கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்கள் -- (04) ஆரையூர் கண்ணகை வரலாறும் வழிபாடும்: தேடலில் இறங்கியிருக்கும் பிரசாத் சொக்கலிங்கம் - முருகபூபதி


மகாபாரதம், இராமாயணம், சிலப்பதிகாரம் என்பன ஐதீகங்களாக போற்றப்பட்டாலும், இவற்றில் வரும் பெண்பாத்திரங்களுக்கு கோயில்கள் அமைத்து வழிபடும் மரபும் தொன்றுதொட்டு நீடிக்கிறது. இந்தக்காவியங்களில் வரும் ஆண் பாத்திரங்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான். மகாபாரதத்தில் குந்தி முதல் பாஞ்சாலி வரையிலும், இராமாயணத்தில் சீதையும், சிலப்பதிகாரத்தில் கண்ணகியும் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள்தான். குந்தியைத்தவிர ஏனைய மூவரும் வழிபாட்டுக்குரியவர்களாகிவிட்டனர்.

இலங்கையில் திரெளபதை அம்மன், கண்ணகி அம்மன், சீதை அம்மன் கோயில்கள் அமைத்து சைவத்தமிழர்களும் பௌத்த சிங்களவர்களும் வழிபடும் மரபும் தொடர்ந்து பண்பாட்டுக்கோலமாகவே மாறிவிட்டது சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலையும் மக்களிடத்தில் காவியமாகியிருக்கிறாள். மணிமேகலை தமிழ்க்காப்பியம் மட்டுமல்ல, அது பவுத்த காப்பியமும்தான் என்று நிறுவுகிறார் தமிழக எழுத்தாளர் பேராசிரியர் . மார்க்ஸ். ( ஆதாரம்: தீராநதி 2017 ஜூன்)


கண்ணகி வழிபாடு, திரௌபதை அம்மன் வழிபாடு என்பன கிழக்கிலங்கையில் மிகவும் முக்கியத்துவமாகியிருக்கின்றன. இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறைவைத்தமையால் அங்கு சிங்கள மக்களால் சீதாஎலிய என்னுமிடத்தில் சீதை அம்மனும், வடமேற்கு இலங்கையில் உடப்பு மற்றும் கிழக்கிலங்கை பாண்டிருப்பில் தமிழர்களினால் திரௌபதை அம்மனும், கன்னன் குடாவில் ஶ்ரீகண்ணகி அம்மனும் குடியிருக்கிறார்கள். பாரத நாட்டில் தோன்றிய காவிய மாந்தர்களில் குறிப்பாக பெண்களுக்காக இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் வழிபாட்டு மரபை தோற்றுவித்திருப்பதின் பின்னணி விரிவான ஆய்வுக்குரியது.

திரௌபதை அம்மன் கோயில் முன்றல்களில் தீமிதிப்பு. உடப்பு பிரதேசத்தில் அதனை பூமிதிப்பு என்பார்கள். இரண்டு நேர்த்திக்கடன்களுமே தம்மை வருத்திக்கொள்ளும் செயல்கள்தான். பெண்தெய்வங்கள் இப்படியும் ஆண்களை பழிவாங்குகின்றனவா...? சீதையை இராமன் தீக்குளிக்கவைத்தான். பாஞ்சாலியை துச்சாதனன் துகிலுரிந்தான். கண்ணகியின் கணவனை பாண்டியன் சிரச்சேதம் செய்வித்தான். பெண்களின் சோகங்களும் சாபங்களும் நிரம்பிய ஐதீகக்கதைகளை காவியங்களாக எழுதிவிட்டுச் சென்றிருப்பவர்களும் ஆண்கள்தான்.

நல்லை நகர் தந்த ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர் என்ன செய்தார்...? என்ற சுவாரஸ்யமான செய்தியை ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை ஒரு தடவை எழுதியிருந்தார். நாவலர் காலத்தில் வடபகுதியில் கண்ணகி வழிபாடு தீவிரமாக இருந்திருக்கிறது. சைவமரபில் வந்திருக்கும் அவர், தமிழகத்தின் வாணிபச்செட்டிச்சிக்கு இங்கு வழிபாடா...? என்று படிப்படியாக அந்த மரபை மாற்றியிருக்கிறார். அதனால் வடபகுதி கண்ணகி அம்மன்கள் வேறு அம்மன்களாக உருமாறிவிட்டனர் என்ற கருத்தும் நிலவுகிறது என்றார் பொன்னுத்துரை. ஆனால், கிழக்கிலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு கண்ணகி தெய்வமாகியிருப்பதுடன், சிங்கள மக்கள் மத்தியிலும் பத்தினி தெய்யோவாக மாறிவிட்டாள்.
கிழக்கிலங்கையில் அமைந்துள்ள கண்ணகி அம்மன் ஆலயங்களின் பட்டியலை பாருங்கள்:

பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் கோயில் , பனங்காடு , அக்கரைப்பற்று. கண்ணகி அம்மன் கோயில் சம்மாந்துறை, கண்ணகி அம்மன் கோயில் , வீரமுனை, சம்மாந்துறை, கண்ணகி அம்பாள் கோயில் களுவாஞ்சிக்குடி. கடற்கரை கண்ணகி அம்பாள் கோயில் , கல்முனை. கண்ணகி அம்மன் கோயில், துறைநீலாவணை. கண்ணகி அம்மன் கோயில் விடத்தல்முனை , புளியந்தீவு, கண்ணகி அம்மன் கோயில் தாளங்குடா , காத்தான்குடி, கண்ணகி அம்மன் கோயில் புன்னைச்சோலை , அமிர்தகழி , கண்ணகி அம்மன் கோயில் , சத்துருக்கொண்டான், கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , வாழைச்சேனை, கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , சித்தாண்டி, கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , கிரான், கண்ணகி அம்மன் கோயில், கல்குடா , முறக்கொட்டாஞ்சேனை.
இதுஇவ்விதமிருக்க திரு. பிரசாத் சொக்கலிங்கம் அவர்களும் (அமரர்) க. சபாரெத்தினமும் இணைந்து எழுதியிருக்கும் ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும் என்ற நூல் மேலும் பல புதிய தகவல்களைத் தந்திருப்பதுடன் பல பார்வைகளுக்கும் யன்னல் திறக்கின்றது. இந்த நூலை எனக்கு தபாலில் அனுப்பியிருக்கும் திரு. பிரசாத் சொக்கலிங்கம் அவர்கள், இந்த நூலை வெளிக்கொணர்ந்தமைக்காரணத்தை இவ்வாறு சொல்கிறார்:
"உண்மையில் ஆரையம்பதியில் அமைந்துள்ள கண்ணகி கோயில் வரலாற்றில் புனைவுகள் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டதால் அதன் உண்மைத்தன்மையை  தேடி அறிவதற்கு செய்யப்பட்ட முயற்சி இந் நுாலை வெளிக்கொண்டுவர அடிப்படையானது.

கிழக்கில் காணப்படும் கண்ணகி வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும் ஆரையம்பதி கண்ணகியை பல ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் அல்லது கண்ணகி பற்றிய சேதிகளை பதிவு செய்கூடியவர்கள் போன்றோர்மிகக்கவனமாக ஆரையம்பதி கண்ணகியை தவிர்த்து வந்திருந்தார்கள். இப்போதும் இது தொடர்கின்றாதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்."

இந்த நூலின் இறுதியில் பிரசாத் சொக்கலிங்கம், " தேடலில்..." என்னும் தலைப்பில் இவ்வாறு சொல்கிறார்:

ஈழத்தில் கிழக்கிலே தமிழர்களின் பெரிய ஊர் என வரையறுக்கத்தக்கவாறு 13 கிராம பிரிவுகளை தன்னுள் உள்ளடக்கிய கிராமம் - ஆரையம்பதி. இதன் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் பல தனித்துவம் வாய்ந்தவையாக அடையாளப்படும் போக்கில் இவ்வூரின் போற்றுதலுக்குரிய தெய்வமான கண்ணகையம்பாள் அமர்ந்திருக்கும் ஆலயமும் கிழக்கில் தனிச்சிறப்பு வாய்ந்தது. இறை நம்பிக்கைகளை பகுத்தறிவுடன் அணுகும் இன்றைய தலைமுறையினர் கூட, சித்திரை வருடப்பிறப்பு முடிந்தகையோடு பேசத்தொடங்கும் விடயம்," எப்ப சடங்கு தொடங்குது...." என்பதாகும். அந்த அளவு வைகாசியில் இடம்பெறும் சடங்கு என்ற இந்த ஆலயத்தின் பெருவிழா ஒவ்வொருவரினதும் மனங்களில் வேரூன்றி இருப்பதை காணலாம்.

மட்டக்களப்பின் கண்ணகை வழிபாடு மற்றும் இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ளவென தங்களை நிலை நிறுத்திய அமைப்புக்களும் ஆவலர்களும் ஆரையம்பதி என்ற பேரூரையும் அதற்கு ஓர் கலாச்சார குறியீடாக அமைந்திருக்கும் கண்ணகை அம்மன் கோயிலையும் தவிர்த்து பயணிப்பதில் உள்ள சூட்சுமத்தை இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை  என்பதும் இங்கு கவலை தரும் செய்தியாகிறது."

பிரசாத் சொக்கலிங்கம் அவர்கள் முன்வைத்திருக்கும் இந்த எதிர்வினைக் கருத்துக்கு கிழக்கிலங்கையில் கண்ணகை பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்தான் விளக்கம் தரல் வேண்டும்.

தமது தரப்பு நியாயங்களை ஆரையூர் கண்ணகை - வரலாறும் வழிபாடும் என்ற நூலின் ஊடாக  திரு. பிரசாத் சொக்கலிங்கமும் (அமரர்) க. சபாரெத்தினமும் முன்வைத்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபையில் தகவல் தொடர்பாடல், தொழில் நுட்ப உதவியாளராக பணியாற்றி வரும் பிரசாத் சொக்கலிங்கம் இலக்கிய ஆர்வலர். எழுத்தாளர். தேடலில் தீவிரம் காண்பிக்கும் புதிய தலைமுறைப்படைப்பாளி. தாம் வாழும் ஆரையம்பதியைச்சார்ந்தும் இணையஇதழ் நடத்திவருகிறார்.

www.arayampathy.lk இந்த இணையத்தில் அவரது பிரதேசம் மற்றும் இலக்கிய புதினங்களையும் அறிந்துகொள்ள முடியும்.

பிரசாத் சொக்கலிங்கம் அவர்கள் தமது தேடல்களின் ஊடாக மேலும் கிழக்கிலங்கைக்கு பெருமை சேர்ப்பிக்கவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

(தொடரும்)











-->



















No comments: