசிகர்களின் அளவுக்கு அதிகமான ஆரவாரம், ஆர்ப்பரிப்பு, உற்சாகமூட்டல் ஆகியவற்றுக்கு மத்தியில் எதிரணியான குரொஷியாவை அச்சுறுத்திய வண்ணம் ரஷ்யா விளையாடிது. 
குரோஷியாவின் எதிர்த்தாடலுக்கு ஈடுகொடுத்து விளையாடிய ரஷ்யா ஒரு சந்தர்ப்பத்தில் பதில் எதர்த்தாக்குதல் தொடுத்து முதலில் முன்னிலை அடைந்தது.
போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ரஷ்ய வீரர் டெனிஸ் செரிஷேவ் இடது காலால் ஓங்கி உதைத்த பந்து குரோஷிய கோலின் மேல் மூலை ஊடாக உள்ளே சென்றது.
ஆனால் குரோஷியா அடுத்த எட்டாவது நிமிடத்தில் பதிலடி கொடுத்து கோல் நிலையை சமப்படுத்தியது. அண்ட்ரெய் க்ராமெரிக் மிக இலாவகமாக தலையால் பந்தை தட்டி கோல் போட்டு ரஷ்யர்களை அதிரவைத்தார்.
அதன் பின்னர் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை மிக அரிதாகவே பெற்றனர். ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
மேலதிக நேரத்தின் 11ஆவது நிமிடத்தில் (101 நி.) டொமாகொய் விடா கோல் ஒன்றைப் போட்டு குரோஷியாவை முன்னிலையில் இட்டதுடன் அரங்கில் அதுவரை ஆரவாரம் செய்துகொண்டிருந்த ரஷ்ய இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
எவ்வாறாயினும் 115ஆவது நிமிடத்தில் டிஸா கோயெவ்வின் ப்றீ கிக்கை நோக்கித் தாவிய மரியோ பெர்னாண்டெஸ் தலையால் தட்டி கோல் நிலையை சமப்படுத்தி ரஷ்யாவின் தற்காலிக ஹீரோவானர். ஆனால் பெனல்டி முறையில் ரஷ்யாவுக்கு கைகொடுக்கத் தவறியதால் இரசிகர்களின் கடும் கண்டனத்துக்கு பெர்னாண்டெஸ் உள்ளானார்.
ரஷ்ய வீரர் பெடோர் ஸ்மோலொவ்வின் முதலாவது பெனல்டியை குரோஷிய கோல்காப்பாளர் டெனியல் சுபாஷிக் தடுத்ததுடன் பெர்னாண்டோஸின் மூன்றாவது பெனல்டி இலக்கு தவறியது. குரோஏஷிய வீரர் கோவாசிக்கின் பெனல்டியை (இரண்டாவது) அக்கினீவ் தடுத்தார்.
ரஷ்யா சார்பாக அலன் டிசாகோயெவ் (இரண்டாவது), சேர்ஜி இஞ்ஞாஷேவிச் (நான்காவது), டேலர் குஸாயேவ் (ஐந்தாவது) ஆகியோரும் குரோஷியா சார்பாக மார்செலோ ப்ரோஸோவிக் (முதலாவது), லூக்கா மொட்ரிக் (மூன்றாவது), டொமாகொய் விடா (நான்காவது), ஐவன் ராக்கிடிக் (ஐந்தாவது) ஆகியோரும் கோல்களைப் போட்டனர். இதன் பிரகாரம் 4 க்கு 3 என்ற பெனல்டி அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை குரோஏஷியா பெற்றுக்கொண்டது. நன்றி வீரகேசரி 






No comments: