நடந்தாய் வாழி களனி கங்கை ...... அங்கம் 07 தலைநகரில் தோன்றிய விஹாரைகளின் பின்னணியில் மறைந்திருக்கும் அரசியல் கங்காரமையாக மாறிய முனுசாமி தோட்டம் - ரஸஞானி


இலங்கை பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், கோட்டை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இராச்சியங்களுடன் மேலும் சில சிறிய இராச்சியங்களையும் கொண்டிருந்தது.
கோட்டை இராச்சியம் அமைந்திருந்த பிரதேசம்தான் இலங்கையின் தலைநகரமாக விளங்கும் கொழும்பு. களனி கங்கையை ஒரு புறத்தில் எல்லையாகவும், இந்துமகா சமுத்திரத்தின் காலிமுகத்தை (Gall Face) மறு எல்லையாகவும் கொண்டிருக்கும் கொழும்பின் பெயர் வந்த கதைகளும் பலவுண்டு.
இலங்கைக்கு வெளியிலிருந்து முதலில் கடல்மார்க்கமாக படையெடுத்துவந்த போர்த்துக்கேயரால் 1505 இல் கொழும்பு எனப்பெயர் சூட்டப்பட்டதாகவும், முன்னர் இருந்த கொலன்தொட்ட என்ற பெயரிலிருந்து இந்தப்பெயர் எடுக்கப்பட்டதாகவும், பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு, துறைமுகம், அல்லது கோட்டை என்று பொருள் சொல்லியிருப்பதனால், அதிலிருந்து மருவி, கொழும்பு எனப்பெயர் வந்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு ஒவ்வொரு ஊருக்கும் காரணப்பெயர்களை ஆராயப்புகுந்தால் அது, நதி மூலம் ரிஷி மூலம் தேடும் செயலுக்கு ஒப்பானதாகும்.
களனிகங்கை தீரத்தில் பேலியாகொடை என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. பூபாலவிநாயகர் ஆலயம். அதன் வரலாறு தெரியவில்லை. எனினும் அதன் அறங்காவலர்கள் திருவிளங்கநகரத்தார் சமூகத்தினர்தான் என்பது தெரிகிறது. இச்சமூகத்தினருக்கு, கொழும்பிலும் நீர்கொழும்பிலும் குருநாகலிலும் மாத்தளையிலும் கோயில்கள் இருக்கின்றன. வணிக வைசியர்களான அவர்கள் நல்லெண்ணை வியாபாரம் தொடக்கம் பல வர்த்தகங்களில் ஈடுபட்டவர்கள். அவர்களின் முன்னோர்கள் செக்குகள் வைத்து நல்லெண்ணை உற்பத்தி செய்தவர்கள்.
இலங்கை சுதந்திரம் பெற்றது முதல் அதனை ஒரு பெளத்த நாடாகவே மாற்றிக்கொண்டு வரும் செயல்களிலேயே மாறி மாறி பதவிக்கு வந்திருக்கும் ஐ.தே.கட்சி, மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன ஈடுபட்டுவந்துள்ளன.

புத்தர் பெருமான் இலங்கைக்கு இரண்டு தடவைதான் வந்திருக்கிறார். அவர் வடக்கில் நயினா தீவுக்கும் தெற்கே களனிக்கும் வருகை தந்தார். மத்தியில் சிவனொளி பாதமலைக்கும் வந்திருக்கிறார் என்றும் அவரது புனித பாதம் அங்கு பதிந்திருக்கிறது எனவும் ஐதீகக்கதைகள் தொடருகின்றன.
இலங்கை எங்கும் புத்தர் சிலைகள் தோன்றிய கதைகளின் பின்னணியில் அரசியல்தான் இருந்திருக்கிறது. பேலியாகொடையில் களனி பாலத்தை நெருங்கும் இடத்தில் ஒரு முச்சந்தி வருகிறது. வத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி வரும்போது அச்சந்தியிலிருந்து இடதுபுறம் கண்டி நோக்கிச்செல்லும் வீதி வருகிறது. அவ்விடத்தில்தான் பூபாலவிநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அதனைக்கடந்துதான் களனி தொகுதிக்கும், களனி பல்கலைக்கழகத்திற்கும் செல்வோம்.
குறிப்பிட்ட முச்சந்தியில் அமைந்துள்ள பெரிய புத்தர் சிலை அவ்விடத்தில் தோன்றிய திகதியை கொழும்பு மாநகர சபையின் பதிவேடுகளில் காணமுடியும்.
அந்த களனி பாலத்தைக்கடந்து கொழும்புக்குள் சென்றால் அடுத்தடுத்து புத்தர்களை பார்க்கலாம். கொழும்பு வீதி, புறக்கோட்டை ஐந்துலாம்பு சந்தியை அண்மிப்பதற்கு முன்னர் இடையில் வரும் புத்தர் சிலைகளையும், சில சிறிய பெரிய விஹாரைகளையும் தரிசிக்கலாம்.
முன்னர் பாபர் வீதி என அழைக்கப்பட்ட மத்திய மகா வித்தியாலய வீதியிலும் ஒரு நாற்சந்தி வருகிறது. அதன் அருகிலிருக்கும் ஆட்டுப்பட்டித்தெருவில் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட தேவாலயம். அருகில் ஜிந்துப்பிட்டி சிவசுப்பிரமணியர் கோயில். அதற்குச்சமீபமாக கொச்சிக்கடையில் அந்தோனியார் கோயிலும் அதற்கு அருகிலேயே பொன்னம்பலவாணேசர் கோயிலும் அமைந்துள்ளன. கொழும்பு மத்திய தொகுதியாக முன்னர் விளங்கிய இந்தப்பிரதேசத்தில் மூவின மக்களும் செறிந்து வாழ்ந்தமையால், பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டிடங்கள் அமைந்திருக்கின்றன.
நாடாளுமன்ற விகிதாசாரப்பிரதிநிதித்துவ தேர்தல் முறையை ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு 1978 இற்குப்பின்னர் நடைமுறைப்படுத்தியதையடுத்து கொழும்பு மத்தி மூன்று அங்கத்தவர் தொகுதி என்ற பெயரை இழந்துவிட்டது.
கொழும்பு தெற்கும்  முன்னர் இரட்டை அங்கத்தவர் தொகுதியாகத்தான் இருந்தது. இலங்கையை முற்று முழுவதுமாக ஒரு பௌத்த தேசமாக மாற்றுவதற்கு பதவிக்குவரும் ஆட்சியாளர்களுக்கு ஆதாரமாக இருப்பவரே கௌதம புத்தர்தான். அதனால் அவர் அரசமரங்கள் இருக்கும் இடங்களில் மட்டுமல்ல, கங்கைக்கரைகளிலும் கடலோரங்களிலும் குளக்கரைகளிலும் வீதியோரங்களிலும் தோன்றுவார்! தோன்றிக்கொண்டே இருப்பார்!!
வெளிநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக வரும் கப்பல்களுக்கும், வான் மார்க்கமாக வரும் ஆகாய விமானங்களுக்கும் இலங்கையின் கரையும் தரையும் தென்படும்போது அது ஒரு பௌத்ததேசமாகவே காட்சி தரவேண்டும் என்பதிலும் பதவிக்குவரும் ஆட்சியாளர்கள் அக்கறையோடு இருந்திருக்கிறார்கள்.
வெளிநாட்டவர்கள் வீதிகளில் பயணித்தாலும் நதிகளில் ஏரிகளில் படகு சவாரி செய்தாலும் அவர்களின் கண்களுக்கு விருந்தாக இருக்கவேண்டியவர் புத்தர் பெருமான்தான் என்பதிலும் ஆட்சியாளர்கள் அக்கறை காண்பிக்கிறார்கள்.
தலைநகரில் புத்தர் எங்கெங்கு சிலையாக தோன்றியிருக்கிறாரோ அவர் அங்கு முதல் முதலில் எழுந்தருளிய  திகதிகளை மாநகர சபையின் பதிவேடுகளில் எளிதாக கண்டுபிடித்துவிடமுடியும்.
கடல் மார்க்கமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் கப்பல்களின் மாலுமிகளுக்கு முதலில் கண்ணில் ( ரெலஸ்கோப்பின் ஊடாக) தென்படுவது கொச்சிக்கடை அந்தோனியார் கோயில் கோபுரம்தான். இந்த நிலை நீடித்தால் பௌத்த தேசிய ஆட்சியாளர்களுக்கு உவப்பானது அல்லவே!
என்னசெய்தார்கள்...?
கொழும்பு கோட்டையில் கடற்கரையோரமாக உயரத்தில் அமைக்கப்பட்டது ஒரு பௌத்தவிஹாரை. இந்தப்பதிவில் அதன் படத்தை வாசகர்கள் பார்க்கலாம்.
கொழும்பு -7 நோக்கி செல்லும் பாதையில் கங்காராமை என்ற விஹாரை அமைந்துள்ள இடத்திற்கு முன்பிருந்த பெயர் முனுசாமி பார்க். கடல் நீர் தேங்கியிருந்த அந்த சிறிய தீவில் இரண்டொரு தென்னை மரங்கள் இருந்தன. முனுசாமி என்பவருக்குச்சொந்தமான அந்த சின்னஞ்சிறிய தீவை 1976 காலப்பகுதிக்கு முன்னர் பார்த்திருப்பவர்களுக்கு அதன் தோற்றம் நினைவில் தங்கியிருக்கலாம்.
1977 இல் ஐ.தே. கட்சி அமோக வெற்றியீட்டியதையடுத்து அந்த முனுசாமியின் தீவுத் தோட்டம் சுவீகரிக்கப்பட்டது. படிப்படியாக அந்தத்தீவு பௌத்த விஹாரையாகி, இன்று கங்காராமை என்ற பெயரைப்பெற்றுவிட்டது.
சமீபத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி கண்டதையடுத்து அந்த இரவே அவர் சென்று வழிபட்டதும் இந்த கங்காராமை என்ற முன்னாள் முனுசாமி தீவுத்தோட்டம்தான்!
கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் 1828 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது என்று வரலாறு சொல்கிறது.
அந்தோனியாரின் தேவாலய கோபுரத்தை விட உயரமாக  கோட்டையில் அமைக்கப்பட்ட பௌத்த விஹாரையின் காலத்தையும் எளிதாக பதிவேடுகளிலிருந்து காணமுடியும்.
தர்மபோதனை செய்தவர்தான் கௌதம புத்தர். இலங்கையில் அவரைப்பின்பற்றி மதம் பரப்பி அன்புமார்க்கத்தை போதிக்கவேண்டிய காவியுடுத்த துறவிகள், தற்காலத்தில் அரசியல் போதிக்கவும், தேர்தல்களில் போட்டியிடவும், பதவிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கும் தங்கள் பிரதிநிதி குற்றம் செய்து சிறை சென்றால் அவரை விடுவிக்கச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்யவும் முன்வந்துள்ளனர்.
விஹாரைகளில் இருக்கவேண்டியவர்கள் சிறைகளில் இருக்கிறார்கள்.
இந்தக்காட்சிகளை காணச்சகியாமல்தானோ புத்தபகவான் இலங்கை எங்கும் மெளனமாக தவம் இருக்கிறார். அவர் நீராடிய களனி கங்கையும் அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது.
(தொடரும்)
(நன்றி: அரங்கம் - இலங்கை இதழ்)



-->








No comments: